கேளாச்சங்கீதம் கடிதங்கள் -10

கேளாச்சங்கீதம்

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் கடிதம் வந்தபிறகுதான் நான்  Nadya korotaeva வரைந்த அந்த அற்புதமான ஓவியத்தைக் கவனித்தேன். எப்படி அதைக் கவனிக்காமல் விட்டேன் என்று ஆச்சரியப்பட்டேன். அந்தப்படத்தின் பல தளங்கள் கவனத்துக்கு வந்தன. அது முதல்பார்வைக்கு ஒரு விசித்திரமான மலர் என்னும் எண்ணம் ஏற்படும். அதற்கு ஆசிரியை ரத்தத்தின் ஊற்றுமுகம் என்று தலைப்பிட்டிருப்பார். அதையொட்டி அதை ஒரு புண், ஓர் உறுப்பு என்று பார்க்கலாம். ஆனால் அது ஒரு பார்வைதான். ரசிகனாக அதை பலவாறாக பார்க்கலாம். நீங்கள் இந்தக்கதையுடன் அதைப்பொருத்தும்போது அது முழுக்கமுழுக்க வேறொன்றாக ஆகிவிடுகிறது.

இந்த ஓவியத்தை கேளாச்சங்கீதம் கதையுடன் இணைப்பது என்ன? ஒன்று ரத்தம். இன்னொன்று மலர், மூன்று யோனி. கதையில் இம்மூன்று அம்சங்களுமே இருக்கின்றன. ரத்தத்தில் ஊறிவரும் வசியம்தான் கதை.கனவில் சிவந்த மலர்கள் வருகின்றன என்று கதையில் சொல்லப்படுகிறது. அது காமத்தின் மலர். யோனியும் மலர்தான். அதுதான் ரத்தமலர். இந்தக்கதையின் களத்திலே வைத்துப்பார்த்தால் அந்த மலர் சக்திபீடம். பிரபஞ்சம் உருவான கருப்புள்ளி. தேவியின் யோனிமுகம்.

அதன்பின் இந்தப்படத்தைப் பார்த்தால் பெருந்திகைப்பு.    Nadya korotaeva அதைத்தான் உண்மையிலேயே வரைந்திருக்கிறார். அந்தப்படத்தை கூர்ந்து பார்த்தேன். கீழே கடல். அதில் திமிங்கலங்கள்போன்ற மீன்கள் மிதக்கின்றன. அதற்குமேல் விலங்குகளின் உலகம். பல்வேறு விலங்குகளின் நிழல்தோற்றங்கள் இணைந்து ஒரு படலமாக உள்ளன. அதற்குமேல் மேகங்களின் விண்ணுலகம். மூன்று உலகங்களும் யோனியில் இருந்து தோன்றுவதைத்தான் இந்த ஓவியம் சித்தரிக்கிறது.அவையெல்லாம் யோனியில் இருந்து கசிந்த ரத்தம். மேலே அது பெரிய துளை போல வாசல் போல திறந்திருக்கிறது

மிக அற்புதமான ஓவியம். இதை நகலெடுத்து என் அறைக்குள் மாட்டிவைக்கவேண்டுமென விரும்புகிறேன். கதைக்கு இதைவிடச்சிறந்த ஒர் ஓவியம் இருக்கமுடியாது. எல்லாம் சக்திலீலை என இந்த ஓவியம் கேளாச்சங்கீதத்தை விரிவாக்குகிறது

 

எஸ்.ஆர்.தனஞ்சயன்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நானும் நலம்

கேளாச்சங்கீதம் கதையில் ஒரு கேள்வி. கனவில் கண்கள் வருகின்றனவா? ஓமியோபதி மருத்துவத்தில் மனச்சிக்கல் இருந்தால்தான் அண்மைக்காட்சியாக கண்கள் கனவில் வரும். பெரும்பாலானவர்களுக்கு கண்கள் கனவில் வருவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். கனவுகளில் அவர்களிடம் பேசுபவர்கள் அவர்களை நோக்கிப்பேச மாட்டார்கள். வேறெங்காவது பார்த்துத்தான் பேசுவார்கள். வேறு எங்கிருந்தோதான் குரல்கேட்கும். கண்கள் குளொஸப்பில் வந்தால் மனச்சிக்கலுக்கு மருந்துதேவை.

நவீன உளச்சிகிச்சையிலும் அப்படித்தான். கண்கள் நிறைய வந்தாலே நெர்வஸ்நெஸ் இருக்கிறது என்று அர்த்தம். இந்தக்கதையில் மலர்களும் அழகான கண்களும்தான் கனவு முழுக்க நிறைந்திருக்கின்றன. இத்தனை நுட்பமாக இப்பிரச்சினையை எழுதிய முதல் தமிழ்ச்சிறுகதை இது என நினைக்கிறேன்

 

ஆர்.ராதாகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைதீயின் எடை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்திரா பார்த்தசாரதி- காளிப்பிரசாத் உரை