வாசகர், எழுத்தாளர் – கடிதங்கள்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெ,

வணக்கம்!

இன்று காலையில் ஒரு கனவு. உங்கள் வீட்டிற்கு வந்திருந்தேன். நீங்கள் ஏதோ எழுத்திக்கொண்டிருந்தீர்கள். ஆகவே உங்களைப் பார்க்க முடியவில்லை. அருண்மொழி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். என்ன பேசினேன் என நினைவில் இல்லை. பிறகு நீங்கள் தோசை சுட்டுக்கொடுத்தீர்கள். அப்பொழுதும் உங்களுடன் சரியாக பேசமுடியவில்லை. உண்டு முடித்தவுடன் வீட்டு அழைப்புமணி அடிக்க எழுந்துகொண்டேன். மணி ஆறு ஐந்து. காலையில் தளத்தைத் திறந்தால், நான் எழுதிய ஒரு கடிதம் பிரசுரமாயிருந்தது. இனிய தற்செயல். கனவுகளின் தற்செயல்களைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்கள்.  முன்பு இதுபோல எனக்கு நேரும்போது சிறு மகிழ்வூட்டும் அதிர்ச்சி மட்டும்தான் இருக்கும். இன்று நீங்கள் வந்ததால் இன்னும் அதிக மலர்ச்சி. இனிய நாள். உங்களிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

அன்புடன்

யஸோ தேவராஜன்

***

அன்புள்ள யசோ,

சுவாரசியமான கனவு. ஆனால் என் நண்பர்கள் பலர் இத்தகைய கனவுகளைப்பற்றிச் சொல்வதுண்டு. பலரின் கனவுகளில் நான் தோன்றுகிறேன். குறிப்பாக கிருஷ்ணன், ராஜமாணிக்கம் போன்றவர்கள் பயணம் செய்யும் கனவுகளை அடிக்கடி அடைவதுண்டு. உடனே கிளம்பிவிடுவோம்.

நாம் உரையாடிக்கொண்டே இருக்கிறோம், அதுவே கனவாகவும் நீள்கிறது.

ஜெ

***

அன்பு ஜெ,

இதுவல்ல நான் உங்களுக்கு எழுத நினைத்த முதல் கடிதம். அந்தம் கொள்ளாத அந்த முதல் கடிதத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். இந்தியப் பயணம் ஒன்றிற்கான ஆதியாக “தாயார் பாதம்” தொட்டுத் தொடங்க நினைத்து குமரியில் திரிந்த தினத்தையும் அந்தத் தினத்தில் நான் அங்கு என்னைத் தொலைத்ததையும், தொலைத்த என்னை நானே வேறொரு நானாக மீட்ட நினைவுகளையும் சுமந்த கடிதம் அது. அது நீங்கள் கண்ணுற காலமும் நானும் கனிகிற இன்னொரு நாளுக்காகக் காத்திருக்கிறது போல.

உங்களை இப்போதே நெருங்குவதா கூடாதா என்ற தொடர்சிந்தனை அலைவுகளுக்கு இடையில் நேற்று கவிக்கோ மன்றத்தில் உங்களை உங்களின் ஒவ்வொரு அசைவை அருகில் இருந்து இரசித்தேன். ப்ரியத்திற்குரிய ஆளுமைகளை அண்டுகிறபோது அவர்கள் குறித்தான ஆச்சர்யங்கள் குமிழிபோல் உடைந்து போய்விடும் என்றே கேள்விப்பட்ட வந்த ஒன்று நேற்று பொய்யாகிப் போனது. ஆம் ஜெ!எனக்கு உங்களை வெகுவாகப் பிடித்துப்போனது உங்கள் படைப்புகளைப் போலவே. சிறிதும் ஆணவம் இல்லை. சிரித்துக்கொண்டே இருந்தீர்கள். சிறுவர்களைக் கண்டவுடன் சிறகு பூட்டிக் கொண்டீர்கள். மூத்தவர்களுக்கு எழுந்து மரியாதை செய்தீர்கள்.

யாரிடமும் கையெழுத்து வாங்கக் கூடாது என்பதை சில நியாயங்களுக்காகக் கடைப்பிடித்து வந்த நான் அதை மீறிவிட்டேன். சில மீறல்கள் தேன் ஊறல்கள். உங்களின் முதல் படைப்பான “ரப்பர்” நாள் குறிப்பிட்ட உங்கள் கையெழுத்துடன் இப்போது என்னிடம். கனவுபோல் நிகழ்ந்தேறிய அந்தக் கண நேரக் காலம் இனி எப்போதும் உறைந்துகிடக்கும் ரப்பராக. காமம் தலைக்கேறி மவுண்ட் ரோட்டில் வெயிலில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த அன்று – பத்து வருடங்களுக்கும் கூடுதலாக இருக்கும் –  தேவநேயப் பாவணர் நூலகத்தில் ரப்பர் வாசித்தேன். அதற்குப் பின் உங்களை நெருக்கமாக உணர்ந்து உங்களோடு உளமாற உளறல் செய்துகொண்டிருக்கிறேன். நேற்று “ஏழாம் உலகம்” வாங்கினேன் நான் கடவுளைக் காண. உடன் “ஆள்தலும் அளத்தலும்”, “வியனுலகு வதியும் பெருமலர்”. மனதுக்கு என்னவோ போல் இருந்தது. இப்போது நிறைவாக உணர்கிறேன்,நேற்றைய நிகழ்வுக்குப் பின்னான மழை தந்ததைப் போல.

அன்புடன்

ச. சிவசங்கரன்

***

அன்புள்ள சிவசங்கரன்,

எந்த ஆளுமையானாலும் பழகாமல் முடிவுசெய்யக் கூடாது. ஓர் உதாரணம் சொல்கிறேன். எனக்கு நன்கு தெரிந்த ஓர் எழுத்தாளர் பொதுமேடைகளில் மிக ஆணவம் கொண்டவர் போல தெரிவார். உண்மையில் அவர் மிக மிக ‘நெர்வஸ்’ ஆகி மூளையே இல்லாமல்தான் மேடையில் இருப்பார். அது அக்கறையின்மை அல்லது மதிப்பின்மையாகத் தெரியும்.

எழுத்தாளர்களை அணுகும்போது அவர்களிடம் பொதுவான நாகரீகம். பண்பு ஆகியவறரி தேடலாகாது- என்னிடம் தேடலாம். நான் அதில் கவனமாக இருப்பேன். அனைவரும் அவ்வாறல்ல. அந்த ஆளுமையை அவருடைய எழுத்துடன் ஒப்பிட்டு அவர் குறைவாக இருக்கிறார் என எண்ணலாகாது. மாறாக அந்த ஆளுமையில் இருந்து அந்த படைப்பு எப்படி வந்தது என அறியமுயலவேண்டும். வேரில் துவர்ப்பது கனியில் இனிக்கிறது என்பதுபோல

நாம்  மீண்டும் சந்திப்போம். சென்னை வரும்போது

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி குரு ராஜதுரை
அடுத்த கட்டுரைவெள்ளையானை- சரவணக்குமார் கணேசன்