அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம். சென்ற மாதத்தில் கோவிட் காரணமாக என் நெருங்கிய உறவினர் மரணம் அடைந்தார். மீண்டும் வாழ்க்கையின் பொருளின்மையை உணர்ந்தேன். உங்கள் தளத்தில் கீதையின் உரைகள் மற்றும் கீதை பற்றிய கட்டுரைகளை படித்தேன். கர்மயோகம் வரை உங்கள் உரை புதிய திறப்பாக இருந்தது. நடைமுறைக்கு உகந்ததாகவும், கீதையின் உண்மையான விளக்கத்தை விவரிப்பதாகவும் இருந்தது. சாங்கிய மற்றும் கர்ம யோகத்தை நான் இவ்வாறு புரிந்து கொண்டேன்.
வாழ்வில் கீதா முகூர்த்த சமயங்களில் (பொருளின்மையை உணரும் தருணங்கள்), நமது செயல்களுக்கு உள்ள நடைமுறை பலன்களை (புகழ், பணம் ) உணர்ந்து பலன் கருத்தியாவது செயல்களில் ஈடுபடுவது.சிலருக்கு, அவர்கள் செய்யும் செயல்களால் பணமோ புகழோ கிடைக்காது என தெளிவாக தெரியும் போது , அந்த செயலை செய்யும் போது அவர்கள் அடையும் முழுமையின் காரணமாக செயலில் ஈடுபடுவது.
உங்கள் சிறுகதைகள் தற்பொழுது நூல்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. உங்கள் கீதை உரையையும் ஒரு தனி நூலாக கொண்டு வந்தால் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் வாசகனாக ஒரு வேண்டுகோள் கீதையின் மற்ற யோகங்களும் நீங்கள் உரை எழுத வேண்டும்.
என் கனவுகளில் நீங்கள் என் தந்தை ஸ்தானத்தில் வருகிறீர்கள். நான் வாழ்வில் நெருக்கடியாக உணரும் தருணங்களில், பொருளின்மையை உணரும் தருணங்களில் உங்கள் கட்டுரைகள், youtube விடியோக்கள் மற்றும் நூல்களே பற்று கோடாக உள்ளது. மீண்டும் வெண்முரசு படித்துக்கொண்டுள்ளேன். மிகவும் நன்றி.
அன்புடன்
அருண்
அன்புள்ள ஜெ
உங்கள் கீதைஉரை சொற்பொழிவு மற்றும் கட்டுரைகளை விரும்பிப் படிப்பவன். கீதை போன்ற நூல்களை நாம் மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கவேண்டிய அவசியமுள்ளது. ஏனென்றால் அவை மூலத்தரிசனங்கள். அவற்றை நாம் நம் வாழ்க்கையில் வைத்து புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு சொற்பொருளோ பொழிப்புரையோ போதாது. அனுபவ உரை தேவையாகிறது. அத்தகைய அனுபவ உரையாகவே உங்கள் பேச்சுக்களும் எழுத்துக்களும் உள்ளன. விரைவில் நீங்கள் நல்ல நூல்களாக அவற்றை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கீதைக்கு இருக்கும் பல உரைகள் சென்ற காலகட்டத்தின் மனநிலையை முன்வைப்பவை. நாம் காலத்தால் பின்னகர முடியாது. இன்றைக்கு நவீன வாழ்க்கையில் இருக்கும் ஒருவரின் உரைகள்தான் இன்று அவசியமாகத் தேவைப்படுகின்றன
ஆர்.எம்.குமார்