ஒரு தேசத்தை அறிந்து கொள்ள ,புரிந்து கொள்ள வரலாறு,இலக்கியங்கள்,பயணங்கள்,பண்பாடுகள் உதவுகின்றன.ஜெயமோகன் பயணங்களையும்,அதன் மூலம் அங்கு நிலவும் பண்பாடுகளையும் அறிந்து தேசத்தை புரிந்து கொள்ள முயல்கிறார்.அங்கு வாழும் முகங்களின் மூலம்,முகங்கள் பிரதி பலிக்கும் உணர்வுகள் மூலம்,அந்த முகங்கள் பிரதிபலிக்கும் அந்த வாழ்க்கையின் பதிவுகள் மூலம் அந்த இடத்தைப்பற்றி அறிய முடிகிறது!
இந்தியா ஒரு ஞானபூமி!மாபெரும் தவம் நிகழ்ந்த மண்.பனிமலை முதல் பாலைவரை அத்தனை நிலங்களும் கொண்ட பெருவெளி!பலவகையான மானுடங்களின் கலவை.இதனூடே பயணங்களை மேற் கொண்ட ஆசிரியர் இந்தியாவை,மானுட முகங்களாக,அலை,அலையாய் வந்து போகும் முகங்களாக காண்கிறார்!
போகுமிடங்களையும்,அங்கு சந்தித்த முகங்களையும்,உதவியவர்களையும் நினைவு கூர்வது மிக அழகாக உள்ளது!வெயிலில் பிறந்து வெயிலில் வளர்ந்து,குளித்து,விளையாடி வெயிலில் பயணம் செய்வதைப் பற்றி எழுதிய தேசாந்தரி எஸ்.ராம கிருஷ்ணன்
கார்மேகங்கள் சூழ்ந்த வானம் குடை விரிக்க,கொட்டும் மழையில் பயணங்களை மேற்கொள்பவர் ஜெயமோகன்.அந்த அழகிய பயணங்களின் விவரிப்பு சிலவற்றை இங்கு காண்போம்!
ஆசிரியர் தன் நண்பர்களுடன் பயணம் மேற்கொள்வார்!எளிய முறையில் திட்டமிட்டு,செலவு குறைவாக திட்டமிட்டு,போகும் இடங்களில்,கட்டணமின்றி சமணஅறநிலைகள்,ஜென் மடங்கள்,சத்திரங்களில் தங்கி,வழியில்,சாலையோரங்களில் கிடைத்த உணவை உண்டு,அனைவரும் பார்க்கும் இடங்களை தவிர்த்து,அரிய இடங்களை,வரலாற்றில் குறிப்பிட்ட இடங்கள்,இடிந்த சின்னங்கள்,கோவில்கள்,ஏரிகள்,யாரும் அறியாத கோவில்கள் என அனைவரும் பயணம் செய்வார்கள்.மது அருந்த மாட்டார்கள் .
சமண வணிகர்கள் ,தங்கள் வணிகத்திற்கு உதவியாக சாலைகளை அமைத்து,வழியெங்கும் அறச்சாலைகளை நிறுவினார்கள். அந்த அறச்சாலைகளை பார்வையிட,ஈரோட்டில் இருந்து துவங்கிமத்திய பிரதேசம்,ராஜஸ்தான் வழியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.*நான் காட் **கணவாயைப் பார்வையிட சென்றபோது,செம்மண் சாலை நடுவில் வீடே இல்லாத வீட்டில் வாழ்ந்து கொண்டுள்ள ஷிண்டே ,அவரின் விருந்தோம்பல்,சாக்கில் ,கம்பளியில் அமரவைத்து, சூடான சப்பாத்தி,பருப்பு குழம்பு,உருளைக்கிழங்கு பொரியல் என பரிமாறிய அந்த அன்னமிட்ட கைகளை உடைய முகம் இந்தியாவை அவர்களுக்கு காட்டியது!
நதிக்குள் இருக்கும் நிலப்பகுதி ஆற்றிடைக்குறை எனஅழை க்கப்படுகிறது.கரைந்த நிலப்பகுதி தான் தீவு.பெரிய ஆற்றிடைக்குறை, நதித்தீவு என அழைக்கப்படும்.அஸ்ஸாமின் பிரம்ம புத்திராநதி .அதன் நடுவே மாஜிலி என்ற நதித்தீவு!மாலை வேளையில் படகில் பயணம்,தீவில் மூங்கில் கால்கள் மேல்,மூங்கிலாலும் யானைப்புல் தட்டியாலும் கட்டப்பட்ட வீடுகள்,அங்கு உண்ட கோமல்சால் எனப்பபடும் அரிசியால் செய்த சோறு,அந்த விடுதிக்குமாஸ்தா,அவருடைய நீரில் கரைந்த வீடு,அந்த சோகம் என அது ஒரு இனிய அனுபவம்!
வடகிழக்கு நாடுகளைக்காண செல்லும் போது பூடானைப் பார்க்க சென்றனர்.அந்த வெள்ளிமலைகள்,மகத்தான மலைச்சரிவுகள்,பின்னொளிர்ப்பு முகங்கள்,மௌனம் தேங்கியவெளி நிலங்கள்,அந்த முக சுருக்கங்களை கொண்ட மூதாட்டி,அவள் பேத்தி,மங்கோலிய முகங்கள்,எல்லா பெண்களின் பெயர்களும் #பேமா#வாக இருப்பது,பௌத்த மடம்,அங்கு புத்தர் சுற்றிய தர்ம சக்கரம்,போதிசத்துவர்,வயதான லாமா,திரும்பும் வழியில் சந்தித்த கலை மணி என்ற பள்ளி ஆய்வாளர்,தன் பென்சன் முழுவதும்இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்க செலவு செய்யும் பயணி அவர்!அரசு வேலை செய்பவர்கள் எப்போதும் பூடானின் தேசிய உடையை அணிய வேண்டும்.இப்படி பூடானே திருவிழாக்கோலமாக இருந்தது என்கிறார்.
ஆந்திராவில் உள்ள வரங்கல்.அங்குள்ள ராமப்பா கோவில்.அது இந்தியாவின் மாபெரும் கலைப்பொக்கிஷம்.அங்குள்ள சிலைகள் அனைத்தும் கரிய சலவைக்கல்லால் கட்டப்பட்டவை!ஆலயங்கள் ஒவ்வொன்றும் பிரமாண்டமான ஆபரணம் என்கிறார்.சிற்பங்களை கூர்ந்து பார்க்கும் போது,சிற்பங்கள் நம்மை கவனிக்கும் ஒரு கணம் வரும்.பிறகு சிற்பங்களில் இருந்து விடுபடுவது கடினம் என தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். லோடு லாரியில் திரும்பும்போது,அந்த கரிய சிலையைப்போன்று ஒரு பெண் தன்னுடன் வந்ததையும்,தன் வாழ்க்கையை,வழிப்போக்கனான அவரிடம் பகிர்ந்து கொண்டதையும் வியக்கிறார்!
லடாக்கின் ஸ்பிட்டி பள்ளதாக்கை காணச்சென்றது,அங்கு மக்களின் அமைதியான,வாழ்வு நெறி,சும்மா இருக்கும் கலையைப் பயின்றவர்கள் அவர்கள் என கூறுகிறார்.எதிலும் நிதானம்,ஆமை வேகம்,அவசர கதி இல்லாத வாழ்க்கை,மணிக்கணக்கில் ஒரே இடத்தில்அப்படியே இருத்தல் என இவையெல்லாம் தான் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணங்களாக இருக்கும் என கூறுகிறார்.
இங்குள்ள பௌத்த மடாலாயங்கள் காலத்தில் உறைந்தவைஇங்கு மக்கள் வாழ்க்கை என்பது உயிருடன் இருப்பதை உட்கார்ந்து அனுபவிப்பது தான் என உள்ளனர்.நம்மால் அப்படி இருக்க இயலாது என்பது உண்மை!
காரணமின்றி ஆசிரியரை ஈர்த்த ஊர் ஏற்றுமனூர்.எர்ணாகுளத்தில் தங்கி இருந்த போது, இரவில் வெளியே வரும் போது ஏற்றமானூர் என்ற பேர் எழுதிய பஸ்ஸை பார்த்த உடன் ஏறி விட்டார் .கோட்டயம் அருகில் உள்ள ஊர்.ஏழரைப் பொன் யானை மேல் எழுந்தருளும் சிவன் உள்ளார்.கோட்டை மதில் சூழ்ந்த கேரளபாணியிலான ஆலயம்.மழைத்துளிகள் சரிந்த கூரை கொண்ட மரக்கோபுரத்தை ஒருமணி நேரமாக பார்த்து,ரசித்து ,பின் தங்க இடம் தேடினார்.கூரிய மூக்கும்,ஒட்டிய கன்னங்களும்,கூன் விழுந்த முதுகும் உள்ள ஒரு வயோதிகர், விடுதியில் அவர் தங்கும் அறையில் தங்க வைத்தார்.அவர் எந்த பெட்டியும் கொண்டு வராததால் எங்கு தற்கொலை செய்து விடுவாரோஎன பயந்து அந்த விடுதி உரிமையாளர் விடிய விடிய தன்னிடம் பேசிப் கொண்டு இருந்ததை நினைத்து சிரித்த சம்பவத்தையும் கூறுகிறார்.
எங்கு சென்றாலும் சமணஅறநிலைகளில்்தங்கும் இடம்,உணவு,நெஞ்சார்ந்த விருந்தோம்பல்,என பழகியவர்களுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தையும் கூறுகிறார்
பெல்காம் நகரில் ஒரு சமண ஆலயம்,அதன் அருகில் ஒரு பெரிய ராமகிருஷ்ணா மடம் .ஆலயத்தைப் பார்க்க சென்றவர்கள் ராமகிருஷ்ணா மடத்தில் தங்கலாம் என போய் கேட்ட போது அங்கு இருந்த துறவி இங்கு இடம் கிடையாது.இங்கு தங்க வேண்டுமெனில் உங்கள் ஊர் ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து சிபாரிசு கடிதம் வேண்டும்.நீங்கள் அந்த ம
டத்துக்கு பத்தாயிரமாவது நன்கொடை வழங்கி இருக்க வேண்டும் என கூறினார்.மேலும் அடுத்த நாள். அழைத்து வாயில் வைக்க இயலாத உப்மாவை கொடுத்தார்கள்.இப்படி இவர்கள் இருக்க,குருத்வாரில் நடந்த சம்பவம் வேறு!
நைனிடால் பார்க்க செல்லும் போது வழியில் ஹஸ்த்வானி என்ற ஊரில் இருந்தார்.பணம் இல்லை.தங்க இடம் தேடி சாலைகளில் அலைந்த போது குருத்வாரைப் பார்த்தார்.பெரிய இடம்.அப்போது பஞ்சாப் பிரிவினைப்போராட்டம் நடந்து கொண்டு இருந்த நேரம்.தயங்கி தயங்கி கூட்டின் அருகே நின்றபோது உள்ளே இருந்து,சரித்திர கால உடை அணிந்து சாண்டில்யன் கதையில் இருந்து வருபவர் போல வந்தார் .அவர் பெயர் கியானி குருநாத் சிங்.இந்து என்று தயங்கி நின்றவரை,அவர் வாருங்கள் சகோதரரே,என கை பிடித்து ,அழைத்து உள்ளே அமர வைத்து,தட்டில் சப்பாத்திகள் வைத்து அதை புனல் போல குவிக்க சொல்லி அதில் நெய்யை ஊற்றி உண்ண சொன்ன அந்த அற்புதம்,தூங்கியவுடன் குளிருக்கு கதகதப்பாக கனமான கம்பளியை கொடுத்த தாய்மை உள்ளம்,முப்பது வருடம் கழித்தும்,ஆசிரியரின் கண்களில் நீர் மல்க செய்கிறது.சிறு கோழிக்குஞ்சுகள்,அன்னையின் சிறகுகளின் கத, கதப்பில்சொக்கி அமர்ந்து இருப்பது போல்,இந்திய அன்னையின் சிறகுக்குள்,தூங்கிக்கொண்டு இருப்பதாக உணர்ந்தேன் என மெய்சிலிர்க்கிறார் ஆசிரியர்
பயணங்களில் கசப்பான அனுபவங்களை சந்திப்பது தமிழ் நாட்டிலும்,கேரளாவிலும் என்கிறார்.குற்றாலத்தில் குறிக்கும் பெண்கள் படும் இன்னல்களை குறிப்பிடுகிறார்.
இது போல பயணங்களில் சந்தித்த எண்ணற்ற முகங்கள்.பெரும்பாலும் கருணை கொண்ட முகங்கள்.அன்பினை வெளிப்படுத்தும் முகங்கள்!விருந்தோம்பலின் உன்னதம் காட்டும் முகங்கள்,அடர்ந்த வனத்தில் பலன் எதிர்பாராது பூஜை செய்த படித்த இளைஞன்,சம காலத்தில் இருந்து விடுபட்டு,இறந்த காலத்தில் புதைந்து உள்ள,சுற்றுலாப்பயணிகளால் கை விடப்பட்ட,வஜ்ரயான பௌத்த மடாலயத்தை காண திபெத் சென்ற போது அங்கு மடாலயத்தை திறந்து காட்டிய முதியவர்,கொடுத்த தட்சணையை கோவில் உண்டியில் போடச்சொன்ன,அந்த அக்னி போதிசத்வர் முகம்!
இது தான் இந்தியா!இந்த முகங்களினால்ஆனது தான் இந்தியா!ஆன்மீகம்உருவாக்கிய இந்த புண்ணிய பூமி தான் இந்தியா!வீட்டை துறந்து,உறவுகளும் துறந்து,மெய்ஞானம் தேடி எங்கும் அலைந்த ஞானிகளில் உருவானது இந்த இந்தியா!கன்னியா குமரி என்றவுடனே,கங்கை முதல் கன்னியாகுமரி வரை என்ற வார்த்தைகளை பிரதி பலிக்கும் விதமாக நட்பு பாராட்டும் முகங்களில் ஆனது தான் இந்த இந்தியா!
சக்ரவர்த்தி பாலசுப்ரமணியன்