மகிழ்வதே போதுமா?

மகிழ்ச்சியும் பொறுப்பும்

அன்புள்ள ஜெ

இன்னும் 18 மாதங்களில் நான் ஓய்வு பெற்று விடுவேன். இது எனது முடிவு. என் முதலாளி நான் சாகும் வரையில் என்னை வேலையில் வைத்திருக்க ஆசைப்படுவார் என்பது எனக்குத் தெரியும். எனினும் 58 முடிந்ததும் நான் மீண்டும் பிறக்க ஆசைப்படுகிறேன்.

தீவிர வாழ்க்கை ரசிப்புத்தன்மையில் இருக்க முடியுமா?

எனக்கு பாடவரும். இளமையில் நான் பெங்களூரில் இசைக்குழுவில் 15 வருடங்கள் பாடியிருக்கிறேன். 80 களில் கணையாழியில் சிறுகதை., கவிதை எழுதியிருக்கின்றேன். 300 புத்தங்கங்களுக்குமேல் எனது வீட்டில் வைத்திருக்கிறேன்.

58 வயதுக்குப்பிறகு எனது எண்ணமெல்லாம், வாழ்க்கையை ரசிக்க மட்டுமே. முன்னமே எழுதியது போல் 18000 கிலோ மீட்டர் இந்திய எல்லையை சுற்றிவருவது, எனது முன்னோர்களின் கோவிலை மீண்டும் சீரமைப்பது, எனது collection இருந்து எல்லா நூல்களையும் படிப்பது, எழுதிப்பார்ப்பது, எனது ZENITH மனுவல் கமெராவில் படம் பிடிப்பது, பாடி ஆல்பம் தயாரிப்பது, கௌஷிகா சக்ரபோர்த்தி கேட்பது, ஊர் ஊராகசுற்றி கோவில்களை எல்லாம் பார்ப்பது, கடைசியில் சும்மா இருப்பது.

ஆண்டவன் எனக்கு வாழ்க்கையை அருளியிருக்கின்றான். ஐந்து ரூபாயில் ஒரு நாளைக்கழிக்கும் காலம் எனது இளமையில் இருந்தது.இன்று இல்லை. நான் சாப்பாட்டுக்குக்கோ அல்லது இருக்கும் இடத்திற்கோ இன்று சிரமப்பப்படத் தேவையில்லை. எனது மகன்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள். சொந்த வீடு இருக்கிறது.

நான் இப்போது என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன் . ஆனாலும் ஒரு GUILTY பீலிங் இருக்கிறது. சோசியல் சர்வீஸ் செய்ய வேண்டுமா அல்லது என் இஷ்டப்படி வாழ்க்கையை நடத்தலாமா ?

வெங்கட்

அன்புள்ள வெங்கட்

முக்கியமான கேள்வி. வாசகர்களுடனான உரையாடலின் சிறப்பே இதுதான், வாழ்க்கையின் சில அடிப்படைகளை நேருக்குநேர் சந்திக்க வேண்டியிருக்கிறது. நான் இங்கே வெளியிடாத கடிதங்களும் ஏராளம். இக்கடிதங்கள் வழியாக என்முன் வந்தமையும் வாழ்க்கைச்சிக்கல்கள் முடிவில்லாத வேறுபாடுகள் கொண்டவை. தமிழ்ச்சூழலில் வேறெந்த எழுத்தாளரும் இத்தகைய நீண்ட உரையாடலை நிகழ்த்தவில்லை.

சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரம், கி.ராஜநாராயணன் ஆகியோர் நானறிந்து இந்த உரையாடலில் இருந்தனர்.நானும் பலவற்றைப் பற்றி அவர்களிடம் பேசியிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் தொழில்நுட்பம் இத்தகைய விரிவான வாய்ப்பை வழங்குகிறது. புனைவிலக்கியவாதியாகவும் இது ஒரு பெரும் கொடையே.

உங்கள் வினாவுக்கே வருகிறேன். முதலில் கேள்வியைச் சந்தித்ததும் ‘இதிலென்ன ஐயம்? பயனுற வாழ்தல்தானே வாழ்தலாக இருக்க இயலும்?’ என்ற தயார்நிலைப் பதிலையே சென்றடைந்தேன். சமூகம் பயனுற வாழ்தலென்பது தனிமனிதனின் கடமைதானே? ஆனால் பின்னர் அதுவல்ல பதில் என்று தோன்றியது. அது அரசியல்சரி சார்ந்த பதில் வேதாந்தத்தின் பதில் அதுவாக இருக்க முடியாது. வேதாந்தம் சமூகத்தின் பார்வையில் அதைப் பார்க்காது. தனிமனிதனின் அகத்திலிருந்தே அக்கேள்வியை அணுகும்.

அப்படிப்பார்த்தால் எது உங்களுக்கு உவகையை நிறைவுணர்வை அளிக்கிறதோ அதைச் செய்யவேண்டும் என்பதே சரியான பதில். ஒரு சேவை அல்லது நற்பணியைச் செய்வதனால் மெய்யாகவே உங்கள் அகம் மகிழவில்லை என்றால் அதைச் செய்வது உங்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே கூட பயனற்றது. நீங்கள் எரிச்சல்கொண்டவர்கள் ஆவீர்கள். அப்பணியை பிழையாக, போதாமைகளுடன் செய்வீர்கள். அதன் விளைவாக எதிர்விளைவுகளைக்கூட உருவாக்கக்கூடும். மகிழ்ச்சியை அளிக்காத செயல் முழுமையடையாது.

ஏனென்றால் மனிதர்கள் வெவ்வேறு இயல்புகொண்டவர்கள். அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்களால் சேவை, நற்பணிகள் போன்றவற்றை முழுமையாக ஆற்ற இயலாது. அவர்களின் ஆர்வமும் இன்பமும் கற்பதிலேயே இருக்கும். கலைகளில் தோய்பவர்களாலும் அது இயலாது.பயண விழைவுகொண்டவர்களாலும் சேவைகளைச் செய்ய முடியாது. அத்தகையோர் வெறும் தற்காலிக ஆர்வத்தால், தங்களைப் பற்றிய மிகையான அல்லது பிழையான கணிப்பால் சேவைகளைச் செய்ய முற்பட்டு அவற்றை பாதியில் விட்டுவிட்டுச் செல்வது சாதாரணமாக நிகழ்கிறது. சேவை என்பதையே தவறானவையாக மக்கள் நடுவே காட்டிவிடுபவை அவை.

சேவை ஆற்றுபவர்கள் சேவையின் வழியாக நிறைவை அடைபவர்கள். ஆகவே அவர்கள் பொறுமையிழப்பதில்லை, பிறிதொன்றை நாடுவதில்லை. சேவையின் வழியாக தங்களுக்குக் கிடைக்கும்  புகழ் முதலிய பலன்களை கருத்தில் கொள்வதுமில்லை. சேவை செய்கிறோம் என்னும் உணர்வும், செயலில் உள்ள நிறைவுமே அவர்கள் அடையும் பெறுபயன்கள். அவ்வியல்பு உங்களுக்குள் இருந்தால், சேவை தொடர்ச்சியான மனநிறைவை அளித்தான் அதைச் செய்யுங்கள். நான் அவதானித்தவரை நேர்நிலை மனநிலையும், மக்கள்மேல் பிரியமும் கொண்டவர்கள் மட்டுமே சேவைகளைச் செய்யமுடியும்.

உங்களுக்கு இன்பமளிப்பதைச் செய்யுங்கள் என்று சொல்லும்போது ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். அந்த இன்பம் நிறைவையும் அளிக்கவேண்டும். கேளிக்கைகள் இன்பம் அளிக்கும், நிறைவளிக்காது. ஓய்வுபெற்றபின் சினிமா பார்ப்பது, பாட்டு கேட்பது, ஊர்சுற்றுவது என கேளிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சீக்கிரத்திலேயே சலிப்படைவார்கள். மெல்ல எதிர்நிலை இன்பங்களை நாடுவார்கள். அவற்றில் முதன்மையானது வம்பு. இன்றைக்கு ஊர்வம்புகள் குறைவு, இணையவெளி வம்புகள் பெரும்பங்கு. அரசியல், மதம் என ஏதேனும் ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டு அந்த வம்புகளில் ஈடுபடத் தொடங்கினால் பின்னர் மீட்பில்லை.

இன்பமும் நிறைவும் அளிக்கும் செயல்களில் ஒரு தனித்தன்மை உண்டு. அவற்றில் ஒரு கொடுக்கல்- வாங்கல் இருக்கும். வாங்குதல் என்பது கற்றுக்கொள்ளுதல். கொடுத்தல் என்பது படைப்பது, கற்பிப்பது. இவையிரண்டும் நிகழ்கையிலேயே உண்மையான இன்பமும் நிறைவும் அமைகின்றன. நீங்கள் என்ன செய்தாலும் அது உங்களுக்கு எதையாவது கற்பிக்கிறதா, உங்களை முன்னெடுக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் எதையாவது உருவாக்குகிறீர்களா, படைப்பதன்  அல்லது கற்பிப்பதன் இன்பம் அமைகிறதா என்று பாருங்கள். ஆமென்றால் அதுவே உங்கள் வழி.

யோசித்துப்பார்த்தால் ஒருவர் படைப்பதும் கற்பிப்பதும்கூட பெரிய சமூகப்பங்களிப்புதான். ஒரு நல்ல இசையை ஒருவர் அமைத்தால், இசையை பரப்பினால் அது ஒரு கொடைதான். ஒரு படைப்பை உருவாக்கினால் அல்லது முன்வைத்தால் அதுவும் அறிவியக்கப் பணிதான். ஆக்கபூர்வமான எல்லா பணிகளும் ஏதோ ஒருவகையில் சேவைகளே.

மகிழ்ந்திருப்பதைப் பற்றிய ஒரு குற்றவுணர்ச்சி இந்தியர்களாகிய நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஆன்மிகமற்ற மகிழ்ச்சி குறித்த குற்றவுணர்வு என்பது முக்கியமான ஒன்றே. ஆணவ வெளிப்பாடான ஆடம்பரமும். வெறும் நுகர்வும், கற்றலோ படைப்போ அற்ற கேளிக்கையும் குற்றவுணர்ச்சி அடையத்தக்க செயல்கலே. ஆனால் நிறைவளிக்கும் செயல் என்பது யோகம். அதன் வழியாக அடையப்பெறும் மகிழ்ச்சி என்பது ஓர் அருள்.

ஜெ

முந்தைய கட்டுரைஎங்கெங்கு காணினும் சக்தி- பாலசுப்ரமணியம் முத்துசாமி
அடுத்த கட்டுரைதமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்(ராஜ் கெளதமன்) -சக்திவேல் கோபி