கோவையும் கவிதையும் ஒரு கோழியும்
அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்
அன்புள்ள ஜெ,
வணக்கம். கோவை கவிதை விவாதக் கூட்டம் தொடர்பான இரம்யாவின் கடிதம் அதில் பங்கேற்காத குறையை ஓரளவு நிவர்த்தி செய்தது. விஷ்ணுபுரம் விருது விழா தவிர வேறெந்த இலக்கியக் கூட்டத்திலும் கலந்து கொண்டதில்லை; அது தொடர்பான பதிவுகளும் இந்தஅளவிற்கு தவறவிட்டதிற்கான வருத்தமளித்ததில்லை. நீங்கள் முகாமில் சொன்னதுபோல இத்தகைய கவிதை முகாம்கள் தொடரவேண்டுமென விழைகிறேன்.
நன்றி,
விஜயகுமார்.
அன்புள்ள ஜெ
கோவை கவிதை நிகழ்வு பற்றிய செய்திகளை வாசித்தேன். கவிதையைப்பற்றி பேசிவிட முடியுமா என்று எப்போதுமே சிலர் சொல்வதுண்டு. நான் அதற்கெல்லாம் பதிலாக கவிதையைப்பற்றி தொல்காப்பிய காலம் முதல் பேசப்படுகிறது. கவிதையரங்குகள் உலகம் முழுக்க நிகழ்கின்றன. அவர்களெல்லாம் முட்டாள்கள் அல்ல என்று பதில் சொல்வேன்
நான் கவிதையரங்குகளில் அடையும் அனுபவம் என்னவென்றால் இரண்டுநாட்களும் கவிதையிலேயே இருந்துகொண்டிருப்பதன் பேரின்பம்தான். என்னால் வேறு எப்போதுமே இப்படி கவிதைக்குள்ளேயே இருந்துகொண்டிருக்க முடியாது. இத்தனை கவிதைகளை ரசிக்கவும் முடியாது. ஒரு கவிதை விதவிதமாக வாசிக்கப்படும்போது அது விரிந்துகொண்டே செல்கிறது. அது மிகப்பெரிய ஒரு கலையனுபவம்
இங்கே கவிதையரங்குகள் ஒரு காலத்தில் நிறையவே நடைபெற்றன. பிறகு அவை நின்றுவிட்டன. நின்றதற்குக் காரணம் கவிஞர்கள் என்ற பேரில் கவிதை தெரியாத அரசியல்கும்பலும் சில குடிகாரர்களும் ஆடிய ஆட்டம்தான் காரணம். இதனால் இழப்பு நல்ல கவிதை ரசிகனுக்குத்தான். ஆகவே இதைப்போல தேர்வுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்களுடன் நிகழும் அரங்குகள் மிகமிக அவசியமானவை
ராஜ்