வண்ணக்கடல் -பிரவீன்குமார்

“வெறும் சுக்கு நீர்.. அதில் ஒருவனின் கைநுட்பம் இருக்குமென்றால் அவன் மனிதனல்ல தேவன்.”

– வண்ணக்கடல் -40

பழைய நாட்டார் கதையை மீளுருவாக்கிச் பிரம்மாண்டமாக சொல்லும் கதையான”The Green knight” திரைப்படம் மிகச் சிறப்பான காட்சியனுபவத்தைத் தருவது.ஒரு அரசனுக்கென்று நாம் எழுப்பி வைத்திருக்கும் அத்தனை ஆண்மையான பிம்பங்களையும் கலைத்துப் போட்டுவிட்டு ஒரு நிதர்சனமான மனிதனாக, வாளை உருவித் தூக்கமுடியாமல் மூச்சடைத்து இருமக்கூடிய எளிமையான மனிதனாக இருப்பான் இந்த அரசன்‌.

வண்ணக்கடல் துவக்கத்தில் வரும் சேந்தூர் நாட்டு குறுநில மன்னன் சேந்தூர் கிழான் தோயன் பழையனைத்தான் இந்தப் படங்கண்ட போது நினைத்துக் கொண்டேன். பாணர் யார், ஏடெடுத்து படித்திராத மூடர் யாரென்று அறியாத மன்னன் பாணரென்று அறிமுகப்படுத்திக் கொண்ட யாவருக்கும் பெருவிருந்திட்டு அவர்களது வெற்றுப் புகழ் மாலைக்கு மகிழ்ந்து போவான். அவனது வெண்கொற்றக்குடையை நாய்க்குடையோடு ஒப்பிட்டு பகடி செய்து பாடிவிட்டு அங்கிருந்து தப்பிக்கிறான் இளநாகன் என்னும் பாணன்.

வரலாறு என்றால் பெருமிதமும் மயிர்கூச்சமும் மட்டுந்தான் அடையவேண்டுமா என்று கேட்கிறார் ஜெயமோகன். போரன்றி, ரத்தக்களறியன்றி தமிழ்பற்று அன்றி குலப்பெருமையின்றி இயல்பான ஒரு மனிதனாக ஒரு அரசனை எண்ணவேமுடியாதா? இதைப்போன்ற இன்னொரு சம்பவத்தை எழுதியிருக்கிறார் மழைப்பாடலில். குந்தி கல்யாணத்திற்கு பிறகு கங்கைக் கரை கோவிலில் வழிபட்டு ஆற்று மணலில் குடம் செய்து நீர் நிரைத்து சாமிக்கு இறைக்க வேண்டும். ஆற்றில் களிமண் நிறைந்த இடமாக பார்த்து குந்தியை இறக்கி விடுகிறாள் சத்தியவதி. குந்தி களிமண்ணில் குடம் செய்து இறைத்து வழிபாட்டை நிறைவு செய்கிறாள். தன் கற்புத் திறத்தை நிரூபிக்கிறாள். சத்தியவதியும் இதைத்தான் செய்திருப்பாள் என்று தன் அணுக்கத் தோழியரிடம் கூறிச் சிரிக்கிறாள். இந்த சம்பவத்திற்கு பிறகு குந்தியின் மேல் அபிமானம்உண்டாகிறது நாட்டுமக்களுக்கு.

ஒரு அழகான கைக்கடிகாரத்தை கையில் எடுத்துப்பார்க்கிறோம். அதன் அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும், முக்கியமேயில்லாத வெறும் தகவல்கள் கூட ஒரு ஓவியமே போல அழகாயிருக்கக் காண்கிறோம், அந்த திருகாணியின் ஒயிலான அமைப்பைக் கூட கண்கொட்டாமல் மெச்சி அதை கண்ணில் ஒற்றி முத்திக் கொள்வோம். கைவினையும், கணிதமும் ஒன்றாகி முயங்கி அப்படியொரு நேர்த்தியாகும் அற்புதத்தைக் கண்டு லயிக்கிறோம். எனக்கு வெண்முரசு அப்படித்தான் இருக்கிறது. போகிறபோக்கில் தட்டுப்பட்டு விடும் ஒற்றை வார்த்தை, ஒற்றை வாக்கியம் கூட அந்த முழு நாளைப் புரட்டிப் போடுவதாக இருக்கின்றன.இவற்றை முழுமையாக மனப்பாடம் பண்ணி மனதிலும் தக்க வைக்க முடியாது, மறக்கப் போகிறோம் என்று வருந்தவும் முடியாது.ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது கடலில் மூழ்கவே என்று இருந்துக்க வேண்டியது தான்.

பாதாளம் என்பதை “தலைகீழ் விண்ணகம்” என்று எழுதுகிறார்.‌ மொத்தமே மூன்று நான்கு முறை தான் இந்த வார்த்தை வருகிறது.‌ இப்படியொரு அழகான வார்த்தைச் சாதனை ஒருவனுக்கு எப்படி கிடைக்கிறது. அதை அலட்டாமல் போகிற போக்கில் எழுதமுடியும் தன்மையை எப்படி வளர்க்கிறான். பேளூர் சென்னக்கேசவ பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற சிற்பம் பத்துத்தலை ராவணன் சிற்பம் பார்க்கப் பார்க்கத் தீராதது.ஏழெட்டு அடிக்கு இருக்கும் அந்த சிற்பத்தில் ராவணன் கைலாயத்தைச் சுமந்திருப்பான். பாதாளத்தின் நாகங்களில் இருந்து மேலுலகத்தில் தென்னாடுடையாரின் குடும்பம் வரைக்கும் மொத்த உலகையும் சுமந்திருப்பார் ராவணன். அதில் ஒரு விரலின் இரண்டு கணு உயரத்திற்குக் கூட முழுமையான சிற்பங்கள் நிறைந்திருக்கும். மானை வேடர் அம்பெய்துவர், பறவை பறக்கும், மரத்தில் குரங்கமர்ந்திருக்கும், காடே விரிந்திருக்கும் அந்த சிற்பத்தில்.‌ அந்த சிற்பம் அமைந்திருக்கும் இடம் தான் இங்கே சொல்லப்பட வேண்டியது. பார்க்கும் நமக்கு திறந்த வாய் மூடாது. எக்கிக்கொண்டு எட்டிக்கொண்டு கழுத்தை சுழித்து நாம் எத்தனை முயன்று பார்த்தாலும் அந்த சிற்பத்தை முழுமையாக பார்க்க முடியாது. கோபுரத்தின் ஒரு முக்கில் மேல ஒரு ஓரத்தில் கைதவறி விட்டுச் சென்றதைப் கதவுக்கு போல நின்றிருக்கும்.‌ சிவனைப் பார்க்க முடியாது. நந்தி கூட தோராயமாகத் தான் தெரியும். கூகிள் பண்ணி நெருக்கி நெருக்கி பார்த்து ரசிக்கலாம். தலைகீழ் விண்ணகம் என்ற வார்த்தை எனக்கு இந்த ராவணன் சிற்பத்தைப் போன்றது தான்.

வண்ணக்கடல்

வெள்ளைநிறப் பாற்க்கடலில் இருந்து கல்பதருவையும், காமதேனுவையும் இந்த உலகம் பெற்றது என்று படித்திருக்கிறோம். இருண்ட பாதாளம் நமக்கு பனையையும், எருமைமாட்டையும் தந்திருக்கிறது என்ற கதையை இளநாகனுக்கும் ஒரு சீனருக்கும் சொல்கிறார் முதுசூதர். எந்தப் பஞ்சத்திலும் மனிதரை பசியறிய விடாத வற்றாத தெய்வங்கள் பனையும் எருமையும். மிக உயர்வாக இதைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆலமரத்தை தொட்டுக்கும்பிடுவது போல பனை மரத்தைக்கண்டாலும் தொட்டுக் கும்பிடவேண்டும். ஜெயமோகன் இதை எழுதும் போது கிடைத்த மன உந்துதலில் தான் புனைவுக்களியாட்டு கதைகளில் “ஆமை” கதையை எழுதினாரா?

பாரதக்கதையின் பெரிய ஓவியம் நிகழ்வதற்கான முன் தயாரிப்புகள் இந்த நாவலில் தான் நிகழ்கின்றன‌. பல நிறங்கள் இங்கே தான் கலக்கின்றன. அதனால் இது வண்ணக்கடல். வண்ணக்கடலை இளநாகனின் இந்திய travelogue என்றும் படிக்கலாம்.தென் தமிழகத்தின் ஏழ்பனைநாட்டு மருதூர்க்காரனான இளநாகன், சேந்தூர் நெல்லை மதுரை என்று தொடங்கி அஸ்தினபுரி சென்று மகாபாரதக்கதையை பாட விளைகிறான். இன்று கண்ட இடம் நாளை நம் வாழ்வில் இல்லை என்னும் பயணித்தபடியே இருக்கிறான் இளநாகன்‌.

மறுபக்கம் அங்கே பாண்டவர்களும் கெளரவர்களும் சிறுவர்களாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். பாண்டு மறைந்து சதசிருங்கத்திலிருந்து குந்தியும் மைந்தரும் அஸ்தினபுரி திரும்புகிறார்கள். பீமனும் துரியோதனனும் சிநேகம் கொள்கிறார்கள் பகை கொள்கிறார்கள். ஒரு புள்ளிப்புயலில் பாண்டவ கவுரவர்களுக்கிடையை மனவிலகல் உண்டாகிறது. அர்ச்சுனனுக்கு துரோணரை குருவாக்குகிறார் கிருபர். கர்ணன் வருகிறான். அவமானப்படுகிறான்‌ தோலுறிந்த நாகப்பாம்பைப் போல துடிதுடிக்கிறான். அங்க தேசத்து அரசனாகிறான். அர்ச்சுனனுக்கும் கர்ணனுக்கும் உரசலாகிறது. அஸ்வத்தாமனுடன் உரசுகிறான். துரோணர் தன் மாணவனால் வஞ்சிக்கப்பட்டு சிறுமையடைகிறார். நாம் அவருக்காக வருந்தி முடிந்ததும் அவர் ஏகலவ்யனின் கட்டை விரலை வெட்டச் செய்கிறார். இன்னும் பல கருக்கள்..

மகாபாரத யுத்தம் ஏன் நிகழ்ந்தது என்பதற்கான காரணிகள் இங்கே நிகழ்கின்றன. துரியோதனன் கண்ணனிடம் பாண்டவருக்கு ஒரு குண்டூசிமுனை நிலமும் கொடுக்க மாட்டேன் என்று கூறிய ஆங்காரம் எப்படி திரண்டு வந்தது என்பதற்கான சித்திரம் முழுமையாக தீட்டப்பட்டிருக்கிறது. துரியோதனன் மிக அழகன்.

துரோணரின் மனைவியும், கர்ணனுடையை அம்மாவும், ஏகலவ்யனின் அம்மாவும் மிக அழுத்தமான பாத்திரங்கள்.‌ பெண்மையின் முழுவீச்சு அவர்கள். படிப்பற்றவராக, பயந்தவராக, எளிய மனிதரான கர்ணனின் தந்தை சில இடங்களில் பேசும் வசனங்கள் எந்த ஆசிரியராலும் கற்றத் தரமுடியாதவை‌‌. இந்நாவலில் ஒரு சின்ன உறுத்தல். மழைப்பாடல் நாவலில் கர்ணன் குந்தியை விட்டு ராதையின் வீட்டில் வளரத்துவங்கும் நாளில் ஒரு தெய்வம் நாய் உருவங்கொண்டு கர்ணனுக்குத் துணையாக வளரத்துவங்கும். அந்த நாய் வண்ணக்கடலில் இல்லை. நாய் பணிரெண்டு வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருக்காது என்று ஞாயமான காரணம் தோன்றினாலும் அதைப் பற்றி ஞாபகப்படுத்தும் ஒரு வரியில்லாதது ஒரு சின்ன உறுத்தல். ஓணத்தின் போது பழபஜ்ஜி கேட்ட கதையாக. துரோணரும் அதிரதனும் கிருபரும் உழைப்பின் மேன்மையை மனமும் கர்மமும் ஒன்றாகி கலக்கவேண்டிய அவசியத்தை கூறியபடியே இருக்கிறார்கள்.

இளநாகன் ஆந்திரம் செல்கிறான். விஜயநகரத்தில் ஓரிடத்தில் தங்குகிறான். அங்கே வீதி கூட்டி வேலைசெய்யும் ஒரு முதியவள் வீட்டில் தங்கி பழையசோறும் மோரும் கறிக்குழம்பு உண்கிறான். உண்டுமுடித்து அவளை வாழ்த்திப் பாடி அவள் பெயர் கேட்கிறான். “சென்னம்மை” என்கிறாள். நானறிந்த சென்னம்மாளை மனதில் நினைத்துக் கொண்டேன். ஜெயமோகனும் கி.ராஜநாராயணனும் புன்னகைத்துக் கொள்கிறார்கள் என்று எண்ணினேன். கோபல்ல கிராமத்தில் சென்னம்மாள் தோன்றும் பக்கங்கள் எல்லாம் தங்க நிறத்தில் டாலடிப்பவை. (சென்னம்மாளை நடிகை ரோஜாவின் முகச்சாயலில் கற்பனை செய்து, இவள் இப்படித்தான் அழகாக இருந்திருக்க முடியும் என்று ஒருமுறையும், அனுஷ்காவின் முகச்சாயலில் கற்பனை செய்தும் படித்திருக்கிறேன்.)

வண்ணக்கடலில் கி.ராவும் ஜெயமோகனும் புன்னகைத்துக் கொண்டார்கள் என்றால், “குமரித்துறைவி”யில் கட்டி அணைத்துக்கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும்.‌ முகலாயர்களிடமிருந்து அன்னை மீனாட்சியைக் காப்பாற்றி பல்லக்கில் தூக்கி தென்திசை வருகிறார்கள். ஊனின்றி உறக்கம்விட்டு அன்னை அன்னையென்று மட்டும் சித்தமாக ஓடி வருகிறார்கள் புரோகிதர்கள். வழியில் கள்வர் கூட்டம் சூழ்ந்து கொண்டு ,கற் சிலையிருக்கும் பல்லக்கை ஒரு ராணியின்/பெரிய குடும்பத்து பெண்ணின் பல்லக்கு என்று நினைத்து கொள்ளையடிக்க நெருங்குகிறான் கள்வர் தலைவன். அடுத்த வரி பல்லக்குக்குள்ளே முகம் நிறைத்துக் கொண்டு கண்கள் கொண்ட சிறுமியொருத்தி தோளில் கிளியோடு தோன்றுகிறாள். ஒரு நொடி கண்ணீர் தொடுதிரையில் விழுந்து அலையடிக்க நின்றுவிட்டேன். எந்த மின்கம்பியில் கைவைத்திருக்கிறோம் அதை நம்மை எங்கே வீசியடிக்கப்போகிறதென்று அறிந்து நிலைதடுமாறிவிட்டேன்.. இந்த நாவல் ஜெயமோகனின் மிகப்பெரிய உச்சம். வீடு திரும்பினால் கதவிற்குள்ளிருந்து என் செல்ல மகள் மீனாட்சியாய் நடந்து வருகிறாள்.

இந்த வெண்முரசு நாவலில் நான் எந்த கதாப்பாத்திரத்தோடு ஒன்றப்போகிறேன் என்று யோசித்தபடியே இரண்டு புத்தகங்கள் படித்துமுடித்தேன். பீமன் தான் நம்மாள். இனி எத்தனை கதாப்பாத்திரங்கள் வந்தாலும் பீமன் போல ஒரு பாத்திரத்தை நான் சந்திக்கப்போவதில்லை‌.

அர்ச்சுனன் வயதுக்கு மீறிய வேகத்தோடு வில்வித்தை கற்கிறான். தணுர் வேதத்தையும் கற்றுத் தேர்கிறான். கிருபரிடம் விவாதிக்கிறான். அவனை தருமன் திட்டுகிறான். கிருபர் அவனுக்கு கற்றுத்தருமளவிற்கு நான் கற்றவனில்லை என்று மிகத் தன்மையாக தருமனிடம் கூறுகிறார் தன் மைத்துனன் துரோணனை அழைத்து அவனுக்கு குருவாக்குகிறார். அந்தக்காட்சியில் அர்ச்சுனன் மிகப் பிரகாசமான நட்சத்திரம் போல சுடர்கிறான். உச்சத்தில் முடியும் அந்த காட்சிக்கு அடுத்த காட்சி அஸ்தினபுரியின் அடுக்களையில் துவங்குகிறது. பெரிய கதவைத் தள்ளி உள்ள தயக்கத்தோடும் மிரட்சியோடும் எட்டிப்பார்க்கிறான் சிறுவன் அர்ச்சுனன். பீமனை தேடுகிறான். உள்ளே பீமன் சப்பாத்தி சுட்ட படியே அவனைக்கண்டு “இங்கே பாரு இது அம்பெடுத்து ஆளக்கொல்ற மாறி ஈசியான காரியம் இல்ல பாத்துக்கோ” என்று பேசத்துவங்குகிறான். சமையலின் நுட்பங்களை, மனமும் குவிந்து ஒருங்காவிட்டால் ஒரு அப்பம் கூட சுடமுடியாது என்று கூறுகிறான். அன்னம் பாலிக்கும் தெய்வத்தைக் அவனுக்கு காட்டுகிறான்.இறுதியாக அவனை தன் குருநாதர் மந்தரரிடம் கூட்டிச்செல்கிறான்.

குருவைக்கண்ட உடனே நான் “பிரதமன்” “பிரதமன்” என்று துள்ளிக்குதிக்கிறது என் மனது. ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடியே மொத்த அடுக்களையும் கையில் வைத்திருக்கும் ஆசான் தான் இன்னொரு கணக்கில், பந்தியில் சாப்பிடும் கைகளை, வாய்களை கண்டு உளம் நிரம்பியபடி படுத்திருக்கும் மந்தரரும். மந்தரர் ஒரு சூதர் அவர் காலில் விழுவதா என்று அர்ச்சுனன் கேட்கிறான். மூடனே என்று வைது அவனுக்கு கர்மம் செய்பவன் கடவுள் என்று விளக்குகிறான். பிரம்மத்தை என் குருதேவரின் காலடியில் அமர்ந்தே அடைந்துவிடுவேன் என்கிறான் பீமன். பீமனும் மந்தரும் பேசிய பேச்சில், பீமனுக்கு அவர் தந்த பீடாவின் சுவையின் முன் முந்தைய காட்சியில் வந்த தணுர்வேதமும் வில்லும் சிறியதாய் தெரிகின்றன

.”உடலோ, நிறமோ அல்ல நீ! உன் செயலே உன் அடையாளம். உன் கர்மத்திற்கு உன்னை முழுதாக பலி கொடு. பிரம்மத்தில் ஒன்றாவாய். உன் திருப்தி தான் உன் மோட்சம்” என்று இந்த நூற்றாண்டில் நின்று இவ்வளவு சத்தமாக இவ்வளவு அழுத்தமாகச் சொல்லும் குரல் ஜெயமோகனது குரல். இந்த காலகட்டத்தின் மிக அத்தியாவசியமான குரல். வெறும் பணத்திற்காக கனவுகளை விட்டு ஒரு டிஜிட்டல் குமாஸ்தா ஆகிக்கொண்டிருக்கிறேனோ என்று நான் சோர்வுறுந்தோறும் என்னை மீட்டெடுக்கும் குரல் இந்தக் குரல் தான்.

மக்களுக்காகவே உழைத்து தெய்வம் போல் தோன்றிய டாக்டர் சாமர்வெல்(ஓலைச்சிலுவை), கெத்தல் சாகிப், தூய சாராயம் காய்ச்சும் பக்குவத்தில் தெய்வம் வெளிப்படும் என்று மனதாற நம்பிய லாசர்(மாயப்பொன்), பாயாசம் முறுகி வரும் பதத்தில் தெய்வம் தோன்றி ஆட்கொள்ளும் என்று காட்டிய ஆசான்(பிரதமன்), சுவற்றில் பகவதியை வரைந்து கண்முன் தெய்வப்பிரசன்னம் நிகழச் செய்த சித்திரக்காரன் மாணிக்கம் ஆசாரி( அந்தக் கதைக்கு இறைவன் என்றே பெயர்) கம்பமேறி மிக மிக நேர்த்தியாக சோல்டரிங் செய்து தான் பிரம்மனைவிட ஒரு நெல் குறைவானவனில்லை என்று கர்ஜிக்கும் மாடன்பிள்ளை.‌. எத்தனை பாத்திரங்கள் உன் ஆத்மார்த்தம் உன்னைச் சுடர்விடச்செய்யும் என்று நம்மை தேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். நான் என்னை தினசரி மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி நமக்கு விசுவாசமானவனாக இருந்தாலே என் அயர்ச்சியில் இருந்து மீண்டு மேலேறி விடுவேன் என்று பெரிய நம்பிக்கையோடு என்னை மீட்டுக் கொள்கிறேன்.

இந்த மானுட நம்பிக்கையை, உத்வேகத்தை தொடர்ந்து என் தோளில் பலமாய் சாத்தி அளித்துக் கொண்டேயிருக்கும் ஜெயமோகன் எனக்கு எந்த இலக்கியவாதியை ஆன்மீகத்தையும் விட முக்கியமானவர்.

பிரவீன் குமார்

வெண்முரசு வாசிப்பு- பிரவீன்குமார்

முந்தைய கட்டுரைஆத்மார்த்திக்கு பாலகுமாரன் விருது
அடுத்த கட்டுரைமக்பை