கிறங்கித் திரியுமொரு தமிழ்ப் பாணன்  – ரவிசுப்பிரமணியன்.


 

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

”கட்டில் செய்யலாம்
கப்பல் செய்யலாம்
கணக்கு செய்யலாம்
கவிதையைச் செய்ய முடியுமா?”

இப்படி சாதாரண எழுத்து மொழியில், பேச்சு மொழியில் அல்லது நேரிடையான உரையாடல் த்வனியில் தொடர்ந்து கவிதைகளை கட்ட முடியுமா என்றால் முடியும் என்று சாதித்தவர் விக்ரமாதித்யன் நம்பி. மரபின் தேர்ந்த சாரங்கள் உண்டெனினும் நம்பியை நவீன கவியென்றே நாம் சொல்ல முடியும்.

படிமங்கள், உருவகங்கள், வெற்று அலங்காரத் திகட்டல்கள் இல்லாமல், பாசாங்கு இல்லாமல் உள்ளடக்கத்தால் கவிதைக்குள் கிண்ணென்று ஒரு நாதத்தை ஒலிக்க வைப்பவர் நம்பி. பல கவிதைகளின் ஸ்வரப் பிரஸ்தாபங்கள் பழகியவர்களுக்கு மேலும் சில விசேஷங்களை தருகிறது. அதற்கு அவர் வாழ்வும் நமக்கு கொஞ்சம் புரிய வேண்டும்.

”சாமி மலையேறி
எங்கே போகும்
தேவி மடியில்
விழுந்து கிடக்கும்.”

இது என்ன கவிதையா, கவித்துவ வரிகளா, உரையாடல்களில் முகிழ்க்கிற கருத்தா, சிந்தனை நறுக்கா, எள்ளலா, பகடியா சொல்லாமல் விட்டதில் கனக்கும் அர்த்த பரிமாணமா. என்ன இது. இவை எல்லாவற்றுக்குமான கோடுகளை தன் கவிதைகளில் அழித்து அழித்து விளையாடுகிறார் நம்பி.

வழக்கம்போல  தேனுகாதான்  இவர் கவிதைகளையும் எனக்கு  அறிமுகப்படுத்தினார் அவருக்கு பிடித்த கீழ் வரும் இந்த கவிதையை சொன்னபோது அது எனக்குப் புரியா பிராயம். அவர் விளக்கம் சொல்லச் சொல்ல பிற்பாடு அப்பிக் கொண்டது இந்தக் கவிதை. நாலைந்து மேடைகளில் நம்பியின் இந்த கவிதைக்கு அவர்  விதவிதமான விளக்கம் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.

நீலகண்டம்
——————–
”அவனுக்கு தெரியாதா

ஆலகால விஷம்

அவளேன்  அலறிப் புடைத்துப் ஓடிவந்து

அவன் சங்கை பிடித்தாள்

கருத்த கழுத்து

காமத் தழும்பு.”

 

பெண்ணியத்துக்கு எதிரான ஒரு கவிதைதான் இது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் நம்பி கவலைகொள்ளமாட்டார்.

இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் என் கும்பகோணத்து வீட்டு மாடியில் என்னோடான அவரது சிறு உரையாடல்.

 

”நான் சின்னவன். கேக்கலாமா”

 

”என்ன வேணா கேளுங்க. சும்மா கேளுங்க”

 

அவரது ஒரு கவிதையை சொல்லி இப்படி கேட்டேன்.

 

”என்ன நம்பி இப்படில்லாம் எழுதுறிங்க இதல்லாம் கவிதையா.”

 

”எப்படியும் எழுதலாம். இப்படி இருக்குய்யா அப்படின்னு நான் சொல்றேன் தீர்ப்பல்லாம் எதும் சொல்லலையே. அதை ஏன் சொல்றேன்னு என்கிட்ட கேக்காதிங்க. யோசிங்க. ஒரு சிக்கலை உங்க முன்னால வச்சா அதுக்கு என்ன அர்த்தம்.”

 

”இது எல்லாருக்கும் அப்படியா. இப்படியெல்லாம் இருக்குமா”

 

”அது எப்படி இருக்க முடியும்.  இது நான் கண்டது கேட்டது அல்லது அனுபவிச்சு பார்த்தது. என் பிரத்யேகம் அவ்ளோதான். எல்லார்க்கும் அப்படி இருக்கணும்ன்னு என்ன அவசியம் இருக்கு.”

 

”ஒண்ணும் இல்லாததையெல்லாம் அப்பறம் கவிதைன்னு   எழுதுறிங்களே”

”யாருக்கு ஒண்ணுமில்ல. அது உங்களுக்கு. ஒண்ணுமே இல்லாதத நான் எப்படி எழுத முடியும். ஒண்ணுமில்லாததுன்னு ஒண்ணு இருக்கா உலகத்துல. அதை பார்க்க நமக்கு கண்ணு இல்ல.  ஒண்ணு அனுபவம் இருக்கணும். இல்ல சொல்ற அனுபவத்த  உள் வாங்குற ஞானமாவது இருக்கணும். ரெண்டுமில்லாம பெரிய மயிருமாரி பேசினா நான் என்ன சொல்றது. அதற்கு பின் சொன்ன வார்த்தைகள் எழுத முடியாதது.  உங்க வாழ்க்கை வேற. அதல்லாம் உங்களுக்கு புரிய நாளாகும். சரி. வாங்க முதல்ல நல்ல காப்பி குடிப்போம்”

 

அப்போது அப்படி எனக்கு வேறாகத்தான் இருந்தது வாழ்வு.
ஒரு கலைப் பாணனாய் நானும் எல்லாம் உதறி ஓடி வந்தபோது அன்று ஒன்றுமில்லாததென்று சொன்னதற்கெல்லாம் மெல்ல மெல்ல அர்த்தம் துலங்க ஆரம்பித்தது.

 

”விலை கூவி விற்கலாம்
இருக்கிறது சரக்கு எல்லோருக்குமாக
ஒரு சிறு பிரச்சனை
வியாபாரி அல்ல நான்

வீணாக அழிந்தாலும் கலைஞன் தான்.”

 

குறுங்கவிதைதான். எளிமைதான். புரோஸ்தான். ஆனாலும் இதன் அர்த்த விஸ்தீரணங்களை வாங்க நான் எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தது என்று எண்ணிப் பார்க்கிறேன். இப்படி பலரது வாழ்க்கையோடு  அர்த்த சம்பந்தம் நிகழ்த்துவது நம்பியின் கவிதைகள். வாழ்வின் ஒரு சிக்கலான தருணத்தில் என்னை அடித்து புரட்டி கலங்க வைத்த கவிதைகளில் ஒன்று கீழ் வருவது.


ரத்தத்தில்
——————

 

ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான் எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு

சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான் எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு

திருடிப்பிழைத்ததில்லை நான் எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம்வாங்கி வாழநேர்கிறது எனக்கு

கூட்டிக்கொடுத்ததில்லை நான் எனினும்
கூட்டிக்கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு

காட்டிக்கொடுத்ததில்லை நான் எனினும்
காட்டிக்கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு

பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ

முதலில்
என்னை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
என்னை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்

இல்லெங்கில்
எச்சில் பிழைப்புதான்
இரண்டும்கெட்டான் வாழ்க்கைதான்.

 

துன்பத் தயிரைக் கடைய கடைய சிலிம்பித் தெளித்து வெண்ணையெனத் திரள்கிறது கவிதை. இந்த கட்டுரையை எழுதுகையில் நம்பியின் ஏராளமான கவிதைகள் ஞாபகத்தில் மிதந்து வருகிறது.

”வடக்கேயிருந்து  வேதாந்தம்
தெற்கில் சைவ சித்தாந்தம்
கிழக்கே தாவோயிசம்
மேற்குலகில் மதியத்திலிருந்து என்னென்னவோ
எதுவுமற்று வாழ்கிறார்கள் பூர்வகுடிகள்.’

ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ”அறிந்ததிலிருந்து விடுதலை” என்பதின் ஒரு சின்ன வியாக்கியானம் போல இந்த சிமிழ் வடிவக் கவிதை. இதிலிருக்கும் மெல்லிய பகடியை அவரது பல கவிதைகளில் காணலாம்.

இன்ன வேலை என்று இல்லாது எத்தனையோ வேலைகளை செய்து நிலையற்ற வருமானமின்றி சித்தன் போக்கு சிவன் போக்கென திரிந்து நொம்பலப்பட்ட அந்த அவரது வாழ்விலிருந்து எவ்வளவு கவிதைகள் கிடைத்திருக்கின்றன தமிழுக்கு.

கிட்டத்தட்ட 20 தொகுதிகள், தவிர சிறுகதைகள் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் அவருக்குப் பிடித்த கவிதைகளை பற்றி எழுதிய கட்டுரைகளில் எனது ஒரு கவிதையும் இருக்கிறது. புதிதாய் கவிதை எழுத வருகிறவர்களுக்கு அந்தக் கட்டுரைகள் கை விளக்கு.

நான் அறிந்தவரையில் என் காலத்தில் இப்படி  குடித்து களித்து அவமானப்பட்டு காசுக்கும் இயல்பாய் கிடைக்க வேண்டிய நல்லதுக்குக்கெல்லாம் தவித்து அலைகழிந்த  வாழ்வை வாழ்ந்த கவிஞர் யாரும் இல்லை ஆனால், அந்த வாழ்வின் சிக்கல்கள்தான் தனிமனித அவலத்தின் சிறு சிறு மாதிரிகளாய் கவிதையில் மலர்கின்றன.

இந்த வாழ்வின் கேடுகளை விசித்திரங்களை அவலத்தையே பெரும்பாலும் அவை சொன்னாலும் அவை பொருட்படுத்த முடியா இடத்தில் நிற்பவை அல்ல. விமர்சனங்கள் இருக்கலாம். சொத்தைகள் கடிபடலாம். மூளி முக்கரை ஒன்றிரண்டு தென்படலாம். யாரிடமில்லை அவை. அந்த அற்ப சொற்பங்களுக்காகவெல்லாம் நிராகரிக்க முடியாதவை நம்பியின் கவிதைகள்.  கடற்கரையில் விற்கும்  கிளிஞ்சல்கள் போல,  செப்பு சாமான்கள் போல, அம்பா சமுத்திரத்தின் மரக் கடைசல் பொம்மைகள் போல அவ்வளவு எளிமையானவை அவை.  எளிமையென முகம் திருப்பிப் போகிறவர்களுக்காகவா நிற்கும் கவியின் இயக்கம். அது குறுக்குத் துறையின் வெள்ளக்காலத் தண்ணீராய் சுழித்து சுழித்து ஓடிக்கொண்டேதான் இருக்கும். பொருட்படுத்தாமல் போனவன் எங்கு போவான் வராமல்.

ஒரு வகையில் தர்க்க ரீதியான கேள்விகளுக்கு அவர் கவிதைகள் விடைதராமல் போகலாம். ஆனால் தர்க்கங்களை உருவாக்கும் தாதினைக் கொண்டவை அவை. எனதிந்த வாழ்வு ஒரு அபத்திர அறிவிப்பு என்று சொல்ல தன் வாழ்வாலும் வார்த்தைகளின்றி எழுதுகிறாரோ நம்பி என்று சில வேளை நான் நினைப்பதுண்டு. ஆனால் போனா போன இடம் வந்தா வந்தா வந்த இடமென்று வாழுமிந்த வாழ்வில் அவருக்கு புகார்கள் ஏதுமில்லை.

இவரது சக கவிகள் வாழ்வில் சிலருக்கு எல்லாமிருந்தும் எப்போதும் எதிலும் காணப்படும் அவலாதிகள் ஏதும் இவரிடம் இல்லை. புலம்பல், நொம்பலம், கையறுநிலை எல்லாம் கவிதைக்குள்தான். அதனால்தான் அவைகளும் வெகு இயல்பாய் இலக்கிய அந்தஸத்தைச் சூடிக்கொள்கின்றன. குற்றால நாதனுக்கு சுக்கு நீர். நம்பிக்கு கவிதை.

ஏகாந்த பெருவெளியில் திரியும் ஆட்டுக்குட்டிகளாய் வெகு இயல்பாய் மே என்று கத்திகொண்டு மேய்கின்றன அவரது கவிதைகள். ஓடிக்குதிக்கின்றன. துள்ளுகின்றன. இன்னொரு ஆட்டின் கொம்போடு விளையாட்டாய் முட்டுகின்றன. சில வேளை இரு கால்களையும் நம் மேல் ஊன்றி சுவாசம் சிதற  முகம் பார்க்கின்றன.

எது ஒன்றையும் தேடாத பயணத்தில் பயணம் மட்டுமே சுகமென்று கண்டு திரியும் இந்த பிரகிருதியை குடித்தே தீர் என்று எந்த தெய்வம் கட்டளை இட்டதோ அதே தெய்வம்தான் இந்த வாழ்வை கவிதையாக்கு என்று சொல்லி இயங்க வைக்கிறது போலிருக்கிறது.

படைப்பை சுண்டக்காய்ச்சி கோவாவாக்கி, அர்த்த அர்த்த பரிமாணங்களையோ போதனைகளையோ போத்ததையோ பிரகடனங்களையோ, இருள் விலக்கி காணும்படியான யத்தனத்தையோ அவர் கவிதைகள் தருவதில்லை.
ஆனால், உங்கள் கையில் அள்ளும் நீராய் அவ்வளவு எளிமையாய் வசப்படுவது அது.

கைப்பேனா, கழன்று விழுந்த கொலுசு, தனியான ஒற்றைச்செருப்பு, பட்டுப்பூச்சிகள், இப்படி பெரும்பாலும் ஒதுங்கிக்கிடப்பவைகளே போதும் நம்பிக்கு கவிதையைச் சொல்ல. அதை வைத்துக்கொண்டு நொட்டேஷன்களை எழுதிவிடுகிறார். ஆலாபனைகளோ, ப்ருக்காக்களோ, சிட்டா ஸ்வரங்களோ இல்லை. வாசிப்பவன் வக்குக்கேற்ப வித வித கானம் தரும் எளிய நொட்டேஷன்கள்.

லெளகீக உபாதைகளில் உழலும் ஜீவனின் கவித்துவ புலம்பல் போல மேல் பார்வைக்கு அவை பட்டாலும் அதையும் கடந்த ஒரு ஞானத்தை சன்னமாக பிரசன்னமுற வைக்கும் போது அவரது கவிதைக்கலை கம்பீர பெளருஷம் கொள்கிறது.

தன்னை சுற்றி வந்து ஆட்டும் கிரஹங்களை எல்லாம் கவிதைக்குள் குரங்காட்டியாய் குட்டிக்கரணம் போட வைத்துவிடுகிற லாவகம் நம்பியின் தனித்தன்மை.

ஞானக்கூத்தனின், நகுலனின், சில வரிகள் போல இவரது சில கவிதைகள் எனக்கு  மறுபடி மறுபடி ஞாபகம் வரும்.

”தில்லாலங்கடி தில்லாலங்கடி
தில்லாலங்கடிடோய்
கவிதை பாடும் மனசை நீயும்
தொலைச்சுடாதா டோய்.”

எல்லாம் தெரிந்தும் இயல்பான அப்பாவித்தனத்தால், கவி மனசால், தன்  தோல்விகளையும் இழுத்துவந்து கவிதைக்குள் ஜெயிக்க வைத்துவிடுபவர் நம்பி. சில வேளை வாகாய் ஞாபக அடுக்கில் ஒட்டிக்கொள்ளும் பழமொழிகளாய், மந்திர உச்சாடனங்களாய், திருவிழா குலவைகளாய், நாட்டார் பாடல் வரிகளாய் மாறி மாறி ரூபம் கொள்கின்றன அவரது கவிதைகள்.

ஒருவகையில் கலைக்கு தன் வாழ்வை தின்னக் கொடுத்த களியில் அவரிடமிருந்து தெறிக்கும் கவித்துவ வரிகள் பலப்பல. களி, ஒளி, செறுமல், ஆராதனை, மூர்க்கம், கையறு நிலை, நல்வாக்கு அருளலென்று உணர்வுகள் கொந்தளிக்க தாளகதி தப்பாது தப்ஸோடு பாடிச்செல்லும் பக்கீர் பாடல்கள் அவை.

எல்லாம் தொகுத்து எதை நோக்கியது என்று பார்த்தால் வெற்றிக்கும் தோல்விக்கும் அர்த்தமென்ன என்ற கேள்விக்கு பதிலாய் தொடர்வதுபோலிருக்கிறது நம்பியின் கவிதைப் பயணம்.

 

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-16

விக்ரமாதித்யன் -விஷ்ணுபுரம் விருது –கடிதங்கள்-15

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11

விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 2

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 1

முந்தைய கட்டுரைஎம்.டி.ராமநாதன் பற்றி அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரைநமது கல்வி