வெண்முரசெனும் புதுச்சொற்களஞ்சியம்- முனைவர் ப. சரவணன், மதுரை.

புனைவிலக்கியத்தில் புதிய சொற்கள் இடம்பெறுகிறதெனில் அது கவிதையிலக்கியமாகத்தான் இருக்கும். அதற்கடுத்த நிலையில் நாவலிலக்கியத்தில் அவ்வாறு இடம்பெற வாய்புள்ளது. அந்த வகையில் புதிய சொற்களைத் தொடர்ந்து உருவாக்கி, தன் நாவல்களில் இடம்பெறச் செய்யும் எழுத்தாளர்களுள் முதன்மையானவர் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள். அவர் மகாபாரதத்தை நவீன நடையில் மீட்டுருவாக்கம் செய்து, ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் எழுதியுள்ள நாவல் தொடரில் எண்ணற்ற புதியசொற்கள் இடம்பெற்றுள்ளன.

“தேவையே புதியனவற்றைக் கண்டுபிடிப்பதற்குத் தாய்” (Necessity is the mother of invention) என்ற பழமொழிக்கு ஏற்ப, ‘மகாபாரதம்’ நடந்த காலக்கட்டம் பழைய காலம் என்பதாலும் அதனை நவீன யுகத்து வாசகருக்கு அதன் செவ்வியல் தன்மை மாறாமல் கையளிக்க வேண்டும் என்ற எழுத்தாளரின் வேட்கையாலும் ‘வெண்முரசு’ நாவல்தொடரில் பல்வேறு புதிய சொற்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

பழைய, தேய்வழக்குச் சொற்களையும் தொடர்களையும் மீண்டும் மீண்டும் தன்னுடைய புனைவிலக்கியத்தில் பயன்படுத்த விரும்பாத எழுத்தாளர் புதிய சொற்களைத் தன்னுடைய அறிவுத்திறனால் கண்டடைந்து, உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து ஆர். மாணிக்கவாசகம், தனித்தமிழியக்கம் உருவாகி அது பங்களிப்பை ஆற்றி, முடிந்துவிட்டது என்றே எண்ணியிருந்தேன். தனித்தமிழுக்கு இனிமேல் இடமே இல்லை என்று அனைவரும் சொல்லும்போது இருக்கலாமென்றே நானும் எண்ணியிருந்தேன். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒரு தனித்தமிழ்க் காவியம் இங்கே நிகழ்கிறதென்பதே பெருமகிழ்வுக்கு ஆளாக்கியது என்று ‘வெண்முரசு’ நாவல் தொடர் எழுதும் எழுத்தாளரின் முயற்சியினைப் பாராட்டியுள்ளார்.

அவர் ‘வெண்முரசு’ நாவல் தொடரைப் படித்த அனுபவத்தைப் பின்வருமாறு பகிர்ந்துள்ளார்.

ஏராளமான தமிழ்ச்சொற்கள். ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு நுட்பமான தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன என்பதே வியப்புக்குரியது. ராஜதந்திரம் என்பதை அரசுசூழ்தல் என்று வாசித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி என்பது அரிதானது. அப்படி எத்தனை சொற்கள்!. பல்லாயிரம் புதிய சொற்கள். மகாபாரதத்தைப் படிக்க எனக்கு ஒரு மனத்தடை இருந்தது. அது வடமொழிக்காப்பியம் என்பதுதான் அதற்குப் பின்னணி. ஆனால், அதைத் தூய தமிழில் எழுதமுடியும் என்று எண்ணிப் பார்க்கவே இல்லை. முழுமையாகவே தனித்தமிழில் எழுதப்பட்டு வருகிறது வெண்முரசு என்று வியந்து கூறியுள்ளார்.

       ‘புதிய சொற்கள்’ என்று இங்குக் குறிப்பிடப்படுவன இதுவரை யாரும் பயன்படுத்தாத, தமிழ் அகராதிகளில் இடம்பெறாத சொற்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இரண்டு சொற்களை இணைத்துக் கூறும்போது அவை ஒன்றிணைந்து புதிய அகதரிசனத்தைத் தரும் என்ற நிலையிலும் அவற்றைப் புதிய சொற்களாகவே கொள்ளவேண்டும்.

சொற்களை இணைப்பது எளிதுதான் எனினும் சொற்களை இணைப்பதால் புதிய உணர்வுநிலையினை வாசகரின் மனத்தில் உருவாக்க முடிந்தால், அது ஒருவகையில் ஒரு புதிய உத்தியே என்பதை நாம் மறுக்க இயலாது. அத்தகைய சொற்களையும் நாம் தமிழ்மொழியின் சொல்வளத்துக்கு அந்த எழுத்தாளர் அளித்துள்ள கொடையென்றே கொள்ளப்பட வேண்டும். இந்த அடிப்படையில் நோக்கும்போது, ‘வெண்முரசு’ நாவல் தொடரில் சில நூறு புதிய தமிழ்ச்சொற்களைக் கண்டறிய முடிந்துள்ளது.

வெண்முரசில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய சொற்கள் குறித்தும் அவை பொதுப்பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலை பற்றியும், வெண்முரசில் நானே உருவாக்கிய நூற்றுக்கணக்கான சொற்கள் இன்று பொதுப்புழக்கத்திற்கு வந்துவிட்டிருக்கின்றன. தினத்தந்தியில்கூட அவ்வப்போது அவற்றைப் பார்ப்பதுண்டு. இன்றுகூட ஒரு சொல்லைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டேன். வெண்முரசில் இருந்து விக்ஸனரி போன்ற தளங்களுக்குச் சென்று பொதுப்புழக்க மொழியில் கலந்துவிடுகின்றன என்கிறார் எழுத்தாளர்.

கோ. மன்றவாணன் என்பவர் எழுத்தாளர் ஜெயமோகனின் புனைவிலக்கியத்தில் புதியசொற்கொடை பற்றிக் கூறும்போது, சிலர் புதுச்சொற்களை எழுதும்போதோ புரியாத சொற்களைப் பயன்படுத்தும் போதோ அடைப்புக்குறிக்குள் அச்சொல்லின் பிறமொழிச் சொற்களை எழுதுவார்கள். ஆனால், நீங்கள் எந்தச் சொற்களுக்கும் அடைப்புக் குறிக்குள் பொருளையோ, பிறமொழிச் சொல்லையோ குறிப்பது இல்லை. நீங்கள் எழுதும் புதுச்சொற்களே தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக் கொள்கின்றன. அதற்கான சூழலை உங்கள் சொற்றொடர்கள் உருவாக்கித் தருகின்றன. பிறமொழிச் சொற்களுக்குத்தான் நீங்கள் புதுச்சொல் உருவாக்குகிறீர்கள் என்பது அல்ல, சூழலின் போக்குக்கு ஏற்ப, சொல்லும்  கருத்துகளின் நுண்மைக்கு ஏற்ப எந்த மொழியிலும் இல்லாத புதுச்சொற்களையும் தமிழுக்குத் தந்து வருகிறீர்கள். உங்கள் படைப்புகளில் உள்ள புதுச்சொற்கள் அனைத்தையும் தொகுக்க வேண்டும். அந்தப் பணியை நான் செய்ய வேண்டும் என்ற ஓர் எண்ணம் எனக்கு நீண்ட காலமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இவரைப் போலவே பேராசிரியர் எம்.ஏ. சுசீலா அவர்கள், “நான் மட்டும் இப்போது பணியில் இருந்திருந்தால் ஆர்வமுள்ள மாணவக்குழுவையோ ஆய்வாளர்களையோ ஒருங்கிணைத்து வெண்முரசின் அரிய சொற்களை LEXICON ஆக்கப் பணித்திருப்பேன். அதற்கு வழிகாட்டி அதன் அடிப்படையில் ஆய்வு செய்ய உதவியும் இருப்பேன். மட்டுமே அதில் ஈடுபட முடியாமல் என் வயதின் தளர்ச்சியும் பிற பணிச்சுமைகளும் என்னைத் தடுக்கின்றன. எனினும் வருங்காலத்தில் எவரேனும் அதைச் செய்யக்கூடும் என்ற ஆழ்ந்த உள்ளார்ந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

       நான் ‘வெண்முரசு’ நாவல்தொடரை வாசித்தபோது என்னளவில் புதிய தமிழ்ச்சொல் என நான் கண்டடைந்த சில நூறு சொற்களுள் 160 சொற்களை மட்டும் இங்குத் தொகுத்தளித்துள்ளேன்.

 1. வழிவிடுதி, 2. தொலைபயணி, 3. பொழுதிணைவு, 4. ஊழ்கம், 5. துயில்நீக்கப்பணி, 6. வாயுமிழ்தல், 7. அன்னநீர், 8. முகச்சொல், 9. கதிரெழுதல், 10. கதிரமைதல், 11. உளப்பாடம், 12. சுடராட்டு, 13. பூச்செய்கை, 14. வயற்றாட்டி, 15. விழிக்கோள், 16. இலைப்பொதிக்கூடு, 17. வழிப்பெறுகை, 18. வெயிலெழுகை, 19. பொழுதிடை, 20. தாழ்வில்லை, 21. நாளவன், 22. வாய்மணம்கொள்ளுதல், 23. முன்தூக்கம், 24. சொல்லடங்குக, 25. பொழுதணைவு, 26. தாலச்சுடர், 27. மூப்பிளமைமரபு, 28. முற்றொப்புதல், 29. மறிச்சொல், 30. சொல்சூழ்கை, 31. சொல்லெண்ணுதல், 32. எண்ணமாற்று, 34. உளமோட்டுதல், 35. முழுதணிக்கோலம், 36. சொல்மன்று, 37. முறைமைச்சொல், 38. சொல்லாடுதல், 39. அணிச்சொல், 40. உளவிழி, 41. மாற்றுருதி, 42. விண்ணுலாவி, 43. திசையுலாவி, 44. உளச்சொல், 45. விழியுசாவுதல், 46. சூழநோக்குதல், 47. விழிச்சான்று, 48. சொல்தீட்டுதல், 49. முன்னேற்பு, 50. இயல்கை, 51. வானருள், 52. வினாழிகை, 53. செவிகுவித்தல், 54. படிவர், 55. ஐம்பரு, 56. வாழ்கடன், 57. ஆலயவளைப்பு, 58. மலராட்டு, 59. குருதியாட்டு, 60. எடுத்துரைப்பு அளித்தல், 61. பிறவிமீன், 62. முழுதாற்றுதல், 63. கொலையாட்டு, 64. முற்றணிகொள்ளல், 65. செல்கைச்சடங்குகள், 67. காலிளைப்பாற்றுதல், 68. தூநீர்வாவி, 69. வருகணக்கு, 70. செல்கணக்கு, 71. அருகணைதல், 72. அரிதியற்றுதல், 73. தண்துளி, 74. பேரளி, 75. இசையிமிழ்தல், 76. உள்ளனல், 77. அனலுருளை, 78. மூக்குத்திறன், 79. காட்டெரி, 80. எழுயுகம், 81. வழிச்சாவடி, 82. வீழொலி, 83. விழியோட்டுதல், 84. உளப்பெருக்கு, 85. சிற்றணுவிடை, 86. நீரன்னை, 87. எரிகடன், 88. நிகர்நிலம், 89. அறத்தீங்கு, 90. பழிநிகர், 91. ஒலிநதி, 92. இருளுலாவி, 93. எண்கணுக்கள், 94. தென்னிலை, 95. முதலோன்வாளி, 96. இருளுருகுதல், 97. அனற்குவை, 98. இணையகவை, 99. நுண்ணனல், 100. அணித்திரை, 101. அணியர், 102. விழிதழைத்தல், 103. உயிராழ்வு, 104. அணித்தடம், 105. நேரக்கணியர், 106.விழியாடுதல், 107. அளியவன், 108. பொற்துருவல், 109. கணிநிறைவு, 110. முழுதுரு, 111. சொற்சரடு, 112. மின்னரசன், 113.
  சொற்குவை, 114. முழுத்தவை, 115. உளநுண்மை, 116. நிகர்த்திறை, 117. பூசலோசை, 118. செறுத்துநிற்பு, 119. இருட்தோற்றம், 120. சொல்திறம்புதல், 121. தீயூழ், 122. நிகருடல், 123. நீர்ச்சரடு, 124. நற்றுயில், 125. புரவியூன், 126. எரிநூலேணி, 127. புரவிச்சிதை, 128. நீர்வேலி, 129. பொன்னீக்கள், 130. விழிச்சுனை, 131. ஐந்தனல், 132. பொற்கொன்றை, 133. நெறியுசாவுதல், 134. நீர்மணிகள், 135. வீணுயிர், 136. பேரழல், 137. கூரொளி, 138. கூரலகு, 139. நிகருலகு, 140. புழுதிமுகில், 141. நீரன்னம், 142. கருவுறக்கம்,  143. நீணாள், 144. தீயூழினன், 145. கணிக்களம், 146. இருட்புலரி, 147. இருட்கதிரவன், 148. வெற்றோசை, 149. ஊழிடர், 150. சிற்றூரன், 151. ஒளிச்சட்டம், 152. கெடுநரகம், 153. புதரொலி, 154. அனற்கடன், 155. தன்னேற்பு மணம், 156. கூரழகு, 157. அரசுசூழ்தல், 158. கதிர்மைந்தன், 159. செல்வழி, 160. நீர்ச்சுடர்.

இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள 160 புதிய சொற்களிலிருந்து பத்துச் சொற்களுக்கு மட்டும் விளக்கம் தர விழைகிறேன்.

 1. ‘பொழுதிணைவு’ – இரவும் காலையும் இணையும் பொழுது அல்லது மாலையும் இரவும் இணையும் பொழுது.
 2. ‘அன்னநீர்’ – வெந்த சோற்றை வடிப்பதன் வழியாகக் கிடைக்கப் பெறும் வடிகஞ்சி.
 3. ‘இணையகவை’ – ஒத்த வயது.
 4. ‘மூப்பிளமைமரபு’ – வயதின் அடிப்படையில் முதன்மைதரும் மரபு.
 5. ‘சொல்லாடுதல்’ – பேசிக்கொண்டிருத்தல்.
 6. ‘நற்றுயில்’ – நல்ல தூக்கம் அல்லது நல்ல உறக்கம்.
 7. ‘நீணாள்’ – நீண்ட நாள் அல்லது நெடிய நாள்.
 8. ‘சிற்றூரன்’ – சிறிய ஊரைச் சார்ந்தவன்.
 9. ‘கணிக்களம்’ – குறிசொல்பவர்கள் குறிபார்ப்பதற்காக உருவாக்கும் மிகச் சிறிய இடம்.
 10. ‘புதரொலி’ – காற்றினால் புதர் அசைந்து எழுப்பும் ஓசை.

இதுபோன்று 160 புதிய சொற்களுக்கும் உரிய விளக்கத்தை அளிக்க இயலும். இந்தச் சொற்களுள் பல தமிழ் அகராதியில் இடம்பெறவில்லை. அவற்றை உரிய முறையில் தமிழ்ச் சொல்லகராதியில் சேர்க்க வேண்டியது இக்காலத் தமிழராகிய நமது தமிழ்ப் பணிகளுள் ஒன்றாகும்.

ப.சரவணன்

முந்தைய கட்டுரைபொலிதல்
அடுத்த கட்டுரைதிருவெள்ளறை – கிருஷ்ணன் சங்கரன்