அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
சூரிய ஒளி மின்சார உற்பத்தி என்பது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளித் தகடுகளை, நிலத்தில் நிறுவி உற்பத்தி செய்வதாகும்.
உலக நீர் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் துஷார் ஷா, இதை ஒரு உழவர் நலத்திட்டமாக வெற்றிகரமாக வடிவமைத்துள்ளார். உழவர்களின் நிலத்தில் ஒரு பகுதியில் (1000 சதுர அடி அளவில்) நிறுவி, அவர்கள் நீர் இறைக்கத் தேவையான அளவுக்கு உபயோகித்த பின்னர், மின் பகிர்வுக் கட்டுமானத்துக்கு அளித்தால், அந்த மின்சாரம், மற்றவர்களின் தேவையையும் பூர்த்தி செய்யும். அப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தினால், உழவர்களுக்கு ஒரு மின் இணைப்புக்கு வருடம் 40-50 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் வரும் என தனது ஆராய்ச்சிகள் மூலம் நிறுவியுள்ளார்.
இது இன்று மத்திய அரசின் திட்டமாகவும் உருவெடுத்துள்ளது.
இது எல்லா உழவர்களுக்கும் கிடைக்கும் பட்சத்தில், சரிந்து, நஷ்டத்தில் இயங்கும் ஊரகப் பொருளாதாரம் மீண்டெழும்.
இதனால் வரும் நன்மைகள் இவை:
- அரசு ஒரு உழவருக்கு வருடம் 30-40 ஆயிரம் வரை மின் மானியம் கொடுக்கிறது. அரசின் மீதான இந்த நிதிச்சுமை என்றென்றைக்குமாகநின்று விடும்.
- உழவர்களுக்கு வருடம் 40-50 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இது ஒரு சிறு உழவருக்குப்பெரும் உதவியாக இருக்கும்
- உழவர்களுக்குக்கிடைக்கும் கூடுதல் வருமானம், பொருளாதாரத்திற்கு அதிக ஊக்கம் தரும். This income at the hands of a poor farmer has a better multiplier effect on the economy than the tax concessions given to salaried middle class or to corporate companies.
- சூரிய ஒளி மின்சாரம் வழி வருமானம் என்பது, பருவ நிலைமாற்றங்கள், விலை வீழ்ச்சி போல வழக்கமாக உழவர்கள் எதிர்கொள்ளும் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கும் ஒரு நிலையான வருமானம். அவர்களின் தொழில் ரிஸ்க்குகளுக்கான காப்பீடு என்று கூடச் சொல்லலாம்.
- பெரும் நிறுவனங்கள் பெரும் நிலப்பரப்பில் மெகா சூரிய ஒளிப் பூங்காக்களை நிறுவி, மின் உற்பத்தி செய்கையில், மொத்த நிலமும் வீணாகிறது. ஆனால், உழவர்கள், சூரிய ஒளித்தகடுகளுக்குக்கீழே நிழல் விரும்பும் பயிர்களைப்பயிர் செய்கிறார்கள். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமான நாட்டில், தேவையற்ற நில விரயம் தடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தமிழகத்தில், 600 மெகா வாட் சூரிய ஒளிப் பூங்கா ஒன்று உள்ளது. அது 600 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த 600 ஹெக்டேர் நிலமும், வேறெந்தப் பயனும் இல்லாமல் உள்ளது. அதே அளவு மின் உற்பத்தி, ஒரு உழவருக்கு 10 கிலோ வாட் எனப் பிரித்துக் கொடுத்தால், 60 ஆயிரம் உழவர்கள் பயனடைவார்கள். 600 ஹெக்டேர் நிலப்பரப்பு வீணாகாமல், அதில் வேளாண்மையும் தொடர்ந்து நடக்கும்.
- இது பற்றி நான் சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதை நீங்கள் பிரசுரித்திருந்தீர்கள் (எங்கெங்கு காணினும் சக்தியடா.. | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in))
- நண்பர் சமஸ் புதிதாகத் தொடங்கியுள்ள, ‘அருஞ்சொல்’, மின்னிதழில், இது பற்றியவிரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்(உழவர் எழுக! | அருஞ்சொல் (arunchol.com)).
- இது தொடர்பாக, இந்த பொதுநலக் கொள்கைகையை, வடிவமைத்து, வெற்றிகரமாக நிறைவேற்றி, அரசின் சூரிய ஒளித்திட்டஉருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த பேராசிரியர்.துஷார் ஷா வுடன்ஒரு பேட்டி எடுத்து, அதை நண்பர் சமஸ் அருஞ்சொல்லில் வெளியிட்டார் (விவசாயிகளுக்கான சூரிய மின்சாரம்: துஷார் ஷா பேட்டி | அருஞ்சொல் (arunchol.com))
- பேட்டியைப் படித்த தகடூர் புத்தகப் பேரவை வழிகாட்டியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான, மருத்துவர் செந்தில் குமார், ஒரு பின்னூட்டம் அனுப்பியிருந்தார். அதில் ஒரு பகுதியை அவர் அனுமதியுடன் இங்கே தருகிறேன்
“தோழர்,
துஷார் ஷாவின் பேட்டியை படித்தேன்.
எங்கள் மருத்துவ மனையின் மேல் மாடியில் இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் செலவில் சூரிய ஒளி உற்பத்தி செய்யும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறேன். ஷேர் மார்க்கெட், சிறு தொழில்கள் என்றெல்லாம் நான் முதலீடு செய்து இருக்கிறேன். இவை எதிலும் கிடைக்காத மிகப்பெரிய லாபத்தை சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக செய்த முதலீடு எனக்குத் தருகிறது
ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணத்தில் ஒரு லட்ச ரூபாயை மிச்சம் பிடிக்கிறேன். இதற்குக் காரணம் ரிவர்ஸ் மீட்டர் வைத்திருப்பது தான். நாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் மின் பகிர்மான கட்டமைப்புக்குச் சென்றுவிடுகிறது. எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறோமோ அதைக் கழித்து கொண்டு மீதம் மின்சாரத்துக்கு மட்டுமே நாங்கள் கட்டணம் செலுத்துகிறோம்.
“படிம எரிபொருளை பயன்படுத்தக்கூடாது. புவி வெப்பமடைதலை தடுக்க வேண்டும்” என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக தடைகளை ஏற்படுத்துகிறது. இப்பொழுது ரிவர்ஸ் மீட்டர் சிஸ்டம் கிடையாது. பெரிய அளவில் மானியம் எதுவும் கிடையாது”.
- இது பற்றி ஆர்வம் காட்டிய நண்பரும் பாடலாசிரியருமான யுகபாரதி, அவர் நண்பரான தமிழ்க்கேள்வி செந்தில் அவர்களுடன் தொடர்பு கொள்ள வைத்தார். இது பற்றிய ஒரு தொலைக்காட்சிப் பேட்டியும்விரைவில் வர இருக்கிறது.
- அரசில்சம்மந்தப்பட்டவர்களிடமும்இது பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களும் இதை நேர்நிலையான ஒன்றாகப் பார்க்கிறார்கள்.
- நண்பரும் இளம் காங்கிரஸ் தலைவருமான தாராபுரம் முருகானந்தம் அவர்களிடமும் பேசினேன் – அவர், இத்தகவலை உழவர் தலைவர்களிடம் கொண்டு செல்வதாகக்கூறியுள்ளார்.
- இது ஒரு சரித்திரத் தருணம். உழவர்கள் ஒன்றிணைந்து, இதை ஒரு லாபகரமான திட்டமாக, அரசிடம் கேட்டுப் பெற வேண்டிய தருணம். இதை விட்டுவிட்டால், உழவர்கள் தொடர்ந்து தில்லிக்கும், சென்னைக்கும் காவடி எடுத்து, மானியப் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கும் அவல நிலைதான் தொடரும்.
- இந்தத் திட்டத்துக்கு எதிராக, பெரும் தனியார் முதலாளித்துவ சக்திகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.. ஏனெனில், சூரிய ஒளி மெகா பார்க்குகள் அவர்களுக்கு பெரும் லாபம். ஆனால், உழவர்களுக்கோஅது வாழ்வாதாரத்தையே மீட்டெடுக்கும் ஒரு புதுமையான தொழில் திட்டம்.
எனவே இது பற்றிய விழிப்புணர்வை எல்லாத் தளங்களிலும் கொண்டு செல்லுதல் அவசியமாகிறது. எனவே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்
அன்புடன்
பாலசுப்ரமணியம் முத்துசாமி