அன்புள்ள ஜெயமோகன்,
நான் என்னை இப்படி வரையறை செய்துகொள்வேன். தனியன், கூச்சம்கொண்டவன், கனவு காண்பவன், உலகை வெல்ல விழைபவன். தவளையும் இளவரசனும் கதையை படிக்கப்படிக்க கூகிள் மேப்பில் ஐராவத்தைப் பார்த்தேன். அதன் அடர்ந்தகாட்டைப் பார்த்தேன். அவர்கள் மொழியை யூடியூபில் கேட்டேன். திபெத்திய புத்தம், அந்த நிலம் மேலும் ஒரு மயக்கமுண்டு.Seven years in Tibet என்ற படத்தைப் பார்த்தபின் உணர்ந்த ஈர்ப்பு .
இந்தோனேஷியா மேலும் அந்த ஈர்ப்புண்டு. மொத்த கிழக்காசியா நாடுகள் மேல் ஒரு நாட்டமிருக்கிறது. அது ஒரு வாயில் போல தோன்றும். அதற்குள் நுழைந்தால் நம்மை இன்னும் நன்றாக அறிந்துகொள்ள முடியுமென்று தோன்றும்.பாங்காக் விமானநிலையத்தில் பாற்கடலை கடையும் சிற்பத்தை கண்டபின், பிலிப்பைன்ஸ் நாட்டில் நான் வேலை செய்த வங்கியின் மென்பொருள் அலுவலகத்தில் இந்தோனேசியா பரிசாக கொடுத்த ஜடாயு சிலையை பார்த்தபின்னும் நான் அடைந்த உணர்வு.
இந்தியப்பண்பாடு கிழக்காசியாவில் பரவி வேறு பரிணாமமடைந்துள்ளது. கம்போடியா அங்கோர்வாட் கோவில்மீதும் ஒரு கனவுள்ளது. நம் சிந்தனையின் மாற்றம் , புதுக் கோணம் அவர்களிடம் பார்க்க முடியும். அது ஒரு கிளர்ச்சி.
எங்கோ ஆரம்பித்து தாய்லாந்து வரை வந்துவிட்டேன். கொஞ்ச நாளாக இரவில் நட்சத்திரங்களை பார்க்கிறேன். இன்று ஒரு நட்சத்திரத்திடம் பேசினேன். உனக்கும் எனக்கும் இடையே எத்தனையோ ஒளியாண்டுகள். பின்னாளில் மனிதன் ஒளியைவிடவும் வேகாமச் செல்லும் ஊர்த்தியை கண்டு பிடிப்பான். உன்னை விரைவாக வந்து பார்ப்பனென அதனிடம் உறுதி கூறினேன். இப்படி ஒரு அறிவியல் புனைகதை எழுதத்தோன்றியது. பல வருடம் முன் ஒரு காதல் கடிதம் எழுதினேன்.மீதியெல்லாம் மனதிற்குள்தான். உங்களுக்குக்கூட பல கடிதங்கள் மனதில் எழுதிவிட்டேன். உங்களுக்கு விக்கலே இல்லை கனவோ வந்திருக்கலாம்.
போன வருடம் நான் எடுக்க நினைத்த சவால் உங்களுக்கு நூறு கடிதம் எழுதுவது. ஏன் உங்களோடு உரையாட வேண்டும்? எனக்கே பதில் சொல்லாமல் கடிதம் எழுத முடியாது. என்னால் உங்கள் எழுத்திடம் பேச முடிகிறது. என் மனதால் உங்கள் மனதை அறிய முடிகிறது. இந்த உலகில் எனக்கு நீங்கள் நெருங்கியவரல்லவா? ஒரு மகனாய் , அண்ணனாய், நண்பனாய் என்னால் அவர்களோடு உரையாட முடிகிறது. ஆனால் எனக்குள் இருக்கும் இன்னொருவன் உங்களிடம் மட்டும்தான் உரையாட முடியுமென்று நினைக்கிறேன்.
இத்தனை நாள் உங்களோடு உரையாட தொடங்காதது என் கூச்சத்தால். என் கூச்சம் அவனின் உரையாடலுக்கு தடையாய் இருக்கக்கூடாது. 2018 ஊட்டி காவிய முகாமில் புதியவர்கள் பேச வரலாமென நீங்கள் சொன்னபோது எழுந்து பேச முயன்றேன். அது இன்றுதான் சாத்தியமானது.இன்று இந்த கூச்சத்தை ஒரு சோம்பலாக பார்க்கிறேன். சோம்பலைப் போக்கி உங்களோடு உரையாடலை தொடங்க நூறு கடிதம் எழுதும் சவாலை கர்மயோகி காந்தியின் பிறந்தநாளில் ஏற்கிறேன்.
பி .கு 1: எந்த காலவரையறைக்குள் நூறு கடிதமென்ற இலக்கு இல்லை. காலத்தை முடிவு செய்தால் ஓட்டப்பந்தய இலக்காகி வெல்ல மட்டுமே நினைப்பேன்.இப்போதைக்கு தீர்மானமான காலவரையறையில்லை .
பி .கு 2: இந்த கடிதத்தை கைப்பிரதியில் முன்னரே எழுதிவிட்டேன் ஆனால் அனுப்பத் தோன்றவில்லை. அம்மா நாட்காட்டியில் ஒவ்வொரு நாளும் என்ன நாளென சொல்லிவர காந்தி ஜெயந்தியென சொன்ன கணமே முடிவு செய்துவிட்டேன். அன்புள்ள, மோகன் நடராஜ்
அன்புள்ள மோகன்
நீங்கள் எழுதாவிட்டாலும் எழுதினாலும் ஓர் உரையாடல் நடந்துகொண்டிருப்பதே முதன்மையானது. உரையாடிக்கொள்வதென்பது சிந்திப்பதற்கான ஒரு வழி. சிந்தனை என்பது அப்படிச் சில மனநாடகங்கள் வழியாகவே நிகழ முடியும். நான் இன்றும் சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, ஞானி, நித்ய சைதன்ய யதி ஆகியோரின் அவைகளில் அமர்ந்து மானசீகமாக விவாதித்துக் கொண்டேதான் இருக்கிறேன். அவர்களுக்குக் கடிதங்கள் எழுதி அழித்துவிடுவதுகூட உண்டு.
நாம் நம் உரையாடலை நாமே திட்டமிட்டு அமைத்துக்கொள்வது அவசியம். நமக்கு உகந்தவர்கள், நம்மை தீவிரமாக்குபவர்களை நாம் தெரிவுசெய்யவேண்டும். இல்லையேல் நாம் இயல்பாக நமக்கு எரிச்சல்மூட்டுபவர்கள், நம்மை எதிர்ப்பவர்களை நோக்கி உரையாட ஆரம்பித்துவிடுவோம். இன்றைய வலைத்தளச் சூழல் அதை ஊக்கப்படுத்துகிறது. அது நம்மை கசப்பு கொண்டவர்களாக்கும். எதிர்நிலைச் சிந்தனைகள் மட்டுமே நம்மில் உருவாகும். அசல் சிந்தனைகள், ஆக்கபூர்வ சிந்தனைகள் உருவாகாது. படைப்பெழுச்சி வற்றிவிடும்.
இதை நான் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டேன். அதன்பின் இப்போது நான் என்னுடன் உரையாடுபவர்களை நானே தெரிவுசெய்கிறேன். என்னை வசைபாடுபவர்கள் உண்டு. கேலிசெய்பவர்கள் உண்டு. ஆண்டுக்கணக்காக சலிக்காமல் சீண்டிக்கொண்டே இருப்பவர்கள் உண்டு. அவர்களுடன் உரையாடுவதில்லை. ஆனால் நம் உள்ளம் நம் ஆள்கையில் இல்லை. அவர்களை நாம் வாசித்தால் நம்மையறியாமலேயே உரையாட ஆரம்பித்துவிடுவோம். ஆகவே வாசிப்பதே இல்லை. ஒருவர் நம்மை வசைபாடி எழுதுகிறார், நாம் அவரை வாசிக்க மறுத்துவிடுவதென்பது அவரை செயலற்றவராக்கிவிடுகிறது. வீண் ஓசை எழுப்புபவராக ஆக்கிவிடுகிறது.
நான் எவருடன் உரையாடுகிறேன் என்பதை என் தளத்தை வாசிப்பவர்களே தெரிந்துகொள்ள முடியும். என் வாசகர்களுடன் ஒருபக்கம், என் ஆசிரியர்களுடன் மறுபக்கம். நான் அடைந்துள்ள தெளிவெல்லாம் அவ்வண்ணம் உரையாடி உரையாடி அடைந்தவையே. உரையாடும்போது நம் மொழி துல்லியமாவதைக் காண்கிறோம். துல்லியமான மொழி துல்லியமான சிந்தனையை உருவாக்குகிறது. துல்லியமான சிந்தனை துல்லியமான மொழியையும் உருவாக்குகிறது.
உங்களைப்போலவே பலர் எனக்கு எழுதுவதுண்டு. நான் அவற்றில் எவற்றுக்கேனும் பதில் தேவையென்றால் மட்டுமே திரும்ப எழுதுகிறேன். மற்றபடி அவை ஒருவகை தன்னுரையாடல்களும்கூட என அறிந்திருக்கிறேன். ராதாகிருஷ்ணன் என்னும் நண்பர் எனக்கு முன்பு கைப்பிரதியாக மிகமிக நீண்ட கடிதங்கள் எழுதுவார். முறையான கல்வி அற்றவர். ஆகவே மொழிநடை குழப்பமாக, தாவிச்செல்வதாக இருக்கும். நான் எவற்றுக்கும் பதில் சொல்வதில்லை. இன்று அவருடைய நடை தெளிவாகியிருக்கிறது. சிறுகதைகள் எழுதுகிறார். அவ்வாறு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் நூறுபேராவது இருக்கிறார்கள்.
உரையாடல் என்பதே அறிவுச்செயல்பாட்டின் ஒரே வடிவம். வெளியே சமூகத்தில் மட்டும் அல்ல, உள்ளே மூளையிலும் அது உரையாடலாகவே நிகழ்கிறது
ஜெ