எண்ணும்பொழுது- கடிதம்

தொடர்புக்கு: [email protected]

அன்புள்ள ஜெ

வணக்கம்

“எண்ணும் பொழுது “கதையை மீண்டும் வாசித்தேன்.வாழ்வு முழுதும் கூடவே தொடர்நது வரும் கதைகளில் ஒன்று.

ஒவ்வொரு கூடலின் போதும் ஒரு மின்னல் போல இந்த கதை எட்டி பார்க்கிறது.இது பூவிடைபடுதல் தான்.அதனாலேயே இது கூடவே இருக்கிறது.இந்த கதையோடு சேர்ந்து “ வெற்றி” கதையையும் என் மனது ஒரு சேர நினைவில் வைக்கிறது.இதில் வரும் கோணச்சி,இவள் ஏன் கோணச்சி என்பது கதையிலேயே உள்ளது.கதையை தத்துவார்த்தமாக்கும் அனைத்தும் கோணச்சியின் சொற்கள்.

இந்த உலக இயக்கத்தின் முழுமுதற்விளையாட்டினை தத்துவதளத்திற்கு இட்டுச்சென்று கடலை விரித்து காட்டி செல்கிறது கதை.திருவீட்டு கன்னி, கடலங்கன்னி,வேம்பவாளர் ஆகிய மூவரையும் வைத்து கோணச்சி உண்மையில் சூதாடுகிறாள்.கோணலை அறிந்தவளுக்கு கோணலின் இறுதி அறியாததா என்ன? அறிந்தே அதை நிகழ்த்துகிறாள்.கோணச்சியை இந்த ஆண் பெண் வாழ்வின் விதி என்றும், தத்துவம் என்றும் கொள்ளலாம்.அல்லது கோணச்சியை நான்காமமாக நிறுத்திகொள்கிறேன்.காமம் தான் இந்த மனித இருப்பில் ஆயிரம் கோணல் கொண்டது.அந்த காமமெனும் கடல் சுழற்சியில் சிக்கி கரைந்து போவது தானே ஆணுக்கும் பெண்ணுக்கும் விதி.ஆணையும் பெண்ணையும் எண்ணவைப்பது எது?காமம் தானே ?

படிப்பவை அனைத்தும் மனதில் எங்கோ சேகரமாகிகொண்டிருக்கும்.அதற்குண்டான தருணங்களில் அவை எட்டி பார்க்கும்.ஆனால் இந்த கதை படித்த நாட்களிலிருந்து மனதின் முனையிலேயே இருக்கு.எப்போதும் எட்டி பார்த்துகொண்டே இருக்கு.அதற்கு கதையில் வரும் மூன்று நிகழ்வுகள்.“ பார்ப்பது ,அதுவும் கண்ணாடியின் வழியே பார்ப்பது.இந்த பாரப்பது நிகழாமல் அது நிகழ்வதேது ?

உச்சிமுனை என்பது எப்போ எந்த கணப்பொழுதில் நிகழ்கிறதென்பது நிகழும் போது நினைவிருப்பதில்லை.ஆனால் அது இந்த கதையில் உறையவைக்கப்படிருக்கிறது. அந்த அபுர்வ கணம்அந்த கணத்திற்கு முற்றிலும் பொருந்தாத அன்றாட பேச்சின் வழியே சுட்டிக்காட்டப்படுவதால் நிலைபெறுகிறது.

மூன்றாவதாக கூடலுக்கு தயாராவது.எத்தனையோ படங்கள் பார்த்திருக்கிறேன் இந்த இடம் வராத படங்களே அனேகமாக இருக்காது. ஆனால் இவ்வளவு ரொமான்டைஸாக எந்த காட்சியும் கண்டதாக நினைவில் இல்லை.இந்த கதையின் மிக மிக நெருக்கமாக உணரவைப்பதும் இந்த கதையை நினைவில் வைத்திருப்பதற்கும்,அந்த இடம் முக்கிய காரணம்.

“ மிக இயல்பாக இரு கைகளையும் தூக்கி தலைமுடியை சீரமைத்தாள்” ..

கட்டிலில் மீது காலை நீட்டி மடியில் உள்ள தலையணையின் மீது கைகளை வைத்து அமர்ந்திருக்கும் ஆணும் அவனை பார்த்தபடி அமர்ந்து இருகைகளையும் தூக்கி கூந்தலை சரிசெய்யும் பெண்ணும்.

இந்த காட்சியை ஒரு கண்ணாடியின் வழியே காண்பதாக ஒரு படிம காட்சி நிரந்தரமாக மனதில் தங்கிவிட்டது.

இந்த கதை யுகயுகமாக தொடரும் கதையாகும்.இந்த கதையில் மனிதர்கள் வந்த விழுந்துகொண்டே இருப்பார்கள் .வெளியேறும் வழிகளற்ற கடல்.வேம்பாளர் செடியோடு கடலில் தத்தளிப்பது போல,இந்த கதையில் விழுந்த எவரும் இந்த கதையோடு வாழ்வில் தத்தளித்துகொண்டிருப்பார்கள்.

சற்றுதினங்களுக்கு முன்பு யூட்டீய்ப்பில் ஒரு மருத்துவர் மூளையை எப்படி detoxing செய்வது என வகுப்பெடுத்ததை கண்டேன்.இந்த கதையை வெளியேற்றவோ இந்த கதையிலிருந்து வெளியேறவோ முடியவில்லை.இது யுகயுகமாக நிகழ்ந்துகொண்டிருப்பதனால் இதிலிருந்து வெளியேற முடியவில்லை.பொதுவாக ஒரு கதையை வாசித்தப்பிறகு அந்த கதையானது சில தினங்களுக்கு மனதின் மேல் தங்கி,ஆழத்தில் எங்கோ காணமல் போகும்,சற்றென்று வெளிவரும். ஆனால் இதுவோ’?இதில் மேல் விழும் எந்த கதையானாலும் உதைத்து உள்ளே தள்ளிவிட்டு இது மட்டும் மனதின் முனையிலேயே கொலுஇருக்கிறது .

ஜெ இதை நான் எழுதித்தான் ஆக வேண்டும்.

ஒவ்வொரு உச்சிமுனையின் போதும்,வந்து விழும் அந்த அன்றாட பேச்சை எண்ணத்தொடங்கினேன்என்னென்ன பேச்சு வந்துவிழுகிறதென்று.
நாளைக்கு பால் வாங்க வேண்டும்,பையனுக்கு ஸ்கூலுக்கு ச்சார்ட் வாங்க வேண்டும் ,….

அன்புடன்
ரகுபதி
கத்தார்.

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க

குமரித்துறைவி அச்சுநூல் வாங்க 

வான் நெசவு அச்சுநூல் வாங்க

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்

கதைகள் கடிதங்கள்

முந்தைய கட்டுரைகோவை புதிய வாசகர் சந்திப்பு பற்றி
அடுத்த கட்டுரைகூடு- சில கேள்விகள்