அன்பின் ஜெ,
நலம்தானே?
வண்ணதாசன் ஐயாவும், மரபின் மைந்தன் முத்தையா அவர்களும் வெண்ணிலாவின் “சாலாம்புரி” நாவல் குறித்து உரையாடிய நிகழ்வின் காணொளிப் பதிவினை முழுமையாகப் பார்த்தேன் (பாரதி டிவி). வெண்ணிலாவும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். மிக நல்ல நிகழ்வு. மனதுக்கு நெருக்கமாக அமைந்தது. நாவலின் பல்வேறு இடங்கள் கலை மனங்களின் ஆழ்ந்த உள்வாங்கலின் ஒளிகொண்டு துலங்கி நெகிழ் மொழியில் வெளிப்பட்டது நாவலின் ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள பேருதவியாய் இருந்தது.
விஷ்ணுபுர விருது நிகழ்வில்தான் நான் முதல்முதலாக வண்ணதாசன் ஐயா அவர்கள் பேசிக் கேட்டது. முத்தையா அவர்களின் எழுத்துக்களுக்கு முன்னால் அவரின் குரல்தான் எனக்கு முதலில் பரிச்சயம் 2000-த்தில். அவரின் குரல் மூலமாகத்தான் அவர் எழுத்துக்களை, அவரின் பண்பாட்டு பங்களிப்பை வந்தடைந்தேன். அவரை மேலும் அறிந்துகொள்வதற்கு உதவியது உங்களின் இணையதளம்தான்.
“சாலாம்புரி” 1957-ம் வருடத்திய நாவல். 1949-ம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணாதுரை அவர்களால் துவக்கப்பட்ட “திராவிட முன்னேற்றக் கழகம்” எழுச்சி பெற்று முதன்முதலாய் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்தித்த வருடம். அக்காலகட்டத்தில் நெசவாளர் குடும்பங்கள் அதிகமிருந்த அம்மையப்ப நல்லூர் எனும் அழகான கிராமத்தில் எளிய மனிதர்களின் வாழ்வியலில் நடந்தேறிய அரசியல் சார்ந்த மாற்றங்கள், கொள்கை சார்ந்தும், அப்போதுதான் வேர்பிடிக்கத் தொடங்கியிருந்த நாத்திகம், பகுத்தறிவு, சுயமரியாதை சித்தாத்தங்கள் சார்ந்தும் அந்த வெள்ளந்தி மனங்கள் அடைந்த அறிமுகங்களையும், தடுமாற்றங்களையும், தங்களை ஓரிடத்தில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான அவர்களின் நகர்வுகளையும் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரமாக சொல்லிச் செல்கிறது “சாலாம்புரி”.
வெண்ணிலாவின் பதினைந்து வயதிற்குள்ளான அவரின் நினைவடுக்கில் பதிந்த, பார்த்த, கேட்ட மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரம். ஏன் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முந்தைய ஒரு சமூக வாழ்வை இப்போது எழுதிப் பார்க்கத் தோன்றியது என்பதற்கு வெண்ணிலா பதில் சொன்னார். கொள்கை, சித்தாந்த, மத வேறுபாடுகளால் மிக எளிதில் பிளவுறும், புண்படும், பிரிவினைவாதம் தலைதூக்கும் இக்காலகட்டத்தில், எத்தனை முரண்கள் கொண்டிருந்தாலும், வாழ்வியலில் அவை பாதிக்காதவாறு, ஒன்றுடன் ஒன்று இணைந்து முரண்பட்டு இயங்கி “மனிதம்” எனும் புள்ளி சிதையாதவாறு எப்படி அச்சமூகம் நகர்ந்து பயணித்தது என்பதை நினைவுகளில் திரும்பிப் பார்க்க வேண்டும் போலிருந்தது என்றார். நெற்றியில் திருநீறில்லாமல் பார்க்க முடியாத முகங்களின் மனங்களில் நாத்திகம் நுழையும் போதிருந்த தருணத்தின் சிக்கல்கள் தன் பால்ய கால அனுபவங்களோடு இணைந்து மேலெழுந்து எழுத வைத்ததாகச் சொன்னார். கிழமைகள், பொழுதுகள், சகுனங்கள் எப்படி காரண காரியங்களோடு இணைந்து அம்மனங்களில் ஆழப் பதிந்திருந்தது என்பதையும் குறிப்பிட்டார் (“செவ்வாய்க்கிழமையும் அதுவுமா வீட்டுல கொஞ்சம் கூட அரிசி வைக்காம எல்லாத்தையும் கொண்டு வந்துட்டியா?”; அம்மு இப்போதும் வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் கண்ணாடிப்பொருள் உடைந்தால் விசனமுறுவார்; அதுபோல் வெள்ளிக்கிழமைகளில் யாருக்கும் பணம் கொடுப்பதும் இல்லை ;) ). வெண்ணிலா விவரித்த பால்யத்தின் அந்தத் திருவிழாக் காட்சிகள்…ஆஹா.
நாவலில் ஓர் உரையாடல் – “கடவுள் இல்லைன்ற கொள்கை நம்மூர்ல ஜெயிக்க வாய்ப்பே இல்ல. உன்னையும் என்னையும் போல ஊருக்கு பத்து பேர் வேணும்னா சொல்லிட்டிருக்கலாம். ஆனா யதார்த்தத்துல கடவுள் இல்லைன்னு பேசிட்டு வீட்டுக்கு வந்து கிருத்திகைக்கு சோறு படைச்சி காக்காய்க்கு சோறு வச்சிட்டுதான் சாப்பிடணும். நமக்கும் கடவுளுக்கும் என்ன பங்காளி சண்டையா? சாமி மேல என்ன கோபம்? அவர் இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே. அவர் பேரச் சொல்லி நான் உசத்தி நீ தாழ்த்தின்னு சொல்றதுதானே வேணாம்னு சொல்றோம்”
சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகள் வேறாயினும், பல காலம் மனதினுள் ஊறிப்போன சமயம் சார்ந்த நம்பிக்கைகளை விடமுடியாமல் தடுமாறும் சில கதாபாத்திரங்களின் வார்ப்பு நன்கு வெளிப்பட்டிருப்பதாக முத்தையா குறிப்பிட்டார் (நடராஜனின் தாய்மாமா சபாபதி சொல்கிறார் “வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். பேருக்கு திமுக காரன்; கற்பனையெல்லாம் சிவபெருமான்”. நடராஜனே ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் “சின்ன வயசுல ‘கஷ்டம் வராம பார்த்துக்க முருகப்பா’னு உள்ளுக்குள்ள கைகூப்புவேன். இப்ப உள்ளுக்குள்ள கும்புடணும்னா தெளிவா இல்லாம பல முகங்கள் வருது”).
வண்ணதாசன் ஐயா, நடராஜனும், வடிவேலுவும் பேசிக்கொண்டே நடந்துசெல்லும் அந்தப் பின்னிரவிலிருந்து தன் உரையாடலைத் துவங்கினார். எழுபதுகளின் திராவிட அரசியலைப் பேசிய தமிழ்மகனின் “வெட்டுப்புலி” (சரித்திரப் பின்னணியில் எழுதப்பட்ட நாவலான தமிழ்மகனின் படைவீட்டிலும் மறை அடையாளமாக திராவிட அரசியல் இருக்கலாமென்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்), கலாப்ரியாவின் “வேனல்” நாவல்களைக் குறிப்பிட்டு, “சாலாம்புரி”-யில் அதற்கு முன் சென்று துவக்ககால திராவிட அரசியலைக் களமாகக் கொண்டதற்காக வெண்ணிலாவை நிறைவுடன் பாராட்டுவதாகத் தெரிவித்தார். கங்காபுரம், இந்திரநீலத்தை விட “சாலாம்புரி”-யில் வெண்ணிலா ஒரு நல்ல நாவலாசிரியராக பரிணமித்திருப்பதை தான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டார். நாவலின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழ்ந்து விரிவாகப் பேசினார். எழுத்தாளனாகவும், வாசகனாகவும் “சாலாம்புரி”யில் உரையாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருப்பதை சுட்டிக்காட்டினார். இறுதியாக எம்.வி.வி-யின் “வேள்வித் தீ”, சுப்ரபாரதி மணியனின் “தறி” வரிசையில் “சாலாம்புரி”யும் தனக்கான இடத்தைத் தக்கவைக்கும் என்று வாழ்த்தினார்.
நிகழ்வில் வெண்ணிலா சொன்னது போல் “கொள்கை, கோட்பாடுகளைக் கடந்து வாழ்தலுக்கான நெறியாக அன்புதான் இருக்கிறது”. “சாலாம்புரி” வெண்ணிலாவின் பால்யத்தின் இடைவிடாத தறிச் சத்தங்களின் ஓசைகளினூடே வெண்துணியில் சிவப்பும் கறுப்புமாய் சாயங்கள் ஏறும் ஒரு நெசவு…
வெங்கி