அன்புள்ள ஜெ.,
நான் அலுவலகவேலையாக அயர்லாந்து சென்றபோது ‘டப்ளி’னில் இருந்து வடக்குஅயர்லாந்தில் இருக்கும் ‘பெல்பாஸ்ட்’ நகருக்கு வாரவிடுமுறையில் ஒருநாள் சுற்றுலா சென்றபோது, பத்து இடங்கள் கொண்ட ஒரு அட்டவணையை வழிகாட்டி எல்லோரிடமும் கொடுத்து உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்றுவிட்டு இன்னும் மூன்று மணிநேரத்தில் திரும்பி வாருங்கள் என்று கூறியபோது நான் தெரிவு செய்து முழுநேரமும் இருந்த இடம் இருநூறு வருடப் பழமையான ‘லினன் ஹால்’ நூலகம். நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அங்கு இருப்பதனாலேயே மட்டற்ற மகிழ்ச்சியோடு இருந்தேன் இருக்கிறேன் என்றால், என் நினைவுக்கு வருவது நூலகங்களே. சிறுவயதில் வீட்டில் முதன்முதலில் கேட்ட ஆங்கில வார்த்தை ‘லைப்ரரி’. அங்கு என்னைச் செலுத்திய நூல்கள் எனக்கு அறிமுகமானது அம்மாவின்மூலம் வீட்டில்தான். ‘மங்கை’ புத்தகத்தில் வந்த சிவசங்கரியின் ‘மெள்ள மெள்ள’ தொடரை அப்பாவுக்கு வாசித்துக் காண்பிக்கும் அம்மாவின் முகம் இன்றும் நினைவில்உள்ளது. அம்மாவின் முக்கியமான பொழுபோக்கு பாட்டு மற்றும் படிப்பு. கர்னாடக சங்கீதம் முறையாகப் பயின்றவர். உறவினர் வட்டத்திலும், அலுவலகத்திலும் சிறந்த பாடகி மற்றும் இசை ரசிகை. லட்சுமி, சிவசங்கரி, அனுராதாரமணன், நா.பா, கல்கி என்று படித்தார். பின்னாளில் நான் அறிமுகப்படுத்திய தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’ வைப் படித்துவிட்டு ‘ராஸ்கல், எப்படி இப்பிடி எழுதலாம்’ என்று மனம் குமுறினார். அவருக்குப் பிடித்த எழுத்தாளரும் அவர்தான்.
நாடார் கடையிலிருந்து சணல் சுற்றி வருகிற செய்தித்தாள்களையும் விடாமல் படித்த காலம். நாங்கள் குழந்தைகள் இருக்கும்போது என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வார்கள். எங்களுக்குப் புரியக்கூடாதாம். ஆனால் எனக்கோ வீட்டிலிருந்த லிப்கோ தமிழ் – ஆங்கில சொல்லகராதியை நாவலைப்போல படித்து முடித்துவிட்டிருந்தததனால் ‘கட்டுடைக்க’ சுலபமாக இருந்தது. ‘உங்கள் நண்பன்’ என்ற நடமாடும் நூலகம் மூலம் படித்த ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, முத்து, பொன்னி காமிக்ஸ்கள். வீட்டில் வாங்கிய ‘கோகுலம்’,’சோவியத் நாடு’ என்று வாசிப்பு தொடர்ந்தது. முதலில் அறிமுகமான புனைவெழுத்து லட்சுமி, சிவசங்கரி போன்ற பெண்எழுத்தாளர்களே. அப்புறம் நா.பா.வின் எழுத்துக்கள். வரலாற்று நாவல்கள் ஏனோ என்னைக் கவரவில்லை. மன்னர்கள் பற்றிய திரைப்படமும் பிடிக்காது. ‘பொன்னியின் செல்வன்’ படித்ததே கல்லூரிக்கு வந்த பிறகுதான். நிலக்கோட்டை அரசு நூலகத்தில்தான் எப்போதும் பழி கிடப்பது. அப்பா, அம்மா அரசு ஊழியர்கள் என்பதால் அங்கு குறிப்புதவி நூல்களெல்லாம் கூட படிக்கக் கிடைத்தது. துப்பறியும் சாம்பு, வாஷிங்டனில் திருமணம், தில்லானா மோகனாம்பாள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பு வட்டம் விரிந்தது. நிலக்கோட்டை அரசு மேநிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும்போது ஆங்கில ஆசிரியர் சுந்தர்ராஜன் சார் ‘வாழ்க்கையைப் படிக்கணும்னா ஜெயகாந்தனைப் படிங்கடா தம்பிகளா’ என்று கூறியது வாசிப்புத்தளத்தையே மாற்றியமைத்தது. ஆனால் அந்த வயதில் ‘ரிஷிமூலம்’ போன்ற கருத்துச் செறிவான நாவல்களைப் படித்துவிட்டு மனதளவில் செரிக்கமுடியாமல் திணறியதும் நினைவில் உள்ளது. அந்த வயதில்தான் கி.ரா வும் அறிமுகம். அதன்பிறகும் சுஜாதா அலையில் ஒரு பத்துவருடம் திளைத்துக்கொண்டுதான் இருந்தேன்.
கல்லூரியில் ஆர்.கே.நாராயணில் தொடங்கி சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், ஜான் க்ரிஷாம், ஹெரால்ட் ராபின்ஸ் என்று தொடர்ந்து விக்ரம் சேத், அமிதவ் கோஷ் வரை ஒரு பத்துவருடம் நீச்சலடித்து முடித்திருந்தேன். சென்னையில் நான் வேலையில்லாமல் திண்டாடிய காலங்களில் என்னுடைய பகல்நேர உறைவிடம் ‘கன்னிமாரா’ நூலகம்தான். அதற்குள் உங்கள் சங்கச்சித்திரங்களும், கண்ணீரைப் பின்தொடர்தலும் வாசிப்புத் தளத்தையே மாற்றிவிட்டிருந்தது. ஆங்கில மோகம் அறவே ஒழிந்து விட்டிருந்தது. ‘ஸம்ஸ்காரா’,’மதிலுகள்’,’எரியும் பனிக்காடு’ என்று வாசகப் பரப்பு மேலும் விரிந்தது. உங்கள் தளத்தில் நூல்அறிமுகம் படித்த பிறகு, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ படிப்பதற்காகவே பத்துமுறை சென்றேன். ஒவ்வொருமுறையும் நூறுபக்கம். முழுநாளும் அந்த நூலகத்திலேயே இருந்து ஜி.நாகராஜனின் மொத்தப்படைப்புகளையும் படித்து முடித்தேன். அதுபோக நங்கநல்லூர் ‘ரங்கா லெண்டிங்’ நூலகத்திலும் உறுப்பினர். ரசிகமணி டி.கே.சி கல்கியில் எழுபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய கம்பராமாயணத்தொடர், க.நா.சு வின் கட்டுரைத் தொகுதிகள் முதல் கிலியன் பிளின்னின் ‘கான் கேர்ள்’ வரை அங்குதான் படித்து முடித்தேன். 2010 ல் உங்கள் தளம் அறிமுகமானது முதல் ‘சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு’தான்.
இவ்வளவுக்குப் பிறகும் என்னை இன்றும் ஆச்சரியப்படுத்துபவை அரசு நூலகங்களே. இப்பொழுதும் வாரத்துக்கு இருமுறையாவது தவறாது பழவந்தாங்கல் அரசு நூலகத்திற்குச் செல்கிறேன். நூலகம் மூன்று தளங்களிலாக உள்ளது. கீழே செய்தித்தாள் பிரிவு, முதல் தளத்தில் கட்டுரை, கவிதை, நாவல்கள். இரண்டாம் தளத்தில் குறிப்புதவி நூல்கள். அது நூலகரைப் பொறுத்தவரை இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு மேற்பட்ட நூல்களின் உறைவிடம். அந்த நூல்களை வெளியில் யாருக்கும் படிக்கத் தருவதும் இல்லை. யாரும் படிக்காமல் புழுதி சேர்த்துக்கொண்டு அங்கேயே மட்கி அழிவதற்கென்றே விதிக்கப்பட்டவை. உங்கள் விஷ்ணுபுரம், கொற்றவை எல்லாவற்றிற்கும் அதுவே கதி. நூலகர் ‘மேட’த்திடம் நான் எடுத்துச் செல்லும் புத்தகத்திற்கான மதிப்பைப் போல இரண்டு மடங்கு பணம் முதலிலேயே தந்து விடுகிறேன் என்று கெஞ்சிப் பார்த்தேன். சம்மதிக்கவில்லை. ஆனால் பல வருடங்கள் தொடர்ந்து சென்றதில் அவருக்கு ஒரு பரிதாபம் ஏற்பட்டு நான் மூன்று ‘டோக்கன்’களையும் கொடுத்து விட்டு ஒரே ஒரு குறிப்புதவி நூல் எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதித்தார். முதல் தளத்திற்குச் செல்பவர்களே ஒரு நாளைக்கு நாலைந்து பேர்தான். இரண்டாம் தளத்துக்கு போவது நான் மட்டுமே. ஆம், அது என்னுடைய நூலகம் என்றே கூட நினைத்துக்கொள்வேன். பண்டிதமணி நடேச சாஸ்திரி, மாதவையாவின் நூல்கள், சுந்தர ஷண்முகனாரின் ‘கெடிலக்கரை நாகரிகம்’, பி.என்.சுந்தரத்தின் ‘மங்கல இசை மன்னர்கள்’, கிழக்கு பதிப்பகத்தின் அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுதிகள் செம்பதிப்பு, நீங்கள் சூத்திரதாரியோடு சேர்ந்து செய்த இலக்கிய உரையாடல்கள் போன்ற நூல்கள் கையில் கிடைக்கும்போதெல்லாம் ஏடு கிடைத்த உ.வே.சா வைப்போல மகிழ்ந்திருக்கிறேன்.
ஒரு வாசகனாக நான் நூலகத்துக்கு என்ன செய்திருக்கிறேன்? நூலகத்தின் ஆயிரக்கணக்கான நூல்களையும் ஒரு முறையாவது பிரட்டிப்பார்த்து தூசிதட்டி, எழுத்தாளர் வாரியாக, தொகுதி வாரியாக அடுக்கியிருக்கிறேன். எல்லாப்புத்தகங்களையும் எடுத்துப்பரத்தி வைத்துக்கொண்டு, தரையில் உட்கார்ந்துகொண்டு ஒரு முழுநேர ஊழியனைப்போல வேலைபார்த்திருக்கிறேன். அதாவது காலையில் மூன்று மணிநேரம். சாயந்திரம் மூன்று மணிநேரம். சனி, ஞாயிறு மூன்று வாரங்கள் தொடர்ந்து சென்று இந்த வேலையைச் செய்தேன். தூய்மைப்படுத்தும் போதே, நான் படிக்கவேண்டிய நூல்களை இனம்கண்டு கொள்வதும் தலையாய நோக்கம். அதுபோக, பல வருடங்களாக நான் புத்தகக் கண்காட்சிகளில் வாங்கும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களை இந்த நூலகத்திற்கு வழங்கியிருக்கிறேன். அதை வருடக் கணக்காக யாரும் தொட்டுப்பார்க்காததை நினைத்து மனம் புழுங்கியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அப்படிக் கொடுப்பதை நிறுத்திக்கொண்டு, ‘ரெங்கா லெண்டிங்’ கில் பாதி விலைக்கு விற்க ஆரம்பித்தேன். பணம் இரண்டாம் பட்சம், அந்த நூல் தனக்கான வாசகனைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதே முக்கியக் காரணம். புதிதாக வாங்குகிற நூல்களுக்கும் இடம் தேவையாய் இருப்பது மட்டுமே காரணமல்ல. ஒரு நூலை இரண்டாம்முறை படித்தபின் மூன்றாம் முறை படிப்பது என்பது அநேகமாக இல்லை. அப்படி படிக்கவேண்டுமென்று தோன்றினால் நூலகத்திலிருந்து படித்துக் கொண்டால் போகிறது என்பதே என் நிலைப்பாடு. அப்போதுதான் ‘புரவலர் பெருந்தகைப் பட்டியல்’ என்று ஒரு பலகையில் புரவலர்களின் பெயர்களை எழுதி வைத்திருந்ததைப் பார்த்தேன். ஆயிரம் ரூபாய் கொடுத்த வாசகர்களின் பட்டியல். புரவலர் பட்டயம் உண்டு. இப்படி நிதிவழங்கியோரின் பெயர்களை விளம்பரப்படுத்திக்கொள்ளவும் அனுமதி.
நான் ஏழுபேரை புரவலர்களாக்க முடிவு செய்தேன். எனக்கு வாசிப்புப்பழக்கம் வரக்காரணமான என் அம்மா மங்களம் அவர்கள். ஜெயகாந்தனை அறிமுகப் படுத்திய என் ஆசிரியர் சுந்தர்ராஜன், மற்ற ஐவரும் எழுத்தாளர்கள். அவர்களுக்கு மேலான நூலகப் புரவலர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? த.ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், ஜெயமோகன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன். ஆனால் இத்தனை பெயர்களை எழுத இடம் இருக்குமா? என்ற சந்தேகத்தில் முதல் ஐந்துபெயர்களை மட்டும் எழுத, அதாவது நானே எழுத முடிவுசெய்தேன். கடைசி இரண்டு பேருக்கும் ஞானபீடத்தின் ராசிதான் இதிலும். ‘பெயிண்டரு எடுக்கமாட்டைய்ங்காரு’ என்றார் நூலகர் மேடம். ‘இல்ல மேடம், நானே எழுதிர்ரேன்’ என்றேன். ‘எழுதுவீங்களா?’ என்றார். சற்றே ஆணவம் அடிபட, ‘ஒங்களைவிட நல்லா எழுதுவேன்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, ‘ஏதோ ஒங்க ரேஞ்சுக்கு எழுதுவேன், மேடம்’ என்றேன். அதாவது மேலே எழுதப்பட்ட பெயர்களில் இரண்டை அவர் எழுதியதாகக் கூறியிருந்தார்.
செப் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெயிண்ட், பிரெஷ்ஷை வாங்கிக்கொண்டு ‘ஏடிஎம்’ மில் பணம் எடுத்துக்கொண்டு நூலகம் சென்றேன். முதலில் இருகோடுகளை வரைந்து பெயரை சிலேட்டுக் குச்சியால் எழுதிக்கொண்டேன். இப்போது அதன் மீது பெயிண்டை நனைத்துப் பூச வேண்டியதுதான். ஆனால் பிரெஷ்ஷை பெயிண்ட்டில் தொட்டு எழுதுவது நினைத்த அளவுக்கு எளிதாக இல்லை. பிரெஷ்ஷின் முனையில் மிகக் குறைந்த அளவே பெயிண்டைத் தேக்கிக்கொள்ளவேண்டும் என்ற பாடத்தை நான் ஒருமாதிரியாகக் கற்றுக்கொண்டபோது என் அம்மாவின் பெயரை ‘ஒரு வழியாக’ எழுதிமுடித்திருந்தேன். ஆனால் எது குறைந்த அளவு என்பதுதான் கடைசிவரை தெரியவேயில்லை. முதலாவதாக தரையில் உட்கார்ந்தால், எழுதுகிற இடம் மிக உயரமாகவும், நின்றால் மிகவும் கீழேயும் இருந்தது. முட்டிபோட்டு எழுதுவதே சாலச்சிறந்தது. ஆனால் இரண்டுநிமிடத்திற்கு மேல் அப்படி நிற்கவும் முடியவில்லை. உஸ்ஸ்…எப்படியோ நின்றும், கிடந்தும், படுத்தும் இரண்டு பெயர்களை எழுதி விட்டேன். இனி எழுத்தாளர்கள்தான். உங்களை யாரும் ‘இனிஷியலோ’டு குறிப்பிட்டதில்லை. ஆனால் மற்ற இருவருக்கும் அப்படியில்லை. எழுத்தாளர் என்று எழுதாமல் பெயரைமட்டும் எழுதலாமா என்று யோசித்தேன். இன்னும் தமிழ்ச்சமூகம் அந்த அளவுக்கு முதிரவில்லை என்ற எண்ணம் வந்தது.
எழுத்தாளரில் முதல் ‘ழு’ வை எழுதி முடிப்பதற்குள் விரலெல்லாம் பெயிண்டால் நனைந்துவிட்டது. அதை அவ்வப்போது துடைத்துக்கொண்டு எழுதவேண்டும் என்பது மெதுவாகத்தான் மண்டையில் உரைத்தது. அதற்குள் பிரெஷ் விரலோடு ஒட்டிக்கொண்டு வளைந்துகொடுக்க மறுத்தது. இன்னும் இரண்டுமுறை இந்த ‘ழு’வை எழுதவேண்டும் என்று நினைத்தபோதே பகீரென்றது. பெயிண்ட் காய்ந்து விடும் என்பதற்காக ‘பேன்’ னும் போட்டுக்கொள்ளவில்லையா, கொஞ்சம் கிறுகிறுவென்று வருவதுபோல இருந்தது. கடைசியில் ஒருவழியாக உங்கள் பெயரை எழுதிமுடிக்கப்போகும்போது ஒரு ஈ ஒன்று முகத்தில் வந்து அமர்தலும் அலைதலுமாக இருந்தது. பெயின்டையும் பிரெஷையும் முதலில் கீழே வைத்துவிட்டு அதை அறைந்து கொல்லுவதைப் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோதே நூலகர் வந்து நேரமாவதை நினைவுபடுத்தினார். ஒருவழியாக எழுதி முடித்தேன். ‘சுண்டைக்கா காப்பணம் சொமைகூலி முக்காப்பணம்’ என்பது போல பெயிண்டை விட விலைகூடிய ‘பெயிண்டை கையிலிருந்து சுத்தம் செய்யும்’ திரவத்தை வாங்கி சுத்தம் செய்துகொண்டு, ஒப்பனை கலைந்த ஆட்டக்காரனாக ஒரு வழியாக வீடுபோய்ச்சேர்ந்தேன். எல்லோருடைய பெயரையும் முகவரியையும் ஒரு தாளில் எழுதச்சொல்லியிருந்தார் நூலகர். எல்லா எழுத்தாளர்களுக்கும் என் முகவரியைக் கொடுத்தது நிறைவாக இருந்தது. மறுநாள் நூலகத்தில் நுழையும்போது யாரும் பார்க்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு, ஏதோ நவீன ஓவியனைப்போல என்னுடைய எழுத்தை பக்கத்திலும் தூரத்திலுமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன். அங்கு இன்னும் இரண்டுபெயர் எழுத இடம் இருக்கிறது.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்