எழுத்துரு பற்றி, மீண்டும்…

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?
மொழியை பேணிக்கொள்ள…
புலம்பெயர் உழைப்பு
மொழிக்கு அப்பால்…

அன்பிற்குரிய ஜெ,

தமிழை ஆங்கில எழுத்துகளை உபயோகித்து எழுதலாம் எனும் தங்களின் பரிந்துரை எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியமாகும்? தமிழ் என்ற சொல்லை Tamil என எழுதுவதே தவறான கற்பிதம் தானே. எனில், பள்ளி – பல்லி, புளி – புலி இவற்றை வேறுபடுத்துவது எவ்வாறு?

இந்தோனேசிய புத்தமடத்தின் நூலகம் பற்றிய தங்களின் பதிவு ஒன்றில், அவர்கள் (இந்தோனேசியர்) சில லத்தீனிய உருக்களையும் (ஆங்கில எழுத்துகளோடு) ஆங்கில எழுத்துகள் நிறைவு செய்யாத ஓசைகளுக்கு உபயோகப்படுத்துவதாக இருந்தது. இது தமிழுக்கும் வழி் வகுக்குமா?

நாஞ்சில் நாடன் அவர்களின் பழைய ஒரு உரையில், தற்போது உபயோகப்படுத்தும் தமிழ் சொற்களே (இலக்கியத்திலும், குறிப்பாக கவிதைகளில்) குறைவுதான் என பதிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் வரும்காலத்தில் ஆங்கில எழுத்து கொண்டு தமிழ் செய்வது பல சொற்களை அழிக்காதா?

மன்னிக்கவும், இதே கேள்வி முன்னமே தங்களிடம் வந்திருக்கலாம். தங்களின் பழைய பதிவுகளையும் தேடித்தேடி படித்துக்கொண்டிருக்கறேன். இதே போன்ற கேள்விக்கு பழைய பதிவு ஏதும் கிடைக்காத்தால் இந்த கேள்வி.

தங்களின் குறளினிது உரையில், விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே பசும்புல் தலைகாண்பது அரிது. குறளில் விசும்பின் துளி என்பதற்கான தரிசனம் எனக்கு தாமதமாகவே கிடைத்தது.

தங்களின் பழைய பதிவுகளை இப்போதுதான் வாசித்து கொண்டிருக்கிறேன். கேள்விகளில் பிந்தியிருப்பதற்கு மன்னிக்கவும்.

பாலாஜி.

***

அன்புள்ள பாலாஜி

நான் இவ்விஷயத்தை தொடர்ந்து பேசுவது ஓர் நடைமுறைச்சூழல் கண்ணுக்குப் படுவதனால்தான். இங்கே இரண்டு எழுத்துவடிவங்களை [லிபி] பயில்வது இன்றைய மாணவர்களுக்குக் கடினமாக உள்ளது. ஆங்கிலமே பயிற்றுமொழியாக, தொழில்வணிக மொழியாக இருக்கையில் தமிழ் இரண்டாம் மொழியாக ஆகிவிடுகிறது. ஆகவே ஆங்கிலத்தில் புழங்கியபடி கூடுதலாக தமிழ் எழுத்துக்களை பயில்வதும் நினைவில் நிறுத்துவதும் அடுத்த தலைமுறையினருக்கு கடினமானதாக மாறிவிட்டிருக்கிறது.

இங்கே தமிழ் பேச்சுமொழியாக உள்ளது, ஆனால் வாசிக்கப்படுவது குறைகிறது. இச்சூழலை எதிர்கொள்ளும் வழி என்பது அனைவரும் கட்டாயமாக கற்றுக்கொள்ளும், பழக்கம் கொண்டிருக்கும் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதுவதே என்பது என் கருத்து. உடனடியாகச் செய்யவேண்டியதல்ல அது. காலப்போக்கில் மெல்லமெல்ல கொண்டுவரவேண்டிய ஒரு மாற்றம். நிபுணர்களால் செய்யப்படவேண்டிய ஒன்று.

இங்கே தமிழை இரண்டாமொழியாகப் பயின்றாலும் அதில் சரளமாக வாசிப்பவர்கள் அரிதினும் அரிதாகி வருகிறார்கள் என்பது கண்கூடு. எனவே தமிழிலக்கியம் போன்றவை பெரும் பின்னடைவை எதிர்காலத்தில் சந்திக்கலாம். ஆங்கிலத்தை எவ்வகையிலும் தவிர்க்கமுடியாது. இப்போதே தமிழை ஆங்கில எழுத்துருக்களில்தான் தட்டச்சு செய்கிறார்கள். கணிப்பொறி அதை தமிழ் எழுத்துக்களாக ஆக்குகிறது. அதையே பொதுநெறியாகக் கொள்ளலாம்.

ஆங்கில எழுத்துருக்களில் தமிழை எழுதினால் இரண்டு லிபிகள் கற்பதனால் உருவாகும் பிரச்சினையை கடக்கமுடியும். மாணவர்கள் ஒரே லிபியை படித்தால்போதும்,  தமிழிலும் சரளமாக வாசிக்கமுடியுமென்னும் நிலை அமையும். ஏற்கனவே தமிழில் பேசிக்கொண்டிருப்பதனால் அவர்கள் நிறைய வாசிப்பார்கள். இன்றுள்ள தடை வாசிப்புக்கு இருக்காது. எதிர்காலத்தில் நிகழவிருப்பது இதுதான். இன்றே அந்நிலை நோக்கித்தான் செல்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன் நான் இதை எழுதியபோது கொந்தளித்தனர். இன்று நடைமுறைச்சூழல் அங்கே நாம் மெல்ல மெல்லச் செல்வதையே காட்டுகிறது.

தமிழில் எழுத்துருக்களை மாற்றுவதொன்றும் அரிய அடாத செயல் அல்ல. பிராமி, சோழர்வட்டெழுத்து என தமிழ் வெவ்வேறு எழுத்துருக்களில் காலந்தோறும் மாற்றி மாற்றி எழுதப்பட்டபடியேதான் இருக்கிறது. இன்றுள்ள எழுத்துருக்கள் எழுநூறு ஆண்டுகள் வரலாறு கொண்டவை. இருநூறாண்டுகளுக்கு ஒருமுறை வடிவங்களில் மிகப்பெரிய மாற்றம் இதிலேயே நடந்துகொண்டும் இருக்கிறது. இதில் செண்டிமெண்ட் பார்ப்பவர்கள் எந்த செண்டிமெண்டையும் எதிர்த்த பெரியார் வழிவந்தவர்கள் என்பதுதான் விந்தை.

இது ஒன்றும் புதிய எண்ணம் அல்ல. இதை சுதந்திரம் கிடைத்தபோதே இந்த முறையை கல்வித்துறை அறிஞர்கள் முன்வைத்தனர். இந்திய மொழிகள் அனைத்தையும் ஆங்கில லிபியில் எழுதவேண்டும் என வாதிட்ட முன்னோடி அறிஞர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள். இந்திய அரசு அதற்காக பல கமிட்டிகளை அமைத்துள்ளது. பல அறிஞர்கள் பலவகையான பரிந்துரைகளை அளித்துள்ளனர். தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது சம்பந்தமாகவே நான்கு ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதை எப்படிச்செய்வது என்பதை கல்வித்துறையாளர், மொழியறிஞர்கள் கூடி முடிவுசெய்யவேண்டும். நாம் மண்டையைக் குழப்பிக்கொள்வதில் பொருள் இல்லை. இன்று தேவையாக இருப்பது மொழியரசியல், மிகையுணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு உண்மைச்சூழலைப் பார்க்கும் சமநிலையை நம் சமூகத்தில் உருவாக்குவது மட்டுமே.

எந்த மொழியையும் எழுத்துருவில் முழுமையாக எழுதிவிட முடியாது. எந்த மொழியிலும் எல்லா ஒலிக்கும் எழுத்து இருக்காது. எழுதியவற்றில் இருந்து ஒரு பழக்கம் வழியாக நாம்தான் ஒலியை அடைகிறோம். காகம் என்பதிலுள்ள இரண்டு ’க’ களும் வெவ்வேறு உச்சரிப்பு கொண்டவை. ஆனால் அதை அவ்வெழுத்துக்கள் காட்டவில்லை. நாமே பயின்று பழகியிருக்கிறோம். To என்பது Go என்பதும் வேறுவேறு உச்சரிப்பு என்பது மொழிப்பழக்கமே. ஆகவே எந்த லிபியிலும் எல்லா உச்சரிப்பையும் பழகிக்கொள்ளமுடியும். எழுதமுடியாத ஏதும் இல்லை. இன்றே எல்லாவற்றையும் ஆங்கில எழுத்துக்கள் வழியாகவே டைப் செய்கிறோம். இதோ இக்கட்டுரையே அப்படித்தான் எழுதப்படுகிறது.

நான் சொல்வது செண்டிமெண்ட்களை கடப்பதைப் பற்றித்தான். மொழி செயல்படும் விதத்தைப் பற்றிய அடிப்படைத் தெளிவை அடையுங்கள் என்றே சொல்கிறேன். மொழியில் எழுத்துக்கள் என்பவை வெறும் குறிகள், அடையாளங்கள் மட்டுமே. அவை அல்ல மொழி. மொழி என்பது சொற்களும் அச்சொற்களுக்குப் பொருள் அளிக்கும் பண்பாட்டுப் பின்புலமும்தான். மொழியை உறையவைக்க முடியாது. நவீனத்தேவைகளுக்காக மாறிக்கொள்ளாத மொழிகள் அழியும்.

மொழி வாழ்வது சொற்களிலோ எழுத்துக்களிலோ அல்ல. பயன்பாட்டின் வழியாகவே. ஒரு மொழி நிகழ்வது அதன் அன்றாடப்பயன்பாடு மற்றும் அதிலுள்ள அறிவுத்தொகுப்பின் சமகாலத்தன்மை வழியாகவே. தமிழின் எழுத்துருக்கள் மாறாமல் சொற்கள் மாறாமல் இருந்து அதைப்பேசுபவர்கள் குறைந்தால், அதன் இலக்கியங்கள் படிக்கப்படாமலானால் அது அழிவதை தடுக்கமுடியாது. அதை எப்படி பேணிக்கொள்வது என்பதையே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

எந்த மொழியிலும் புதிய சொற்கள் உருவாகிக்கொண்டும் பழைய சொற்கள் வழக்கொழிந்து கொண்டும்தான் இருக்கும். உயிருள்ள உடலில் புது செல்கள் தோன்றி பழைய செல்கள் மடிவதுபோல. எந்த மொழியும் அத்தனை சொற்களையும் பயன்படுத்த முடியாது. எந்த மொழியிலும் அன்றாடப்புழக்கம் என்பது மூவாயிரம் சொற்களுக்குள்ளேயே அமையும் என்பது மொழியியலாளர்களின் அறிதல். ஒரு மொழி விரிந்த சூழலுக்குள் பலகோடிப் பேரால் பேசப்பட்டால் பயன்படுத்தப்படும் சொற்களின் எண்ணிக்கை குறையும். மிகக்குறைந்த சொற்களில், மிக எளிய இலக்கணத்துடன் இருப்பதனால்தான் ஆங்கிலம் உலகமொழியாக புழங்குகிறது. பல லட்சம் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அவை துறைசார் சிறுவட்டங்களிலேயே புழங்குகின்றன. உலகளாவிய ஆங்கிலம் இரண்டாயிரத்துக்கும் குறைவான சொற்களால் பேசப்படுகிறது. ஆகவே சொற்கள் அழிவது பற்றி, எல்லா சொற்களும் புழங்காமை பற்றி பேசுவதெல்லாம் மொழிகளின் இயக்கம் பற்றிய புரிதல் இல்லாமையால்தான்.

ஜெ

எழுத்துரு ஓர் எதிர்வினை -2
எழுத்துரு ஓர் எதிர்வினை
மொழி மதம் எழுத்துரு- கடிதம்
தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும்
எழுத்துரு விவாதம் ஏன்?
எழுத்துரு கடிதங்கள்
எழுத்துருக்கள்-எதிர்வினைகள்
தமிழ் எழுத்துக்கள், கடிதம்
முந்தைய கட்டுரைஇலக்கியம் பாடமாக- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅருஞ்சொல் – கடிதம்