வேரில் திகழ்வது- கடிதங்கள்

தொடர்புக்கு: [email protected]

அன்புள்ள ஜெயமோகன்,

இங்கு வேரென துரியத்தை கற்பனைசெய்துகொண்டேன். அனைவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் துரியம்,பிரம்மத்தோடு கலந்த துரியம். உயிர்களுக்கு துரியம்தானே வேர்.மனவளர்ச்சி குன்றியவர்கள் துரியத்தோடு நெருங்கிவிடுகிறார்கள் போல. யோகிகள் பெரும் முயற்சியால் அடையும் கணநொடி ஆனந்தத்தை இவர்கள் என்றும் கொண்டுள்ளார்கள். ராகேலுக்குள் இருக்கும் துரியம் பெரிய துரியத்தின் ஒரு பகுதியாதலால் அவளால் எளிதாக எல்லாவற்றையும் உணரமுடிகிறது.அவள் எப்படி உணர்கிறாளென புரிந்துகொள்ள முடியவில்லை. கதையில் சொல்லப்பட்ட பூனையின் உள்ளுணர்வு ஒரு விளக்கத்தை அளித்தது.

துரியத்தில் திகழ்வது பெருங்கருணை. அதுவே கதையின் மையம். பிரம்மம் நம்மீது கொண்ட கருணையால் உயிரினங்கள் தோன்றியது. அது இன்றும் நம்மீது கருணையோடு உள்ளது.அந்த கருணை நம்மிடமும் எதோ தருணத்தில் வெளிப்படுகிறது. மகள் வயதுக்கு வந்ததையறிந்து மனைவியை திரும்ப அழைத்துக்கொள்ள ரொசாரியோ நினைத்த  போது , அப்பாவின் புகைப்படத்தை மேசையில் கண்டு ராகேல் அழும்போது, முதன்மை ஆதாரத்தை ஔசேப்பச்சன் ரொசாரியோவிடம் தரும்போது, மனவளர்ச்சி குன்றிய பையனை தொட்ட யானை கோபம் மறைந்து திரும்பி சென்றதுபோது.அத்தனைபேரும் எதோ ஒரு தருணத்தில் பிரபஞ்ச தாயின் அரவணைப்பை அனுபவித்திருப்போம்.

 

அன்புடன்,

மோகன் நடராஜ்

 

அன்புள்ள ஜெயமோகன்,

நூற்றிமுப்பது கதைகளை இப்போதுதான் வாசித்து முடிக்கப்போகிறேன். எத்தனை வகையான மனிதர்கள், எத்தனையெத்தனை களங்கள் என்னும் பெரும் பிரமிப்பு உருவாகிறது. மனித குணங்களின் எத்தனை வகையான கோலங்கள் வெளிப்பட்டுள்ளன. இத்தனை பிரம்மாண்டமான ஒரு புனைவுலகை ஒரு படைப்பாளியில் பார்ப்பதென்பது பிரமிக்கச்செய்வதுதான். ஆனால் அதைவிட ஆச்சரியப்படுத்துவது அத்தனை கதைகளிலும் அறுதியாகத் திரண்டுநின்றிருக்கும் மனிதநேயமும் மானுடம் மீதான நம்பிக்கையும்.

குறிப்பாக ஒன்று சொல்லவேண்டும். வேரில்திகழ்வது என்ற கதை. கம்பாஷன் அல்லது பாசம் என்பது ஒரு அறிவுச்செயல்பாடே அல்ல. அது வேர்ச்செயல்பாடு என்று சொல்லும் அந்தக்கதை என்னை நெகிழச்செய்துவிட்டது. பெருமூச்சுகள் விட்டுக்கொண்டேதான் படித்து முடித்தேன்.

ராஜ்குமார் எம்

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க

குமரித்துறைவி அச்சுநூல் வாங்க 

வான் நெசவு அச்சுநூல் வாங்க

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்

கதைகள் கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா பங்கேற்புப் பதிவு- படிவம்
அடுத்த கட்டுரைவசைபாடிகள் நடுவே – ஒரு கடிதம்