இந்து ஞான மரபு என்பது வெறும் இறை வழிபாட்டையும் சடங்குகளையும் மட்டும் கொண்டதல்ல அவை பல தத்துவங்களையும் தரிசங்களையும் உள்ளடக்கியவை. நமது இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. இப்பிரபஞ்ச தோற்றத்தை வகுத்துக்கொள்ள பல தத்துவங்கள் உருவாகின, அந்த தத்துவங்கள் விரிவடைந்து தரிசனங்களா மாறின, தரிசனங்கள் ஒரு எல்லையில் இறைவழிபாடாக மாறி மதங்களானது. இப்படி இந்திய ஞான மரபில் உருவான மதங்கள்தான் ஷண்மதம், சமணம் மற்றும் பௌத்தமாகும்.
முதலில் தத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் உருவாகுகின்ற தர்க்களின் தொகுப்பாகும். தர்க்கரீதியாலான சிந்தனைகளின் தொகுப்பே தத்துவமாகும்.
ஒரு தத்துவ சிந்தனையில் உருவான கருத்து சித்தாந்தமாக விரிவடைந்து, பிற அறிவு துறைகளில் உள்ளவற்றையும் விளக்க முற்படுவதே தரிசனமாகும். இந்த தரிசனங்கள் இந்து மெய் ஞானங்களின் வரிசையேயாகும்.
இந்து ஞான மரபு என்பது தரிசனங்கள் தனது கற்பனை மற்றும் உள்ளுணர்வால் விரிவடைந்து இறை வழிபாடாக மாறும்போது மதங்களா உருவாகுகின்றன. அப்படி இந்து ஞான மரபில் உதித்தவை சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகியவையாகும்.
உதாரணத்துக்கு வைசேஷிக தரிசனம் அணுக்களின் சேர்க்கை அல்லது இணைவுகளின் மூலமே இப்பிரபஞ்சம் தோன்றியது என்கிறது. இப்போது அணு சேர்க்கை நடைபெற காரணம் என்ன? அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? என்று கேள்விகள் எழும்போது. அதை வைசேஷிகம் கண்ணனுக்கு தெரியாத உந்து சக்தி என்கிறது. அந்த பிரபஞ்ச உந்து சக்தியை பெண் தெய்வமாக பாவித்து வழிபடுவது சாக்தேயம் ஆகும். அதேபோல் அந்த சக்தியை பிள்ளையார் வடிவமாக பார்ப்பது காணபத்யம் ஆகும். இவ்வாறே தரிசனங்கள் கற்பனைகளால் விரிவடைந்து வழிபாட்டு மாதங்களாக உருவாகுகின்றன.
அப்படி மதங்களாக வளராத தரிசனங்களை தரிசனம் என கூறுகிறோம். நமது இந்து ஞான மரபில் அவ்வாறு வளராத ஆறு தரிசனங்கள் காலத்தால் மிக பழையதும் அடிப்படையானதும் ஆகும். அவை
சாங்கியம்
யோகம்
வைசேஷிகம்
நியாயம்
பூர்வமீமாம்சம்
வேதாந்தம்
என்பவையாகும்.
சாங்கியம் | ஆதி இயற்கை வாதம்
இந்து ஞான தரிசனங்கள் ஆன்மிக தத்துவங்களையும் சரிபாதி பௌதிக தத்துவங்களையும் கொண்டவையாகும். இந்து ஞான தரிசனங்களில் முதன்மையானதாகவும் காலத்தால் முற்பட்டதாகவும் கருதப்படுவது சாங்கியமாகும். இது முழுக்க முழுக்க பௌதிக(Materialism) அடிப்படையிலான தரிசனமாகும். இந்த தரிசனமானது கபிலரால் தொகுக்கப்பட்டது மற்றும் இதன் காலகட்டம் உபநிஷ காலகட்டத்தை சார்ந்தது. இது ஆதி இயற்கை வாதம் அல்லது சடவாத தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சாங்கிய மரபுக்கு பின் தோன்றிய ஞான மரபுகளும், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற மதங்களும் மற்றும் வேதாந்தங்களும் சாங்கிய தரிசனத்தோடு விவாதித்தே தம்மை புதுப்பித்து கொண்டன.
ஒவ்வரு தத்துவமும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை(அல்லது காரிய காரணத்தை) தர்க்கரீதியாக பல தளங்களில் விவாதித்து தரிசனமாக மாறுகிறது. வேதங்கள் இப்பிரபஞ்ச தோற்றத்திற்கும் இருப்பிற்கும் பிரம்மமே காரணம் என்று கூறுகிறது. ஆனால் சாங்கியம் வேதங்களின் பிரம்ம இருப்பை மறுத்து இப்பிரபஞ்சம் பருப்பொருள்களில் இருந்து தோன்றின என்று தர்க்கரீதியாக விவாதிக்கின்றன.
மனிதன் அகத்துயரம், புறத்துயரம் மற்றும் இயற்கை நியதி என்னும் துயரம் என்னும் மூவகை துயரங்களால் ஆட்கொள்கிறான் மற்றும் இத்துயரங்களை மனிதன் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவே இவ்வகை துயரங்களின் காரிய காரணத்தை ஒருவன் சாங்கிய அடிப்படையில் புரிந்துகொண்டால் அவன் அச்சம் அடையாமல் அத்துயரங்களில் இருந்து விடுவித்து கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படையாகும்.
சாங்கியதின் அடிப்படை மூன்று கோட்பாடுகள்,
பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது.
பிரபஞ்சத்தின் மூல காரணமும் பருப்பொருளேயாகும்.
முக்குணங்கள் சமநிலையை இழக்கும் போது ஆதி இயற்கை உருவாகுகிறது.
பருப்பொருள்களில் இருந்து தோன்றியதே இப்பிரபஞ்சம் என்பது சாங்கியதின் முதல் கோட்பாடாகும். இப்போது உள்ள அறிவியலும், மார்க்சிசமும் உலகம் பருப்பொருளால் ஆனது என்றே கூறுகிறது. நாம் இன்று காணும் இயற்கை(உலகம்) மற்றும் சுற்றுசூழல்கள் எல்லாம் பருப்பொருள்களாலானது என்கிறது.
அதேபோன்று நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரிய காரணம் உண்டு என்கிறது சாங்கியம். காரிய காரண அடிப்படையில் நாம் இப்போது காணும் உலகம் அல்லது இயற்கை காரியம் என்றால். இதன் மூல காரணம் எது என்று விவாதிக்கும் போது. சாங்கியம் ஆதி இயற்கை என்னும் பருப்பொருளே என்கிறது. அதேசமயம் கடவுள், பிரம்மம், பரம்பொருள், ஆத்மா போன்றவற்றை சாங்கியம் ஏற்பதில்லை. சாங்கியம் உருவற்ற பிரம்மம் என்றதிலிருந்து எவ்வாறு பருப்பொருளாலான இயற்கை(அல்லது பிரபஞ்சம்) தோன்ற முடியும் என்று வேதத்துடனான தனது கேள்வியை முன்வைக்கிறது.
அதேபோன்று ஆதி இயற்கையானது முக்குணங்கள் சமநிலையை இழந்து எதிர் எதிர் வினை புரியும்போது நாம் காணும் பிரபஞ்சம் தோன்றுகிறது என்கிறது சாங்கியம். அம்மூன்று முக்குணங்களின் தொடர் எதிர்வினையே இப்பிரபஞ்சத்தை இயக்குகிறது. மேற்கத்திய மார்க்சிச சிந்தனையில் materialistic dialectics என்பார்கள், அதாவுது இரண்டு பொருட்களின் முரணியக்கத்தால் புதிய பொருட்கள் உருவாகுகின்றன அது சமூகத்தை இயக்க நிலையில் வைக்கிறது. அதைத்தான் சாங்கியமும் முக்குணங்களின் முரணியக்கம் என்கிறது மற்றும் இந்த முரணியக்கமே பிரபஞ்சத்தை இயக்குகிறது. அந்த முக்குணங்களின் குணங்களை சத்துவகுணம்(Positive Movement), தமோகுணம்(Negative Movement), ரஜோகுணம்(Neutral Movement) என்கிறது சாங்கியம்.
சாங்கியத்தின்படி ஆதி இயற்கையானது படிப்படியாக பரிணாம் அடைந்து நாம் காணும் இயற்கையாக(உலகம்) மாறியுள்ளது. இயற்கையை பிரகிருதி என்று வரையறுக்கிறது சாங்கியம். ஆதி இயற்கையில் இருந்து எப்படி உயிரினங்கள் படிப்படியாக தோன்றின என்பதை பிரகிருதி, மகத், அகங்காரம், மனம், பஞ்ச ஞானேந்திரியங்கள்(காது, தோல், கண், மூக்கு, நாக்கு), பஞ்ச கர்மேந்திரியங்கள்(வாக்கு, கை, கால், மலத்துவாரம், சிறுநீர் குழாய்), ஐந்து தன்மாத்திரைகள்(ஒலி, தொடுகை, நிறம், சுவை, மணம்), ஐந்தாற்றல்கள்(நிலம், நீர், வானம், நெருப்பு, காற்று) என்ற 24 தத்துவங்களின் மூலம் சாங்கியம் விளக்குகிறது.
சாங்கிய தத்துவத்தில் இரு முக்கிய கேள்விகள் எழுந்தன ஒன்று இப்பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணம் என்ன ? காரியம் என்ன ? காரணம் இல்லை என்றால் தத்துவம் எதற்க்கு ? இரண்டு, பருப்பொருளால் ஆனா மனித உடலில் எவ்வாறு அறிவு, மணம், உயிர் போன்ற குணங்கள் குடியேறின? இந்த கேள்விக்கு பதிலாக புருஷன்(பரிபூர்ண சாட்சி) என்னும் தத்துவத்தை சாங்கியர்கள் உருவாக்கினார். இங்கு புருஷன் என்பது பிறப்பும் இறப்பும் இல்லாதவன், உருவம் இல்லாதவன், எல்லா இடத்திலும் இருப்பவன் ஆதி இயற்கை போலவே புருசனும் முழுமுதற் பொருள். அதுஒரு பரிபூரண மௌனசாட்சி மட்டுமே. இது கிட்டத்தட்ட ஆன்மா போன்றுதான். ஜடத்தை அறிவதே புருஷனின் வேலை அவன் இருத்தலுக்கும் அதுவே காரணம். பிரபஞ்ச தோற்றம், ஜட உடலில் எவ்வாறு மனம், அறிவு, உயிர் உருவாகின என்பதற்கான பதிலாகவும், காரணமாகவும், காரியமாகவும் புருஷனை முன்வைத்தார்கள் சாங்கியர்கள்.
பிற்கால வேதாந்தங்கள், குறிப்பாக ஆதி சங்கரரின் அத்வைதம் தர்க்க பூர்வமாக விவாதித்து சாங்கியத்தை மறுக்கிறது. சங்கரர் பின்வரும் கேள்விகளை சாங்கியத்தை நோக்கி முன்வைக்கிறார்.
ஒவ்வொன்றுக்கும் காரிய காரணம் உண்டெனில் இப்பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணம் என்ன ? காரியம் என்ன ?
உயிரற்ற ஜட பொருளிலில் இருந்து எவ்வாறு உயிருள்ள ஜட பொருள் உருவாக முடியும்? பருப்பொருளால் ஆனா மனித உடலில் எவ்வாறு அறிவு, மணம், உயிர் போன்ற குணங்கள் குடியேறின?
இந்த உயிர் எங்கிருந்து வந்தது எங்கு போகிறது?
முக்குணங்கள் சமநிலையை இழக்க காரணம் எது ? அது எப்போது சமநிலையை அடையும்?
இவற்றுக்கு பதிலாக உயிர், பிரபஞ்ச தோற்றத்துக்கு காரணமாக பிரமத்தை தனது அத்வைத கோட்ப்பாட்டில் முன் வைக்கிறார் சங்கரர். ஜீவாதாமாவும் பரமாத்மாவும் ஒன்று என்றும் மற்றவை எல்லாம் மாயை என்று தனது அத்வைத தத்துவத்தில் கூறுகிறார்.
இப்போது உள்ள நூல்களில் சாங்கியத்தை முழுவதுமாக உள்வாங்கிய நூல் பகவத் கீதையே ஆகும். அது சாங்கியதின் சாரங்களை எடுத்து கொண்டு ஆன்மிக தத்துவங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டது. கீதை சாங்கியதின் ஆதி இயற்கை அல்லது பிரபஞ்ச தோற்றத்திற்கு மூல காரணமாக பரம்பொருளை முன்வைக்கிறது. அதே சமயம் புருசனுக்கு பதில் அது ஆத்மாவை முன்வைக்கிறது. அதேசமயம் கீதை இறைக்கு பதில் கடமையே(அல்லது செயலே) முக்கியம் என்ற கர்ம ஞானத்தை முன்வைக்கிறது.
யோகம்
இப்போது எல்லாரும் அறிந்த யோகா பயிற்சிகள் கூட இந்த யோகா தரிசனத்தில் இருந்து வந்ததுதான். இதுவும் பௌதிக தரிசனமாகும். இந்த யோகா தரிசனமானது சாங்கியதின் கிளையாக பரிணமித்து தனி தரிசனமாக மாறியது. யோகம் சாங்கியதின் மூன்று அடிப்படை கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது(பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது, பிரபஞ்சத்தின் மூல காரணமும் பருப்பொருளேயாகும், முக்குணங்கள் சமநிலையை இழக்கும் போது ஆதி இயற்கை உருவாகுகிறது). இதனால் இதை சாங்கியதின் உப தரிசனம் என்றும் அழைப்பார்கள்.
முக்குணங்களில் பிளவு உண்டானதால்(சம நிலை இழந்ததால்) ஆதி இயற்கை(பிரபஞ்சம்) தோன்றியது. பிளவுபடாத(சமநிலையில் உள்ள) ஆதி இயற்கையை எப்படி நம்மால் அறிய முடியும் ? என்ற கேள்விக்கு சாங்கியம் பதில் அளிக்க முயன்ற போதுதான் யோகம் என்னும் தரிசனம் உருவாகியது. நமது மனமானது காமம், குரோதம் மற்றும் மோகம் என்னும் தீய குணங்களால் மூடப்பட்டுள்ளது. இந்த தீய குணங்களை விடுத்து யோகா முறைகளால் மனதை தூய நிலைக்கு எடுத்து சென்றால் நாம் ஆதி இயற்கையை தரிசிக்க முடியும். யோகம் என்றாலே தூய அறிதல் என்று பொருள்.
ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க அறிவு நிலைத்து நிற்கும் நிலையே யோகம் ஆகும். இந்த யோகா தரிசனத்தை தர்க்கரீதியாக விவாதித்து தொகுத்தவர் பதஞ்சலி ரிஷியாகும் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருக்கலாம்.
சாங்கியம் கூறும் 24 தத்துவங்களையும் யோகம் ஏற்கிறது. அதுமட்டும் அல்லாமல் யோகம் சாங்கியத்தின் புருஷ தத்துவத்தையும் ஏற்கிறது. மனிதன் காமம் குரோதம் மோகம் போன்ற தீய குணங்களால் இயற்கைக்கும் புருஷனுக்கும்(மனிதர்கள்) தொடர்பு இருப்பதாக ஒரு மாயை(அறியாமை) ஏற்படுகிறது. இந்த அறியாமை ஒருவனுக்கு அகன்றால் புருஷனுக்கும் இயற்கைக்கும் உறவு இல்லாமல் தன் தூய நிலையை அறிவான். இந்த நிலையே முக்தி என்று பௌதிக அடிப்படையிலான யோகா தரிசனம் சொல்கிறது.
ஐம்புலன்களையும் மனதையும் அடக்கி ஒருவன் தன் தூய நிலைக்கு போக பின்வரும் யோகத்தின் எட்டு படிநிலைகளை கடைபிடிக்க சொல்கிறது.
யமம் (அடக்கம்)
நியமம் (கட்டுப்பாடு)
ஆசனம் (யோக முறையில் உட்காருதல்)
பிராணாயாமம் (மூச்சைக் கட்டுப்படுத்தல்)
பிரத்தியாகாரம் (புலனறிவை மறக்கடித்தல்)
தாரணை (கவன ஈர்ப்பு)
தியானம் (தியானம்)
சமாதி (சமாதி)
இதில் யமம் என்பது அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரம்மசரியம், அபரிகிரகம் என்னும் ஐயம் பெரும் விரதங்களாகும்.
நியமம் என்பது சௌசம்(உடலையும் மனதையும் சுத்தப்படுத்துதல்),
தபஸ்(பிடிவாதமாக நெறிகளை பின்பற்றுதல்), ஸந்தோஷம்(சகஜமான இனிய மனநிலை), ஸ்வாத்யாயம்(கல்வி) போன்றவையாகும்.
தூய உடல் மற்றும் தூய மனம் ஆகியவை யோகத்திற்கு அவசியம். இதுவே சீரான இயக்கம் உடைய உடல் பயிற்சின் முதல் தேவையாகும். இதையே யமம் மற்றும் நியமம் வலியுறுத்துகிறது.
மூன்றாவது படிநிலையான ஆசனம் என்பது சௌகரியமான ஆசன இருப்பையே கூறுகிறது.
நான்காவது படிநிலையான பிராணாயாமம் சுவாசத்தை சீராக விடுவதாகும். யோகாசனம் மூலம் வெளியுறுப்புகளையும் பிராணாயாமம் மூலம் உள்ளுறுப்புகளை துல்லியமாக வைத்திருப்பதை யோகம் வலியுறுத்துகிறது.
அடுத்த படிநிலையான பிரத்தியாகாரம் என்பது புலன்களை(கண், காது, மூக்கு, சருமம், நாக்கு) மூடிவிட்டு மனதை நோக்கி நமது கவனத்தை குவிப்பதாகும். புலன்களின் செயல்களில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த நிலைக்கு செல்வது இதன் அடுத்தகட்டமாகும்.
அடுத்த ஆறாவது படிநிலையில் தாரணை என்பது மன செயல்பாட்டினை ஒரு புள்ளியை நோக்கி குவிப்பதாகும். பொதுவாக மனதை மந்திரத்தில் குவிப்பதே வழக்கம். ஓம், க்ரீம், ஹம் போன்ற மந்திரங்கள் யோக பயிற்சியின் போது உச்சரிப்பதை காணலாம். இது மனதை ஒரு புள்ளியில் குவிக்க உதவும்.
ஏழாவது தியானம் என்பது முழு பிரக்ஞையையும் மெதுவாக குவிய வைப்பதே ஆகும்.
கடைசி படிநிலை சமாதி என்பது சித்தம் அடங்கி தியானிக்கும் நிலை ஆகும். இந்த நிலையில்தான் ஒருவன் தன் தூய நிலைக்கு போய் பிரகிருதியை அறிகிறான்(ஆதி இயற்கையை தரிசிக்கிறான்). இதுவே யோக மெய்ஞான நிலையாகும்.
இந்த யோக பௌதிக தரிசனத்தை பிற தத்துவங்கள் உள்வாங்கிக்கொண்டு அதை ஆன்மிக அடிப்படையிலான யோக முறையாக வளர்த்தெடுத்தன. உதாரணத்துக்கு அத்வைதம் யோகத்தின் மூலம் அறியாமையை களைந்து தூய நிலைக்கு செல்லும்போது ஒருவனுக்கு பிரம்மம் மட்டும் எஞ்சும் என்கிறது.
வைசேஷிகம்
அணுக்களின் சேர்க்கை அல்லது கூட்டு மூலமே இப்பிரபஞ்சமும் அதில் உள்ள எல்லா பொருட்களும் உருவாகின என்பதே வைசேஷிக தத்துவமாகும். இன்றைய நிகழ் உலகில் அணுக்கொள்கையானது அறிவியல் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அணுக்கள் இணைவு(Nuclear Fusion) மற்றும் அணுக்கள் பிணைவு(Nuclear Fission) மூலமே பொருட்கள் உருவாகுகின்றன என்கிறது. அணுக்களின் கூட்டாக பொருட்களை பார்க்கும் பார்வை பழைய காலம் முதலே இருந்து வந்துள்ளது.
கிரேக்க சிந்தனையாளர்கள் எபிகுரஸ்(கிமு 341-271), டெமாகிரிட்டஸ்(கிமு 460-380) போன்றார் அணுக்கொள்கையை பற்றி தங்களது தத்துவங்களை உருவாக்கியுள்ளனர். அதேபோன்று இந்தியா ஞான மரபிலும் வெகு காலம் முன்பே அணுக்கொள்கை பற்றிய கருத்து இருந்திருக்க வேண்டும். அதிலிருந்த இந்த தர்க்கபூர்வமான வைசேஷிக தரிசனம் உருவாகியிருக்க வேண்டும். வைசேஷிகத்தின் மூல குரு கணாதர் என்னும் ரிஷியாகும் மற்றும் இவர் கிமு ஆறாம் நூற்றாண்டிலோ அல்லது கிமு பத்தாம் நூற்றாண்டிலோ வாழ்ந்திருக்கலாம். இதுவும் சாங்கியம் போன்று பௌதிக தரிசனமாகும்.
வைசேஷிகம் ஒவ்வொரு பொருட்களை பகுத்து பகுத்து பகுப்பாய்வு செய்தால் நுண் அணுக்களே இறுதியில் மிஞ்சும் என்கிறது. அதேபோன்று வைசேஷிகம் தனது தத்துவத்தை தர்மம் எது என்று விளக்கும் போது. எதிலிருந்து எல்லா விஷயங்களும் உருவாகினவோ அதுவே தர்மம் என்கிறது. அந்த தர்மத்தை அறிதல், பொருள்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரபஞ்ச இயக்கம் பற்றியும் தனது திரவியம்(பொருள்), குணம்(இயல்பு), கர்மம்(செயல்), சாமான்யம்(பொதுத்தன்மை), விஷேசம்(சிறப்புத்தன்மை), சமவாயம்(இணைவுத்தன்மை) என்ற ஆறு தத்துவங்கள் மூலம் வைசேஷிகம் விளக்குகிறது.
பிரபஞ்சத்தை அறிந்து கொள்வதற்கு இரு வழி முறைகள் உள்ளன. அவை தொகுத்தல் மற்றும் பகுத்தல் ஆகும். தொகுத்தல் என்பது கிடைத்த ஒவ்வொன்றையும் கூட்டி இது என்ன என்று யோசித்தால். பகுத்தல் என்பது கைக்கு கிடைத்த பொருளை பகுப்பாய்வு செய்தலாகும்.
வைசேஷிகமும் சாங்கியம் போன்றே பிரபஞ்சம் பொருட்களால் ஆனது என்கிறது. ஆனால் இரண்டிருக்கும் உள்ள வித்தியாசம் என்பது பிரபஞ்சத்தை பகுப்பாய்வு செய்வதில் வேறுபடுகிறது. சாங்கியமானது எல்லா பொருட்களையும் தொகுத்து நமது பிரபஞ்சம் ஆதி இயற்கையில் இருந்து தோன்றியது என்கிறது. ஆனால் வைசேஷிகம் இதற்க்கு நேர் எதிராக பொருள்களை பகுத்து பார்ப்பது போல பிரபஞ்சத்தை பகுத்தால் அணுவே மிஞ்சும் என்கிறது.
இந்த நுண் அணுக்களின் சேர்க்கையில் இருந்தே நீர், நிலம் மற்றும் புற வயத்தில் நாம் பார்க்கும் பொருட்கள் எல்லாம் உருவாகி இருக்கின்றன என்கிறது வைசேஷிகம். அதேபோல் அணுக்களுக்கு நிறம், குணம், வடிவம், கனம் உண்டு என்கிறது மற்றும் அணுக்கள் இணைந்து உருவாகும் பொருட்களுக்கும் அணுக்கள் போன்றே பண்புகள் இருக்கும் என்கிறது. ஆனால் அணுக்களில் இருந்த அதே பண்புகள் பொருட்களாக பரிணமிக்கும்போது இருக்க அவசியம்மில்லை என்கிறது வைசேஷிகம்.
அணுக்கள் சேர்ந்து பொருட்கள் உருவாகுவதை காரணம் காரியம் என்கிறது. வைசேஷிகம் சாங்கியத்தை போன்றே காரண காரியத்தை ஏற்கிறது. ஆனால் சாங்கியதின் காரியத்திற்குள் காரணம் ஒழிந்து இருக்கிறது என்ற கோட்பாட்டை வைசேஷிகம் மறுக்கிறது. காரியத்திற்குள் காரணம் ஒழிந்திருக்க முடியாது, காரணம் வேறு காரியம் வேறு என்கிறது வைசேஷிகம். அணுக்களின் சேர்க்கையினால் ஒரு புதிய பொருள் உருவாகுகிறது. இரு அணுக்களின் சேர்க்கை என்னும் காரணத்திலிருந்து பிறந்த புதிய பொருள்தான் காரியம் என்கிறது வைசேஷிகம்.
அணுக்கள் ஏன் ஒன்றாக இணைய வேண்டும்? அணு சேர்க்கை நடைபெற காரணம் என்ன? அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? என்று கேள்விகள் எழும்போது. அதை வைசேஷிகம் கண்ணனுக்கு தெரியாத உந்து சக்தி என்கிறது.
அதேபோன்று வைசேஷிகம் இப்பிரபஞ்சம் பிரம்மத்தில் இருந்து தோன்றியது எனில் நாம் காணும் பொருட்களின் தன்மையான பருத்தன்மை மற்றும் மாறும் தன்மை போன்றவை பிரமத்திற்கும் இருக்கவேண்டும். ஆனால் அருவ சக்தியான பிரம்மத்திற்கு அணுக்கள் தன்மை இருக்க வாய்ப்பில்லை. எனவே பிரம்மத்தையோ அல்லது கடவுள் இருப்பையோ வைசேஷிகம் ஏற்பதில்லை.
ஆதி சங்கரர் இந்த பௌதிக வைசேஷிக தரிசனத்தை தர்க்கரீதியாக விவாதித்து உடைக்கிறார். முதல் கேள்வி, அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? இதற்க்கு சங்கரர் பதில் அளிக்கும்போது அந்த உந்து சக்தியை பிரம்மம் என்கிறார் மற்றும் அந்த பிரம்மமே எல்லாம் என்கிறார்.
இரண்டாவுது கேள்வி, அணுக்களுக்கு உள்ள குணங்கள் பொருட்களாக மாறும்போது அணுக்களின் குணங்கள் மறைகிறது என்கிறது வைசேஷிகம். அப்படியென்றால் பிரம்மத்தின் குணங்கள் பிரபஞ்சமாக மாறும்போது மறைகிறது என்று வாதிட்டு பிரம்ம இருப்பை உறுதி செய்கிறார் சங்கரர். நாம் காணும் பிரபஞ்ச பொருட்கள் எல்லாமே மாயை என்றும் பிரம்மமே மெய் என்கிறார்.
நியாயம்
எந்த ஒரு தத்துவம் அல்லது சிந்தனைக்கும் தனக்கேயுரிய தர்க்க முறை இருக்கும் அதன் சிந்தனைகளை வகுத்து கொள்ள. அப்படி இந்திய ஞான மரபு வளர்த்து எடுத்த தர்க்கமுறைதான் நியாயம் ஆகும். நாம் தினமும் பயன்படுத்தும் நியாயம் என்ற வார்த்தை கூட இந்த நியாய தரிசனத்தில் இருந்து தோன்றியது தான். நியாயம் வைசேஷிகத்தின் உப தரிசனமாகும் மற்றும் இதுவும் பௌதீகவாத தரிசனமாகும்.
பின்னர் வந்த தரிசனங்களும் நியாய தரிசனத்தை உள்வாங்கி கொண்டு தர்கரீதியில் விவாதித்து தங்களது சிந்தனைகளை வளர்த்தெடுத்தன.
இந்த நியாய மரபுக்கு எதிராக வந்த வேதாந்தமும் சரி, பௌத்த மற்றும் சமண மரபுகளும் சரி நியாய தருகத்தையே கையாளுகின்றன. இதை பின்னர் பெரிய அளவில் வளர்த்தெடுத்தவர்கள் பௌத்தர்களே. நியாயத்தை இந்தியத் தர்க்கவியல்(Indian Logic) என்றும் அழைக்கலாம். இந்த நியாய தரிசனத்தை தொகுத்தவர் கௌதமர் ஆகும் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டை சார்ந்தவராக இருக்கலாம்.
பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என்னும் வைசேஷிக கோட்பாட்டை நியாயம் ஏற்கிறது. பிரபஞ்சத்தை பற்றிய அறிவு இல்லாமையால்தான் நாம் சமநிலை இழந்து வியப்பு, பயம், மகிழ்ச்சி மற்றும் துக்கம் போன்றவை உருவாகுகின்றன. இந்த அறியாமையை அகற்றி இப்பிரபஞ்சத்தை புரிந்து கொண்டால் சமநிலை அடையாளம். அவ்வாறு அடையும் சமநிலையை நி:ஸ்ரேயஸம் என்று கூறுகிறது.
நியாயத்தை பொறுத்தவரை பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை விட அதை அறியும் வழியை எப்படி வகுத்து கொள்வது என்பதுதான் அதன் நோக்கமாகும்.
நியாயம் ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள விஷயம்(அறிபடு பொருள்) மற்றும் விஷயி(அறிபவன்) என்ற இரு முனைகளை கணக்கில் கொள்கிறது. இவ்விரு முனைகளுக்கு இடையே உள்ள உறவே அறிவு எனப்படுகிறது. விஷயம்(பிரபஞ்சம்) மற்றும் விஷயி(மனிதன்) என்ற இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள எல்லா வகை தொடர்புகளையும்(உறவுகளையும்) கணக்கில் கொள்கிறது நியாயம்.
பிரபஞ்சத்தை பற்றி அறிந்து கொள்ள அல்லது அது பற்றிய அறிவை வகுத்து கொள்ள பிரமாணம், பிரமேயம், சம்சயம், பிரயோஜனம், த்ருஷ்டாந்தம், சித்தாந்தம், அவயவங்கள், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டாவாதம், ஹேத்வ ஆபாசம்,சலம், வாத நிரசனம், நிக்ரஹ ஆஸ்தானம் என்ற பதினாறு தத்துவங்கள் மூலம் நியாயம் விளக்குகிறது. இதில் பிரமேயம் மட்டும் அறிபடுபொருள் மற்ற பதினைந்து முறைகளும் அதை அறிவதற்கான வழிமுறைகள்.
இதில்வரும் முதலாவுது அறிவதற்கான முறை பிரமணமாகும். ஒரு அறிபடு பொருளை என்னென்ன வழிமுறைகள் கொண்டு அறிகிறோம் என்பதே பிரமணமாகும். பிரமாணம் ஒரு விஷயத்தை பற்றி அறிய நான்கு பிரமாணங்களை வகுக்கிறது. அவை,
பிரத்தியட்சம் – நேரடிக்காட்சி
அனுமானம் – உய்த்துணர்வு
உபமானம் – ஒப்பீடு
சப்தம் – உரைச்சான்று என்பனவாகும்
பிரத்தியட்ச பிரமாணம் என்பது நமது புலன்கள் வழியாக புற வயத்தில்(உலகத்தில்) நடப்பவற்றை நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளுதல்.
இரண்டாம் பிரமாணம் அனுமானம் என்பது ஊகித்து அறிவதாகும். புலன்களில் மூலம் அறிதலில் சில தவறுகள் ஏற்படலாம். உதாரணத்துக்கு சூரியன் பூமியை சுற்றுகிறது என்பது போன்று நமது புலன்களுக்கு தென்படுகிறது. ஆனால் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பதை நாம் ஊகித்தே அறிகிறோம். இவ்வாறு ஊகித்து அறிந்து கொள்ளும் முறையே அனுமானம் எனப்படுகிறது. அனுமானத்தை நியாயம் மூன்று வகையாக வகைப்படுத்துகிறது அவை பிரத்தியட்சம் நிகழும் முன் ஊகிப்பது,
பிரத்தியட்சம் நிகழ்ந்த பின் ஊகிப்பது, பிரத்தியட்சம் நிகழும் போதே ஊகிப்பது என்பவையாகும்.
மூன்றாம் பிரமாணம் உபமானம் என்பது ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு அறிவதாகும்.
நான்காவது பிரமாணம் சப்தம் என்பது முன்னறிவு அல்லது மரபான அறிவு என்று வரையறுக்கலாம். ஒரு விஷயத்தை நாம் அறிந்து கொள்ளும் முன் அதுவரைக்கும் அதை பற்றிய விவரங்களை தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டிருப்பது முன்னறிவாகும். அதிலிருந்து அறிபடு பொருளை பற்றி நாம் அறியலாம்.
இதுவரை இந்தியா ஞான மரபில் தோன்றிய பௌத்தம், சமணம் மற்றும் வேதாந்தங்களும் உண்மையை அறிவதற்கு நியாய தரிசனத்தையே கையாளுகின்றன.
பூர்வமீமாம்சம்
இந்து மதங்களிலோ அல்லது இந்தியாவில் தோன்றிய மதங்களுக்கோ மூல நூல் என்று எதுவும் இல்லை. அவை பல நூல்களை கொண்டவை மற்றும் இதுதான் மூல நூல் என்று எதுவும் கிடையாது. ஆனால் ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் அதன் மையநூலக பைபிள் மற்றும் குரானை வைத்து வளர்ந்தவை. இப்படி மையநூலை வைத்து இயங்குவது செமிட்டிக் மதங்களின் இயல்பாகும். அப்படி வேதங்களை மூலநூல்களாக கொண்டு வளர்ந்தவை பூர்வமாம்சமாகும். இந்தியா தத்துவ மரபில் மையநூல்வாதம் கொண்டு இயங்கும் ஒரே தத்துவ தரிசனமும் பூர்வமீமாம்சம் மட்டுமே.
பூர்வமீமாம்சம் என்பது வேதங்களை அடிப்படையாக கொண்டு வேள்விகளை சடங்குகளையும் நடத்துவதாகும். வேள்வி மற்றும் சடங்குகளை செய்வதே இதன் முதன்மையான கர்மமாகும். இந்த தரிசனம் சடங்கு செயல்பாடுகளையும் அவற்றின் விளைவுகள் பற்றியே விவரிக்கிறது(செயல் – விளைவு). இது புரோகித மரபு என்றும் அழைக்கப்படுகிறது. பூர்வமீமாம்சத்தை தொகுத்தவர் ஜைமினி என்று குரு ஆவர் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டகாலமாக இருக்கலாம்.
பூர்வமீமாம்சம் தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்ற நான்கு அடிப்படைகளை கொண்டது. இதில் தர்மம் என்பது அறம் அல்லது நீதி நெறிகள் அல்ல. மாறாக எந்தந்த அடிப்படைகளின்படி நமது செயல்களை ஆற்றுகிறோமோ அதுவே தர்மம் எனப்படுகிறது. இத்தத்துவதில் கர்மம் என்பது சடங்குகள் செய்வதே ஆகும். அந்த கர்மத்தின் விளைவே காமமும் மோச்சமுமாகும்.
பூர்வமீமாசத்தில் கடவுளுக்கு முக்கிய இடமில்லை மற்றும் சடங்குகளே முக்கியமானவை. பிரபஞ்சத்தின் மூல காரணம் யார் என்று கேள்வி எழும்போது இறைவன் என்ற கருத்து தேவைப்படுகிறது மற்றும் இவை படிப்படியாக பிற்காலத்தில் உருவாகி வந்தவையாகும்.
வேதகாலத்தில் இருவகையான கடவுள் வடிவங்கள் இருந்து வந்தன. ஒன்று செயல் வடிவ கடவுள்கள். அவை ஒவ்வொரு செயலுக்கு உரிய தனி தெய்வங்கள்(ராத்ரிதேவி, உஷை, சாவித்ரி) ஆகும். இரண்டாம் வகை தெய்வங்கள் இந்திரன், வருணன் மற்றும் அக்னீ போன்ற இயற்கையை உவமையாக கொண்ட தெய்வங்கள் ஆகும். ஆனால் இவை முழுமுதல் தெய்வங்களல்ல. முழுமுதற் கடவுள் என்று வரும்போது இப்பிரபஞ்ச விதிகளுக்கு மூலக்காரணமாக உள்ள பிரம்மமே என உருவகிக்கப்படுகிறது.
பூர்வமீமாசத்தின்படி இப்பிரபஞ்சம் இறைவனால் உருவாக்கப்பட்டது அல்ல. அது அதற்குரிய செயல்விதிகளின்படி தானாக உருவாகியது. பௌதிக பொருட்களால் நிறைந்த பிரபஞ்சத்தில் அவற்றுடன் கடவுளும் குடிகொண்டுள்ளது. இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் செயல் – விளைவு என்ற விதிகளுக்கு உட்பட்டவை மற்றும் அவை கடவுளுக்கும் பொருந்தும்.
வேள்வி சடங்குகளே இதன் முதன்மையான கர்ம நோக்கமாகும் மற்றும் இந்த சடங்குகள் கடவுளின் கருணையையோ அல்லது அருளையோ பெற அல்ல. கடவுள்களே வேத மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவையாகும். இந்த கர்ம சித்தாந்தம் இந்தந்த சடங்குகளுக்கு இந்தந்த விளைவுகள் என்று விளக்குகின்றன. இந்த கர்ம விளைவுகளின்படியே விதி, மறுபிறப்பு போன்றவை நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.
ஆன்மிகம், யோகம் மற்றும் தியானம் போன்றவற்றிக்கு எதிரானது இத்தத்துவம். ஆனால் பிற்காலத்தில் இவை அனைத்தையும் தனது வைதிக மரபுடன் உள்ளிழுத்து கொண்டது பூர்வமீமாம்சம்.
இன்று இந்தியா முழுவதும் காணப்படும் கணபதி ஹோமம் போன்ற சடங்குகள் இந்த பூர்வமீமாம்சத்தின் வைதிக மரபேயாகும். இந்த வேள்வி மரபானது பிற்காலத்தில் மெல்லமெல்ல ஆலய மரபுடன் தன்னை இணைத்து கொண்டது. இன்று இந்து மதத்தில் காணப்படும் அனைத்து வழிபாட்டு கூறுகளையும் தன்னகத்தே உள்ளிழுத்து கொண்டு வளர்ந்து நிற்கிறது பூர்வமீமாம்சம்.
வேதாந்தம் | உத்தரமீமாம்சம்
வேதத்தின் அந்தம்தாம் தான் வேதாந்தமாகும். அதாவுது வேதத்தின் இறுதியில் வருவது என்று பொருள். இந்து மத அனைத்து சமய வழிபாடுகளிலும் வேதாந்தத்தின் தத்துவார்த்தம் காணப்படும். வேதாந்தத்தின் முக்கிய தேடல் இப்பிரபஞ்ச தோற்றம் மற்றும் இயக்கத்திற்கு முக்கிய மூல காரணமாக இருக்கும் பிரம்மத்தை பற்றியதேயாகும். வேதாந்தங்கள் உபநிஷங்கள் மற்றும் பிற பௌதிக தத்துவ தரிசங்களுடன் விவாதித்து தம்மை வளர்த்து கொண்டவை.
இத்தரிசனம் வேதங்களை ஏற்று கொண்டாலும் அதில் உள்ள சடங்குகளை ஏற்பதில்லை. பிரம்மத்தை பற்றி அறிய ஞான தேடலையே வேதாந்தங்கள் முன்வைக்கின்றன. அதனால் இதை பிரம்ம மீமாம்சை அல்லது ஞான மீமாம்சை என்று குறிப்பிடுவார்கள். வேதாந்த மரபினை தொகுத்தவர் குரு பாதராயணர் ஆவர் மற்றும் இவர் கிமு நான்காம் நூற்றாண்டுக்கும் கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் நடுவில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவருடைய பிரம்மசூத்திரங்கள் என்ற நூலே வேதாந்தத்தின் முக்கிய நூலாகும். வேத வியாசர்தான் வேதாந்தத்தின் முதல் குரு என்ற நம்பிக்கையும் உண்டு.
இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. அதை சாங்கியம் போன்ற பௌதிக தரிசனங்கள் பருப்பொருளில் இருந்து தோன்றின என்று முன்வைக்கின்றன மற்றும் இன்றைய big bang theory போன்ற அறிவியில் தத்துவங்கள் சிறு வெடிப்பில் இருந்து universe தோன்றின என்று கூறினாலும். பௌதிக தத்துவங்களாலும் அறிவியலாலும் விளக்கமுடியாத சில பகுதிகள் உள்ளன அவற்றை தர்க்கரீதியாக விவாதித்து ஆன்மிக தத்துவங்கள்(வேதாந்தங்கள்) அந்த இடத்தை நிரப்பிவிடுகின்றன.
உதாரணத்துக்கு பருப்பொருளில் இருந்து எவ்வாறு உயிர்கள் உருவாக முடியும்? பருப்பொருள் வெடித்து இப்பிரபஞ்சம் உருவாக உந்து விசையாக இருந்தது எது? அதன் ஆதிமூலம் என்ன? திட பொருளான உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த இடத்தில் வேதாந்த தத்துவங்கள் விளக்க முடியாத அந்த இடைவெளியை ஆத்மா, பிரம்மம், பரமாத்மா மற்றும் பரம்பொருள் என்று பெயர் கொடுத்து நிரப்பிவிடுகின்றன. அதேசமயம் அவை பௌதிக வாதங்களையும் முழுமையாக மறுப்பதும்மில்லை. வேதாந்தங்கள் சாங்கியம், யோகம், வைசேஷிகம் மற்றும் நியாயம் போன்ற பௌதிக வாதங்களுடனும் விவாதித்தும் பிரம்மத்தை உபநிஷங்களிடம் விவாதித்தும் புதுப்பித்துக்கொண்டவை.
பௌத்த சமண மதங்களுடன் ஆழமான விவாதத்தில் ஈடுபட்டதான் விளைவாக பிற்கால வேதாந்தங்கள் உருவாகின. முதலில் உருவானது ஆதி சங்கரரின் அத்வைதமாகும். இதிலிருந்து பிரிந்து உருவானவை விசிஷ்டாத்வைதம் மற்றும் துவைதம் ஆகும்.
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -சுயாந்தன்
அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )