தென்னாப்ரிக்காவில் காந்தி வாங்க
’காந்தி தென்னாப்ரிக்காவில் இருக்கையில் அங்குள்ள கறுப்பர்களை காஃபிர்கள் என்று குறிப்பிட்டார், அவர் அவர்களுடைய சுதந்திரப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இந்தியர்கள் கறுப்பினத்தாரைவிட மேலானவர்கள் என்று திரும்பத்திரும்ப கடிதங்கள் மற்றும் மனுக்களில் எழுதினார், ஆகவே அவர் ஒரு இனவெறியர்’ – இக்கருத்தை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு கிறிஸ்தவர் நூலாக எழுதி அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் காந்திக்கு எதிரான காழ்ப்பை பரப்ப நாற்பதாண்டுகளுக்கும் மேலாக மிகக்கடுமையாக பணியாற்றினார். அவருக்கு கிறித்தவ அமைப்புக்கள் சிலவற்றின் பின்னணி இருந்தது.
அவருடைய குரல் பின்னர் கல்வித்துறையில் ஊடுருவியது. Ashwin Desai மற்றும் Goolam Vahed எழுதிய The South African Gandhi: Stretcher-Bearer of Empire அந்தத் தரப்பை ஓர் ‘ஆய்வுக்கருத்தாக’ முன்வைத்தனர். இவ்விரு நூல்களுமே ஆங்கிலத்தில் slander என்று சொல்லப்படும் சொல்லுக்கான மிகச்சிறந்த உதாரணங்கள். உதிரி வரிகளை வெட்டிவெட்டிச் சேர்த்து ஆதாரங்களாகக் காட்டி இங்கே தமிழகத்தில் நாம் எழுதிக்கொண்டிருக்கும் காழ்ப்பு வரலாற்றின் மிகச்சிறந்த வடிவங்கள் இவை. இவற்றுக்கிணையானதுதான் இந்துத்துவ – பிராமணச் சாதிவெறியரான ராதா ராஜன் எழுதிய Eclipse Of The Hindu Nation: Gandhi And His Freedom Struggle என்னும் அவதூறுவரலாறு.
இன்றைய கருத்துருவாக்கங்களிலுள்ள ஆதிக்க அரசியலின், பெருநிறுவனப் பின்னணியின், நிதிவலையின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்நூல்கள் ஏன் எழுதப்படுகின்றன என்று புரிந்துகொள்ள முடியும். ஆனால் இவை பொதுச்சமூகத்தில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்துகின்றன. ஏனென்றால் இவை நிறுவனங்களால் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ஓர் அமெரிக்க நகரில் காந்தி சிலை நிறுவ அரசு முடிவெடுத்தபோது அங்குள்ள கறுப்பினத்தார் ‘தீவிர இனவாதியான’ காந்தியின் சிலையை அங்கே நிறுவக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்த நூல்களிலும் இதையொட்டிய விவாதங்களிலும் உள்ள அப்பட்டமான சார்பும் அதன் விளைவான இரட்டைநிலைபாடும் திகைப்பூட்டுபவை. வெள்ளைய இனவெறியர்களால் தென்னாப்ரிக்கா கைப்பற்றப்பட்டு, அங்குள்ள மக்கள் அடிமையாக்கப்பட்டு, நிறவெறி மிக்க ஓர் அரசு அங்கே உருவானது பதினேழாம் நூற்றாண்டில். அந்த நுகத்தில் இருந்து வீரம்செறிந்த ஒரு போராட்டம் வழியாக தென்னாப்ரிக்கா விடுதலை அடைந்தது 1992ல். இத்தனை காலம் அங்கே இருந்த வெள்ளைய இனவெறிக்கு கருத்தியல் அடித்தளம் அமைத்தளித்தவை அங்கிருந்த கிறித்தவ மதநிறுவனங்கள். புகழ்பெற்ற இனவெறியர்கள் அனைவருமே ஆழ்ந்த கிறித்தவ பக்திமான்களும்கூட.ஆனால் கிறிஸ்தவத்தை அந்தப்பழியில் இருந்து மிக எளிதாக வெளியே கொண்டுவருகின்றன மேலைநாட்டு ஊடகங்களும் ஆய்வுநிறுவனங்களும். அதற்கு கிறிஸ்தவ நிறுவனங்களில் இருந்து எழுந்து நிறவெறிக்கு எதிராகப்போராடிய ஓரிரு தனிமனிதர்களை உதாரணமாகக் காட்டுகின்றன. அவர்களே உண்மைக்கிறித்தவர்கள், கிறித்தவ மனநிலை அதுவே என இன்று வரலாறு சமைக்கின்றன. மறுபக்கம் இனவெறிக்கு எதிராக கறுப்பினத்தாருடன் இணைந்து போராடிய இந்திய வம்சாவளியினரை இனவெறியர்களாகச் சித்தரிக்கின்றன.
காந்தியை அந்நிறுவனங்கள் இலக்காக்குவது இந்த நீண்டகாலச் ’சரித்திரச்சமைய’லின் பொருட்டே. அதற்குரிய சரித்திரப்புரட்டர்கள் ஆய்வுலகில் மிகுதி. அவர்கள் கருத்தியல் அடியாட்கள் மட்டுமே. இப்படித்தான் ஐரோப்பா உலகவரலாற்றை எழுதியிருக்கிறது. கல்வித்துறைகளில் நிதியூடுருவல்களை நிகழ்த்தி அதை உலகமெங்கும் நிலைநிறுத்துகிறது. இன்னும் ஒருநூறாண்டுகளாகும் இந்த வரலாற்றெழுத்தின் ஆதிக்கத்திலிருந்து ஆசியாவும் ஆப்ரிக்காவும் வெளியேற.
தென்னாப்ரிக்காவில் காந்தியின் வாழ்க்கை நாம் குறைவாகவே அறிந்த ஒன்று. காந்தியே அவருடைய தன்வரலாற்றில் பதிவுசெய்த நிகழ்ச்சிகள் வழியாகவே நாம் அக்காலகட்டத்தை அறிந்திருக்கிறோம். இந்த விவாதங்களுக்குப் பின்னரே காந்தியின் தென்னாப்ரிக்க வாழ்க்கையை விரிவாக பதிவுசெய்யவேண்டுமென்னும் ஆர்வம் காந்திய ஆய்வாளர்களிடையே உருவாகியது. அந்நூல்களில் ராமச்சந்திர குகாவின் தென்னாப்ரிக்காவில் காந்தி [தமிழாக்கம் சிவசக்தி சரவணன்] ஒரு முக்கியமான நூல். Gandhi Before India என்னும் நூலின் தமிழாக்கம் இந்நூல்.
இதில் குகா வெறுமே தகவல்களை மட்டுமே அடுக்கிச் செல்கிறார். மூல ஆவணங்கள் மற்றும் நினைவுக்குறிப்புகளின் அடிப்படையில் விரிவான ஆதாரங்களுடன் சீராக ஒழுங்கமைக்கப்பட்ட தகவல்களின் பெருந்தொகுதிதான் இந்நூல். குகாவின் தரப்பு என்ன என்பது கூட இந்நூலில் இல்லை. மிகநுணுக்கமான, மிகச்சிறிய தகவல்கள்கூட தரவுகளின் பின்பலத்துடன் இதில் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் வெறும் ஆவணப்பதிவாக இல்லாமல் ஒரு சீரான சித்தரிப்பாக எழுதப்பட்டிருப்பதனால் வரலாற்றினூடாக நிகழ்ந்துசெல்லும் அனுபவத்தை அளிக்கிறது இந்நூல். இந்நூல் முன்வைக்கும் கருத்துக்கள் என்பவை இத்தரவுகள் வழியாக நாம் உருவாக்கிக் கொள்ளக்கூடியவைதான்.
1893 ஏப்ரல் 24 அன்று தாதா அப்துல்லா என்னும் வணிகரின் அழைப்பின்பேரில் காந்தி தென்னாப்ரிக்காவுக்குப் பயணமானார். அப்போது அவருக்கு இருபத்துநான்கு வயது. அவதூறுசெய்யும் வரலாற்றுப்புரட்டர்கள் செய்வது என்னவென்றால் 1948ல் தன் 78 ஆவது வயதில் மறைந்த ‘மகாத்மா’ காந்தியாக அந்த இருபத்துநான்கு வயதான பையனை உருவகித்துக்கொண்டு, அந்த பையனுடைய நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் எழுபத்தெட்டு வயதான அகிம்சைப்போராளியின் ஆளுமை என வாதிடுவதுதான். இந்த அபத்தத்தை ஐரோப்பியரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலையில் இருந்து முனைவர் பட்டம்பெற்ற சிலர் செய்து ஆங்கிலத்தில் அந்நூல் வெளிவருமென்றால் அதற்கு உடனடியாக உலகளாவிய கவனம் உருவாகிவிடுகிறது. அதை பேசிப்பேசி நிலைநாட்ட காந்தியக்காழ்ப்பு கொண்டவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். காந்தி அவர்களைப் பொறுத்தவரை தகர்த்தே ஆகவேண்டிய ஓர் அடையாளம். எந்த காழ்ப்புகள் அமைதிக்கான நோபல் பரிசை காந்திக்கு அளிக்கவிடாமல் தடுத்தனவோ அவை இன்றும் அவ்வண்ணமே நீடிக்கின்றன.
பெரும்பாலான மேலைநாட்டுப் பல்கலைக்கழக ஆய்வேடுகளும் அவற்றிலிருந்து வெளிவரும் நூல்களும் உள்நோக்கம் கொண்டவை, நுட்பமானவையும் ஆனால் விரிவானவையுமான வரலாற்றுப்புரட்டுகள் என்பதே முப்பதாண்டுக்கால வாசிப்பில் நான் கண்டடைந்த உண்மை. அதை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவற்றின் ஆய்வுமுறைமையும், தர்க்கஒழுங்கும் ஒருவகை உயர்நிலை பாவனைகள் மட்டுமே. நம் மூளையில் உள்ள வெள்ளையடிமைத்தனத்தை நாம் கடந்தாலொழிய இதை உணர முடியாது. மேலைநாட்டுப் பல்கலையில் இருந்து வெளிவரும் எந்த ஆய்வும் ஐயத்துடனேயே இந்தியர்களாகிய நம்மால் அணுகப்படவேண்டும், அவற்றின் நேர்மை ஐயத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டாலொழிய அவற்றை நாம் ஏற்கலாகாது. ஒருபோதும் தன்னியல்பான நம்பிக்கையை அவற்றுக்கு அளிக்கக்கூடாது. அவை இந்தியா பற்றி, இந்து மதம் பற்றி எந்நிலைபாடு கொண்டிருந்தாலும்.
குகாவின் இந்நூலின் முதல் மூன்று அத்தியாயங்கள் தென்னாப்ரிக்காவுக்குச் செல்லும் அந்தப் பையனின் அதுவரையிலான வாழ்க்கையை, பின்புலத்தை விவரிக்கின்றன. அவன் எவ்வாறு பரிணாமம் அடைந்தான் என வெறும் வாழ்க்கைநிகழ்வுகள் மற்றும் தகவல்களைக்கொண்டே காட்டுகின்றன. காந்தியின் அதுவரையிலான உருவாக்கத்தில் பங்களிப்பாற்றிய பண்பாட்டுவிசைகள் மூன்று. முதலாவது, அவருடைய குடும்பப்பின்புலம். அவர் பனியாச் சாதியைச் சேர்ந்தவர். கத்தியவார் சம்ஸ்தானத்தில் திவானாக இருந்த கரம்சந்த் காந்தியின் மகன். அன்றைய சூழலில் உயர்நடுத்தரக் குடும்பப் பின்னணி கொண்டவர். அவருடைய அன்னை மரபான வைணவமத நம்பிக்கை கொண்டவர். அன்றுமின்றும் குஜராத்தில் வைணவமும் சமணமும் ஒன்றுடனொன்று கலந்தவை. ஆகவே குடும்பத்தில் ஒரு சமண ஊடாட்டமும் இருந்தது.
அன்றைய ஆசாரமான இந்துக்குடும்பத்தின் நம்பிக்கைகள், விலக்குகள், முன்முடிவுகள், ஒழுக்கங்கள் எல்லாமே குடும்பத்திலிருந்து காந்திக்கு வந்தன. அவர் சாதியாசாரம் பேணுபவராக, மதநம்பிக்கையை இறுகப்பற்றிக் கொண்டவராக, குடும்ப ஆசாரங்களை மீறாதவராகவே இருக்கிறார். அன்றைய முறைப்படி பதிமூன்று வயதில் தன்னைவிட ஒருவயது மூத்தவரான கஸ்தூர்பாவை மணம்புரிந்துகொண்டு ஒரு குழந்தைக்கும் தந்தையாக ஆனார். இது அவருடைய பதினெட்டு வயது வரையிலான வாழ்க்கை.
1988ல் பதினெட்டு வயது நிறைந்த காந்தி லண்டனுக்குப் பயணமானார். அங்கே லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார். காந்தியின் உருவாக்கத்தில் அன்றைய லண்டனுக்கு இருந்த பெரும்பங்கை இந்த நூலின் தரவுகள் காட்டுகின்றன. கடைசிவரை காந்திக்கு இருந்த ஜனநாயகம் மற்றும் சட்டபூர்வ ஆட்சி மீதான நம்பிக்கை உருவாகும் காலம் இது. அன்றைய லண்டன் இரண்டு முகம் கொண்டது. ஒன்று உலகை ஆட்சிசெய்த ஆதிக்கத்தின் லண்டன். இன்னொன்று அனைத்து ஜனநாயகச் சிந்தனைகளும், அனைத்து மாற்றுப்பண்பாட்டுக் கூறுகளும் முளைத்து வேர்விட்டுக்கொண்டிருந்த லண்டன். காந்தி அந்த இரண்டாவது லண்டனுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டார்.
காந்தி அளவுக்கு அந்த ஐரோப்பாவுடன் தொடர்பு கொண்ட, தொடர் உரையாடலில் இருந்த இன்னொரு இந்தியத்தலைவர் இல்லை. காந்தியில் செல்வாக்கு செலுத்திய அந்த ‘மறு லண்டனின்’ முகம் என ஹென்றி சால்ட் அவர்களைச் சொல்லலாம். [Henry Shakespear Stephens Salt] சைவ உணவு, விலங்குகளின் உரிமை, அடிப்படை மானுட உரிமைகள், தனிநபர் சார்ந்த ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றுக்கான போராளியாக இருந்த சால்ட் அவர்களை காந்தியின் ஆசிரியர்களில் ஒருவராகவே சொல்லலாம்.
காந்தி லண்டனில் மிகச்சிறந்த வெள்ளை இனத்து நண்பர்களை அடைந்தார். ஆகவே எப்போதுமே அவர் இனக்காழ்ப்புக்கு அப்பாற்பட்டவராக, வெள்ளையினத்தை எதிர்நிலையில் காணாதவராகவே இருந்தார். வெள்ளையினத்தவர் மீது இந்தியர் காட்டிய காழ்ப்பையும் வன்முறையையும் அவர் இறுதிவரை கடுமையாகவே எதிர்த்தார் -நேரடியாக ஆதிக்கத்தின் முகங்களாக இருந்தவர்கள் மீதான வன்முறையைக்கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. லண்டனில் அவர் சைவ உணவு இயக்கத்தவர்களைக் கண்டடைந்தது அவர் ‘மாற்று ஐரோப்பா’வுடன் தொடர்புகொள்ளும் தொடக்கமாக அமைந்தது. குவாக்கர்கள் போன்ற பல்வேறு கிறிஸ்தவச் சீர்திருத்தக்குழுவினருடன் கடைசிவரை அவர் உறவுடனும் உரையாடலுடனும் இருந்தார்.
மூன்றாவதாக அவர்மேல் செல்வாக்கு செலுத்தியது சமணம். குறிப்பாக சமண ஆன்மிக ஞானியான ராய்சந்த். அனைத்து மதங்களையும் ஒற்றை உரையாடலின் வெவ்வேறு பகுதிகளாகக் காண்பது, உண்மை என்பது பலமுகம் கொண்டதாகவே இருக்கமுடியும் என்னும் தெளிவு, வழிபாடுகள் சடங்குகளுக்கு அப்பாலுள்ள அகப்பயிற்சி சார்ந்த ஆன்மிகம் மீதான ஈடுபாடு, பிரம்மசரியம் மற்றும் தன்னை ஒடுக்கும் துறவு ஆகியவற்றின் மீதான நம்பிக்கை ஆகியவை காந்தி ராய்சந்திடமிருந்து பெற்றுக்கொண்டவை.
இம்மூன்று விசைகளால் உருவாக்கப்பட்ட, இன்னும் ஆளுமை முழுமை பெறாத காந்திதான் தென்னாப்ரிக்காவுக்கு வந்திறங்கினார். அவருக்கு அரசியலில் எந்த அறிமுகமும் இல்லை. அன்று இந்தியாவில் அரசியலே உருவாகியிருக்கவுமில்லை. காந்தி தென்னாப்ரிக்காவிற்குச் செல்வதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 1885 ல் தான் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூமால் இந்தியதேசியக் காங்கிரஸே தொடங்கப்பட்டிருந்தது. காந்தி பிரிட்டனில் அரசியல் ஈடுபாடு எதையும் கொண்டிருக்கவில்லை. அவர் தென்னாப்ரிக்காவுக்குச் செல்வதற்கு பத்தாண்டுகளுக்கு முன்புதான் கார்ல் மார்க்ஸ் லண்டனில் காலமானார். உலக அரசியலில் மார்க்ஸியம் பரவலாகப் பேசப்பட்டது மேலும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் 1917ல் ரஷ்யப்புரட்சி நடைபெற்ற பிறகுதான்.
காந்தி நேரடியாக அரசியல் கோட்பாடுகளைக் கற்று, அரசியல் இலக்குடன் அரசியலுக்குள் நுழைந்தவர் அல்ல என்பது முக்கியமான ஒன்று. தென்னாப்ரிக்க அரசியலுக்குள் அவர் தற்செயலாகவே சென்று சேர்ந்தார். உண்மையில், அந்த அரசியலே அவர் தொடங்கியதுதான். தன்னுள் உள்ள அறவுணர்ச்சியாலும் அடங்கமறுக்கும் ஆன்மவல்லமையாலும் அவர் தென்னாப்ரிக்க இந்தியர்களுக்கான ஓர் அரசியலியக்கத்திற்கு வித்திட்டார், அவரே அதை வளர்த்து நிறுவினார். இந்நூலை வாசிக்கையில்தான் அந்தத் திகைப்பூட்டும் உண்மை கண்முன் எழுந்து நின்றது. இன்றும் உலகவரலாற்றில் ஒரு பெருநிகழ்வெனக் கருதப்படும் அந்த மாபெரும் அரசியல் இயக்கத்தை காந்தி ஆரம்பிக்கும்போது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் தென்னாப்ரிக்காவில் டர்பன் நகருக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன.
காந்தியின் போராட்டம் அவர் தென்னாப்ரிக்காவுக்கு வந்ததுமே ஆரம்பமாகிவிட்டது. இந்நூலைப் படிக்கையில் ஒன்று தெரிகிறது, ஒருவேளை அவர் லண்டன் சென்றிருக்காவிட்டால் அவ்வாறு உடனடியான ஓர் எதிர்ப்பரசியலுக்குள் சென்றிருக்க வாய்ப்பில்லை. அவர் லண்டனில் பெரும்பாலும் நிறவெறி இல்லாத ஒரு சூழலில் பாரிஸ்டர் படிப்பை முடித்தவர். பிரிட்டனிலேயே பாராளுமன்ற உறுப்பினராக தாதாபாய் நௌரோஜி இருப்பதைக் கண்டவர். ஆகவே தென்னாப்ரிக்காவில் தெருக்களில் இந்தியர் நடமாடுவதற்கு சட்டபூர்வ அனுமதிக்கடிதத்தை கையில் வைத்திருக்கவேண்டும், வழக்கறிஞராக பதிவுசெய்யவும் கட்டுப்பாடுகள் உண்டு, பொது ஊர்திகளில் வெள்ளையருடன் பயணம் செய்யக்கூடாது என்பவை போன்ற சட்டங்கள் அவரை துணுக்குறச் செய்கின்றன. அவர் உடனடியாக அவற்றுக்கான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என வணிகர்களும் கூலித்தொழிலாளர்களுமான இந்தியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதற்கான அமைப்பை உருவாக்கினார். அவ்வாறாக அவர் அரசியலுக்குள் நுழைந்தார்.
காந்தியின் தென்னாப்ரிக்க அரசியல் அங்கிருந்த சூழலில் இருந்து உருவானது. அவர் வயதில் மிக இளையவர். அரசியல்கொள்கைகளைக் கற்றவர் அல்ல. அரசியல்கொள்கைகளை அவர் கற்பதே அரசியல்போராட்டங்களில் தீவிரமாக இயங்கி நெடுங்காலம் முன்சென்ற பிறகுதான். அவர் இஸ்லாமிய வணிகர்களின் வழக்கறிஞர். இந்துக்கள், முஸ்லீம்கள், பார்ஸிகள் அடங்கிய ஒரு வணிகர்குழுவின் பிரதிநிதியாகவே அவர் பேச ஆரம்பிக்கிறார். அவர்களின் எண்ணங்களையும் நோக்கங்களையுமே பிரதிபலிக்கிறார். முதலில் அவர் அவர்களை தலைமைதாங்கி வழிநடத்தவில்லை, அவர்களின் ஊழியரும் பிரதிநிதியுமாகவே செயல்பட்டார். மெல்லமெல்லத்தான் அவருக்குத் தலைமையிடம் உருவாகிறது. அதுவும் பல போராட்டங்களில் வென்றபின். அதற்கு மிகக்கடுமையான எதிர்ப்பும் இருந்தது என்பதை இந்நூல் காட்டுகிறது.
எந்த அரசியல்போராட்டமும் வெவ்வேறு மொழிபுகள் [Narrative] நடுவே உள்ள போராட்டமே என்பதை இன்றைய பின்நவீனத்துவ காலகட்டத்தில் பெரிதாக விளக்கவேண்டியதில்லை. ஓர் ஆதிக்கம் எப்படி உருவாகிறது? ஆதிக்கம் செலுத்துவதற்கான உரிமையும் திறனும் தனக்குண்டு என ஒரு சாரார் ஒரு மொழிபை உருவாக்குகிறார்கள். ஒடுக்கப்படுவோர் ஒடுக்கப்படவேண்டியவர்கள் என்றும், ஒடுக்குமுறை என்பது ஒருவகையில் அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதே என்றும் அந்த மொழிபை விரிவாக்குகிறார்கள். அடக்குமுறையாலும் பிரச்சாரத்தாலும் அதை ஒடுக்கப்படுவோர் ஏற்கவைக்கிறார்கள்.
உரிமைப்போர் என்பது ஆதிக்கவாதிகளின் அந்த மொழிபுகளை உடைத்து ஒடுக்கப்பட்டோர் இன்னொரு மொழிபை உருவாக்குவதே. அது ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குப் பெருமிதத்தையும் வரலாற்றையும் உருவாக்கிக் கொள்வது, தங்களை ஒன்றாகத் திரட்டும் அடையாளங்களைக் கட்டமைத்துக்கொள்வது ஆகியவற்றினூடாக நிகழ்கிறது. சிலசமயம் ஆதிக்கம் செலுத்துபவர்களின் சிறுமை அல்லது இழிவுகளைப் கண்டடைந்து பெருக்கிக்கொள்வது, அவர்களை தீய சக்திகளாகப் புனைந்துகொள்வது என அந்த மொழிபு விரிவடைகிறது. எந்த விடுதலைச்சமரிலும் நிகழ்வது இந்த மொழிபுகளின் போர்தான். அது கருத்தியல்தளத்தில் நிகழ்ந்து வலுக்கொண்ட பின்னரே உண்மையான போர் நிகழத்தொடங்குகிறது.
அன்றைய தென்னாப்ரிக்க வெள்ளையினத்தார் இந்தியர்களைப் பற்றி ஒரு சித்திரத்தை உருவாக்கியிருந்தனர். அதை இந்நூலில் நிறவெறிகொண்ட வெள்ளையினத்து அதிகாரிகள் எழுதிய அறிக்கைகளிலும் அன்றிருந்த வெள்ளையினத்தாரின் நாளிதழ்களின் செய்திகள், தலையங்கங்கள் மற்றும் வாசகர் கடிதங்களில் தொடர்ச்சியாக காண்கிறோம். இந்நூலிலேயே ஏராளமான பகுதிகள் எடுத்துத் தரப்பட்டுள்ளன. ஆப்ரிக்கர்களை வெள்ளையர்கள் பண்பாடற்ற பழங்குடிகள், வன்முறைத்தன்மை கொண்டவர்கள் என்று சித்தரித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நவீனக் கல்வி, நவீனத்தொழில் மற்றும் உழைப்புமுறைகள், நவீன குடிமைச்சமூகப் பண்புகளைக் கற்பிக்கவே முடியாது என்று கூறினர். அவர்களால் வளமிக்க ஆப்ரிக்க நிலத்தில் வேளாண்மை செய்யவோ, கனிவளங்களைக்கொண்டு தொழில்களை உருவாக்கவோ முடியாது. அதற்குத் தகுதி கொண்ட வெள்ளையர் அவற்றைச் செய்து அச்செல்வத்தைக் கொண்டு கறுப்பினத்தவரை கட்டுப்படுத்திப் பாதுகாக்கவேண்டும். வெள்ளையினத்தவரின் சட்டத்தின் ஆட்சி இல்லையேல் கறுப்பினத்தவர் ஒருவரை ஒருவர் கொன்றே அழிப்பார்கள் என வாதிட்டனர்
தென்னாப்ரிக்க இந்தியர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள். நிறத்தால் அவர்கள் கறுப்பினத்தவரைப் போன்றவர்கள். அதோடு அவர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கடும்சுரண்டலின் விளைவாக இந்தியாவில் உருவான பெரும்பஞ்சங்களில் இருந்து உயிர்தப்பி ஒப்பந்தக் கூலியடிமைகளாக தென்னாப்ரிக்காவுக்குச் சென்றவர்கள். அவர்கள் இங்கிருந்த கல்வியற்ற அடித்தள மக்கள். ஆகவே அவர்களிடம் சுற்றுப்புறத் தூய்மையோ சமூகஒருமையோ தற்கட்டுப்பாடோ இருக்கவில்லை. நடைமுறையில் அவர்களுக்கும் கறுப்பினத்தாருக்கும் பண்பாட்டிலும் வாழ்முறையிலும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. ஆகவே வெள்ளையர் இந்தியர்களையும் கறுப்பினத்தாரைப்போல பழங்குடிகள் என்றே கருதினர்.
அன்று ஆப்ரிக்கப் பழங்குடிகளிடையே வெள்ளையர் பாணியிலான நவீனச் சமூகக்கட்டமைப்புகளோ அரசியல்நெறிகளோ இல்லை. அவர்களின் சமூகக்கட்டமைப்பும் அரசியலும் வேறுவகையானவை. ஆகவே கறுப்பினத்தவரால் அரசியலமைப்புகளில் பங்குபெறவோ சிவில்சமூகமாகச் செயல்படவோ முடியாதென்று வெள்ளையர் நினைத்தனர். கறுப்பர்களான இந்தியர்களாலும் ஜனநாயகத்தில் ஈடுபட, அரசமைப்புகளை கையாள, குடிமைச்சமூகமாகச் செயல்பட இயலாது என்று வெள்ளையர் கூறினர்.
அந்த சித்தரிப்பை தென்னாப்ரிக்க இந்தியர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அவர்களில் மிகச்சிறுபான்மையினரான உயர்மட்ட வணிகர்களே இந்தியர்களுக்கான உரிமைகளுக்குப் போராடும் இயக்கத்தை உருவாக்கி நடத்தினர். ஆனால் அது ஓர் அரசியலியக்கமாக ஆகவேண்டுமென்றால் அவர்கள் அடிமைக்கூலிகளாக இருந்துவந்த பெரும்பான்மையினரை இணைத்துக்கொண்டாகவேண்டும். இந்த ஒற்றுமைக்காக தென்னாப்ரிக்க இந்தியர்களின் இயக்கங்கள் தொடர்ந்து போராடிவந்ததை இந்நூல் காட்டுகிறது. கூடவே ’கூலி’ களும் கறுப்பர்களைப் போன்றவர்களே என்னும் வெள்ளையர்களின் மொழிபை எதிர்கொண்டாகவும் வேண்டும். அதுவே அன்றைய அரசியல் சூழல்
ஒருபக்கம் இந்திய வணிகர்குடியினர் அங்கிருந்த அடித்தள இந்தியர்களிடம் தூய்மை, குடிமைப்பண்பு, கட்டுப்பாடு ஆகியவற்றை வலியுறுத்திக்கொண்டிருந்தனர். காந்தி அதற்கென கடைசிவரைப் போராடினார். இந்தியர்கள் இன்னொரு பக்கம் பிரிட்டிஷாரிடம் இந்தியா என்பது மிகத்தொன்மையான ஒரு நாடு என்றும், அதன் பண்பாடு ஐரோப்பியப் பண்பாட்டுக்குச் சமானமானது என்றும், இந்தியாவில் மிகத்தொன்மையான காலகட்டத்திலேயே முன்மாதிரியான அரசியலமைப்புக்களையும் ஜனநாயகத்துக்கு நிகரான நிர்வாக அமைப்புகளையும் அவற்றின் அடிப்படையில் குடிமைச்சமூகத்தையும் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் வாதிட்டனர். இந்தியர்கள் கல்விகற்கும் திறன் மிக்கவர்கள், தொல்பழங்காலம் முதலே உயர்கல்வி இந்தியாவில் இருந்துள்ளது என்றும் கூறினர்.இன்று ஓர் இயல்பான வரலாற்று உண்மையாக நமக்குத் தோன்றும் இந்தக்கருத்து அன்று வெள்ளையர்களால் அபத்தமான ஒரு உரிமைக்கோரிக்கையாகவே கருதப்பட்டது. இதுவே அன்றிருந்த மொழிபுகளின் போர்.
இந்நோக்கிலேயே தென்னாப்ரிக்க இந்தியர் தங்களைக் கறுப்பர்கள் என கருதலாகாது என்றும், தாங்கள் மேம்பட்ட பண்பாட்டையும் தொன்மையான வரலாற்றையும் கொண்டவர்கள் என்றும் கூறினர். தங்களை எல்லா தருணங்களிலும் கறுப்பினத்தாரிடமிருந்து வேறுபடுத்திக்கொண்டனர். இன்றும்கூட வெள்ளையர் வாழும் நாடுகள் முழுக்க இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் எகிப்தியர்களும் ஈரானியர்களும் இலங்கையரும் இதையே செய்கிறார்கள். எங்கும் தங்களை அவர்கள் கறுப்பினத்தவருடன் இணைத்துக்கொள்வதில்லை. எங்கும் தங்கள் வேறுபாட்டை, மேலான தன்மையை முன்வைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
ஏனென்றால் இன்றும் இந்தியர்களை கறுபினத்தவருடன் இணைக்கும் ஒரு மொழிபு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மேலோங்கி உள்ளது. Coloured people என்னும் பொதுவழக்கு அந்த மொழிபின் தலைச்சொல். இன்று அமேரிக்காவிலும் ஐரோப்பாவிலுமுள்ள இந்தியர்களின் அரசியலே வேறு. அவர்களின் பிரச்சினைகளுக்கும் கறுப்பர்களின் பிரச்சினைகளுக்குமிடையே எந்த பொதுத்தன்மையும் இல்லை. குறிப்பாக கறுப்பினத்தவரை போதைப்பழக்கத்துடனும் குற்றச்செயல்பாடுகளுடனும் இணைக்கும் ஒரு மொழிபு வெள்ளையருக்கு உண்டு. இன்றைய அமெரிக்க- ஐரோப்பிய இந்தியர்கள் அங்குள்ள கறுப்பினத்தவருடன் எவ்வகையிலேனும் தன்னை இணைத்துக்கொண்டால், அந்த மொழிபுக்குள் அவர்கள் இழுக்கப்பட்டால் அவர்களுக்கும் அந்த அடையாளம் வந்துசேரும். இந்தியர்கள் மிகமிக அமைதியான, வன்முறையற்ற, தொழில்-வணிகப் பின்னணிகொண்ட மக்கள். அவர்களுக்கு அந்த அடையாளம் பேரழிவாக முடியும். அவர்களின் அரசியலே திரிபடையக்கூடும். ஆகவே இந்தியர்கள் வெள்ளையரின் அந்த மொழிபை திட்டவட்டமாக எதிர்க்கவேண்டியிருக்கிறது. எனவே அவர்கள் கறுப்பினத்தவருடன் தங்களை எல்லாவகையிலும் வேறுபடுத்திக்கொள்கிறார்கள். இதை அப்பட்டமாகவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் காணலாம்.
இதே அரசியல்தான் தென்னாப்ரிக்காவில் நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பும் இருந்தது. அன்றிருந்த இந்தியர்கள் தங்களைப் பற்றிய வெள்ளையரின் மொழிபுக்கு எதிராகப் போராடியபோது தங்களை கறுப்பினத்தவர் என்று சொல்லக்கூடாது என்று தொடர்ந்து வாதிட்டனர். அது அன்றைய அரசியல். அன்றிருந்த இந்திய சமூகத்தின் மனநிலை. காந்தி அதை பிரதிபலித்தார், ஏனென்றால் அவர் அவர்களின் ஊழியர் மற்றும் பிரதிநிதி
இந்தக்காலத்தில் காந்தியின் பணி என்பது மனுக்கள், அறிக்கைகள் தயாரித்து அரசுக்கு அனுப்புவது. வெள்ளையர்கள் நடத்திவந்த நிறவெறிகொண்ட இதழ்களுக்கு தொடர் வாசகர்கடிதங்கள் அனுப்புவது மற்றும் இந்தியர்களுக்காக நீதிமன்றத்தில் வாதிடுவது. இந்த மனுக்கள், அறிக்கைகள், கடிதங்கள் மற்றும் நீதிமன்ற வாதங்களில் அவர் இந்தியர்களின் பொதுக்கருத்தையே முன்வைக்கிறார். இந்தியர்களை பழங்குடிகளான கறுப்பர்களுடன் இணையாகக் கருதலாகாது என்றும், இந்தியர்கள் நவீன ஜனநாயகத்தில் செயல்படவும், அரசுப்பொறுப்புகளில் பணியாற்றவும் தகுதிகொண்டவர்கள் என்றும் அவர் வாதிட்டது இதனால்தான். அன்றைய தென்னாப்ரிக்க நாளிதழ்களில் எழுதிய வெள்ளையர்களுடன் ஓயாத கடிதப்போரில் கடைசிவரை காந்தி ஈடுபட்டிருப்பதை இந்நூல் மிக விரிவாக ஆவணப்படுத்துகிறது.
இன்னொன்றையும் சொல்லவேண்டும். அன்றைய கறுப்பினத்தவருக்கும் இந்தியர்களுக்கும் உரிமைக்கோரிக்கையில் பெரிய வேறுபாடு இருந்தது. ஆப்ரிக்கா கறுப்பினத்தவரின் நாடு.அவர்கள் வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வன்முறைப்பாதையில் போராடிக்கொண்டிருந்தனர். ஜூலு கலகம் போல தனிப்பட்ட இனக்குழுப்போராட்டங்களாகவே அவை இருந்தன. பேரழிவையும் உருவாக்கின. வெள்ளையர் அந்தக் கலவரங்களைப்பற்றி அச்சம் கொண்டிருந்தனர். அவர்கள் ஆப்ரிக்க நிலத்தை தங்கள் போர்வல்லமையால் வென்றெடுத்ததாகவும், ஆகவே அந்நிலம் தங்களுக்குரியது என்றும் நம்பினர். அன்றைய உலகளாவிய மனநிலை அது. படைவல்லமையால் எதையும் வெல்லலாம், வென்றெடுத்த எதையும் உரிமைகொள்ளலாம் என்றே உலகம் முழுக்க நம்பப்பட்டது. ஆகவே கறுப்பினக் கலவரங்களை தங்களுக்கு எதிரான போர் என்றே வெள்ளையர் நினைத்தனர். அவற்றைப் படைவல்லமையால் ஒடுக்கினர்.
ஆப்ரிக்க இந்தியர்கள் வெளியே இருந்து அந்நிலத்துக்கு வந்தவர்கள். கறுப்பினத்தவரால் அவர்களும் அந்நியராகவும், ஆக்ரமிப்பாளர்களாகவும்தான் கருதப்பட்டனர். கூடவே வெள்ளையர்களால் பண்பாடற்ற கறுப்பினத்தவர்களாகக் கருதப்பட்டு ஒடுக்கவும் பட்டனர். ஆகவே இந்தியர்கள் தங்களை மிகத்தெளிவாக வரையறை செய்யவேண்டியிருந்தது. தாங்கள் கறுப்பினத்தவர் அல்ல, கறுப்பினத்தவர்களுடன் எவ்வகையிலும் தொடர்புடையவர்களோ, கறுப்பினத்தவரின் வன்முறைப் போர்களுடன் எக்காலத்திலும் ஒத்துழைக்கச் சாத்தியமானவர்களோ அல்ல என்று திரும்பத்திரும்ப தெளிவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. தாங்கள் எவ்வகையிலும் வன்முறையை நம்புபவர்கள் அல்ல என்றும், வெள்ளையர்களை விட பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமானவர்கள் என்றும், ஜனநாயக நடவடிக்கைக்கும் சிவில்சமூக வாழ்க்கைக்கும் பலநூற்றாண்டுகளாக பயிற்சிபெற்றவர்கள் என்றும் அவர்கள் நிறுவிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது.
மறுபக்கம் வெள்ளையர் இந்தியர் பற்றிய தங்கள் மொழிபை திரும்பத்திரும்ப முன்வைத்தார்கள். இந்தியர்களை கறுப்பர்கள் என்றும், கறுப்பினத்தவரின் கலககங்களில் மறைமுகமாகப் பங்கெடுப்பவர்கள் அல்லது பங்கெடுக்க வாய்ப்புள்ளவர்கள் என்றும் தொடர்ந்து வாதிட்டனர். இந்தியர்களின் ஜனநாயக வழியிலான அகிம்சைப்போராட்டங்களை எல்லாம் ‘கலகங்கள்’ என்ற சொல்லால் வரையறை செய்தனர். வெள்ளையினப் பொதுமக்கள் உண்மையில் அப்படி நம்பினர். அரசியல்வாதிகள் அதை ஓர் அரசியல் உத்தியாகக் கடைப்பிடித்தனர். அந்த கூற்றைத்தான் காந்தி தென்னாப்ரிக்க இந்தியர்களின் பொருட்டு மறுத்து வாதிட்டுக்கொண்டே இருந்தார்.
அன்றைய அந்த மொழிபு நுட்பமாக இன்றும் வெள்ளையர்களிடம் நீடிக்கிறது. வெள்ளையர்கள் தாராளவாதிகளோ முற்போக்காளர்களோ ஆக இருந்தாலும்கூட காந்தி அவர்களை விடவும் இயல்பாகவே நவீன ஜனநாயகத்துக்கு அணுக்கமானவராக, குடிமைவிழுமியங்கள் கொண்டவராக இருந்தார் என்பதை அவர்களால் தங்களின் ஆழுள்ளத்தில் உறையும் மேட்டிமைத்தனம் காரணமாக நம்பமுடிவதில்லை. ஆகவே காந்தியை ஒரு இந்திய தேசியவாதி, இந்து தேசியவாதி என்று நிறுவ முயல்கிறார்கள். அவருடைய போராட்டங்களில் வன்முறை உள்ளடக்கம் இருந்தது என்று வாதிடுகிறார்கள். அமைதிக்கான நோபல்பரிசு அவருக்கு வழங்கப்பட வாய்ப்பிருந்த காலங்களில் மேற்கண்ட காரணங்களைச் சொல்லியே அது தவிர்க்கப்பட்டது.இன்று காந்தியை இனவாதி என அவர்கள் நிறுவமுயல்வதும் இந்த இனமேட்டிமைப்பார்வையின் வெளிப்பாடுதான்.
தென்னாப்ரிக்க இந்தியர்களின் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் முக்கியமாக வணிகர்கள். அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் கருணையில் வாழ்ந்தவர்கள். தங்களுக்கிடையேயான பூசல்களுக்குக் கூட அவர்கள் நம்பியது பிரிட்டிஷ் சட்டங்களைத்தான். தென்னாப்ரிக்க இந்தியர்கள் உண்மையிலேயே பிரிட்டிஷ் ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்தவர்கள், இல்லையேல் அவர்கள் கறுப்பினப் பழங்குடிப் படையினரால் முற்றாகவே அழிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மேல் அத்தகைய வெறுப்பு அன்றைய கறுப்பினத்துப் போராளிக்குழுக்களால் வெளிப்படுத்தவும்பட்டது. அங்கே இந்தியர்கள் மிகச்சிறுபான்மையினரும்கூட. ஆகவே அவர்கள் பிரிட்டிஷ்ப்பேரரசின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர். பெரும்பாலானவர்களுக்கு உண்மையிலேயே அந்நம்பிக்கையும் இருந்திருக்கலாம்.
எல்லா மனுக்களிலும் காந்தி ஆப்ரிக்க இந்தியர்களின் பொருட்டு முன்வைத்த நிலைபாடு ஒன்று உண்டு. அது இதுதான். ‘பிரிட்டிஷ் பேரரசு அடிப்படையில் மானுட சமத்துவத்தை கொள்கையாகக் கொண்டுள்ளது. பிரிட்டனின் பிரஜைகள் எல்லாருமே சமானமானவர்கள் என்று அது சொல்கிறது. ஆகவே இந்தியர்களை கீழானவர்களாக நடத்தும் தென்னாப்ரிக்க வெள்ளையினத்து ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் பேரரசு முன்வைக்கும் விழுமியங்களை மீறுகிறார்கள். இந்தியர்கள் குடிமைப்பண்பு, தூய்மைப்பழக்கம் ஆகியவை இல்லாதவர்கள் என அதற்குக் காரணம் சொல்கிறார்கள், அது பொய். இந்தியர்களால் ஜனநாயக சமூகத்தின் குடிமக்களாக வாழமுடியும். இந்தியர்கள் கறுப்பர்களின் கலவரங்களில் பங்கெடுக்கக்கூடும் என்கிறார்கள், ஆனால் இந்தியர்கள் கறுப்பினத்தவர்கள் அல்ல, அவர்களுக்கும் ஆப்ரிக்கக் கறுப்பினத்தவர்களுக்கும் தொடர்பே இல்லை. தென்னாப்ரிக்க ஆட்சியாளர்களின் நிறவெறிப் பாகுபாடு பிரிட்டிஷ் முடியாட்சியின் மாண்புக்கு இழுக்கு சேர்ப்பது’.
இத்தனைக்கும் அன்றைய தென்னாப்ரிக்க இந்தியர்களின் கோரிக்கை என்பது சமமான குடியுரிமையோ வாக்குரிமையோ அல்ல. வணிகம் செய்யவும் அதன்பொருட்டு பயணம் செய்யவும் உரிமை மட்டுமே. திரும்பத்திரும்ப வெள்ளையர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதில் எந்த தடையும் தங்களுக்கு இல்லை என காந்தி தென்னாப்ரிக்க இந்தியர்களின் பொருட்டு வெள்ளையரிடம் வாக்குறுதி அளிக்கிறார். தென்னாப்ரிக்காவுக்கு இந்தியர்கள் வந்து பெருகிவிடுவார்கள் என்ற அச்சம் வெள்ளைக் குடிமக்கள் நடுவே இனவெறியர்களால் பரப்பப்பட்டது. அதுவே இந்தியர்களுக்கு எதிரான உணர்ச்சியை உருவாக்கியது. காந்தி அந்த ஐயம் தேவையற்றது, இந்தியர்கள் மேற்கொண்டு தென்னாப்ரிக்காவுக்கு வராமல் பார்த்துக்கொள்வோம் என்றே வாக்குறுதி அளிக்கிறார்.
உண்மையிலேயே சில அடிப்படை நம்பிக்கைகள் அன்றைய இளம் காந்திக்கு இருந்தன. ஒன்று, அவர் இந்தியர்களைவிட கறுப்பினத்தவர்கள் பண்பாட்டால் தாழ்ந்தவர்கள் என்றும் நவீனக் குடிமைப்பண்பு இல்லாதவர்கள் என்றும் எண்ணினார். அவர்களைச் சுட்டிக்காட்ட ஆங்கிலேயர்கள் பரவலாகப் பயன்படுத்திய காஃபிர்கள் என்னும் சொல்லை தானும் கையாண்டார். இரண்டாவதாக, அவர் பிரிட்டிஷ் ஆட்சி என்பது அன்றிருந்த வேறெந்த ஆட்சிமுறையை விடவும் முற்போக்கானது என்றும் நீதிநோக்கு கொண்டது என்றும் கருதினார். வெள்ளையர்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலை நிகழ்த்த முடியும் என்று நினைத்தார். அனைத்தையும்விட முக்கியமானது காந்தி அந்தரங்கமாக இந்தியர்கள் போதிய குடிமைப்பண்புப் பயிற்சி அற்றவர்கள், தூய்மைப்பழக்கம் இல்லாதவர்கள் என்று கருதினார். காந்தி இந்தியர்களை நோக்கிப் பேசியபோதெல்லாம் குடிமைப்பண்பு தூய்மைப்பழக்கம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
உண்மையில் இந்நூலை வாசிக்கையில் இந்த நம்பிக்கைகள் முற்றாக தவறானவை என்று சொல்லிவிட முடியாது என்னும் எண்ணமே உருவாகிறது. பலசாதிகளையும் மதங்களையும் சார்ந்தவர்களான இந்தியர்கள் கட்டற்றவர்களாக, தூய்மைப்பண்பு அற்றவர்களாகவே ஆப்ரிக்காவில் இருந்தார்கள். சொல்லப்போனால் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றுகூட இந்தியாவெங்கும் அப்படித்தான் நீடிக்கிறார்கள். தமிழகத்தின் எந்த ஒரு நகரத்தெருவுக்கோ சிற்றூருக்கோ வரும் ஐரோப்பியன் இருநூறாண்டுகளுக்கு முன்பு தென்னாப்ரிக்க வெள்ளையர் அடைந்த அதே மதிப்பீட்டையே சென்றடைவான் என்றே நான் நினைக்கிறேன். நாம் நம்மை புறவயமாக மதிப்பிடுவதில்லை. போலிப்பெருமிதங்களில் திளைத்து நம்மைநாமே ஏற்றிப்பேசி கூச்சலிடுவோம். ஆனால் குடிமைப்பண்புகள் எதையும் கற்றுக்கொள்ளவும் மாட்டோம். நம்மை நோக்கி குடிமைப்பண்புக்காகவும் தூய்மைக்காகவும் பேசிக்கொண்டே இருந்த கடைசி அரசியல்தலைவர் காந்திதான்.
இந்தியாவில் அன்றைய மன்னர்கள் நிறுவியிருந்த எந்த ஆட்சியை விடவும் மேலானதுதான் வெள்ளையர்களின் ஆட்சி. பிரிட்டிஷ் ஆட்சியமைப்பிலும் நீதிமுறையிலும் மானுடசமத்துவம் கொள்கையளவிலேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தென்னாப்ரிக்க கறுப்பின மக்கள் பலவகையான இனக்குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள் பூசலிட்டுக்கொண்டிருந்தார்கள். இன்றும் ஆப்ரிக்க நிலத்தில் குடிமைச்சமூகமும் நவீன அரசும் நிலவும் பகுதிகள் குறைவுதான். ஆப்ரிக்க மக்களுக்கு நெடிய பழங்குடிப் பண்பாடும், நிலப்பிரபுத்துவப் பண்பாடும் இருந்தது. செழுமையான மதங்களும் வாழ்க்கைநெறிகளும் இருந்தன. ஆனால் அவை நவீன உலகுடன் தொடர்பற்றவையாகவே இருந்தன. ஆகவே அன்றைய காந்தியின் நம்பிக்கைகள் அவருடைய முன்முடிவுகள் அல்லது தவறான நம்பிக்கைகளில் இருந்து வந்தவை அல்ல. அவற்றுக்கு கண்கூடான யதார்த்தமே சான்றாக இருந்தது. அந்த உண்மையை அரசியல்சரிகள் சுயபெருமிதங்கள் ஆகியவற்றைக்கொண்டு மறைக்கவேண்டியதில்லை.
காந்தி 1914ல் தன் நாற்பத்து நான்காம் வயதில் தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தார். அவர் அங்கிருந்த இருபதாண்டுக்காலத்தில் தென்னாப்ரிக்காவின் இந்தியர்களின் உரிமைக்கான பேரியக்கம் ஒன்றை உருவாக்கி தலைமைதாங்கி நடத்தி அடிப்படை வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்தார். இந்த இருபதாண்டுகளில், இருபத்துநான்கு வயதிலிருந்து நாற்பத்து நான்காம் வயதுவரையிலான காலகட்டத்தில் அவர் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டிருந்தார். தன்னுடைய அரசியல்பார்வையை உருவாக்கிக் கொண்டிருந்தார். தன் அரசியல்போராட்ட முறைமைகளை கற்பனைசெய்து நடைமுறைப்படுத்திப்பார்த்து கற்றுக்கொண்டிருந்தார். இந்நூல் அந்த பரிணாமத்தின் சித்திரத்தை அளிக்கிறது.
அதில் முக்கியமானது, காந்திக்கு பிரிட்டிஷ் பேரரசின் மீதிருந்த நம்பிக்கை மெல்லமெல்ல தளர்ந்து அவர் கொள்கையளவில் அதற்கு எதிரானவராக ஆவதுதான். ஐரோப்பிய நாகரீகம் மீது பொதுவான மதிப்பு கொண்டிருந்த அவர் அதன் மேல் கடுமையான விமர்சனம் கொண்டவராக மாறினார். அல்லது அதில் மேலோங்கியிருந்த நுகர்வு – ஆதிக்கம் ஆகியவற்றாலான தளம் மேல் எதிர்ப்பு கொண்டார். தென்னாப்ரிக்காவில் இருந்து வெளியேறும் காந்தி பிரிட்டிஷ் ஆட்சி மேல் நம்பிக்கையற்றவர், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், ஐரோப்பியநாகரீகத்தின் பொதுப்போக்கு என்பது நுகர்வு வெறிகொண்டதும் ஆக்ரமிப்புத்தன்மை கொண்டதும் அழிவைநோக்கிச் செல்வதுமாகும் என கருதியவர். ஐரோப்பாவின் மாற்றுப் பண்பாடுகளுடன் மட்டுமே அணுக்கம் கொண்டவர், அவற்றுடன் மட்டுமே உரையாடிக்கொண்டிருந்தவர்.
இரண்டாவதாக, தென்னாப்ரிக்கா சென்று பல ஆண்டுகள் கடந்தன்பின் அங்குள்ள இந்தியர்களுக்கான உரிமைகளுக்கான போராட்டத்தில் சிறைப்படும்போதுதான் காந்தி கறுப்பினத்து மக்களுடன் நெருக்கமாகப் பழக்கம் கொள்கிறார். அவர்களைப் பற்றிய அவருடைய உளப்பதிவு மாறுபடுகிறது. அவர்கள் வேறொருவகை பண்பாடும் குடிமைப்பண்பும் கொண்ட மக்கள் என உணர்கிறார். அதை அவர் தன் சுயசரிதையிலேயே பதிவுசெய்திருக்கிறார். அதன்பின் அவர் கறுப்பர்களின் மீதான பார்வையை மாற்றிக்கொண்டார். கறுப்பர்களின் போராட்டங்களுக்கு ஆதரவானவர் ஆனார். கறுப்பினத்தலைவரான ஜான் டுபே [John Langalibalele Dube] போன்றவர்கள் காந்தியின் போராட்டங்களை ஆதரித்தனர்.ஆனால் ஒர் அரசியல் உத்தியாக காந்தி கறுப்பினத்தவருடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க முயலவில்லை. அதை அன்றைய ஆப்ரிக்க இந்திய சமூகம் ஏற்றுக்கொண்டிருக்காது. இன்று, அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ ஆப்ரிக்க வம்சாவளியினருடன் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்த இந்தியர்களோ பிற ஆசியர்களோ முன்வர வாய்ப்பில்லை என்பதை நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.
தென்னாப்ரிக்காவை விட்டு வெளியேறும்போதுகூட காந்தி ஓர் இளைஞர்தான். ஆனால் அவர் அதற்குள் ஓர் உலகத்தலைவராக, ஒரு மாபெரும் ஜனநாயகப்போராளியாக அறியப்பட்டுவிட்டிருந்தார். அவர் படிப்படியாக அங்கே உருவாக்கிய போராட்ட வழிமுறைகளை இந்நூல் விரிவாக ஆவணப்படுத்துகிறது. இதுவரை வேறெந்த நூலிலும் இல்லாத அளவுக்கு தரவுகள் இந்நூலில் உள்ளன. தென்னாப்ரிக்காவில் இருக்கையிலேயே காந்தி உலகம் முழுக்க அறியப்பட்ட தலைவராக ஆகிவிட்டிருந்தார்.டைம் முதலிய அமெரிக்க இதழ்கள் அவரைப் பற்றி எழுதின. அவருடைய வாழ்க்கைவரலாறுகள் இரண்டு எழுதப்பட்டுவிட்டன. குறிப்பாக வெள்ளையரான ஜோசப் டோக் எழுதிய காந்தியின் வாழ்க்கைவரலாறு அவருக்கு ஐரோப்பாவெங்கும் ஏற்பை அளித்திருந்தது. [M.K. Gandhi: an Indian patriot in South Africa ]அவருடைய அரசியல்பார்வையும் போராட்டமுறையும் தெளிவடைந்திருந்தன.
இந்நூல் காட்டும் சித்திரம் பொதுவாக நம் வரலாற்று ஒற்றைக்கோட்டுச் சித்திரத்துக்கு பெரிதும் முரணானது. நாம் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றை எழுதுகையில் தாதாபாய் நௌரோஜி தொடங்கி கோகலே, திலகர் வரையிலான ஒரு நீண்ட வரிசையில் இறுதியாக வந்தவர் என்று காந்தியை வரையறை செய்கிறோம். அவர்கள் காந்திக்கு முந்தைய தலைமுறையினர். தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வரும் காந்தி சற்றே முதிர்ந்த இளைஞர்தான். ஆனால் அப்போதே இந்திய சுதந்திரப்போராட்டத் தலைவர்களிலேயே அவர்தான் உலகப்புகழ்பெற்றவர். அவருடைய இடம் அன்றிருந்த எந்த இந்தியத்தலைவருக்கும் இருக்கவில்லை. சொல்லப்போனால் அன்று உலகம் முழுக்க கவனிக்கப்பட்ட மிகச்சில அரசியல்தலைவர்களில் காந்தி ஒருவர், அவ்வாறு கவனிக்கப்பட்டவர்களில் அவர் ஒருவர்தான் இந்தியர். நவீன காலகட்டத்தில் உலகம் இந்தியாவின் முகமாகக் கண்டது காந்தியைத்தான்.
இந்தியாவுக்கு வந்த காந்தி ஒரு சில ஆண்டுகளிலேயே காங்கிரஸின் முழுப்பொறுப்பையும் எப்படி ஏற்றுக்கொண்டார் என்னும் கேள்விக்கான விடை இதுதான். காந்திக்கு முந்தைய தலைவர்கள் நாடளாவ, உலகளாவ அறியப்பட்டவர்கள் அல்ல. உலகம் முழுக்க தொடர்புகள் கொண்டிருந்தவர்கள் அல்ல. தெளிவான அரசியல்பார்வையும் போராட்ட வழிமுறையும் கொண்டவர்கள் அல்ல. ஜனநாயகப் போராட்டத்தை நடத்தி தங்களை நிரூபித்தவர்களும் அல்ல. எல்லாவகையிலும் காந்தியின் ஆளுமைக்கு முன் அவர்கள் மிகச்சிறியவர்கள். காந்தியை விட மூத்த தலைவரான கோகலே நேரடியாகவே அதை ஒப்புக்கொண்டு பேசிய பகுதிகள் இந்நூலில் உள்ளன.
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க, வாழ்க!
அடிமை வாழ்வதன்றி நாட்டார் விடுதலையார்ந்து, செல்வம்
குடிமையில் உயர்வு, கல்வி ஞானமும் கூடி ஓங்கிப்
படிமிசைத் தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மையுற்றாய்!
என்று பாரதி காந்தியைப் பற்றிப் பாடும்போது காந்திக்கு வெறும் ஐம்பது வயதுதான். அவர் இந்தியா திரும்பி ஐந்தாண்டுகள் ஆகியிருக்கவில்லை. பாரதி கண்ட அந்த ‘மகாத்மா’ தென்னாப்ரிக்காவில் போராட்டங்கள் வழியாகத் தன்னைத்தானே பயிற்றுவித்துக்கொண்டு உருவாகி எழுந்து வந்தவர். அச்சித்திரத்தை அளிக்கும் நூல் இது.