நூல்வேட்டை

கொள்ளு நதீம் இணையப்பக்கம்

வணக்கம் ஜெ

தாங்கள் கட்டுரைகளில் முன்வைக்கும் நூல்களை சக்திக்கு இயன்றவரை  வாங்கிக் கொள்கிறேன், பிறவற்றை நூலகங்களில், நண்பர்களிடம் இரவல் பெற்றுக் கொள்கிறேன். அவற்றில் பல இன்று அச்சில் இல்லாதவை என்று சென்னையில் இருக்கும் புத்தக கடைகள் கூறிவிடுகின்றன. பிற எழுத்தாளர்கள், முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் நூல்களை மீளவும் படிப்பது (மறுபதிப்பு கண்டாலொழிய) சாத்தியமில்லை என்றே படுகிறது.

குறைந்தபட்சம் சமகால எழுத்தாளர்களின் நூல்களாவது எப்பொழுதும் கிடைக்கும்படியாக இருப்பது அத்தியாவசியம் என்று உணர்கிறேன்.தஙக்ளின்  கீழ்க்கண்ட நூல்களான ’எழுதியவனைக் கண்டுபிடித்தல்’ உரையாடல், ‘மேற்குச் சாளரம்’ கூட நான் அறிந்தவரை இப்பொழுது எங்கும் கிடைப்பதில்லை. தங்களின் நூல்களை பல பதிப்பகங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியிட்டுள்ளன. குறைந்தபட்சம் விக்கிபீடியாவில்கூட அவை முழுமையான பட்டியலாக இல்லை.   எஸ்.ராமகிருஷ்ணன் முன்பு (தன்னுடைய அட்சரம் இதழில்) எழுதியிருந்த ‘அதே இரவு – அதே வரிகள்’கூட  உயிர்மையோ யாரோ வெளியிட்டிருந்த நூலும் இப்பொழுது கிடைப்பதில்லை

நோபல் பரிசு அறிவிக்கப்படும் போதெல்லாம் இந்த நூல் நினைவுக்கு வரும். அதாவது நான் சொல்ல வந்த விஷயம், குறைந்தபட்சம் இணையத்திலாவது எங்கேனும் இந்த நூல் கிண்டில் வடிவில், மின்னூல் வடிவில் கிடைக்கும் வழியை எழுத்தாளர்கள் பரிசீலிக்க வேண்டும் என்பதே,

நன்றி

கொள்ளு நதீம்

9442245023 ஆம்பூர்

அன்புள்ள கொள்ளு நதீம்,

தமிழில் இரண்டு முக்கியமான படைப்பிலக்கியவாதிகளின் பெயர்களைச் சொல்கிறேன். எம்.எஸ்.கல்யாணசுந்தரம், ரசிகன். இருவரின் முக்கியமான படைப்புகளின் முதல்பதிப்புக்குப் பின் ஐம்பதாண்டுகள் கழித்து அடுத்த பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பு விற்றுபோக ஐந்தாண்டுகள் ஆயிற்று. கிடைக்காமலாகி பத்தாண்டுகளாகின்றன. இன்னொரு ஐம்பதாண்டுகளாகும் அடுத்த பதிப்புக்கு.

சமீபத்தில் பதிப்பாளர் மணிகண்டன் [நூல்வனம்] என்னைச் சந்தித்தபோது கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகளை வெளியிடப்போவதாகச் சொன்னார். அவை மறுபதிப்பு கண்டு முப்பதாண்டுகள் ஆகிவிட்டன. இப்படி இன்னும்  மறு அச்சு வராத பலநூல்கள் உள்ளன. குறிப்பாக அல்லையன்ஸ், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் போன்ற இன்று செயலூக்கத்துடன் இல்லாத பதிப்பகங்கள் பதிப்பித்த நூல்கள் மறுபடி வருவதே இல்லை. சாகித்ய அக்காதமி, நேஷனல் புக்ஸ்டால் வெளியிடும் நூல்கள் முப்பது நாற்பது ஆண்டுகளாகியும் மறு அச்சுக்கு வருவதில்லை.

இன்றைய சூழலில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் ஏராளமானவை. அச்சில் நூல்கள் தொடர்ச்சியாக கிடைத்துக்கொண்டிருப்பதென்பது சாதாரணமான விஷயம் அல்ல. இங்கே ஒரு பேசப்படும் நூலையே முந்நூறு பிரதிகள்தான் அச்சிடுகிறார்கள். அறியப்படாத நூல்களை மிகக்குறைவாகவே அச்சிட முடியும். அச்சிட்ட பிரதிகள் விற்பனையானபின் மீண்டும் ஒரு தேவை ஏற்பட்டாலொழிய அதை அச்சிடுவது பதிப்பகத்தாருக்கு பெரும் சுமை. குறைந்தது நூறு பிரதிகளுக்கான தேவை உருவான பின்னரே அச்சிடுவார்கள்.

இன்று பிரிண்ட் ஆன் டிமான்ட் வழி நூல்கள் அச்சிடப்படலாம். அதற்கும்கூட பத்துபேர் கேட்கவேண்டும். ஆனால் பெரும்பாலான நூல்களுக்கு அந்த அளவுக்குக் கூட தேவை இருப்பதில்லை. பிஓடி நூல்களை கேட்பவர்களிடம் மேலும் பத்து பேரை சேர்த்துக்கொண்டு வாருங்கள் என்று பதிப்பகங்கள் கேட்கும் நிலையே இன்று உள்ளது

இங்கே எந்த ஆசிரியருக்கும், எந்நூலுக்கும் பெரிய சந்தை ஏதும் இல்லை. அந்த ஆசிரியரோ அவருக்கு வேண்டியவர்களோ முயற்சி எடுத்து தொடர்ச்சியாக நூல்களை நிலைநிறுத்தினால்தான் உண்டு. ஞானபீடப்பரிசு பெற்ற அகிலன் அல்லது பெரும்புகழ்பெற்ற சாண்டில்யன் நூல்களுக்கே இதுதான் நிலைமை.[ நான் அறிந்தவரை ஜாஃப்னா பொதுநூலகத்தில் மேற்குச்சாளரம் ஒரு பிரதி உள்ளது]

என் பல நூல்கள் அச்சில் இல்லை. அவற்றை அச்சிடும்படி நான் பதிப்பகத்தாரிடம் கோர முடியாது. ஏனென்றால் அவை வாங்கப்படும் என்னும் உறுதிப்பாட்டை நான் அளிக்க மாட்டேன்.தமிழ் வாசகர்கள் மேல் எனக்கு எந்த நம்பிக்கையும், எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என் நூல்களையே என் வாசகர்களில் ஒருசாரார்தான் விலைகொடுத்து வாங்குகிறார்கள். இணையத்தில் இலவசமாகக் கிடைப்பவற்றைத்தான் மிகப்பெரும்பாலானவர்கள் வாசிக்கிறார்கள்.அவர்களிலும் ஒருசாரார் தேடுவதற்குச் சோம்பல்பட்டு என்னிடமே இணைப்பு கோருபவர்கள்.

இதற்குத் தீர்வு என்பது இணையத்தில் மின்னூல்களாக அனைத்து நூல்களும் இருக்குமபடிச் செய்வது. அதைத்தான் நண்பர் அழிசி ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் செய்கிறார்கள். ஆனால் அதற்கு திட்டமிட்டு தடைகளை உருவாக்குகிறார்கள். அழிசி ஸ்ரீனிவாசன் க.நா.சுவின் நூல்களை மின்னூல்களாக வலையேற்றினார். அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டவை.

ஆனால் திருட்டு பிடிஎஃப்களை வெளியிடும் கூட்டத்தில் ஒரு ஆசாமி அமேசானுக்கு அந்நூல்களின் பதிப்புரிமை தன்னிடமிருப்பதாக ஒரு கடிதம் அனுப்பினான். அவன் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பித்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கடிதத்தை ஆதாரமாகக்கொண்டு அமேசானில் உள்ள சில மடையர்கள் அழிசி ஸ்ரீனிவாசன் வலையேற்றியிருந்த மொத்த நூல்களையும் அழித்துவிட்டனர். அவற்றில் க.நா.சு நூல்கள் தவிர ஏராளமான பழைய நூல்கள் இருந்தன. அனைத்துமே மறைந்துவிட்டன.

அமேசானுக்கு அழிசி ஸ்ரீனிவாசன் க.நா.சு நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை என்ற செய்தியை பலமுறை தெரிவித்தும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஏனென்றால் அங்கே இவற்றை கையாள்பவர்கள் தமிழ் இளைஞர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு புத்தகம் என்றால் என்ன, நாட்டுடைமை என்றால் என்ன, பதிப்புரிமை என்றால் என்ன என்ற எந்தப் புரிதலும் இருக்க வாய்ப்பில்லை.

[அமேசானுக்கு இந்த அபத்தமான நடவடிக்கை பற்றி வாசகர்கள் கூட்டாக சில கடிதங்களை அனுப்பலாம். சட்டபூர்வமான நோட்டீஸ் கூட அனுப்பலாம். ஏனென்றால் திருட்டு பிடிஎஃப் காரர்களை இப்படியே விட்டால் இவர்கள் இங்குள்ள மின்னூல் வணிகத்தையே அழித்துவிடுவார்கள்]

தமிழிலுள்ள ஏராளமான அரிய நூல்களின் பதிப்புரிமை எங்கே எவரிடமிருக்கின்றன என்பதே தெரியவில்லை.கண்டுபிடிப்பதும் எளிதல்ல. ஆகவே வேறு வழியே இல்லை. நூலகங்களை நம்பி இருக்கவேண்டியதுதான். எங்கோ ஒரு பிரதி இருக்கும், தேடினால் கிடைக்கும் என்று நம்பவேண்டியதுதான்.

நாம் ஒன்றை உணரவேண்டும். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது அறிவியக்கத்துக்கு எதிரான பொதுமனநிலை கொண்ட ஒரு சமூகத்தில். இந்த கடிதத்தை இணையத்தில் வெளியிட்டுப்பாருங்கள். ‘புத்தகங்களால் என்ன நன்மை? சமூகத்துக்கு தேவையான செயல்களைச் செய்யலாமே’ என்பதுபோன்ற அரிய கருத்துக்களைச் சொல்லும் மொண்ணைகள் அலையலையாக கிளம்பி வந்து எதிர்வினை ஆற்றுவார்கள். ‘நான் எதையுமே படிப்பதில்லை’ என்று பெருமையாக வந்து அறிவித்துக்கொள்வார்கள்.

இச்சூழலில் நாம் ஒரு கண்காணா இயக்கம்போல அறிவியக்கத்தை முன்னெடுக்கிறோம். நமக்குரிய அறிவுத்தொடர்புகளை நாமேதான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதற்கு சமூகத்திடம் கோரிக்கை வைக்க முடியாது. பதிப்பாளர்கள் சமூகத்தை நம்பி இருப்பாவ்ர்கள், அவர்கள் வணிகம் செய்கிறார்கள். அவர்கள் நூலகங்களை நம்பியே நூல்களை வெளியிடுகிறார்கள்.அவர்களால் நம் தேவைகளை நிறைவேற்ற முடியாது. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டாக வேண்டும்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அமேசான் போன்ற தளங்கள் கூட உதவி செய்யாத நிலையில் அரிய நூல்களுக்கான ஒரு பிடிஎஃப் சுற்றுமுறையை ஆய்வாளர்களும் வாசகர்களும் உருவாக்கிக் கொள்ளுவதே நல்லது என்று.

ஜெ

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
அடுத்த கட்டுரைஅழிந்த நூல்களும், மீட்டிக் கொண்ட நம்பிக்கையும்- கொள்ளு நதீம்