ஜெ அவர்கட்கு வணக்கம்.
வெண்முரசு நீலம் இசை வெளியீட்டு விழாவில் மணிரத்னம் நாஞ்சில் நாடன், முத்துலிங்கம் வசந்த பாலன் ரவி சுப்ரமணியம் இவர்கள் பாராட்டி பேசியதை கேட்டு ஒன்று தெரிந்து கொண்டேன் என்ன வென்றால் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு! விஷ்ணு புரம் , இந்த இசைக்குழு முயற்சி பாராட்டுக்கள்.இசைக்கு மொழிதேவையில்லை சித்தார் ரிஷப், ஜெர்மன், ஜப்பான் இசை தமிழ்இலக்கிய வெண்முரசு நீலத்தில் கலந்து ஒலிக்க பாடிய ஷைந்தவிகமல்ஹாசன் மற்றும் அனைவரும்சிறப்பு.பாராட்டுக்கள்.நானும் உங்கள் வாசியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். வாழ்க வளமுடன்
நலமுடன்.
அன்பு ராணி.
அன்புள்ள ஜெ
நீலம் இசைக்கோலம் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை. ஆரம்பத்தில் அதன் இசைதான் ஆட்கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் சித்தார், வயலின், குழல் மூன்றும் தனித்தனியாக அளிக்கும் மயக்கம். பிறகுதான் சொற்கள். ஆனால் கேட்கக்கேட்க வரிகள் பித்துக்கொள்ளச் செய்தன. கண்ணானாய் காண்பதுமானாய் என்னும் வரிதான் கண்ணனைப்பற்றிய மிகமிகச்சிறந்த வரையறை. ஆனால் குழந்தையைக் கொஞ்சும் உளறலாகவும் அதுவே ஒலிக்கிறது. மலரில் முதல் இதழ் விரிந்ததுபோன்ற கட்டைவிரலை நினைக்க நினைக்க நெஞ்சு தவித்தபடியே இருக்கிறது. அந்த மயக்கத்தில் சட்டென்று இங்கெழுந்தருள்வாயே என்னும் வரி அளிக்கும் உச்சநிலை பாறையில் கடல் அலை வந்து மோதி நுரையாகச் சிதறுவதுபோல. அற்புதமான அனுபவம் அது, இந்த இசைபோல நீலம் நாவலுக்குள் கொண்டுசெல்லும் ஒரு தூது வேறில்லை. தேவதைகள் வந்து சொர்க்கத்துக்குக் கொண்டுசெல்வதைப்போல.
ஜெயலக்ஷ்மி பரத்வாஜ்