அன்புள்ள ஜெ
சென்ற வாரம் தங்களை சந்தித்த பின் எழுதும் இரண்டாவது கடிதம். தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு என்கையில் முதல் கடிதம். எனது நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவேறியது. இந்ந ஒருவாரத்தில் காலை எழுகையில் முதலில் நினைவுக்கு வருவது நம் சந்திப்பு தான். அடுத்த முறை சந்திக்கும் வரை இது என் கனவுகளில் வளரும்.
சென்ற முறை சந்திக்கையில் கனலி இதழில் மொழியாக்கம் ஒன்று செய்துள்ளேன் என்று கூறினேன். அது இன்று வெளியாகியுள்ள கனலி இதழில் வந்துள்ளது. நான் மொழியாக்கம் செய்துள்ளது, ஐசக் பாஷவிஸ் சிங்கரின் Zlateh the goat சிறார் கதை தொகுதியில் இருந்து The devil’s trick என்ற கதையை சாத்தானின் தந்திரங்கள் என்று.
உங்களுக்கு பிறந்தநாள் பரிசு என்று Zlateh the goat கதையை மொழியாக்கம் செய்கையில் அந்த கதையை படித்து பார்த்த செல்வா அண்ணா, உலகின் மூத்த எழுத்தாளர்களின் ஒரு பத்து கதைகளை மொழியாக்கம் செய்தேயானால், அவற்றை ஒரு தொகுப்பாக கொண்டுவர எண்ணமுள்ளது என்றார். எனக்கு பரந்த வாசிப்பு இல்லையென்பதால் அதற்கு எதுவும் சொல்லாமல் உம் கொட்டி வைத்தேன்.
அதன் பிறகு வேறொரு முறை பேசுகையில் இந்த யோசனையை திரும்ப சொன்னார். அப்போது சிங்கரின் இந்த கதை தொகுதியை முயன்று பார்க்கலாம் என்ற எண்ணம் இருந்தது. அண்ணாவிடம் சொன்னவுடன் புத்தகத்தை அனுப்பி தந்தார். தொடங்க வேண்டும் என தள்ளி வைத்து கொண்டிருந்த பொழுது கனலி விக்னேஷ்வரன் அவர்கள் காளி அண்ணாவின் மூலம் தொடர்பு கொண்டார். நேரம் குறைவாக இருந்ததால் இந்த சிறிய சிறார் கதை மொழியாக்கம் செய்து கொடுத்தேன்.
நண்பர்களுக்கு அனுப்பி ஒரு சொல் கேட்பதற்கு முன் உங்களுக்கு அனுப்பி வைக்க எனக்கு ஆசை தான். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் புதிதாக சிறுகதை எழுதுபவர்களுக்கு இரண்டு விஷயங்கள் சொல்லியிருந்தீர்கள். இதுபோன்று புதியவர்களின் சிறுகதைகளை வாசித்து பார்த்து சொல்லுமளவுக்கு தங்களுக்கு நேரமில்லை என்பதாலும், ஒரு கதை தகுதியானதாக இருக்கிறது என்பதை காட்டுவதற்காகவும் அந்த இரண்டு விஷயங்கள் சொன்னீர்கள்.
முதலில் உங்கள் கதை ஏதேனும் ஒரு தீவிர இலக்கியத்தை முன்னெடுக்கும் இதழில் வந்திருக்க வேண்டும். அந்த தேர்வில் தேறுவதே அது தகுதியான ஆக்கம் என்பதற்கான முதல் தேர்வு. இரண்டாவது தகுதியான கதை என்றால், உங்களுக்கு எப்படி வந்துசேரும். தாங்களும் தொடர்ச்சியாக இணைய இதழ்களை கவனிப்பவர், அதை தாண்டி தங்கள் நண்பர் வட்டத்தின் கண்களில் இருந்து சிறந்த ஆக்கங்கள் தவறுவதில்லை.
இதை எனது மொழியாக்கத்திற்கும் எடுத்துகொண்டேன். இரண்டாவது விஷயத்தை விட்டுவிட்டேன்:) அந்த அளவும் பொறுமையும் நம்பிக்கையும் இல்லை என்பதை ஒத்துகொள்கிறேன்.
ஆனால் இந்த மொழியாக்கம் எனக்கு மிக நிறைவான அனுபவமாக இருந்தது. இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே தாங்கள் மொழிப்பெயர்ப்பு என்ற சொல்லுக்கு பதிலாக மொழியாக்கம் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள். இந்த சொற்களில் நுட்பமான ஒரு பொருள் கோடல் உண்டு. மொழிப்பெயர்ப்பு என்கையில் அதை செய்வதை இயந்திரத்தனமான அணுகுமுறையை குறிக்கிறது. ஆனால் மொழியாக்கம் என்கையில் அதை செய்பவரும் இணையாசிரியராக படைப்பில் பங்கு பெறுகிறார் என அர்த்தம் வருகிறது. சுசித்ரா அக்கா முன்னர் ஆங்கில கட்டுரையில் இதை கூறியிருந்தார். அப்போது அவை வெறும் சொற்களாக இருந்தது.இந்த மொழியாக்கம் எழுதுகையில் வெளிப்படும் படைப்பாக்க அனுபவத்தின் துளியை அளித்தது. அதுவே எனக்கு கிடைத்த நிறைவு.
கனலியில் வெளியான மொழியாக்க கதைக்கான இணைய சுட்டியையும் மூலத்தை பிடிஎஃப் வடிவிலும் அடுத்தடுத்து இணைக்கிறேன். தங்களுக்கு நேரமிருந்து வாசித்து விமர்சனம் செய்தால் பெரிதும் மகிழ்வேன்.
அன்புடன்
சக்திவேல்
கனலி இதழில் கதையின் சுட்டி