மக்பை

ஜெ

ஆஸ்திரேலியர்களின் மண்டைக்கு புதியவகை ஆபத்தொன்று உருவாகியிருக்கிறது. அதாவது, அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு, வெளியில் நடந்து செல்லும்போது அல்லது சைக்கிளில் போகும்போது வான்வழி தாக்குதல்கள் நடைபெறுவதற்கான அதிக சாத்தியங்களிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்தப்போவது தலிபான் தீவிரவாதிகளோ அல்கொய்டா பயங்கரவாதிகளோ அல்ல. ஆஸ்திரேலிய காகங்கள் எனப்படும் மக்பை (magpie) பறவைகள்.

மக்பைகள் எனப்படுபவை காகக்குடும்பத்தின் வித்தியாசமான பறவைக்கூட்டம். கரிய சிறகுகளில் கந்தர்வ மினுக்கமும் காந்தக்கண்களும்கொண்ட பறவைகள் இவை. ஒவ்வொரு வருடமும் இந்தக் காகங்களால் ஆஸ்திரேலியர்கள் அடிவாங்குவது வழக்கம். ஏனெனில், இந்த மக்பை பறவைக்கூட்டம் மரத்துக்கு மரம் கூடுவைத்திருப்பவை. கணக்கு வழக்கில்லாமல் பறந்து பறந்து ஆஸ்திரேலிய நிலமெங்கும் பரந்து வாழ்பவை. இவை இல்லாத முடக்கு மரமே இல்லை எனலாம்.

ஆனால், இந்த மக்பை காகங்கள், எல்லா நேரமும் மனிதர்களை தாக்குவதில்லை. வசந்த காலப்பகுதியில் – அதாவது ஜூலை முதல் ஒக்டோர் மாதம் வரையான மாதங்களில் – தங்களது பாரியார் பறவைகள், கூடுகளில் முட்டைகளுக்கு மேல் குந்தியிருக்கின்ற நேரத்தில் – மரத்துக்கு கீழ் யார் போனாலும், மக்பை மாப்பிள்ளைகள் டென்ஷனாகிவிடுகின்றன. “இதோ இந்த மரத்துக்கு கீழ் போகின்ற படுபாவி, எங்கள் குடும்பத்துக்கு ஏதோ செய்யப்பார்க்கிறான்” – என்று சீற்றமடைந்து, பறந்து போய் தாக்குதல் நடத்துகின்றன.

இந்த காகக்குடும்பத்தின் முக்கிய சிறப்பு, இவை தங்களோடு கூடுகின்ற மக்பைகளோடுதான் சாகும்வரைக்கும் வாழ்கின்றனவாம். இன்னொரு பெண்காகத்தின் இறக்கையைக்கூட தொடாதாம். மனுசியை தவிர வேறு பெண் மக்பை குறுக்க வந்தால் தலையை குனிந்துகொண்டு பறக்குமோ என்னவோ.

இப்படியான இன்னோரன்ன பண்புகளை கொண்டிருப்பதால், பறவையினங்களிலேயே மிகவும் புத்தியுள்ள சமூகமாக இந்த மக்பைகள் மதிக்கப்படுகின்றன. இவை மிகுந்த கற்பனைத்திறனும் நுட்பமான ரசனையும் உள்ளவை என்றும் கூறப்படுகிறது. அலகு மாத்திரமல்ல அறிவிலும் கூர்மையானவை என்கிறார்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள். அதுவும் ஆஸ்திரேலிய மக்பைகள் என்றால் சொல்லவா வேணும்.

மக்பைகள் சுமார் நூறுவரையான வித்தியாசமான மனித முகங்களை தங்கள் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைத்திருக்கக்கூடியவை. தாங்கள் பறந்து சென்று கொத்தும்போது, யாராவது தடியெடுத்து மிரட்டினாலோ அல்லது திருப்பித் தாக்குவதற்கு முயற்சி செய்தாலோ, அந்த முகங்களை அச்சொட்டாக ஞாபகத்தில் வைத்திருக்கும். விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த அந்த உருப்படாத சனியனை ஒருபோதும் நிம்மதியாக வாழவிடக்கூடாது என்று உள்ளுக்குள் சபதம் எடுத்துவிடும். அதற்குப்பிறகு, அந்த நபர் மக்பையிடம் எந்த ஜில்லாவில் அகப்பட்டாலும் விடாது. உருட்டி உருட்டி கொத்திவிடும். அடிக்கடி சாப்பாடு போடுகின்ற தெரிந்த முகங்களுக்கு மக்பைகள் தங்கள் தாக்குதலில் விலக்களிப்பதுண்டு.

மக்பை பறவைகள் கொத்துவதிலும் ஒரு ஸ்டைல் வைத்திருக்கின்றன. முதலில் கூறியதுபோல,அவை நுட்பமான ரசனை மிக்கவை. சில வாத்திமார்கள் கையை நீட்டச்சொல்லி கையில் அடிப்பார்கள், சிலபேர் மொளியில் அடிப்பார்கள், காதை முறுக்குவாரகள். இன்னும்சில கிரியேட்டிவான வாத்திமார் குண்டியில் அடிப்பார்கள். அடிவாங்கிய மாணவர்கள் துள்ளிக்கொண்டு ஓடுவதை பார்க்கும்போது, அவர்களுக்கு அப்படியொரு ஆசை. சைக்கோ சனியனுகள்.

அவர்களைப்போல, இந்த மக்பை பறவைகளும் ஈட்டிபோல பறந்து வந்து, இடது காதுகளைத்தான் கொத்துகின்றன. காதுதான் அவற்றுக்கு அதிஷ்டமான ஏரியா. ஆனால், விடாமல் நான்கைந்து தடவைகள் கொத்தும்போது, கொத்து வாங்குபவர் முரண்டுபிடிக்காவிட்டால், பறந்துபோய்விடுகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படுகின்ற இந்தப்பிரச்சினை, கடந்த இரண்டு வருடங்களாக அதிகரித்திருப்பதற்குக் காரணம், மாஸ்க் போட்ட மனிதர்களினால் மக்பை பறவைகள் வழமையைவிட அதிகம் குழம்பிப்போயிருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால், கணக்கு வழக்கில்லாமல், பூங்காக்கள் – நடைபாதைகள் – சைக்கிள் பயணத்தடங்கள் என்று எல்லா இடங்களிலும் பரவலாக மக்பைகள் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுகிறது.

போனவருடம், குவீன்ஸ்லாந்தில் மக்பை தாக்கிய முதியவர் ஒருவர், சைக்கிளோடு கரணமடித்து விழுந்ததில், மண்டை அடிபட்டு, அந்த இடத்திலேயே இறந்துபோனார். இந்த வருடம், சில வாரங்களுக்கு முன்னர், தாக்குதல் நடத்த வந்த மக்பை பறவையிடமிருந்து தனது குழந்தையை காப்பாற்றுவதற்கு முயற்சித்தபோது, தாயொருவர் குழந்தையை தவறியதில், அது கீழே விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளது.

காட்டுத்தீ, கொரோனா, தலிபான் என்று எத்தனையோ தொல்லைகளோடு தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்கள், இவ்வளவு பிரச்சினைகளுக்குள்ளேயும் தங்கள் மண்டைகளை பறவைகளுக்கு பலிபீடமாகக் காட்டவேண்டியிருக்கிறது.

தாக்குதலுக்குள்ளாபவர்கள் சம்பவங்களை பதிவு செய்வதற்கென்று இணையத்தளமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த மக்பை தாக்குதலில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்த அறிவுறுத்தல்கள் பல்வேறு ஊடகங்களில் பகிரப்பட்டுவருகின்றன.

தமிழர்கள் பழக்க தோஷத்தில் பங்கர் வெட்டி அதற்குள் பாய்ந்து தப்பலாம் என்று எதிர்பார்க்கக்கூடாது. இன்னும் இரண்டு மாதங்களில் நிலமை சரிவரும்.

 

தெய்வீகன்

அன்புள்ள தெய்வீகன்,

மக்பை போலவே காகங்களுக்கும் இப்பண்பு [பண்பு?] உண்டு. நான் இரண்டு கதைகள் எழுதியிருக்கிறேன்.

ஒன்று சொல்வதுண்டு. பறவைகளிலும் விலங்குகளிலும் எவை புத்திசாலித்தனமானவையோ அவைதான் குரூரமானவையும்கூட. ஏனென்றால் குரூரம் என்பது ஒருவகை புத்திசாலித்தனம்.

ஆகவே தமிழர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மக்பைக்களுக்கு அவர்கள் ‘டஃப் ஃபைட்’ கொடுப்பார்கள்.

ஜெ

நிழல்காகம் [சிறுகதை]

காக்காய்ப்பொன் [சிறுகதை]

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் -பிரவீன்குமார்
அடுத்த கட்டுரைகல்குருத்து – கடிதங்கள் 4