இரு கடிதங்கள்

வடிவமைப்பு கீதா செந்தில்குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மிகவும் சிறந்த, புகழ்பெற்ற ஒரு எழுத்தாளரை சந்தித்துப் பேசும்பொழுது எந்த மாதிரியான உணர்வுகள் இருக்கும், எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும், அவருக்கு நம்மைப் பற்றிய பிம்பம் என்னவாக இருக்கும் என்று பல முறை சிந்தித்து விட்டு தங்களுக்கு அருகில் வந்து பேசுவதை தவிர்த்திருக்கிறேன்.

ஆனால் நேற்று கோவையில் கவிஞர் புவியரசு அவர்களுக்காக நடந்த பாராட்டு விழாவில் தங்களை முதல் முறை சந்தித்த பொழுது  ஏற்பட்ட அனுபவம் எப்படிப்பட்டது என்பதை விளக்க முடியுமா என்று தெரியவில்லை.

ஆசிரியர் ஒருவர் தனக்குப் பிடித்த மாணவனைத் தோள் சேர்த்து ” என்னப்பா நல்லா இருக்கியா, என்ன பண்ணிட்டு இருக்கே” என்று கேட்பதுபோல, ஏற்கனவே நாம் பலமுறை சந்தித்து பேசியவர்கள் போல இருந்தது உங்களுடனான எனது சந்திப்பு.

மிகவும் மென்மையான மேன்மையான ஒரு சந்திப்பு என்று தோன்றியது. மனதை லேசாக்கக் கூடிய ஒரு போதை என்று கூட சொல்லலாம்.

முதல்முறை சந்தித்துப் பேசிவிட்டு சிறிது நேரம் கழித்து நீங்கள் பலரை சந்தித்தபின் நான் உங்களிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்க வரும்போது எனது பெயரை  நினைவில் வைத்து தாங்கள் எழுத ஆரம்பித்தது எனக்கு  ஆச்சரியத்தைக் கொடுத்தது.

யார் தங்களிடம் பேசினாலும் அதைக் கவனமாகக் கேட்டு பதில் அளித்தது, அனைவரிடமும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டது, எந்த ஒரு பரபரப்பும் இன்றி அமைதியாக அனைவரையும் அணுகியது, முக்கியமாக நான்  கேட்ட கேள்விகளுக்கு அதை உடனே உள்வாங்கிக் கொண்டு உறுதியான பதிலைக் கொடுத்தது ஆகிய அனைத்தும் எனக்கு ஒரு புது அனுபவமாகத்தான் இருந்தது.

என்னுடன் வந்த எனது சக ஆசிரியர்கூட நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு நீங்கள் இன்னும் ஜெயமோகனை விட்டு மீண்டு வரவில்லை என்று கூறினார்.

அவர் கூறியதும் உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் நான் அதிலிருந்து  மீண்டு வர விரும்பவில்லை.

ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்ற சுயத்தையும் ஆன்மீகத்தையும் தேடி விழிப்புணர்வு பெற்றவர்கள் பட்டியலில் எதிர்காலத்தில் நீங்களும் இருப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.

இது தங்களை  மட்டுமே படித்து தங்களின் மீது உள்ள ஈர்ப்பினால் எழுதியது அல்ல. பல எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்துவிட்டு, ஜே கிருஷ்ணமூர்த்தி ஓஷோ ஆகியோரது ஆன்மீக சிந்தனைகளை தெரிந்துகொண்டு, இந்து மதத்தின் பிரிவுகளையும் வேர்களையும்  புரிந்து கொண்டு,   புத்தம், வைணவம், கிருத்தவம் மற்றும் இசுலாம்  ஆகியவற்றை ஓரளவு அறிந்து  கொண்டும் தான் பேசுகிறேன்.

இதை படிப்பவர்களுக்கு நான் உங்களை மிகவும் புகழ்ந்து பேசுவதாக தோன்றலாம். ஆனால் எனது நோக்கம் அதுவல்ல. எனது அனுபவத்தை வைத்து எனக்குத் தோன்றியதை நான் எழுதியுள்ளேன்.

எது எப்படி இருந்தாலும் தங்களுடனான  முதல் சந்திப்பின் அனுபவம் உற்ற நண்பனை, பிடித்த ஆசிரியரை நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கும்போது ஏற்படும் உணர்வை, மகிழ்ச்சியை கொடுத்தது. நீங்கள் எனக்கு மிக நெருக்கமானவர் என்ற உணர்வை கொடுத்தது.

நன்றி

சூரியகாந்தி சதீஸ்குமார்

வடிவமைப்பு கீதா செந்தில்குமார்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

இது தங்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் எழுதும் கடிதமாக எடுத்துக்கொள்ளுங்கள். தளத்தில் பிரசுரிக்க வேண்டாம் என்ற கோரிக்கையுடன் தொடர்கிறேன்.

இன்று உங்கள் தளத்தில் தங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தை ‘புறப்பாடு, கடிதம்’ என்று பிரசுரித்து உள்ளீர்கள். அந்தக் கடிதம் அனுப்பிய அதே நாள் நான் ‘சுவாமி ஆனந்த்’ அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த வார இறுதியில் திருவண்ணாமலைக்கு சென்று அவரை நேரில் சந்திக்கவும் செய்தேன். இரண்டு மணி நேர உரையாடலுக்குப் பின் பல தெளிவுகள் எனக்கு கிடைத்தது.

அவர் ‘நீங்கள் வெண்முரசு கட்டாயம் வாசிக்க வேண்டும்’ என்று என்னிடம் தற்செயலாக சொல்ல, அதை ஆப்த வாக்கியம் போல் மனதில் நிறுத்திக்கொண்டேன். அன்று தொடங்கி கடந்த மூன்று மாதங்களாக வெண்முரசை வரிசையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது ‘வெய்யோன்’ தொடங்கியுள்ளேன். மிக உன்னதமான ஒரு செயல் செய்யும் அக நிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

கூடவே உங்கள் தளத்தையும் தினமும் பார்க்கிறேன். எனக்கு எல்லாமும் நீங்களாக மாறி விட்டீர்கள். மெய்யியல் சார்ந்த தெளிவும் ஆன்மிகத்தில் சரியான புரிதலும் அடைந்துள்ளேன் என்று மிக நிச்சயமாக சொல்ல முடியும். என் வாழ்க்கை எங்கேயேனும் தொடங்குகிறது என்றால் அந்தத் தொடக்கத்தின் விதையின் பெயர் ‘ஜெ’. இந்த மண்ணால் ஆன மூளைக்குள் உரமாக ஊடுருவுகிறது உங்கள் எழுத்துக்கள். விளைவாக முளைவிட்ட பல திறப்புகள். வேறு எப்படியும் இதை சொல்ல இயலவில்லை.

உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள எனக்கு எட்டு மாதங்கள் ஆகியது. பிற ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்கள் வழியாக நான் அதுவரை வந்து அடைந்த சிற்றறிவுன் (அறிவியல், தத்துவம், ஆன்மீகம் & வாழ்க்கை என்னும் கோணங்களில்) உங்கள் கருத்துக்களை பரீட்சித்துப் பார்த்தேன். எவ்வகையிலும் இந்த நவீன காலத்திற்கு ஏற்ற ஒரு முழுமையான ஆளுமையை தான் கண்டு அடைந்துள்ளோம் என்று உறுதியான ஒரு புள்ளிக்கு வந்தபின்பு உங்களை குருவாக ஏற்றுக் கொண்டேன். உங்களது பல சீடர்களில் ஒருவனாக நான் மாறி நான்கு மாதங்கள் ஆகிறது.

இதுதான் எனது கடந்த ஒரு வருடப் பயணம் ஆகும். அனேகமாக உங்களை சிறிதேனும் உள்வாங்க எனக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம் என்று கணிக்கிறேன். உங்களது அனைத்து படைப்புகளும் வாசிக்க, உங்கள் தளத்தில் இருக்கும் கட்டுரைகளை வாசிக்க, உங்களை பாதித்த மற்றும் நீங்கள் சுட்டிக்காட்டும் பிற முக்கிய படைப்புகளை வாசிக்க இவ்வளவு காலம் கண்டிப்பாக எனக்கு தேவைப்படும்.

என்னை இந்த உன்னதமான பாதைக்கு திசை திருப்பியதற்கு

என்றென்றும் நன்றியுடன்,

விஜய் கிருஷ்ணா.

முந்தைய கட்டுரைகார்கடல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியத்தின் விலை -கடிதங்கள்