பாலைச் சிறுபொழுது- கடலூர் சீனு

விஷ்ணுபுரம் விருது

விக்ரமாதித்யனின் -அவன் அவள்- சிறுகதைத் தொகுப்பினூடே ஓர் பயணம்.

தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு
(
கலித்தொகை– 6 : 5-6)

கவிஞர் விக்ரமாதித்யன் சிறுகதைகளும் எழுதி இருக்கிறார் என்று மட்டும் அறிவேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்தும் இருக்கிறேன்.கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது விழாவை முன்னிட்டு, முதன் முறையாக கவிஞர் விக்ரமாதித்யன் எழுதிய -அவன் அவள்- சிறுகதை தொகுப்பை ஒரே அமர்வில் முழுமையாக வாசித்து முடித்தேன். முடித்த கணம் மேற்கண்ட கலித்தொகை கவிதையின் சில வரிகளை தேடிப் படித்தேன். இந்த தொகுப்பு வழியே விக்ரமாதித்யன் சுட்டிக் காட்டும் வாழ்வு இவ்விதம்தான் இருக்கிறது. தண்ணீர் வேட்கைக்கான துயரை கண்ணீர் விட்டு ஆற்றியபடி மனிதர்கள் பயணிக்கும் பாலை வெளி போலும் ஓர் வாழ்வு.

நூற்றாண்டு கொண்டாடும் தமிழ்ச் சிறுகதை எனும் இலக்கிய வடிவுக்கு முகம் தந்த பண்பாட்டுப் பின்புலம் வள்ளலாரின் உரைநடை உருவாக்கம் வழியே  துவங்குகிறது. புதிய பொதுக் கல்விச் சூழல், இரண்டு உலகப்போருக்கு இடையே இங்கு வந்து குவிந்த அயல்தேச கதைத் தொகுப்புகள், பரவிய பத்திரிக்கைகள்,  நமது மரபிலிருந்த நீதிக் கதைகள், குட்டிக் கதைகள், நடைச்சித்திரங்கள் இவைகள் கூடி வளர்ந்து தமிழின் முதல் சிறுகதைகள் பாரதி, உ வே சு ஐயர் வழியே முகிழ்ந்தது.

இந்த பரிணாம கதியில் வெகுஜன கதைகளுக்கு அப்பால், கலாப்பூர்வமான தீவிரக் கைதிகளின் அடிப்படைகளை உருவாக்கியவை இரண்டு கூறுகள். ஒன்று, மௌன வாசிப்பு. இரண்டு, கதைக்குள் துலங்கும் முரண் எனும் கூறு. மரபார்ந்த வாசிப்பில் தன்னிலை மற்றும் படர்க்கை எனும் இரண்டு நிலைகள் மட்டுமே இருந்தது. கோவிலில் அல்லது பொதுவில் ஒருவர் வாசிப்பார் எல்லோரும் அதை கேட்கவேண்டும். இந்த நிலையை பொதுக் கல்வியும் காசு கொடுத்து தனக்கே தனக்கென ஒரு நூல் வாங்கிக்கொள்ள முடியும் என்ற நிலையும் மாற்றி அமைத்து. இப்போது தன்னிலைக்கும் படர்கைக்கும் இடையே முன்னிலை எனும் நிலை உருவாகி விட்டது. படர்க்கைக்கு ‘வெளியே’ நின்று பார்க்கும் பார்வையை முன்நிலைக்கு ஜனநாயக சூழல் அளித்தது. இந்தப் பார்வைக்கு மௌன வாசிப்பு துணை நின்றது. இங்கேதான் ஆசிரியன் எனும் தன்னிலை வாசகன் எனும் முன்னிலையை பொருட்படுத்தி கதைகளை உருவாக்கும் போக்கு துவங்கி, மௌன வாசிப்பின் நீட்சியாக வாசக பங்கேற்பும், ஜனநாயக போகிக்கின் நீட்சியாக பரிசீலனையும், அதன் முக்கிய கூறாக முரணும் பரிணாமம் கொண்டு, நீட்சியாக தீவிரக் கலை போதம் கொண்ட கதைகள் உருவானது.

இந்த போதத்துக்கு, முன்னோடி புதுமைப்பித்தன் துவங்கி இன்றைய திருச்செந்தாழை வரை தொடரும் நெடிய தொடர்ச்சி உண்டு. இந்த தொடர்ச்சியின் எல்லா ஓடைகளின் ஊற்று முகமும் புதுமைப்பித்தன், நா.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, மௌனி எனும் இந்நால்வரில் தோற்றம் கொள்வதாகவே அமையும். இந்த நால்வரில் விக்ரமாதித்யனின் அவன் அவள் தொகுதி எந்த ஊற்று முகத்தைச் சார்ந்தது?

1990 துவங்கி 2019 வரை கிட்டத்தட்ட முப்பது வருட காலத்தில் வெவ்வேறு ஆண்டுகளில் எழுதப்பட்ட இருபது கதைகள் அடங்கிய தொகுதி இது. இந்த முப்பது ஆண்டுகள் தீவிர தமிழ்ச் சிறுகதை வரலாற்று ஓட்டத்தில்  முக்கியமான வருடங்கள். மிகை யதார்த்தம், பின்நவீனம், என்றெல்லாம் சிறுகதை ஓட்டம் புரண்டு அடுத்த கட்டத்துக்கு சென்று ஒரு சிறிய தேக்கத்துக்குப் பிறகு மீண்டும் செவ்வியல் வடிவ போதம் கொண்ட சிறுகதைகளுக்கு திருப்பி வந்திருக்கும் வரலாற்று ஓட்டம் நிகழ்ந்த முப்பது ஆண்டுகள் இது. இந்த பரிணாம கதிகள் எதுவும் பாதிக்காத தொகுதி இது. ஒரே அமர்வில் எழுதப்பட்ட ஒரே உணர்வு ஒரே உள்ளடக்க ஒரே வடிவ போத கதைகள் போல ‘மாற்றமின்மை’ தொழிற்படும் தொகுதி இது.

மேற்சொன்ன முன்னோடிகள் நால்வரில், கு.ப.ரா அவர்களை ஆண் பெண் உறவு சிக்கல்களை பேசியவர் என்ற ஒரு பொதுவான வரையறைக்குள் கொண்டு வந்து, அந்த ஊற்று முகத்தின் ஓடைகளாக தி ஜா அவர்களையும் வண்ணதாசன் அவர்களையும் வகுக்க முடியும். இந்த ஓடைகளில் ஒன்றே அவன் அவள் தொகுதியும். ஒரே களம் ஆனால் மொழி நடை, புறச் சித்தரிப்பு, நுட்பம், பூடகம் இவற்றில் வண்ணதாசனுக்கு நேர் எதிராக நிற்கும் விக்ரமாதித்யன், வண்ணதாசன் பேசும் அந்த ஆண் பெண்  உறவுச் சிக்கல்களில் எழுந்து வரும் பாலையின் வெம்மையை அவ்வாறே தனது கதைகள் வழியே வாசகனுக்கு கையளிப்பவராக இருக்கிறார்.

இத் தொகுதியின் ‘தன்னிலை’ எவ்வாறு தொழிற்படுகிறதோ அவ்வகையிலேயே துவங்கி வடிவம் கொள்ளும் கதைகள். காசி படித்துறையில் அமர்ந்து ஒரு பாட்டா இளைஞன் ஒருவன் வசம் தனது வாழ்க்கைக் கதையை வேறொரு பாத்திரத்தின் மேல் ஏற்றி அவனது கதையாக மாற்றி சொல்கிறார் என்றால் எவ்வாறு இருக்குமோ அந்த பாவனைக்கு உட்பட்ட தன்னிலை கொண்ட கதைகள். எழுத்துக்கு சொந்தமான வாசகனை அந்த நிலத்தில் வாழ வைக்கும் விரிவான புற வர்ணனைகள் கிடையாது. கோடையா குளிரா தெரியாது. பருவ சூழலே கிடையாது. மெல்லிய தீற்றலாக மனிதர்கள் இடங்கள் சூழல் இவற்றுடன் நேரடியாக உரையாடலில் துவங்கி, உறவு சிக்கல்களைப் பேசி, ‘சொல்லுவதில்’ துலங்கி வரும் உணர்ச்சித் தளத்திலேயே முரண்களை சுட்டி  நிகழ்ந்து, முன்னிலை மனதில் இவ்வாழ்வு குறித்த வினாக்களை எழுப்பி  நிறையும் இந்த இருபது கதைகளையும்,  அநேர்கோட்டு வடிவில் சொல்லப்பட்ட ஒரே நாவல் என்று வாசித்துவிட முடியும்.

நெல்லையை சொந்த ஊராக கொண்ட பூர்ணன்.அவனது பெரிய குடும்பம். அப்பா விட்டுப் போனதும் சரியும் அவனது குடும்ப, சமூக படி நிலைச் சூழல் அங்கே துவங்கி திருமணம் முடித்து பதினான்கு வருடம் கழித்து விவாகரத்து பெற்று செல்லும் அவனது மனைவி சங்கரி வரை பூர்ணனை அலைக்கழித்த வாழ்க்கைத் தருணங்களைப் பேசும் கதைகள் கொண்ட இத் தொகுப்பில், இத் தொகுப்பு ஒட்டு மொத்தமாக அளிக்கும் உணர்வு நிலையிலிருந்து விலகி நிற்கும் கதைகள் இரண்டு. முதலாவது சைக்கிள் சிறுகதை. கவிதை எழுதுவது குடிப்பது தவிர வேறு வேலை இல்லாமல் மனைவி காசில் வாழும் பூர்ணனிடம் வந்து கடன்காரன் எடுத்து சென்ற தனது சைக்கிளை மீட்க கடன் கேட்கும் கணபதி. பரஸ்பரம் ஆண் பெண் கூடி வாழ்வதில் உள்ள சந்துஷ்டியை, ப்ரேமையின் கதகதப்பை தீண்டிப் பார்க்கும் கதை. அடுத்தது சந்தி சிறுகதை. பூர்ணன் தனது பதின் பருவ காதலியை இறுதியாக ஒரு முறை பார்த்து விட்டு திரும்புகையில் இறுதியில் நிகழும் கவித்துவத் திருப்பம்.

எல்லாம் வெறும் சோற்றுக்குத்தான், மற்றும் கடன் இந்த இரண்டு சிறு கதைகளும் எல்லா வகையிலும் ஜெயமோகனின் சோற்றுக் கணக்கு கதையின் உணர்வு நிலையின் வெவ்வேறு பேதங்கள் மேல் அமைந்த கதை.  முதல் கதையில் அவ்வளவு மேன்மையாக சித்தரிக்கப்படும் உறவு நிலைகளும் உணர்வு நிலைகளும் எங்கே திரிந்து மாறுகிறது என்பதே கவனத்தில் விழாதபடி (அல்லது அது அவ்வாறே அங்கே இருந்து அதை நமது கவனத்தில் ஏற்றிக் கொள்வதை நாம்தான் தவிர்த்தோமா?)   திரிந்து சோற்றுக் கணக்கில் வந்து நிற்கும் தருணம். கடன் கதையில் உள்ள கையறு நிலை. நீங்க எல்லாம் சாப்புடுரீங்கதானே எனும் வினாவில் தொனிக்கும் பல நாள் சோறு காணாத சிறுவன் பூர்ணனின் வன்மம். அவன் கண் விழித்துப் பார்க்கையில் அவன் முன்னால் ஆவி பறக்க இருக்கும் சூடு சோறு என இந்த இரண்டு கதைகளும் தனித்துவமான உணர்வு பூர்வம் அடங்கிய கதைகள்.

இக் கதைகள் வழியே மொத்தமாக திரண்டு வரும் வீழ்ச்சியின் சித்திரங்கள் துணுக்குற வைப்பது. நெல்லை பகுதியின் வளவு ஒன்று. ஓதுவாமூர்த்தி வளவு. அந்த வளவில் வாழும் பிள்ளைமார் சமூகம். அந்த வளவு கொஞ்சம் கொஞ்சமாக சாதி கலப்புக்குள் விழுந்து, பிள்ளைமார் குழந்தைகள் எல்லாம் மீன் ருசி கண்டு திரிகின்றன. அங்கே நுழையும் உப்பு வணிகன் சமுத்திர பாண்டியன் தனது மனைவியை விட்டு வேறொரு பிள்ளை சமூக நெல்லையப்பன் மனைவியை சேர்ந்து அவளுடன் அமைந்து விடுகிறான். மெல்ல மெல்ல அந்த வளவுக்குள் எல்லா உறவுப் பிறழ்வுகளும் அது அப்படித்தான் என்று சகஜமாக மாறிவிடும் சித்திரத்தை வரைந்து காட்டும் காலம் சிறுகதை.

ஊரே விபச்சாரி என விமர்சிப்பவளை திருமணம் செய்து கொள்ளும் அழகப்பன். அங்காரமாக அதை எதிர்த்து நிற்கும் அவன் அம்மா, மெல்ல மெல்ல வயதாக பிடிவாதம் தளர்ந்து அவளை மருமகளாக ஏற்று அவளுடன் வசிக்கச் செல்லும் சித்திரம். கதைகளின் மாந்தர் பலரும் சாதி மத பேதம் இன்றி மனைவியை குடும்பத்தை உதறி வேறொரு பெண்ணுடன் ‘தங்கி’ விடுகிறார்கள். பூர்ணனின் அப்பாவைப் போலவே. சொல்லாமல் போய்விட்ட அப்பா, இன்று வருவார் நாளை வருவார் என இரவுகளில் வாசலில் பூர்ணன் காத்திருக்கும் சித்திரம், அப்பாவை தேடிச்சென்று ‘சித்தி’ உடன் அவரை முதன் முதலாக பூர்ணன் காணும் சித்திரம். பூர்ணனின் தங்கை இறந்து, ஊர் மாறி, அப்பா கூடவே இருக்கும் தினங்களில் இறுதியாக அப்பாவை தேடி ‘சித்தி’ வரும் சித்திரம் என உணர்ச்சிகரமான தருணங்களை பொதிந்த சிறுகதைகள்.

தொகுப்பு நெடுக பெண்கள் படும் பாடுகளும், குடும்பத்தை சுமக்க மாடு போல அவர்கள் செலுத்தும் உழைப்பும், அத்தனையும் உண்டு அவர்களை விடுத்து செல்லும் ஆண்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக பூர்ணனின் அம்மா லட்சுமி வழியே இந்த தொகுதிக்குள் பயணித்தால் மற்றொரு ஒரு குடும்பம் சிதைகிறது நாவலே சப் டெக்ஸ்ட் ஆக எழுந்து வருகிறது. அடுத்தடுத்து குழந்தைகள் மரித்துக்கொண்டே இருக்கிறார்கள். லட்சுமியின் குடும்பத்தை கலைத்த பாவம்தான் தனது குழந்தைகள் ஒவ்வொன்றாக பிறந்து இறந்து கொண்டிருக்கிறது என்று மருகி பூர்ணனின் அப்பாவை விட்டு கமலாசித்தி விலகுகிறாள். அப்பா திரும்பி வருகிறார். இப்போது லட்சுமி வேறு ரூபம் கொள்கிறாள். மனம்  பிழன்ற லட்சுமி நிலையை அவளை செத்து ஒழி என்று கசந்து சபிக்கும் பூர்ணனும் என திரிபு சிறுகதை காட்டும் சித்திரம் துயரம் மிகுந்தது.

காலம் மாறி விட்டது. இப்போது கணவர் மனைவியை உதறும் காலம் போய் மனைவி கணவனை உதறும் காலம். சங்கரி பூர்ணனை உதற அவள் சொல்லும் காரணம், இறுதியாக ஒரு முறை சமாதானம் பேச அவளை தேடி செல்லும் பூர்ணன், என பாலருவி எனும் இக் கதை வாசிக்கையில் சாம்ராஜ் எழுதிய அனந்தசயனபுரி கதையும் நிச்சயம் நினைவில் எழும். இப்படி இத் தொகுதியின் ஒவ்வொரு கதையுடனும் வெவ்வேறு சிறுகதைகள் நாவல் தருணங்கள் நினைவில் எழுவது போலவே, இத் தொகுப்பின் கதைகள் சுட்டும் ஒவ்வொரு தருணத்துக்கும் அதன் உணர்ச்சிக்கு இணையான கவிதைகளை சங்க இலக்கியத்தின் பாலைத் திணையில் இருந்தோ நெய்தல் திணையில் இருந்தோ தொட்டெடுத்துவிட முடியும்.

தொகுப்பில் மிகச் சரளமான உரையாடல் வழியே துலக்கி வரும் இவ்வாழ்வில் நாம் காண்பது சமூக குடும்ப ஒழுக்க நியதிகளுக்கு அப்பால் அடியெடுத்து வைத்து விட்டு அல்லலுறும் தத்தளிக்கும் சீரழியும் வழியே இன்றி அதை ஏற்றுக்கொள்ளும் இன்னபிற நிறைவற்ற மனிதர்களை. எங்கும் காணும் இந்த அவல வாழ்வின் தருணங்களுக்குள் பூர்ணன் (அல்லது விக்ரமாதித்யன்) தொட்டெக்கும் தனித்துவ தருணம் வாசகரை திகைக்க வைப்பது.

பூர்ணனின் அப்பா அழகு சுந்தரம் கமலா சித்தி உடன் தங்கி விடும்போது, பூர்ணன் குடும்பத்துக்கும் கமலா குடும்பத்துக்கும் தேவையானதை செய்து கொடுப்பவனாக அழகப்பன் இருக்கிறான். பூர்ணனின் அப்பாவின் வலது கை. போய் வரும் பழக்கத்தில் கமலாவின் அக்காவுடன் அழகப்பனுக்கு தொடர்பு உண்டாகி விடுகிறது. அழகப்பனின் அம்மா பூர்ணனுக்கும் அம்மா போலவே நடந்து கொள்பவர்.

ஒரு நாள் பூர்ணனுக்கு சோறு பரிமாறிக்கொண்டே அழகப்பனின் அம்மா தனது மகனை நினைத்து கண்ணீர் விடுகிறார். உணர்ச்சி மீதூர அவனுக்கு புள்ளக் கொள்ளி விளங்குமா என்று பூர்ணனின் அப்பாவை சபிக்கிறார். பூர்ணனுக்கு சோறு போடும் அந்த அன்னையும் நிஜம். பூர்ணனை சபிக்கும் இந்த அன்னையும் நிஜம். இருளும் ஒளியுமான இந்த இரண்டு நிஜம். அதுவே அவன் கொண்ட  வாழ்வாக பூர்ணனை கவிந்து மூடியது. ஆசிரியரின் இந்தப் பார்வையின் பொருட்டே இந்த அவன் அவள் தொகுதி தமிழின் முக்கியமான சிறுகதை தொகுதிகளில் ஒன்றாக அமைகிறது.

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-16

விக்ரமாதித்யன் -விஷ்ணுபுரம் விருது –கடிதங்கள்-15

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11

விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 2

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 1

முந்தைய கட்டுரைஈவேராவும் எழுத்துச்சீர்திருத்தமும்
அடுத்த கட்டுரைநமது மாணவர்கள்