கடவுளை காதலராகக் கொள்வது- சுனில் கிருஷ்ணன்

கோவை கவிதை நிகழ்வு,கடிதங்கள்

கோவை கவிதைநிகழ்வு- கடிதம்

கோவை கவிதைவிவாதம் – கடிதம்

கோவையும் கவிதையும் ஒரு கோழியும்

அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்

(கோவை கவிதை கூடுகையில் ஆன்மீக கவிதைகள் என்பதை  பேசுபொருளாக கொண்டு எழுதிய கட்டுரை)

  1

 எழுத்தாளர் கோணங்கி ஒரு உரையாடலின் போது கவிஞர்  உலகின் முதல் மனிதர், நாவலாசிரியர் உலகின் கடைசி மனிதர் என்று குறிப்பிட்டார். முதல் மனிதர் ஒரு குழந்தையின் குறுகுறுப்பைக்கொண்டவர், யாவற்றையும் அறியத்துடிப்பவர், அவருக்கு இவ்வுலகின் ஒவ்வொரு துளியும் வியப்பின் பெருவெளி. கடைசி மனிதர் கனவுகளை இழந்தவர். அனைத்தும் தலைகீழாகவும் பொருளற்றும் திரிந்தும் போவதை கண்ணுறுபவர். நாவலாசிரியருக்கு அல்லது பொதுவாகவே புனைவெழுத்தாளருக்கு கவிதையின் மீதிருக்கும் மையல் இங்கிருந்தே தொடங்குகிறது. தூயதும், அரியதுமான வெகுளித்தனத்தின் மீதான, மூர்க்கமான பிரேமையின் மீதான ஈடுபாடு. ஏக்கம். தொலைந்த பால்யத்தை போல மீள முடியாத ஆனால் பரவசமளிக்கும் வெளியை கவிதையே அவருக்கு அளிக்கிறது.

இந்த கட்டுரைக்கு நான்  கவிதைகளைத் தேர்ந்தெடுக்க வைத்துக்கொண்ட முதன்மையான அளவுகோள் ஆன்மீகவாதிகளின் கவிதை வெளிப்பாடு என்பதே. கவிஞர்களின் ஆன்மீக‌ வெளிப்பாடு என வரயறையை சற்று மாற்றியமைத்தால் பாரதி தொடங்கி வேணு வெட்ராயன் வரை பலருடைய கவிதைகளை பேச இயலும். ஆனால் அவை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அவை எப்படி இக்கவிதைகளுடன் நீட்சிகொள்கின்றன என்பதை கவனிக்க இயலும்.

கவிதையை மொழியின் முதலும் உச்சமுமான வெளிப்பாடு என கொள்ளலாம். ஆகவே காலங்காலமாக கவிதையே ஆன்மீக வெளிப்பாட்டுக்கான ஊடகமாக திகழ்ந்து வருகிறது. சங்கரரின் சவுந்தர்ய லகரியைப் பற்றி நடராஜ குரு குறிப்பிடும்போது அது எப்படி படிமம் மற்றும் காட்சி ஏற்படுத்தும் அதிர்வு வழியாக தொடர்புறுத்தும் ஆதி மொழியை (proto language) கையாள்கிறது என விளக்குகிறார். ஆதி மொழி தான் இப்போது வரை நீடிக்கும் ஆகப்பழமையான மொழி அமைப்பு, மீமொழி (meta language) அறிவார்ந்த உரையாடலுக்கு உரியது. ஆதிமொழி வடிவவியல் பிரக்ஞை (geometric orientation) கொண்டது. கவிதை, இசை மற்றும் குறியீடுகளை பயன்படுத்தும் கலை வடிவங்களுக்கான தொல்கால விதைநிலம் அதுதான். ஆதி மொழி எழுதப்பட்டதிலிருந்து எழுதப்பட முடியாததை தொற்றிக்கொள்ள உரிய வாகனம் என சொல்லலாம்.

சவுந்தர்ய லகரிக்கு பொருந்துவது பொதுவாக ஆன்மீக கவிதைகளுக்கும், ஒரு எல்லையில் மொத்த கவிதைகளுக்கும் பொருந்துவதும் ஆகும். கவிதை மொழியில் உள்ள சொல்லுக்கும் பொருளுக்கான பிணைப்பை தளர்த்தி பொருள்கோடல் சாத்தியங்களை பெருக்குகிறது. கவிதைகளில் வரும் மலையும் நிலவும் கடலும் வெறும் மலையும் நிலவும் கடலும் அல்ல. கவிதையின் கள்ளமின்மை அல்லது குழந்தைமை என நாம் சுட்டுவது இந்த ஆதி மொழியைத்தான். கவிதை சுடு சரமென  நம்மை கிழித்து உட்புகுவதற்கு என தனிப்பாதையை தேர்ந்துகொள்ளும். நவீன கவிகளில் கூட பெரும்பாலான கவிகள் ஏதோ ஒரு புள்ளியில் ஆன்மீகத்தை தொட்டு மீள்கிறார்கள். ஞானிகள் படிபடியாக ஏறிச்சென்று காண்பதை  கவிகள் ஒரு கணத்தில் எல்லைகளை கடந்து காணும் பேறு பெற்றவர்கள். ஆகவேதான் பண்டைய காலத்தில் ஊழ்கத்தில் அமர்ந்து ஞானத்தில் திளைத்த ரிஷிகளையும் கவி என்றழைத்தார்கள். ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதம் இதற்கான சான்று.

 

சிருஷ்டி கீதம்

அப்போது அசத் இருக்கவில்லை

சத்தும் இருக்கவில்லை

உலகம் இருக்கவில்லை

அதற்கப்பால்

வானமும் இருக்கவில்லை

 

ஒளிந்துகிடந்தது என்ன?

எங்கே?

யாருடைய ஆட்சியில்?

அடியற்ற ஆழமுடையதும்

மகத்தானதுமான நீர்வெளியோ?

மரணமிருந்ததோ

மரணமற்ற நிரந்தரமோ?

அப்போது இரவுபகல்கள் இல்லை

ஒன்றேயான அது

தன் அகச்சக்தியினால்

மூச்சுவிட்டது

அதுவன்றி ஏதுமிருக்கவில்லை

 

இருட்டால் போர்த்தப்பட்ட வெளி

வேறுபடுத்தலின்மையால்

ஏதுமின்மையாக ஆகிய வெளி

அது நீராக இருந்தது

அதன் பிறப்பு

வெறுமையால் மூடப்பட்டிருந்தது!

தன் முடிவற்ற தவத்தால்

அது சத்தாக ஆகியது

 

அந்த ஒருமையில்

முதலில் இச்சை பிறந்தது

பின்னர் பீஜம் பிறந்தது

அவ்வாறாக அசத் உருவாயிற்று!

 

ரிஷிகள்

தங்கள் இதயங்களை சோதித்து

அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்

அதன் கதிர்கள்

இருளில் பரந்தன

 

ஆனால் ஒருமையான அது

மேலே உள்ளதா?

அல்லது கீழே உள்ளதா?

அங்கு படைப்புசக்தி உண்டா?

அதன் மகிமைகள் என்ன?

அது முன்னால் உள்ளதா?

அல்லது பின்னால் உள்ளதா?

திட்டவட்டமாக யாரறிவார்?

 

அதன் மூலக்காரணம் என்ன?

தேவர்களோ

சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!

அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?

யாருக்குத்தெரியும் அது?

 

அதை யார் உண்டுபண்ணினார்கள்

அல்லது உண்டுபண்ணவில்லை?

ஆகாய வடிவான அதுவே அறியும்

அல்லது

 

அதுவும் அறியாது!

 

அறிதலின் வெகுளித்தனமும் வியப்புமே கவிதையாக வெளிப்படுகிறது. கபீரின் இவ்வரிகள் சிருஷ்டி கீதத்தின் அதே உணர்வின் நீட்சி என சொல்லலாம்.

சகோதரனே சொல்

ஆகாயத்தை விரிகுடையெனச்

செங்குத்தாக நிறுத்தி வைத்தது யார்? நீலப்பெருந்திரையில் 

விண்மீன்களை மினுங்கவைத்தவர் யார்? அதைத் தீட்டிய

அபாரமான தூரிகையாளன் எவன்?’

புலர் பொழுது உலக இயக்கத்தை தொடங்கி வைக்கும் பெருவியப்பு உஷை சூக்தமாகிறது. உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அல்லும் பகலும் அயராமல் வந்து கொண்டிருக்கிறார்கள். சோர்ந்து அமரவோ சோம்பல் கொள்ளவோ ஏதுமில்லை. இரவையும் பகலையும் பற்றிய கவிதை மரணத்தை பற்றியும் காலாதீதத்தை பற்றியும் பேசும் புள்ளியில் சட்டென வேறொரு தளத்திற்குச் செல்கிறது. பகலும் இரவையும் போல் பிறப்பும் மரணமும் இயல்பாகிறது. மரணத்தின் துக்கமும் அச்சமும் விலகுகிறது.

உஷை

(ரிக் வேதம் முதல் மண்டலம், 113வது சூக்தம்)

வந்தது ஒளிகளிற் சிறந்த இவ்வொளி

பிறந்தது  எங்கும் பரவும் பிரகாசம்

செங்கதிர்த் தேவன் எழ

வெளிச்சென்ற ராத்ரி

உஷைக்குப் பிறப்பிடம் ஈன்றாள்.

தன் வெண்மகவுடன் வந்தாள் சுடர்ப்பெண்

கரியவள் தன் இல்லத்தை அவளுக்களித்தாள்

ஒன்றான இவ்வுறவுகள்

நிறம் மாறி

ஒருவரையொருவர் தொடர்கின்றனர்

அழிவற்று.

முடிவற்றது

ஒன்றேயானது

சகோதரிகளின் பாதை

மாறிமாறி அதில் பயணிக்கின்றனர்

இந்த தேவியர்

இரு நிறமும் ஒரு மனமும் கொண்ட

பகலும் இரவும்

முறைதவறுவதில்லை

மோதிக் கொள்வதுமில்லை.

இன்னொளிசேர் சோதித் தலைவியைக்

காண்கின்றன எம் கண்கள்

கதவுகளைத் திறந்தாள்

பொலிவுடன்

உலகை சிலிர்க்கச் செய்து

செல்வங்களைக் காட்டினாள்

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

உறக்கத்தில் சுருண்டு கிடந்தோரை

சுகவாழ்விற்கென

வேள்விக்கென

பொருள் தேடலுக்கென

எழுந்தோடச் செய்தாள்

சிறிதே கண்டோர் பெரிதாய்க் காண

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

வீரச்செயலுக்கென ஒருவனை

புகழுக்கென ஒருவனை

மகத்தான வேள்விக்கென ஒருவனை

பலனுக்கென ஒருவனை

உழைப்பிற்கென ஒருவனை

தொழிலுக்கென அனைவரையும் என

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

யுவதி வெண்துகிலினள் வான்மகள்

மண்மீது காணும் செல்வங்களின் தலைவி

இதோ வருகிறாள் உஷை

மங்கல நல்லொளியினளே

இந்தக் காலையில்

எமக்காகத் துலங்குக.

கடந்து சென்ற காலைகளின் வழிச்செல்பவள்

இனிவரும் முடிவற்ற காலைகளின் முதல்வி

உஷை

உயிருள்ளவை அனைத்தையும்

உந்திச் செலுத்துகிறாள்

மரித்தவற்றையும் உணர்விக்கிறாள்.

உஷையே

நீயே அக்னி சுடரத் தூண்டுவித்தவள்

கதிரோனின் கண்வழி உலகைப் புலப்படுத்தியவள்

வேள்வி செய்யவேண்டி மானுடரை எழுப்பியவள்

தெய்வீக நற்செயல்கள் புரிபவள்.

எத்தனை காலமாக

எழுகிறார்கள் உஷைகள்?

நமக்கு இன்னொளி தர

இன்னும் எத்தனை காலம்

எழுவார்கள்?

கடந்து சென்ற வைகறைகளுக்காக ஏங்கி

வரப்போகும் வைகறைகளுடன்

மகிழ்ச்சியாகச் செல்கிறாள்

உஷை.

போய்விட்டனர்

முன்னாட்களில்

உஷையின் உதயம் கண்ட மானிடர்

நாம்

இன்று வாழும் நாம்

அவளது நல்லொளி காண்கிறோம்

வரும் நாட்களில் அவளைக் காண

நமது பின்னோர் வருகிறார்கள்.

எதிர்ப்போரைத் துரத்துபவள்

பிரபஞ்சலயத்தில் தோன்றியவள்

பிரபஞ்சலயத்தைக் காப்பவள்

உவகையூட்டுபவள்

இன்னொலிகளை விழிப்புறச் செய்பவள்

சுமங்கலி

தேவர் விரும்பும் வேள்வியை ஏந்திவருபவள்

பெரும்புகழ் கொண்ட உஷை

இன்று எமக்காக உதித்திடுக.

உஷை

முற்காலங்களில்

இடையறாது உதித்தாள்

செல்வம்சேர் தேவி

இன்றும் தன் ஒளி காட்டுகிறாள்

வரும் நாட்களிலும் உதிப்பாள்

தன்னாற்றலால் இயங்குகிறாள்

அந்த அமுதப் பெண்

அழிவற்று.

வான் விளிம்புகளைத் தன்னொளியால்

சுடர்வித்தாள்

தேவி தன் கருந்திரையை

வீசிஎறிந்து விட்டாள்

உஷையின்

செம்பரிகள் பூட்டிய தேர் கண்டு

உலகம் விழித்தெழுகிறது.

உயிர்வளர்க்கும் செல்வங்கள் ஏந்தி

உணர்வளித்து

அற்புத எழிலொளி பரப்பி

கடந்து சென்ற பல வைகறைகளின் இறுதியாக

வரப்போகும் ஒளிமிகு வைகறைகளின் முதலாக

இன்று உஷை எழுந்தாள்.

எழுவீர்

வந்தது மீண்டும் வாழ்வும் உயிரும்

சென்றது இருள்

தோன்றுகிறது ஒளி

கதிரவனுக்காக

வழிதிறந்தாள் உஷை

நம் ஆயுளும் உணவும் செழிக்கும் இனி.

2

கவிதை எங்கிருந்து ஊற்றெடுக்கிறது எனும் கேள்விக்கு எனக்கு. அரவிந்தரின் கோட்பாடு நெருக்கமாக உள்ளது.  கவிதையைப் பற்றிற அறுதியான கோட்பாடாக இதை காண வேண்டிறதில்லை.‌ ஆன்மீக ரீதியில் கவிதையை புரிந்துகொள்ள ஒரு வழிமுறை எனும் எல்லையுடன் இந்த புள்ளிகளை அணுக வேண்டும். மனித ஆன்மா பிரபஞ்ச பேரிருப்புடன் கொள்ளும் தொடர்பின் அடையாளமாக கவிதையை காண்கிறார் அரவிந்தர். சாமானிய மனம் (ordinary mind), உயர் மனம் (higher mind), ஒளிர் மனம் (illumined mind), உள்ளுணர்வு மனம் (intuitive mind) மற்றும் மேலான மனம் (over mind) என  ஐந்து பரிணாம படிநிலைகளை குறிப்பிடுகிறார். இதை தவிர்த்து   பிரபஞ்ச மனம் (universal mind), அதி பிரக்ஞை இருப்பும் (super conscient being) உள்ளது.

ஒவ்வொரு அடுக்கிற்கும் அதற்குகந்த படைப்பூக்கம் சொல்லப்படுகிறது. சாமானிய மனதில் படைப்பூக்கத்திற்கு பெரிதாக வேலையில்லை. ஒளி ஊடுருவ இயலாத அளவிற்கு இறுக்கமும் கணதியும் கொண்டது. உயர் மனம் சற்றே தெளிந்தது. தத்துவவியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்த நிலையிலிருந்து செயல்படுவார்கள்.‌ மீ மொழியின் தளம் என சொல்லலாம். ஒளி சில புள்ளிகளில் இருந்து ஊடுருவும். அசல் சிந்தனைகள் தோன்றும். எனினும் தர்க்கத்தை கடக்க இயலாது. இந்த நிலையிலிருந்து அமைதி கைகூடி வரும்போது இயல்பாக ஒளிர் மன அடுக்கை சென்றடையும். பெரும் முயற்சிகள் ஏதுமின்றியே சத்தியத்தையுய் ஆனந்தத்தையும் உணர இயலும். சிறு புள்ளிகளில் ஊடுருவிய ஒளி இப்போது வெள்ளமாக பொழியும். கவிதைகளுக்கான வெளி இதுவே. மனம் இந்நிலையை அடைந்ததற்கான அறிகுறிகளில் ஒன்று கவிதை சட்டென ஊறி பிறப்பெடுப்பது என்கிறார் அரவிந்தர்.

அரவிந்தர் கவிதையே மனதின் உயர் அடுக்குகளை பற்றி சொல்வதற்கு உகந்த ஊடகம் எனவும் சொல்கிறார். சொற்களின் பொருளை கடந்து அதன் ஒலிக்குறிப்பு மற்றும் ஒலிச் சேர்க்கையே அதன் அதிர்வுகளை கடத்த வல்லது. சொற்கள் அதிர்வுகள் உடுத்தும் ஆடைகள் மட்டுமே என்பது அவர் கருத்து. ஆதிமொழியின் வல்லமை ஒலி அதிர்வுகளின் ஊடாக தொடர்புறுத்தும் என்கிறார் நடராஜ குரு. ஆனால் இந்த தளத்தில் படைப்பூக்கத்தை தொடர்ந்து தக்கவைப்பது கடினம். ஒரே ஆக்கத்தில் சில வரிகளில் தாக்கம் தென்பட்டு பிற இடங்களில் சாதாரனமாக கடந்து செல்லும். இந்நிலையில் தொடர்பற்ற சீரற்ற படிமங்களையும் அறிதல்களையும் காண முடியும்.

இதற்கடுத்த நிலையில் எல்லாம் தெளிவடைகிறது. சொற்கள் தனது அலங்காரங்களை துறக்கிறது. உள்ளுனர்வு மனம் எனும் தளம் சத்தியத்தைப்பற்றிய நினைவு களன் என்கிறார். ஒளி வெளியிலிருந்து வருவதில்லை. இயல்பாக எப்போதும் யாவற்றையும் ஒளி சூழ்ந்திருக்கிறது. தர்க்கத்தின் பிடியிலிருந்த தன்னை முழுமையாக விடுவித்து கொண்டது. மேலான மனம் மனித பிரக்ஞையின் உச்சம். அது பிரபஞ்சமளாவிய பிரக்ஞை ஆனால் தனியிருப்பும் தொடர்கிறது. இதுவே கடவுளர்களின் வெளி. உலகின் மதங்கள் அனைத்தும் இங்கே உதித்தவை. கால வெளி எல்லைகளை கடந்த நிலை. கவிதை மந்திரமாவது இத்தளத்தில்தான். துண்டுபடாத தொடர் ஒளி சூழ்ந்து இருக்கும்.

அமைதியும் நிலைபேறும் கொண்ட மனதில் காற்றில்லா வானத்தை பறந்து கடக்கும் பறவைகளை போல எண்ணங்கள் சுவடின்றி கடந்து மறையும். அத்தகைய மனதில் பிரபஞ்ச மனம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். புனித நூல்களில் காலம் கடந்து நிற்பவை ஆகச்சிறந்த கவிதை வரிகள். அவை மந்திரத்தன்மையை எழுப்புபவை. உதாரணமாக  ‘வானத்து பறவைகளை பாருங்கள்‌, அவை விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை’ எனும் விவிலிய வசனம் ஒரு கவித்துவ வாக்கு (poetic utterance). ஹெரால்ட் ப்ளூம் விவிலியத்தை புனைவு நூலாக வாசிக்க இயலும் என சொல்கிறார். குறிப்பாக பழைய ஏற்பாட்டை. ஜெ எனும் பெண் எழுத்தாளர் எழுதியிருக்கக்கூடும் எனும் ஊகமும் அவருக்கு உண்டு. இந்த வரிசையில் மத நூல்களையும் புனித நூல்களையும் கவிதைகளாகவும் வாசிக்க இடமுண்டு.

முண்டக உபநிஷத்தின் தொடக்கத்தில் வரும்

‘இரு பறவைகள்

இணைபிரியாத் தோழர்கள்

ஒரே மரத்தில்.

ஒன்று கனிகளை உண்கிறது

மற்றொன்றோ

உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.’

இதுவும் ஒரு கவித்துவ வாக்குதான். கவி ஊடகம் கவிதை அவன் வழியாக வெளிப்படுகிறது என்பது ஒரு பார்வை. ஆனால் இதன் அடுத்த கட்டமாக கவிதையையும் கூட ஒரு ஊடகமாக காண முடியும்.  காலாதீத சத்தியம் சொற்களாக திரண்டு கவிஞன் வழியாக கவிதையாக கனிந்து வெளிப்படுகிறது என்றும் கொள்ளலாம்.

இந்திய மரபில் தியான சுலோகங்கள் என ஒவ்வொரு இறைவனுக்கும் அவரை விவரிக்கும் துதிகள் உண்டு. உதாரணமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ‘க்ஷிரோ தன்வத்..’ என தொடங்கும் துதி உண்மையில் திருமால் பாற்கடலில் அணிகளுடன் படுத்திருக்கும் காட்சியை விவரிப்பது. அவருடைய முகம், அகம், அமர்ந்திருக்கும் முறை, அணிந்திருக்கும் ஆடை அணிகள் என துல்லியமான விவரனைகள். இவை புலன் நிகர் அனுபவத்தை அளிப்பவை.  தியானத்திற்குரியவை. வேதாந்தம் நிதித்யாசன மந்திரங்கள் என சிலவற்றை வரையறை செய்கிறது.  சங்கரரின் நிர்வாண ஷடகம் இத்தகையது. அடிப்படையில் தியான சுலோகங்களும் நிதித்யாசன மந்திரங்களும்  கவிதைகளே. நிதித்யாசனத்திற்கு உரியவை கருத்தை அடிப்படையாக கொண்டவை எனும் போது படிமத்தை அல்லது காட்சி அனுபவத்தை அடிப்படையாக கொண்ட தியான சுலோகங்கள் நவீன கவிதைக்கு சற்று கூடுதல் நெருக்கமானவை என சொல்லலாம்.

ஆழியின் துளி

துளிகள் கலந்து ஆழி ஆவதை

அறிவர் எல்லாரும்

ஆழி உலர்ந்து

ஒரு துளியாவதை அறிபவனோ

ஆயிரத்தில் ஒருவன்.

கபீரின் இவ்வரிகள் தியான சுலோகமாக கருதத்தக்கது. தேவதேவன், தேவதச்சன் ஆகியோரின் பல கவிதைகளை தியானத்திற்குரியதாக கருத இயலும்.  கபீரின் ‘பிரசவம்’ எனும்  கவிதையை நவீன கவிதை என்றே சொல்லிவிட முடியும்.  புறத்தை அவதானித்து அகவயப்படுத்திக்கொள்கிறது.

வானம்பார்த்து மல்லாந்து

அலையில் மிதக்கும் சிப்பி

தவிப்புடன் காத்திருக்கிறது

சுவாதி மழைத்துளிக்காக

வெறும் வயிற்றில் துளிநீர் விழுந்ததுமே

உடல் புரண்டு முத்தை சூல் கொள்ளப் பயணிக்கிறது

கடல் ஆழத்தை நோக்கி

ரூமியின் ஒரு கவிதையில் உள்ள வரிகள் தேவதச்சனின் ஓரு கவிதையில் ஷூ லேஸ் கட்டும் குண்டு பெண்மணியை நினைவுப்படுத்தியது. ‘அவ்வுலகும்/ இவ்வுலகும்/ தொட்டு உறவாடும்/ வாயிலின் வழியாக/ மனிதர்கள் பயணித்தவண்ணம் இருக்கின்றனர்./ வட்டவடிவான அவ்வாயிலோ/ திறந்து கிடக்கிறது இப்போது/ துயிலச் சென்றுவிடாதே மீண்டும்.’

உறக்கச்சடவு என்பது விழிப்பு நிலைக்கும் கனவு நிலைக்கும் இடையில் நொறுங்கிக்கொண்டிருக்கும் சிறிய மேடை. இணை பிரபஞ்சங்களுக்கு இடையிலான  வாயில் உறைவதற்கு முன்னாலான நீர்மை நிலை.

கவிதையைப் பற்றி சொல்வதற்கு கருத்துக்களை சார்ந்திருப்பதை விட கவிதைகளே உகந்தது. ஒரு கவிதையே மற்றொரு கவிதைக்கான திசை சுட்டி. ஆகவே கவிதை குறித்தான கட்டுரையில் அதிக கவிதைகளை மேற்கோள்காட்டுவது இயல்பானது

3

கவிதையின் பேசுபொருள் மற்றும் தன்மை சார்ந்து தோராயமாக ஆன்மீக கவிதைகளை மறைஞான கவிதை, மெய்யியல் கவிதை, விழிப்புணர்வு நிலை கவிதை (mindfulness) ஐக்கிய வேட்கை கவிதை மற்றும் கண்டன கவிதை என ஐந்தாக வகுக்கலாம். மெய்யியல் கவிதைக்கு சிறந்த உதாரணம்  ‘இது’ எனும் தாவோ கவிதை. கிட்டத்தட்ட தத்துவ கோட்பாடு இங்கு கவிதையாக உருகொள்கிறது. சாமான்ய மொழியில் செல்லும் போது ‘இதைப் பின் தொடர்கையில் இதற்கு முதுகு இல்லை

இதை எதிர்கொள்கையில் இதற்கு முகம் இல்லை’

எனும் பயன்பாடு வழியாக கவித்துவமான ஆதிமொழிக்குள் வழுக்கி செல்கிறது. இதுவே இதை கவிதையாக்குகிறது.

இது

பார்த்தாலும் இதைப் பார்க்க முடியாது

இது உருவத்திற்கும் சிறியது:

கவனித்தாலும் இதைக் கேட்க முடியாது;

இது ஒலியிலும் மெல்லியது;

ஊகிக்கலாம் ஆனால் தொட்டுவிட முடியாது;

இது, உணர்வுகளுக்கு அடியில் உள்ளது;

மேலான பொருட்கள்

இவைகள்தான் என்று வரையறை

செய்வதற்குள் தப்பிவிடுகின்றன.

மேலும் இவை கலந்து ஒற்றைப்புதிராய் உள்ளது

இது எழும்போது அங்கே ஒளியில்லை

இது விழும்போது அங்கே இருளில்லை

இது விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட

ஒரு தொடர்ச்சியான மெல்லிழை

வெளிப்பட முடியாத உள்வலை

வடிவமில்லாதது இதன் வடிவம்

ஒன்றுமில்லாதது இதன் உருவம்

மௌனம் இதன் பெயர்;

இதைப் பின் தொடர்கையில் இதற்கு முதுகு இல்லை

இதை எதிர்கொள்கையில் இதற்கு முகம் இல்லை

இதற்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை

போனதைப் புரிந்துகொள்ள இருப்பதைக் கவனியுங்கள்

ஆக உங்களுக்கு இயற்கை வழியின்

தொடரைப் பிடிக்க முடியும்

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்

என்று சற்று உணர்ந்து பாருங்கள்

இதுவே இதன் ஞானரசம்

விழிப்புணர்வு நிலை கவிதைக்கு சிறந்த உதாரணம் ஜென் மற்றும் வேதாந்த கவிதைகள்.  போகன் மொழியாக்கம் செய்துள்ள சீன கவிதைகள் நல்ல உதாரணம்.

லஸ்டர் கணவாயில் இரவு மழை..

பள்ளத்தாக்கு நதியின் வெற்றிடத் தெளிவைத் தகர்த்துக்கொண்டுமழை உள்ளே வருகிறது.கூதல் காற்று கிசுகிசுப்புகள் இரவின் பின்பகுதியில் தொடக்கம்..பத்தாயிரம் முத்துகள் ஒரே தட்டில் விழுந்து ஒலி எழுப்புகின்றனஒவ்வொன்றின் ஒலியும் என் எலும்புகளைத் துளைக்கும் துல்லியம்.நான் கனவில் என் தலையைச் சொரிகிறேன்எழுந்து விடியும்வரை கூர்ந்து  கேட்கிறேன்.ஒவ்வொரு சப்தமும் தோன்றுவதை,மறைவதை..

என் வாழ்க்கை முழுவதும் நான் மழையைக் கேட்டிருக்கிறேன்என் முடி இப்போது வெளுத்திருக்கிறது.இருந்தாலும் வசந்த கால நதி மீது பெய்யும்இரவு மழையை நான் அறிந்திருக்கவில்லை.

இக்கவிதையில் எப்போதும் இருப்பவற்றை விழிப்படைந்த மனம் நோக்கும்போது ஏற்படும் திடுக்கிடலை  பதிவு செய்கிறது. ஒருவகையில் கவிதை கதை இன்னும் சற்று விரிவாக சொல்வதானால் கலை, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவை  கூட இத்தகைய அகம் விழிக்கும் தருணங்களால் ஆனதே. ஆர்கிமெடீஸ் தத்துவம், கனவில் தோன்றிய பென்சீன் வடிவம், நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் பழம் என பல உதாரணங்களைச் சொல்ல முடியும். சட்டென வேறொரு நிதர்சனத்தில் விழித்தெழுவது.

பொருள்முதல்வாதிகள் ஒட்டுமொத்த மானுட வரலாறையும் புறவயமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தருணங்களாக காண்பதற்கு மாற்றாக கருத்துமுதல்வாதிகள் ஒட்டுமொத்த மானுட வரலாறையும் இத்தகைய விழிப்புணர்வின் தருணங்களாக மட்டும் காண முடியும். ஆதி மொழி என்பதே பிரபஞ்சம் தங்களுக்குள்ளாக உரையாடிக்கொண்டிருக்கும் மொழி. விழித்தெழும் மனம் அந்த மொழியையும் உரையாடலையும் கவனிக்கத்தொடங்குகிறது. உரையாடத் தொடங்குகிறது. தானறிந்த மொழியில் அதை பிரதிசெய்ய மானுட மனம் யத்தனிக்கிறது.

கவி காளிதாசனின் நாக்கில் அன்னை எழுதியது முதல் மூங்கையான் கவிஞனானான். அன்னையென்பது சக்தி, பிரகிருதி, கட்டற்ற இயற்கையின் வடிவம். சாமான்ய மொழியில் உழன்றவனை ஆதி மொழி நோக்கி விழிக்க செய்தாள் அவள். சூரிய ஒளியில் ஒளிரும் ஒற்றை புழு நீடுழி வாழ்க எனும் செய்தியை எப்படி ஜெயமோகனுக்கு சொல்லியிருக்க இயலும்? கவி ஆதிமொழி வழியாக சொல்லின்மையின் அனுபவத்தை கடத்த முயல்கிறார்.

போகன் மொழியாக்கம் செய்த மற்றோரு கவிதை அன்றாடத்தின் உறைகணம் அளிக்கும் திறப்பைச் சொல்கிறது.

ஏரியைக் கடந்து செல்லுதல்.

ஒரு மீனவன் தனது படகை வெகுதூரம்ஏரியினுள் ஓட்டிச் செல்கிறான்.எனது முதிய கண்கள் அவன் வழியைக் கடைசிவரை பின் தொடர்கின்றன.காட்சிக்குள் துல்லியமாக அவன் வருவதும் போவதுமான நெசவை..

பிறகு இது வினோதமடைகிறதுசட்டென்று அவன்  நாணலின் மீது சம நிலையுடன் நிற்கும்ஒரு நீர்ப்பறவை ஆகிவிட்டான்

நித்ய சைதன்ய யதியின் ஒரு கவிதையை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

காலைப்பனியை நான் முத்தமிடுவதில்லை

நீ ஒரு மலர்

வண்டெதுவும் முத்தமிடாத  மலர்

நீ ஒரு பாடல்

மறையக்கூடிய உதடுகளால் இசைக்கப்படாத பாடல்

என் அகத்தை தூய்மையாக்கும்

இறைகூறும் இரகசியம் நீ

பேரின்பப் பரவசம் நல்கும்

இன்னிசைப் பாடல் நீ

நிலவை நான் கைகளில் அள்ளுவதில்லை

காலைப்பனியை முத்தமிடுவதுமில்லை

உன்னை என் கனவுகளில் காண்பதும்

நிலைபேற்றின் இன்னிசையை என

உன்னிடம் அன்பு பாராட்டுவதும் ஒழிய

வேறொன்றையும் நான் விழையவில்லை

 

கால்களை சேறாக்கிக் கொள்ளாமல்

மண்ணில் நடக்கும் ரகசியத்தை

உன்னிடமிருந்து கற்கவேண்டும் நான்

 

இக்கவிதையின் இறுதிவரிகளை

‘அவன்

வனத்தில் நுழையும்போது

புற்கள் நசுங்குவதில்லை

நீரில் இறங்குகையில்

சிற்றலையும் எழுவதில்லை’ (பெயரற்ற யாத்ரீகன், ஜென் கவிதைகள், தமிழில் எம்.யுவன்) எனும்  ஜென் கவிதையுடன் சேர்த்து வாசிக்க இயலும்.

மறை ஞான கவிதைகள் பண்பாட்டு கூறுகளில் இருந்து சில குறியீடுகளை பயன்படுத்தி கவிதையை சமைத்துக்கொள்ளும். மீமொழியின் கூற்றுகளை பயன்படுத்திக்கொள்ளும்.  கபீரின் இந்த கவிதையை உதாரணமாக சொல்லலாம்.

வெண்பட்டாடை

மெல்லிய

மிக மெல்லிய வெண்பட்டாடையை

அவன் நெய்கிறான்

அவனுக்கு வாய்த்த ஊடு இழை எது?

பாவு இழை எது?

ஆடையை நெய்ய

தேர்ந்த நூல் எது?

இங்கலத்தை தறியாக்கி

பிங்கலத்தை கயிறாக்கி

சூக்குமத்தை நூலாக்கி

வெண்பட்டாடையை

அவன் நெய்கிறான்

எண்ணிதழ் தாமரையைத்

தகளியாக்கி

ஐம்பூதங்களையும் முக்குணங்களையும்

நூல்புரியாக்கி

அவன் ஆடை நெய்கிறான்

தறியை அசைத்தசைத்து

ஒவ்வொரு நூலையும் சரிபார்த்து

அன்னையின் கருப்பையில் பத்து மாதங்கள்

நெய்கிறான்

எடுத்தணிந்த தேவரும் முனிவரும்

மனிதரும் அதைக் கறையாக்கி நிற்க

சேவகன் கபீரோ

அழுக்கின்றி

அப்படியே வைத்திருக்கிறான்

அந்த வெண்பட்டாடையை.

இடம், பிங்கலம், சுழுமுனை போன்ற தாந்திரிக குறியீடுகள் இக்கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனிக்க முடியும். மற்றொரு கவிதையில் கபீர் பிரபஞ்சமளாவிய சித்திரத்தை அளிக்கிறார்.

‘நானோ

எனது தறியின்

ஊடு இழைக்கான நூல்களைப்

பிணைத்துக்கொண்டிருந்தேன்

பூமியையும்

ஆகாயத்தையும் பூட்டி

அவன் தறியைச் செய்கிறான்

சூரியனையும் சந்திரனையும்

சட்டங்களாக்கி

ஒருசேர

அசைக்கிறான்.’

 

திருமந்திரம், சித்தர்பாடல்கள் போன்றவை இந்த வகைப்பாட்டிற்கு உதாரணமாக சொல்லலாம். அக்கம்மாதேவியும்

‘அத்தை மாயை

மாமன் பிறவி

மூன்று இளைய மைத்துனர்கள் புலி போன்றவர்கள்

நான்கு நாத்திகள்

கேள் தோழி/

ஐந்து மூத்த மைத்துனர்களுக்குத் தெய்வமில்லை

ஆறு ஓரகத்திகளை மீறமுடியவில்லை

தாயே

ஏழு பணிப்பெண்கள் என்னைக் காவல் காக்கிறார்கள்

கர்ம வினையான என் கணவனின் வாயில் அறைந்து

சிவனோடு சோரம் போவேன்

மனமென்ற சுகப் பிரசாதத்தால்

சிவனோடு கலந்து அனுபாவத்தைக் கற்றேன்

ஸ்ரீசைல மலையின் உடலழகிய

சென்னமல்லிகார்ச்சுனனைக்

கூடுகையில்

நல்ல கணவனைச்

சேர்ந்திருக்கிறேன்.’

நேரடி பொருளுக்கு அப்பால் பல மறைபொருளை கொண்டவை. அண்மைய காலத்தில் வந்த சிறந்த மற்றும் சிக்கலான மறைஞான கவிதை காவியம் அரவிந்தரின் சாவித்திரி. மறைஞான கவிதைகளின் மிக முக்கியமான இயல்பு அக – புற ஒத்திசைவு. அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ளவற்றை இணைவைத்தல். இயற்கைக்கும் மனிதனுக்குமான (அப்படிச்சொல்வதே அபத்தமாக தோன்றும்) நீட்சியை, உறவை, ஒத்திசைவை பேசுபவை. இவை நவீன கவிதைகளிலும் தொடர்வதை கவனிக்க முடியும்.

‘ஐக்கிய வேட்கை கவிதை’ ஆன்மீக கவிதைகளில் இவையே மிகப்பெரும்பாலானவை. உணர்ச்சிகரமானவை. காதலர்-கணவர், தோழர், அடிமை,  தாய் – தந்தையர், பிள்ளை போன்ற பாவங்களை சூடிக்கொள்பவை. நாயக நாயகி பாவம் , தாஸ பாவம் ஆகியவையே பெரும்போக்கானவை. பொதுவாக இக்கவிதைகள்  மூன்று உணர்வு நிலைகளில் செயல்படுவதை கவனிக்க முடியும். பெருங்காதலின் காத்திருப்பை தவிப்பை சொல்பவை முதல் நிலை, அடைதலின், இயையதலின் உவகையை சொல்பவை இரண்டாம் நிலை, அடைந்தது கைவிட்டுபோகும் பிரிவாற்றாமை நிலையை அரற்றுவது மூன்றாம் நிலை.  காம வேட்கையை உன்னதமாக்கி ஆன்மீக அனுபவத்தை அளிப்பவை. தூய காதல் கவிதைகளாக இவற்றை வாசிக்க இடமுண்டு. தமிழில் ஆண்டாள், மாணிக்கவாசகர் காரைக்கால் அம்மையார் ஆகியோர் தமிழின் முதன்மை கவிகள். சூஃபி கவிகளையும் இவ்வரிசையிலேயே வைக்க முடியும்.

பற்றியெரியும் நகரம்

 தீப்பற்றியெரிகிறது!

விறகேதுமின்றி எரியும் அதை

அணைக்கும் சக்தி படைத்த

மனிதன் எவரும் இங்கில்லை

எனக்குத் தெரியும்

அது உன்னிடமிருந்துதான்

பரவியது!

அந்தத் தீ

உலகம் முழுவதையும்

எரிக்கின்றது

அந்தப் பொறி

துவங்கியது

நீரிலிருந்துதான்

எரிய எரிய அது

நீரை அவிக்கின்றது

முடிவின்றி எரியும் அது

கண்ணியர் ஒன்பது பேரையும்

எரிக்கின்றது

அதை அவிக்கும்

நீர் யாருக்கும் அகப்படவில்லை

நகரம் பற்றியெரிகிறது

காவலரோ உறங்குகின்றனர்

அவர்களது கனவில்

அவரவர்களின் வீடுகள்

பத்திரமாய் இருக்கின்றன

ஓ இராமா

உனது நிறங்கள் எரிகின்றன

துடிக்கின்றன.

முடவன்

அறிவை நம்பி இருக்கிறான்

அதை மீறி

அவன் யோசிக்கலாகாது.

அதை எண்ணியே

வாழ்நாள் முழுதும் வீண் போய்விட்டது

உடலோ

தணியாத தாகத்தோடு தவிக்கிறது

பிறர் முன் நடிப்பவனை விடப்

பெரிய முட்டாள்

வேறெவருமில்லை

அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான்.

கபீர் சொல்கிறேன்

ராமனின் கண்களில்

நாம் அனைவரும் பெண்களே

இது கபீரின் கவிதை‌.  ‘ராமனின் கண்களில்

நாம் அனைவரும் பெண்களே’. ஏறத்தாழ இதே வரியை அக்கம்மாதேவி சென்ன மல்லிகார்ச்சுனனுக்கும் மீரா கண்ணனுக்கும் பொருத்திச்சொல்கிறார்கள். மீரா பாடுகிறாள்

போகாதே போகாதே

போகாதே போகாதே என

நின்பாதம் பணிகிறேன்.

நான் உனக்கானவள்.

பக்தியின் பாதை எங்குள்ளது என எவரறிவர்

எங்கு செல்வதென நீயே வழிகாட்டு

என் உடல் பத்தியாகட்டும்,  சந்தனமாகட்டும்.

அது உன்னால் கொளுத்தப்படட்டும்.

வெறும் சாம்பலாக நான் உதிர்ந்த பின்

உன் தோளிலும் மாரிலும் எனை பூசிக்கொள்.

மீரா சொல்கிறாள்- கிரிதரனே என்னிடம் துளி ஒளியுண்டு

எனக்கதை நின்னுடையதுடன் கலக்க வேண்டும்.

‘காதலின் நுனிநாக்கால் தீண்டப்பட்டவனே அறிவான் என் அரற்றலை’ எனும் கபீரின் வாக்கு ரூமிக்கும் அக்கம்மாதேவிக்கும் ஆண்டாளுக்கும் மீராவுக்கும் துல்லியமாக பொருந்தும். இக்கவிதைகள் பெரும்பாலும் கடல், நிலவு பறவை போன்ற பழக்கப்பட்ட அன்றாட படிமங்களை சரளமாக பயன்படுத்துபவை. அவற்றின் ஆற்றல்  முழுக்க முழுக்க உணர்வுநிலையிலிருந்து வருபவை. பெரும் பித்து நம்மைப்பற்றி கொள்ளும். ‘என் உடல் பத்தியாகட்டும்,  சந்தனமாகட்டும்.

அது உன்னால் கொளுத்தப்படட்டும்.

வெறும் சாம்பலாக நான் உதிர்ந்த பின்

உன் தோளிலும் மாரிலும் எனை பூசிக்கொள்.’ என அனத்துகிறாள் மீரா. உன்னை எப்போது காண்பேனோ அப்போது வாரி விழுங்கிவிட வேண்டும் என்றிருந்தேன் ஆனால் நீயோ என்னை முந்திக்கொண்டு என்னை முழுதாக விழுங்கிவிட்டாய் என்கிறாள் ஆண்டாள்1. மேலும் நாளுக்கு நாள் உயிரையும் உண்டு என்னை முழுவதும் உண்டான் என்கிறாள் அவள்2. பதினாறாயிரம் பேர் பாத்திருக்க பொதுவில் மாதவனின் வாயமுதத்தை நீ மட்டும் பருகுகிறாயே அதை நிறுத்து என வெண்சங்கிடம் சினந்து கொள்கிறாள்3. ‘சுகமே படுக்கை பார்வையே அணிகலன்

ஆலிங்கனமே ஆடை முத்தமே ஊட்டம்

காதல் பேச்சு தாம்பூலம்

உணர்ச்சி மோகனம் நறுமணத் தைலம்

சென்னமல்லிகார்ச்சுனனோடு கலத்தல் பரமசுகம் அம்மா!’

என்கிறாள் அக்கம்மா தேவி.

‘வாழ்வைத் துறந்தபோது நான்

கடவுளின் உறைவிடம் ஆனேன்

என்னை நான் எரித்தபோது

என்னவானேன் என சொல்லக்கூடுமோ?

உலகில் அனைவரும் தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள்

ஆனால் என் நண்பனே, நான்

மரணத்தில் எரிக்கப்பட விழைகிறேன்

ஓ மொய்ன், காதலனோடு

இணைவதற்கு உயிரை அளிக்க வேண்டும்

வாழ்வை இழப்பது காதலில்

அடைவதென்றாகும் அக்கணமே’

இவ்வரிகள் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி எனும் சூஃபியின் வரிகள். இவை அனைத்துமே தன்னை இழந்து காதலை பெற விரும்புபவை. சிறிய பாதுகாக்கப்பட்ட சுயமழிந்து பெரிய கட்டற்ற சுயத்துடன் தன்னை தொடர்புறுத்திக்கொள்ளுதல் எனும் நிலையையே இவை சுட்டுகின்றன.

காதலின் வழி

நுட்பமான விவாதமல்ல

பிரளயமே

அங்கு செல்வதற்கான

வாயில்

தங்களது சுதந்திரத்தைப்

பெருவானில் வட்டமிட்டுக்

களிப்பெய்துகின்றன

பறவைகள்

அவை எப்படிப்

பயில்கின்றன பறத்தலை?

அவை விழுகின்றன

அவ்வீழ்தலில்

வழங்கப்படுகின்றன

சிறகுகள்

இது ரூமியின் கவிதை‌. வீழ்தலில் வழங்கப்படும் சிறகு என்பது ஒருவகையில் சரணடைதல் எனும் நிலையை சொல்கிறது. மனிதன் தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் தன்னிச்சையை (freewill) அவனை விட பெரிய ஆற்றலிடம் ஒப்படைப்பதன் வழி விடுதலை அடைகிறான் என்பதே சரணாகதி நிலை. ஆட்கொள்ளுதல் நிகழும்போது அவன் எதற்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஒரு வகையில் இது முழுமையாக அகம் விழித்த தருணமும் கூட.

இழிந்து இழிந்து உய்வடைவது இவ்வகை கவிதைகளின் மற்றொரு பொது இயல்பு.

‘வீடு வீடாகப் போய்க் கைநீட்டி வேண்ட வை ஐயனே

வேண்டினாலும் கொடுக்காதபடி செய் ஐயனே

கொடுத்தாலும் நிலத்தில் விழச் செய் ஐயனே

நிலத்தில் விழுந்தாலும் நான் எடுத்துக்கொள்ளும் முன்பே

நாயை எடுக்கச் செய்

சென்னமல்லிகார்ச்சுனனே.’ என்கிறாள் அக்கம்மாதேவி. அகந்தையை முழுமையாக கடக்க அவள் கண்ட வழிமுறை இது. காரைக்கால் அம்மையார்

‘பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்

இறைவர் எமக்கிரங்கா ரேனும் – கறைமிடற்ற

எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே

எந்தையா வுள்ள மிது⁠’ (அற்புத திருவந்தாதி 23).

எனும் பாடலில் ஈசன் தன் அன்புக்கு மனமிரங்கவில்லை என்றாலும் அவருக்கு ஆட்பட்டவள் என்றவரையில் உவகை கொள்கிறாள். கடவுளை கணவனாகவும் காதலனாகவும் கைக்கொள்வது பெரும் இன்னல். பித்தின் பேரன்பை அவன் புரிந்துகொள்வதில்லை. பாராமுகத்துடன் கடந்து செல்கிறான். ஆனால் இந்த இம்சையே பெரும் சுகமும் கூட.

அந்தவொரு முத்தத்திற்காக

வாழ்வெல்லாம்

வேண்டிக் காத்திருக்கிறோம்

மெய்தீண்டி ஊன் உருகும்

அந்தவொரு முத்தத்திற்காக

 

கடல் அலை

யாசிக்கிறது முத்திடம்

சிப்பியை உடைத்து வெளிவர

எவ்வளவு தீவிர உத்வேகத்துடன்

தேடுகிறது அல்லிமலர்

கட்டுக்கடங்காத

காதலன் ஒருவனை!

 

இரவில்,

சாளரத்தைத் திறந்து

நிலவை அழைப்பேன்

அதன் முகத்தே

என் முகத்தோடு

நெருக்கமாகப் பொருந்த

உயிர்முச்சை எனக்கு வழங்க

 

மொழியெனும் வாசல் அடைபட்டு

காதலின் சாளரம் திறக்கட்டும்

நிலவுக்கு வழி

வாசல் அல்ல

சாளரமே

 

இது ரூமியின் கவிதை. பேரனுபவத்திற்கான, பெருங்காதலின் தீண்டலுக்கான காத்திருப்பின் தகிப்பை சொல்கிறது. கவிதை உள்ளத்திலிருந்து பெருகியபடி இருக்கிறது.

க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியின் ஒரு கவிதை வாசிக்கும்போது மனம் அமைதியையும் ஆறுதலையும் உணர்கிறது. அருகிருந்து தேற்றும் நண்பனின், காதலரின் குரல். கவிதையில் சிடுக்காக ஏதுமில்லை. கவித்துவமான படிமங்களோ புதிய திறப்புகளோ இல்லை. ஆனாலும் அதன் எளிமையின் வலு வாசகரை ஆட்கொள்கிறது.

 

என்னிடம் வருக நண்பனே

எப்போதும் உண்மையாயிருப்பேன்

நீ என்ன கொண்டு வந்தாலும்

அதை வாங்கிக்கொள்வேன்… நான்.

 

நீ உளம் மகிழ்ந்து

அற்புதத்தைப் பார்க்க விரும்பினால் அருகில் வருக:

தோட்டமாய், மலர்விரிப்பாய், மலராய்

இருக்கிறேன் நான்.

 

உன் பாவங்களை நினைத்து

இதயம் வருந்தினால் என்னிடம் வருக

நோய்கொண்ட இதயங்களின்

மருத்துவன் நான்.

 

பலிபீடத்தில் இரகசிய இடங்களில்

வணங்கப்படுபவன் மட்டுமல்ல:

குடிகாரர்களின் இசைக்கலைஞன் நான்,

மதுவறைகளில் மதுஊற்றுபவன் நான்.

 

மடாலயங்களின் ஏகாந்தத்தில்

எனைத் தேடுபவனே வெளியே வருக

சந்தை வெளியில் உனை அடைந்திட

அலைந்து திரிகிறேன் நான்.

 

ஓட்டுபோடப்பட்ட சூஃபி மேலாடைக்கும்

பொன்மகுடத்துக்குமான ஆசையை விட்டுவிடு

என் தொப்பியையும் மேலங்கியையும்

உனக்கு வழங்குகிறேன் நான்.

 

உன் இயலாமையைக் கண்டு

மனம் தளரவோ கலங்கவோ வேண்டாம்…

ஒவ்வொரு இடத்திலும் துணையாகவும்,

இதயத்தில் அன்பாகவும், இருக்கிறேன் நான்.

 

துன்பத்துடன் உன் இதய ரகசியங்களை சொல்ல வேண்டாம்

உன் ஆத்மாவின் தனித்த அறையில்

அதற்குத் துணைநின்ற சதிகாரனாக

இருக்கிறேன் நான்.

 

உனைச் சுற்றி வட்டங்களை

எவ்வளவு காலம் வரைவாய்?

மையப் புள்ளியாக அமைக

உனைச் சுற்றி வருவது நான்..

 

நீ ஒரு முத்தென மயங்கும் களிமண்: பயனற்றது!

தெய்வீகப் பெருங்கடலின்

விலைமதிப்பற்ற முத்தை

கண்டுதருகிறேன் நான்!

 

காதலின் நெருப்பால் எரிக்கப்பட்ட

மொய்னின் உலர்ந்த விறகான உடல்

ஒரு தீப்பொறியாக மாறியது

அவர் தன்னிடம் சொன்னார் நெருப்பாகிறேன் நான்!

நாயக நாயகி பாவம் என்பது ஓருவகையில் சங்க இலக்கியத்தின் தலைவன் தலைவி பாவத்துடன் ஒப்பிடத்தக்கது. நாயக நாயகிபாவமாக இவ்வுணர்வு மேல்நிலையாக்கத்தை அடைகிறது. இந்த நாயக நாயகி உறவு தலைகீழாகி பக்தன் ஆணாகவும் கடவுள் பெண்னாகவும் ஆவது அரிது. அபிராமி அந்தாதியும் சவுந்தர்ய லகரியுமே சட்டேன நினைவுக்கு வருகிறது.

 

என் பிதற்றல்களெல்லாம்  ஜபமாகட்டும்.

என் செய்கைகள் எல்லாம் உன்னை வழிபடுவதற்கான முத்திரைகளாகட்டும்.

என் நடையெல்லாம் உன்னை வலம் வருவதாகட்டும்

என் உணவெல்லாம் உன் வேள்விப் படையலாகட்டும்

நான்  படுத்துக்கொள்வது உன்னை வீழ்ந்து வணங்குவதாக இருக்கட்டும்.

இன்னும் சுகமாக, எனது தனி முயற்சி ஏதுமின்றி எவையெல்லாம் செய்கிறேனோ அவை எல்லாம் உனை வணங்கும் முறையாகட்டும்.

-சவுந்தர்ய லகரி 27.

சங்கரரின் சவுந்தர்ய லகரியில் வரும் இக்கவிதை ஒரு மந்திரமும் கூட. எளிமையும் செறிவும் ஒரு சேர உள்ள அரிய நிலை. முழு விழிப்படைந்த நிலையில் செய்யப்படும் செயல்யாவும் இறையின் பொருட்டே என்றாகிறது. வேதாந்தம் நமக்கு நிகழும் அனைத்தையும் ஈஸ்வர பிரசாதம் என நன்மை தீமை எனும் இருமைக்கு அப்பால் முழுமையாக பணிந்து ஏற்கச்சொல்கிறது. புரியும் அனைத்து செயல்களையும் ஈஸ்வர அர்ப்பணம் என கர்ம பலனை துறந்து நடக்க சொல்கிறது. இக்கவிதை அந்நிலைக்கான இறைஞ்சுதல்.

இக்கவிதைகள் நேரடியானவை, எளிமையானவை, உயிர்ப்புடைவையும் கூட. இந்த குரல்களின் இன்றைய நீட்சியை ஸ்ரீவள்ளி கவிதைகளிலும் ஜெயமோகனின் நீலத்திலும் காண முடியும். நீலத்தை நீள் கவிதையாக அல்லது வசன கவிதையாக கருதுவது உகந்தது. ‘ஐக்கிய வேட்கை’ கவிதைகள் வேதாந்த அனுபவத்தை அடித்தளமாக கொண்டவை. பிரம்மத்தை சத்தியமாக கண்டு பிற அனைத்தையும் மாயையாக காணும் நோக்கு அத்வைத வேதாந்தத்தினுடையது என்றால் விசிஷ்டாத்வைதம் மாயை என ஒதுக்கவதை மறுதலிக்கிறது. உருவும் அருவும் இறையின் வடிவமே என்கிறது. மெய்யியலுக்கும் கலைக்கும் இடையிலான உறவை ஆராய்வதற்கு விசிஷ்டாத்வைதம் ஒரு நல்வாய்ப்பை அளிக்கிறது. மெய்யியலுக்கு எதிர்வினையாக அதையொட்டி கலை ஒழுகுவது ஒருவகை என்றால் கலை ஒரு மெய்யியல் பள்ளிக்கான விதையாக ஆவது கலையின் மகத்துவத்தை பறைசாற்றுவது. ஆண்டாளின் வழியாகவும் ஆழ்வார்களின் வழியாகவும் பெருகியோடிய கவிதையே ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கு அடிப்படை.

மீரா,  கபீர், அக்கம்மாதேவி என அனைவருக்கும் உள்ள மற்றொரு பொதுத்தன்மை என்பது அவர்கள் கலகக்காரர்களும் கூட. வைதிக மரபு, சடங்குகள், தகுதிகள் சார்ந்து விடாமல் கேள்விகளை எழுப்புபவர்கள். தெலுங்கு கவி வேமனரின் பாடல்கள் பெரும்பாலும் இவ்வகையிலானவை.  ‘எச்சில் எச்சில் என்று சொல்லும் அந்த வாயினாலேயே வேதங்களைப் படிக்கும் பைத்தியக்காரர்களே! யோசித்துப்பார்த்தால், வாயிலிருந்து வரும் அதுவும் எச்சில் தானே! விஸ்வதாபிராமா கேளடா வேமனை’.

நம் சித்தர் பாடல்களிலும் இத்தகையத்தன்மை உண்டு. ஆன்மீகத்தை அமைப்பாக்கம் செய்வதற்கு எதிரான கலகக்குரல்களாக இக்கவிதைகள் சமூக முக்கியத்துவம் பெறுகின்றன. இவர்களுடைய கலகம் பெரும்பாலும் செரிந்த அக வாழ்விற்கு தடையாக புற வாழ்வு உள்ளது எனும் உணர்விலிருந்து எழுகிறது. உருகி உருகி காதல் மொழி பேசும் இவர்களால் கடுமையாக நிராகரிக்கவும் வெறுத்து ஓதுக்கவும் இயல்வது சுவாரசியமான முரண்தான். பட்டினத்தாரின் கவிதைகளில் உள்ள பெண் வெறுப்பை நினைவில் கொள்ளலாம். ஐக்கிய வேட்கை கவிதைகளும் மறைஞான கவிதைகளும் நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் அதன் மறுபக்கம் கண்டன கவிதைகள். இந்த முரணியக்கத்தை நவீன  கவிதைகளுக்கும் நீட்டித்து காண முடியும். கண்டன கவிதைகள் உரக்க ஒலிப்பவை, பொருத்தமற்ற உணர்வுநிலை என தோன்றினாலும் கூட ஆன்மீக கவிதைகளின் இன்றியமையாத பகுதியாக காண வேண்டியுள்ளது. கவிஞரின் அகம் முடிவற்ற ஊசலில் ஆடிக்கொண்டிருப்பதை உணர்த்துகிறது.

 

சந்தனத்தை அறுத்துத் துளைத்துத் தேய்த்தால்

துக்கத்தில் வாசனையைத் துறக்குமா?

தங்கத்தைத் தட்டியுருக்கினால்

வேதனையில் வெந்து களங்கப்படுமா?

கணுக்கணுவாக வெட்டி கரும்பைக் கொணர்ந்து

செக்கிலரைத்து வேகவைத்து

பாகாக்கி சர்க்கரை செய்தால்

நொந்தேன் என இனிப்பதைத் துறக்குமா?

முன்னர் நான் செய்த இழிவுகளை

முன்னிலைப்படுத்தினால் உனக்கே கேடு!

என் தந்தை சென்னமல்லிகார்ச்சுனனே,

கொன்றாலும் சரணமெனாமல் உயிர்த்தரிக்க மாட்டேன்.

 

இது அக்கம்மாதேவியின் வசனம். முந்தைய இழிவுகளும், வாழ்வின் அன்றாட இக்கட்டுகளும் வருத்திய பின்னும் கூட கவிதையையும் சென்ன மல்லிகார்ச்சுனனையும் இறுக பற்றிக்கொள்கிறாள். தன் நிலைக்காக எவரையும் பழிக்கவில்லை. தன் இயல்பில் முழுக்க லயித்துக்கிடப்பதே சுகம். கண்டன போக்கிலிருந்து அரவணைக்கும் மன இயல்பிற்கு கவிதை பயணிக்கிறது.

ஆன்மீகவாதிகளின் கவிதை வெளிப்பாட்டிற்கும் கவிஞர்களின் ஆன்மீக வெளிப்பாட்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன என்பதை ரூமியின் ‘கொடி மீதல்ல’ கவிதையை கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என பார்க்கலாம். ஆன்மீகவாதி சொல்லின்மையை இலக்காக்கிக்கொண்டு சொற்களின் ஊடாக பயணிக்கிறார். உரிய உயரத்தை எட்டியதும் அவர் சொற்களை உதிர்த்து மேலெழெவார். கவிஞருக்கு கவிதை உபாசனை மார்க்கம் மட்டுமல்ல உபாசனை மூர்த்தியும் கூடதான். நாத யோகம், லய யோகம் போல ஆதி மொழி வழியாக பிரபஞ்சத்துடன் ஒன்றுவதை கனவு காண்கிறார். ரூமியின் இந்த கவிதை சொற்களின் நிறைவின்மையை சுட்டுகிறது.

 

கொடி மீதல்ல

 

எனது வார்த்தைகளை

வாங்குபவர்களுக்காக

விழைந்த காலம்

ஒன்றுண்டு

 

இப்போதோ

வார்த்தைகளிலிருந்து என்னை

யாரேனும் விடுவிக்கமாட்டார்களா

என ஏங்குகிறேன்

 

வசீகரமும் ஆழமும் கொண்ட

படிமங்கள் பலவற்றை

நான் புனைந்திருக்கிறேன்

ஆபிரஹாமைப் பற்றியும்

பிரதிமைகளுக்கு பெயர்போன

ஆபிரஹாமின் தந்தை அஜாரைப்

பற்றியுமான காட்சிகள்

நான் புனைந்தவற்றின் மீது

மிகவும் சலிப்புற்றேன்

 

பின்னர்

உருவமற்றதொரு படிமம் வந்தது

விட்டுவெளியேறினேன் நான்

இனி வேறொருவரைத் தேடிக்கொள்ளுங்கள்

படிமங்கள் வடிவமைக்கும் வேலையிலிருந்து

விலகிவிட்டேன்

 

ஒருவழியாகப்

பித்துநிலையின் சுதந்திரத்தைப்

புரிந்துகொண்டேன் நான்

 

ஏதோவொரு படிமம் வருகிறது

அலறுகிறேன் நான்

‘வெளியே செல்!’

சிதறி மறைகிறது அது.

 

காற்றுக்குக் காதல்

கொடி தாங்கும் கம்பத்தின் மீதே

கொடி மீதல்ல

காதலின் சாரம்

அதுவே

 

நவீன கவிதைகளில் ஆன்மீகத்தை பேசியவர்கள் என பாரதி தொடங்கி  ந. பிச்சமூர்த்தி, பிரமிள், தேவதேவன், ஸ்ரீ வள்ளி என ஒரு வரிசையை சுட்டிக்காட்ட இயலும்‌. நவீன கவிதை  தன்னை ஆன்மீகத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முயல்கிறது. அதன் வழி பல புதிய திசைகளில் பல்வேறு சாத்தியங்களுடன் தொடர்ந்து பயணிக்கிறது. இது ஒரு இன்றியமையாத இயல்பான மாற்றம். எனினும் ஆன்மீக கவிதைகள் ஓரு சரடாக எப்போதும் உயிர்த்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

 

  • சுனில் கிருஷ்ணன்

 

  1. வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று

ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்

பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே

 

  1. கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான்

 

நாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான்

 

காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு

 

ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே.

 

  1. பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன்

வாயமுதம் பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்

சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே

 

 

கட்டுரைக்கு உதவிய நூல்கள்

 

தாகங்கொண்ட மீனொன்று, ரூமி, தமிழில்- என். சத்தியமூர்த்தி.

 

புன்னகைக்கும் பிரபஞ்சம்- கபீர்- தமிழில் செங்கதிர்

 

மூச்சே நறுமணமானால் – அக்கம்மாதேவி- ஆங்கில மொழியாக்கம் வினய சைதன்யா. தமிழில் – பெருந்தேவி. (விரைவில் காலச்சுவடு வெளியீடாக வெளிவர உள்ளது)

 

பெயரற்ற யாத்ரீகன் – ஜென் கவிதைகள்- தமிழில் எம்.யுவன்- மறுபிரசுரம் விரைவில் நூல்வனம் வெளியிட உள்ளது.

 

வேமனர் மாலை- தமிழில் மதுமிதா. தமிழினி.‌

 

Mira bhai ecstatic poems- மூலத்திலிருந்து ஆங்கிலம் ராபர்ட் ப்ளை. தமிழில் – சுனில் கிருஷ்ணன்.

 

 

இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள், தாவோ தே ஜிங், லாவோசி. தமிழில்- மலர்ச்சி பிரபாகரன். வெளியீடு- எழுத்து.

 

 

https://www.jeyamohan.in/1333 – சிருஷ்டி கீதம் மொழியாக்கம்.

 

இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம். க்ஷிதி மோகன் சென். சுனில் கிருஷ்ணன், சூக்தம் மொழியாக்கம் ஜடாயு.

 

Shri aurobindo or adventurer of consciousness – satprem.

 

நாச்சியார் திருமொழி – dravidavedam.org

 

அற்புத திருவந்தாதி காரைக்கல் அம்மையார்

 

The saundarya lahari- Nitya chatanya yati commentary.

 

கவிதைகள்

 

க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி கவிதைகள் தமிழில் சுபஸ்ரீ.

 

நன்றி

பெருந்தேவி, போகன், ஜா. ராஜகோபால், சுந்தர வடிவேலன், மதுமிதா.

 

சுனில் கிருஷ்ணன

சுனில் கிருஷ்ணனின் “விஷக்கிணறு” வெளியீடு

நாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனில் கிருஷ்ணன்

மீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்

வெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்

உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்

நரம்பில் துடித்தோடும்  நதி – சுனில் கிருஷ்ணன்

மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்

ஒரு துளி நீலம்– சுனில் கிருஷ்ணன்

ராஜ் கௌதமனின் அயோத்திதாசர் ஆய்வுகள்- சுனீல் கிருஷ்ணன்

நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்

சாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்

எனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்

செட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்

காந்தியும் ஆயுர்வேதமும்- சுனீல் கிருஷ்ணன்

தன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை

விஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்

சுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்

காந்தி எல்லைகளுக்கு அப்பால் -சுநீல் கிருஷ்ணன்

விஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-2

விஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-1

விழா-சுனீல் கிருஷ்ணன்

வெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்

விஷக்கிணறு- சுனீல் கிருஷ்ணன்

எம்.வி.வியின் காதுகள்: சுனீல் கிருஷ்ணன்

முடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு-சுனீல் கிருஷ்ணன்

அழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்

நஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்

சுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார் விருது

சுனில்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை- கிறிஸ்டி

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -5

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -4

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1

சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’

மனம்வெளுக்க காத்திருத்தல் – சுனில் கிருஷ்ணன்

புதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனில் கிருஷ்ணன்

சுனில் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்

உருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்

ஏற்காடு இலக்கியமுகாம் – சுனில் கிருஷ்ணன்

பனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்

ஊட்டி காவிய முகாம் – சுனில் கிருஷ்ணன் -2

ஊட்டி காவிய முகாம் – சுனில் கிருஷ்ணன் -1

சுனில் கிருஷ்ணன்

 

 

முந்தைய கட்டுரைகல்குருத்து – கடிதங்கள் 6
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை