கோவை கவிதைநிகழ்வு- கடிதம்

கோவை கவிதைவிவாதம் – கடிதம்

கோவையும் கவிதையும் ஒரு கோழியும்

அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்

சீன கலாச்சாரத்தில் பைன்,  வில்லோ மரங்களும் ’மெய்’ (Mei) மலர்களும் மிக முக்கிய இடம் பெற்றவை. சீன மெய்யியல் தத்துவங்களில் நீண்ட ஆயுளுக்கும், கண்ணியத்திற்கும், சாதகமற்ற சூழலிலும் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கும் பைன் மரங்கள் உருவகமாக சொல்லப்படும். அதைப்போலவே தாழ்ந்த கிளைகளுடன், துயரே உருவாக தோன்றும் வில்லோ மரங்களும் இறப்பு, துயர் இவற்றோடு பாலுணர்வு இச்சையையும் குறிக்கிறது. கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கவிதை பயிலரங்கில் போகன் அவர்களின் அமர்வில் வாசிக்கப்பட்ட சீன மொழிபெயர்ப்பு கவிதைகளிலும்  பைன் மற்றும் வில்லோ மரங்கள் இருந்தன.

முன்பே பங்கேற்பாளர்களுக்கு வாசிக்க கொடுக்கப்பட்டிருந்தவற்றில் சீன கவிதைகள் இல்லையாதலால் மிக புதிதாக போகன் சொல்வதை கேட்டுக் கொண்டோம் மிக அழகிய மொழிபெயர்ப்பும் விவாதமுமாக அந்த அமர்வு இருந்தது.அக்கவிதைகளின்  ‘’வீழும் வில்லோ மரங்கள்’’ என்னும்  ஒரு வரி மீள் மீள அமர்வு முடிந்த பின்னரும் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது.

கவிதைப் பயிலரங்கு நடைபெற்ற இரண்டு நாட்களும் என்றென்றைக்குமான ஒரு மலர்வை உண்டாக்கி விட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி நாட்களில் தான் கல்யாண்ஜி,  ஸ்ரீபதி பத்மநாபா  வழியாக கவிதைகள் எனக்கு பரிச்சயமாயின. ஏராளமாக வாசிப்பவள் என்றாலும் பிற எழுத்துக்களை காட்டிலும்  கவிதைகள் மீது எனக்கு தனித்த  பிரியம் உண்டு. இந்த பயிலரங்கில் கவிதைகளை மேலும் அணுக்கமாக  அறிந்து கொண்டேன்.

பயிலரங்கை லக்‌ஷ்மி மணிவண்ணன் அவர்கள் கவிதைக்கும், செய்யுளுக்கும் பாடலுக்குமான வேறுபாடுகளை சொல்லி துவக்கி, விக்ரமாதித்தன் கவிதைகளை சொல்லி முடித்தும் வைத்தார். லக்‌ஷ்மி மணிவண்னன் அவர்களின் பல கவிதைகள் எனக்கு பிரியமானவை  ஒரு கவிதையில் ’’தூய அன்பென்னும் துயர்’’ என்றிருப்பார் அவ்வரி எப்போதும் என் மனத்தினடியில் தளும்பிக் கொண்டிருக்கும். நழுவவிட்ட கணங்களை கைப்பற்றும் முயற்சி கவிதை, கவிஞனுக்கு ஒரு பள்ளம் அல்லது ஒரு பிசகு இருக்கும் என்று அவர் தொடங்கிய[போதே பயிலரங்கு எப்படி இருக்கும், எத்தனை சிறப்பாக இருக்கும் என புரிந்தது.

நிகழ்வு நடந்த இடமும் கவிதைகளை வாசிக்க, விவாதிக்க ஏற்ற இயற்கையுடன் இணைந்த அழகான  பண்ணை வீடு என்பதால் கூடுதலாக கவிதைகளை அனுபவித்து அறிந்து கொள்ள முடிந்தது.நாளெல்லாம் பெய்த மழை, நிகழ்வை இன்னும் அழகாக்கியது. குளிரூட்டப்பட்ட ஓரு அரங்கில் ஒருவர் உரையாற்ற  நாற்காலியில் அமர்ந்து கேட்கும் பங்கேற்பாளர்களுடனான அமர்வுகளை விட, கவிஞர்களும் வாசகர்களுமாக சேர்ந்து உரக்க வாசித்து பல கோணங்களில் விவாதித்து  விளக்குகையில் அனைவரது கருத்துக்களும் கலந்து, திரண்டு ஒரு புதிய அறிதலை, புதிய பொருளை  கவிதைக்கு உருவாக்கி விடுகிறது.

ஜப்பானின் ஹனமி செர்ரி மலர் கொண்டாட்டங்களின் போது, போது மலர் மரங்களுக்கடியில் கவிஞர்கள் குழுவாக அமர்ந்து கவிதைகள் எழுதியும் விவாதித்தும் மகிழ்வார்கள் அப்படியேன் நமக்கெல்லாம் வாய்க்கவில்லை என்று ஏங்கி இருக்கிறேன். அம்மனக்குறை தீர்ந்தது இப்போது

இதுபோன்ற இயல்பான சுவாதினமான அவரவர் சொந்த வீட்டை போன்ற உணர்வுடன் ஒரு குடும்பத்தினர் போல அனைவரும் அமர்ந்து கவிதைகளை வாசித்து விவாதித்து அறிந்து கொள்ளும் வாய்ய்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்?

யுவன் , போகன், எம் கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன் சாம்ராஜ், மதார், இசை என்று பல முக்கிய, பிரபல கவிஞர்கள் கலந்து கொண்டு பலவகையான கவிதைகளை வாசித்தும்,  விளக்கியும்,  விவாதித்தும் அறிந்துகொண்ட அமர்வுகள் எல்லாம் மிக மிக முக்கியமான பல திறப்புகளை அளித்தன

நிகழ்வுக்கு வருமுன்னரே எம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் இந்தி மொழி பெயர்ப்பு கவிதைகளை வாசித்திருந்தேன், எனினும் வசனகவிதைகளை போலிருந்த  அவற்றில் என்னால் உள்ளம் குவிக்க முடியவில்லை. என்ன இருக்கிறது, சின்ன சின்ன வாழ்வுத் தருணங்களை சொல்லி இருப்பதை தவிர? என்று நினைத்தேன். ஆனால் அந்த அமர்வில் அக்கவிதைகள் விவாதிக்கப்பட்ட பின்னரே அவற்றின் மறைபிரதிகள் காட்டும், அழைத்துச்செல்லும் உச்சங்களை அறிந்துகொள்ள முடிந்தது.

ஒருவனுக்கும் ஒருத்திக்குமாக  ஒரு உரையாடலை, ஒரு ஊடலை, தேநீர் தயாரிப்பதை சொல்லும் ஒரு கவிதையில் //என்ன இப்போதே கல்யாணம் ஆகிவிட்டது போல அதிகாரம் பண்ணுகிறாய்//  என்று முடியும் ஒரு கவிதையை

அழகாக  விளக்கினீர்கள். அவன் அவளுக்கு அந்த மிக குறைந்த நேரத்திலேயே எல்லாமாக,  அவள் ஆன்மாவாகவும் ஆகிவிட்டிருகிறான் பின்னர் அந்த கடைசி வரியின் செல்ல கோபம், ஒரு உரிமைக்கொஞ்சல் அதுவே கவிதையின் உச்சமென சொன்னபோது  பிரமிப்பாக இருந்தது. கவிதைகளின் subtext குறித்து  அதற்கு முன்பு வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை.

யுவனும் போகனும் நீங்களுமாக கவிதை அமர்வுகளை இயல்பாக தாங்கிப்பிடித்து கொண்டிருந்தீர்கள். யுவனின் புன்னகை அனைத்து அமர்வுகளிலும் நிறைந்திருந்தது.

இசை’யின் அமர்வில் வாசிக்கப்பட்ட கவிதைகள்,  அவரது சொந்த வாழ்வனுபவங்கள் குறித்த பகிர்வுகளால் மேலும் நெருக்கமான உணர்வை அளித்தன. கவிஞர்களுக்கும் வறுமைக்குமான உறவு குறித்த இசையின் கேள்விக்கு ’’அடிக்கடி முறிந்த காதல்களை தவிர வேறெந்த துயரும் இல்லாத செல்வந்தரான தாகூரை’’ உதாரணமாக சொல்லி நீங்கள் பதிலளித்தீர்கள். இசையின் அமர்வில் //சூடு ஆறாமலிருக்கட்டும், சுவை குறையாமலிருக்கட்டும்// என்னும் தேநீர் குறித்த அந்த கவிதையில் கவிஞனின் அகத்தில் பொங்கும் கருணையை  தரிசிக்க முடிந்தது

ஆனந்த குமார் கலந்து கொள்ளவில்லை ஆனால் அவரது ’’என் குழந்தை’’ கவிதையை  எல்லாருமாக எடுத்து கொஞ்சிக் கொண்டிருந்தோம்.

சாம்ராஜின் உடல்மொழி கவிதைகளின் அமர்விலும் மதாரின் அமர்விலும் முன்வைக்கப்பட்ட மிக கூரான விமர்சனங்களும், தொடர்புடைய விளக்கங்கங்களுமாக புதிய புதிய கதவுகளாக திறந்து கொண்டே இருந்தன.

ஒரு கவிதையில் மனிதர்களாக உருவகிக்கப்படும் கோடுகள் சட்டென்று திசை மாறி தனித்த கோடுகளாக மனிதர்களின் காலடியில் கிடப்பதை யுவன் மிக அழகாக எடுத்து,  எங்கு அக்கவிதை தடம்புரண்டது என்பதை விளக்கினார்.நல்லவேளை நான் கவிதைகள் எழுதியதில்லை என்று அப்போது சந்தோஷப் பட்டுக் கொண்டேன்.

’’எத்திசை செல்லினும் அத்திசைசோறே’’ சஙசக்கவிதைகளும் விவாதிக்கபட்டு புத்தம் புதிதாக எஙகள் முன்னே நிகழ்ந்து கொண்டிருந்தது. ’’வாயிலோயே’ என்னும் பாடலை அத்தனை அழகான விளக்கத்தில் நான் முன்பு கேட்டதே இல்லை அந்தியூர் மணியின் அமர்வில் நீங்கள் ’’மம்மர் அறுக்கும் மருந்து’’ வரிகளை  குறித்த  பல அரிய விளக்கங்களை சொன்னீர்கள்.

அமர்வுகளுக்கு இடையில் உணவருந்துகையிலும், தேநீர் இடைவேளைகளிலும் அனைவருமாக மகிழ மரத்தடியிலும் பலாமரத்தடியிலுமாக பலவற்றை மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அமர்வுகளுக்கிணையாக அவையும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன. தாம்பத்யத்தை மீறின உறவுகளால் உண்டாகும் தலைவலிக்கென்று பிரத்யேகமான மருந்துகள் உண்டென்று ஹோமியோபதி மருந்து குறித்து போகன் சொன்னது மிக புதிதாக இருந்தது.

சிரிக்க சிரிக்க நீங்கள் சொன்ன மலையாள சினிமாக்களின் ’வெள்ளடி’ மற்றும் ’பாதிரியார்’ நகைச்சுவைகளும்,  உங்களது தனிப்பட்ட சினிமா அனுபவங்களின் ரசிக்கத்தக்க நிகழ்வுகளின் பகிர்தலுமாக பங்கேற்றவர்களில் நான் உள்ளிட்ட பலருக்கு அவற்றையெல்லாம் இந்த நிகழ்வல்லாது வேறெங்கும் வாசித்தோ, கேட்டோ, தெரிந்துகொண்டிருக்கவே முடியாது.

நீங்கள் அடைந்திருக்கும், இருக்கும் உயரங்களில் உங்களுக்கு கிடைப்பவற்றை அப்படி அப்படியே பிறருக்கு அளித்து விடுகிறீர்கள். அனைத்தும் மிக அரியவை, மிக புதியவை. அந்த தாராள மனதை குறித்துதான் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

இங்கு வீட்டில் ஒரு நட்சத்திர பழ மரமொன்று புதிதாக பூத்து காய்க்க தொடங்கி இருக்கிறது. முன்பு யுபோர்பியேசி குடும்பத்திலும், பின்னர் பில்லாந்தேசி குடும்பத்திலும் இப்போது ஆக்ஸாலிடேசி  குடும்பத்திலுமாக இம்மரத்தை தாவரவியலாளர்கள். மாற்றிகொண்டே இருக்கிறார்கள் முக்கியத்துவமும், பிரபல்யமும், பயன்களும் அதிகரிக்கும் தாவரங்களின் பெயர்களும், குடும்பமும் மாறுவது இப்படி  அரிதாக நிகழும் ஆனால் தன் குடும்பம் மாறிக்கொண்டு இருப்பதையும் இப்போது எந்த குடும்பத்தில் என்ன பெயரில் எத்தனை பிரபலமாக  இருக்கும் என்பதையெல்லாம்  அம்மரம் அறிந்திருக்கவில்லை அதன் இயல்புப்படி இலைகளை விட அதிகமாக மலர்களையும் கனிகளையும் அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நேற்று இளஞ்சிவப்பில் மலர்களும், வெளிறிய பச்சைக்கனிகளுமாக செறிந்து, கனிகளின் எடை தாளாமல் தாழ்ந்திருந்த கிளைகளுடன் இருந்த  அம்மரத்தை பார்க்கையில் ’உங்களைப்போல’ என்று நினைத்துக்கொண்டேன்.

உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும், அருளப்பட்டிருக்கும் அனைத்தையும் அள்ளி அள்ளி பிறருக்கு  கொடுத்துக்கொண்டே இருப்பது உங்களுக்கு இயல்பாக இயற்கையாக அமைந்திருக்கிறது

கவிதை அரங்கிலிருந்து வந்து இரண்டு வாரமாகியும் அந்த இரண்டு நாட்களின் செல்வாக்கு  என்னில் இன்னும் இருக்கிறது. எதையும் கவிதையாகவே பார்க்கிறேன். திராட்சைக்கொடி சாகுபடியை குறித்த காணொளி ஒன்றில் ஜெர்மானியரொருவர்  கொடியின் முதல் இலையரும்பு வெடிப்பதை சுட்டி காட்டி ’’இந்த வெடிப்பே சொல்லிவிடுகிறது இனி அதிலிருந்து பெறப்போகும் வைனின் சுவையை’’ என்ரார். அட! கவிதையாக பேசுகிறாரே! என்று நினைத்தேன். அவரே தொடர்ந்து ’’வைன் என்பதே பாட்டிலில் அடைக்கப்பட்ட கவிதைதானே’’ என்றார்.

டேராடூனிலிருந்து தருண் உடைந்த நிலவின் புகைப்படத்தையும்  உடன் தினமும் நிலவை அவதானிப்பதாகவும்  ‘’ தேய்ந்தும் வளர்ந்தும் உடைந்தும் நிறைந்தும் கொண்டிருக்கும் இந்த நிலவு எனக்கு குறைகளையும் உடைசல்களையும் முழுமையை போலவே நேசிக்க கற்றுக்கொடுக்கிறது’’ என்று ஒரு குறிப்பையும் அனுப்பியிருந்தான்.இவ்வரிகளில் தருணுக்குள் இருக்கும் கவிஞனை காணமுடிந்தது.

காதலில் இருப்பவர்களுக்கு யாரை பார்த்தாலும், எதைக்கேட்டாலும் காதலன் அல்லது காதலியை போலவே இருக்குமல்லவா அப்படி இப்போது கவிதை காதலிலிருக்கிறேன் போலிருக்கிறது. என்னைச் சுற்றிலும் கவிதையாகவே தெரிகிறது.

நல்ல கவிதை மோசமான கவிதை என்று எதுவுமில்லை அக்கவிதை வாசிக்கையில் அந்தரங்கமாக கவிஞனும், வாசிப்பவனும் சந்திக்கும் ஒரு புள்ளி, அதை கண்டடைவதே அக்கவிதையின் உச்சத்தை கண்டறிவது என்று கவிதை பயிலரங்கில் முத்தாய்ப்பாக சொல்லப்பட்டதை நினைவில் வைத்திருக்கிறேன்.

ஸ்ரீபதி பத்மநாபா’வின் காதல் கவிதைகளில் ஒன்றில் ’வழக்கத்துக்கு மாறாக தன் தோளில் காதலி தலை சாய்த்துக் கொண்டதும் இனிமேல் காதலை பற்றி கவிதைகள் எழுத வேண்டியதில்லை’’ என்று காதலன் நினைத்துக்கொள்வதாக   கடைசி வரி இருக்கும். இப்பயிலரங்கு அளித்திருக்கும் நிறைவில் எனக்கு ஒரே சமயத்தில் ஏராளமாக இனி கவிதைகளை வாசிக்க வேண்டும் என்றும், இனி கவிதைகளே வாசிக்கவேண்டாம் இந்த அஞுபவத்தை பொக்கிஷமாக பாதுகாத்தால் போதுமென்றும் தோன்றுகிறது

வழக்கமான விஷ்ணுபுர விழாக்களின் நிகழ்வுகள் அனைத்திலும் எனக்கு உண்டாகும் அதே பிரமிப்பு இதிலும் நிகழ்ச்சிகளின் நேர ஒழுங்கிலும், ஒரு சிறு பிழைகூட  இல்லாமல் எல்லாம் சரியாக நடப்பதிலும் உண்டானது

வேளாவேளைக்கு உணவாகட்டும், சிற்றுண்டிகளாகட்டும், தேநீரும் காபியுமாகட்டும், கால் விரலில் அடிபட்டவருக்கு முதலுதவியாகட்டும்,  தங்குமிடத்தின் செளகரியங்களாகட்டும், அரங்கில் தாகம் எடுக்கையில் கையெட்டும் இடத்தில்  இருக்கும் தண்ணீர் வரை எல்லாம் கச்சிதம், எல்லாம் ஒழுங்கு , எல்லாம் நேர்த்தி எல்லாமே நிறைவு

கதிரும் பாலுவும் இன்னும் பலரும் இதன் பின்னால் அளித்திருக்கும் உழைப்பை  நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். கல்லூரியில் வழக்கமாக  எல்லா நிகழ்வுகளிலும் சம்பிரதாயமாக, துறைத்தலைவர் அல்லது முதல்வரே அனைத்து நிகழ்வுகளுக்கும் முதுகெலும்பாக இருந்தார்கள் என்னும் பொய்யை மறக்காமல் சொல்லுவோம்.அப்படி  சம்பிரதாயமாக  இல்லாமல் முழுமனதாக  வழக்கறிஞர் ஈரோடு கிருஷ்ணன்  அவர்களின் பிரதான பங்களிப்பை இந்த பயிலரங்கிலும் கண்டேன் அவருக்கும், பாலுவுக்கும், கதிருக்கும் அனைவரின் சார்பில் நன்றியும் அன்பும்

தேவைப்படும்போது தேநீர் தயாரிதுக்கொள்வதிலிருந்து,  பூஜையறையில் மாலை விளக்கேற்றுவது வரை சொந்த வீட்டை போல உணர்வளிக்கும் அந்த பண்ணை வீடும், பொழிந்து கொண்டே இருந்த மழையும், பொய் கடி கடித்து, கட்டிப்புரண்டு  விளையாடிக்கொண்டிருந்த நாய்களும்,   புகைப்படம் எடுக்கையில் இணைந்துகொண்ட கோழியும், இளஞ்சிவப்பில்  நிறைந்த மலர்களுடன் கவிதையரங்கு நிகழ்ந்த அறையின் முன்னே நின்றிருந்த  மந்தாரை மரமுமாக  அந்த இரு நாட்களும் மறந்து போகாத அழகிய  கனவு போல நினைவில் இருக்கிறது.

பாலுவின் பண்ணையிலிருந்து கனிந்த முள்சீதா பழமொன்றை கொண்டு வந்தேன். அதன் விதைகளை வீட்டுத்தோட்டத்தில்  கவிதை பயிலரங்கின் நினைவுகளுடன் சேர்த்து விதைத்திருக்கிறேன். முளைத்து மரமாகட்டும் இரண்டும்.

அனைத்திற்குமான நன்றியுடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்: வெங்கி பிள்ளை
அடுத்த கட்டுரைகேளாச்சங்கீதம்- கடிதங்கள் -9