தமிழில் மிக அதிகமான கதைகள் எழுதப்பட்ட காலம் கொரோனா தீ நுண்ணுயிரி தாக்கத்தால் பொது முடக்கமும், வீடடங்கும் அமலிலிருந்த காலம். இக் காலத்தில் எழுதப்பட்ட கதை வெள்ளத்தில் சில நல்ல கதைகளும் கவனிப்பாரின்றி அடித்துச் செல்லப்பட்டன. அவற்றில் ஒன்று சொல்வனம் இதழ் 242ல் மார்ச் 14, 2021 அன்று வெளியான கே.ஜே. அசோக்குமாரின் குதிரை மரம் குறுநாவல், அது குறித்தான ஒரு பார்வை இக்கட்டுரை.
ஒரு நல்ல நாவலானது ஒரு வாசகனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அனுபவங்களையும், புரிதல்களையும் வழங்கும். முதல் பார்வையில் ஒரு நவீனத்துவ யதார்த்த நாவலாக இதை வாசிக்கலாம். 1990களில் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார தாரளமயமாக்கல் காரணமாக பல்வேறு தொழிற்துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி பல கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கையில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பேரளவு இயந்திர மயமாக்கப்பட்ட உற்பத்தியில் குறைந்த செலவில் மிகை உற்பத்திக்கு வழி வகுக்கப்பட, மரபான கைவினைக் கலைஞர்கள் தொழில்மயமாக்கலுடன் போட்டியிட இயலாமல் வேறு தொழில்களை நாட வேண்டி வந்தது. அப்படிப்பட்ட ஒரு நபரின் வாழ்வைச் சொல்லும் யதார்த்தவாத படைப்பாக இந்நாவலை வாசிக்கலாம்.
இரண்டாவதாக சராசரிக்கும் மேற்பட்ட ஒரு கலைஞன் தன் துறையில் ஒரு உன்னதத்தை அடைய முனையும் போது, பொருளாதார, குடும்பச் சிக்கல்களும், ஊழும் அவனை திசை திருப்ப, அதனால் உண்டாகும் அக நெருக்கடிகளையும், அவனது உண்மையான அக விருப்பத்திற்கும், நடைமுறை வாழ்க்கையின் முரண்களுக்கும் இடையே அவன் படும் அல்லல்களையும், அலைக்கழிப்புகளையும் மெய்யியல் பார்வையிலும் உள்ளுறையாக இந்நாவல் அலசுகிறது. இதனால் யதார்த்தவாதத்தைத் தாண்டி இந்நாவல் அடுத்த தளத்திற்குச் செல்கிறது.
மூன்றாவதாக ஒரு சில படிமங்களை உருவாக்கி அதன் வழியாக கதையின் சில நிகழ்வுகளை குறிப்பாக உணர்த்த முயல்கிறார் நாவலாசிரியர். இக்காரணத்தினால் இது சமீப காலங்களில் வந்த சிறந்த நாவல்களில் ஒன்றாகிறது என்பது என் எண்ணம், கைத்தறிப் பட்டு நெசவில் பயன்படுத்தப்படும் குதிரை மரம் என்ற தர அளவீட்டுக் கருவி ஒரு படிமமாகக் கையாளப்படுகிறது. மேலும் ராமர் வேடமிட்டு பாடி இரந்துண்ணும் ஒரு கதாபாத்திரமும் குறியீடாக சிறப்பாக கதையின் ஓட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கதை நிகழும் களம் தஞ்சையின் புறநகர்ப்பகுதி என நினைக்கிறேன். இக்கதையை நெசவை முதன்மையாகக் கொண்ட பெரும்பாலான தமிழக ஊர்களில் எங்கு வேண்டுமானாலும் நிகழ்வதாகக் கொள்ளலாம். உதாரணமாக பவானி, பள்ளிபாளையம், கொடுமுடி, திரிபுவனம் என. கதையின் காலம் இன்றைக்கு சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்பான கட்டுமானத் துறை உச்ச வளர்ச்சியிலிருந்த காலகட்டம். நாவலின் துவக்க அத்தியாயமே மிகச் சிறப்பாக வாசகனை உள்ளிழுக்கிறது. குறிப்பாக முதல் வரி. ஏப்ரல் மாதத்தின் இளங்காலையின் ஒளிக்கதிர்கள் பிரபுராமின் வீட்டினுள் சாய்வாக விழுவதை தறியில் சுற்றிய நூலைப் போலக் கண்டு அவன் ஒளிக்கதிர்களை துணியாக நெய்ய முனைகிறான். ஆரம்ப வரிகளிலேயே நாவலின் பேசு பொருட்களும், மாயத் தோற்றமும் கதையில் வெளிப்படுகிறது. காவிரைக்கரை எழுத்தாளர்களுக்கே உரிய பாணியில் உரையாடல்கள் வழியே வீட்டின் சூழலும், வறுமையும் ஒளி மேலேறுவதைப் போல துலங்கி வருகின்றது. அவனுடைய மனைவி வச்சலா, குழந்தைகள் வாணி, நரேன் ஆகியோரின் அறிமுக வர்ணனைகள் ஒரு கலைத் திரைப்படத்தின் காட்சிகளென விரிகின்றன
கதையின் ஒரு சிறு சாராம்சத்தை மட்டும் பார்க்கலாம். பல தலைமுறைகளாக பட்டு நெசவில் ஈடுபடும் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறக்கும் பிரபுராம் தனது இரு அண்ணன்களும் பரம்பரைத் தொழிலை விட்டு விலகிச் செல்ல, தன் தந்தையிடம் தனது பராம்பரியத் தொழிலை சிறு வயதிலியே கற்றுத் தேர்கிறான். அவன் தந்தைக்கு தான் செய்வது தொழிலல்ல ஒரு படைப்புச் செயல் என்ற கர்வம் உண்டு. அதை அவர் தன் மகனுக்கும் கடத்தி விட்டுச் செல்கிறார்.
தன் தொழிலின் மீது பக்தியும், பற்றும் கொண்ட பிரபுராமை காலமும், சூழலும் மனைவியின் வற்புறுத்தலும் தொழிலைத் துறந்து மனைவியின் உறவினரான எலக்ட்ரீஷியன் கேசவனிடம் உதவியாளானாக சேர நிர்பந்திக்க அவன் வேண்டா விருப்பாக அத்தொழிலில் ஈடுபடுகிறான். அவனுடைய மனநிலையை பின்வரும் சில வரிகளில் சொல்கிறார் கதாசிரியர்.
ஒலிகளற்ற பெருங்காட்டில் தனித்து விடப்பட்டதை போல உணர்ந்தான். ஆரவாரமான மனதர்களுக்கிடையே மாட்டிய சிறு விலங்கின் பயத்தை ஒத்திருந்தது அவனுடைய நிலை.
மனைவின் அலட்சியம், கேசவனின் உடல்மொழிகளும், தோரணைகளும் மாறுவது போன்ற குண மாறுதல்களை நுண்ணுர்வு கொண்ட பிரபு எளிதாக உணர்கிறான். அது அவனிடம் உண்டாக்கும் வேலை நிலையின்மை குறித்த அச்சம், கேசவனின் உதவியாள் ராஜாவின் மீது உண்டாகும் அசூயை, படிப்படியாக தன் சுயத்தை இழக்கும் சூழல், தன்மானம், தொழில் பக்தியை இழந்து தானும் சாதாரண கீழ்மைகள் நிறைந்த மனிதன் ஆகிறோமோ என்ற பதட்டம் (Angst), ராமர் வேடமிட்டு பிச்சை எடுக்கும் மனிதனிடம் உள்ள கலைத்திறனும், புகார்களற்ற வாழ்வுடன் ஒப்பிட தன் வாழ்வின் பொருளின்மையை உணர்ந்த சலிப்பு (ennui) பிரபுராமை துணிகளுக்கு சாயமேற்றும் வச்சிரத்தை உண்டு தற்கொலை செய்ய முனையச் செய்தது.
தற்கொலைக்கு முயன்ற பிரபு கேசவனாலும் அவன் மனைவியாலும் காப்பற்றப் படுகிறான். மருத்துவ மனையில் வீடு திரும்பிய அவன் தனது வீட்டின் சூழலில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து நம்பிக்கை கொள்கிறான். மீண்டும் அவன் எலக்ட்ரிஷியன் உதவியாள் வேலையைத் தொடரத் தீர்மானிக்க, மனைவி தலையிட்டு அவனுக்குப் பிடித்தமான நெசவையே செய்யச் சொல்கிறாள். நம்பிக்கையும், புதிய உத்வேகமும் கொண்டு வேலை தொடங்கும் அவன் உடல்நலக் குறைவு காரணமாகவோ, நீண்ட இடைவெளி காரணமாகவோ தன்னால் முந்தைய செய்நேர்த்தியுடன் தனது படைப்பைச் செய்ய முடியாத காரணத்தால் தான் நெய்த புடவையை தானே வெட்டிச் சீரழித்து மயங்கி விழுவதுடன் அவலமாக நாவல் நிறைவு பெறுகிறது. படைப்புத் திறனை இழக்கும் கலைஞனுக்கு அது அவன் உயிரிழப்புக்கு நிகரனாது என்ற அவன் தந்தையின் வார்த்தை நினைவுக்கு வருகிறது. நாவல் அவலமாக முடிவுற்றாலும், நாவலின் இடையில் இயற்கை சூழலுக்கு ஏற்ப அடையும் மாற்றம் இயல்பாக சுட்டப்படுகிறது. அது தொழில் பக்தியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட கலைஞன் மீண்டெழுவான் என்பது இயற்கையின் விதியோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்.
பிரபுராமி பார்வையிலேயே நாவல் முழுவதும் எழுதப்பட்டிருகின்றது. ஓரிரண்டு இடங்களில் அவன் மனைவியின் பார்வை காணப்படுகிறது. நாவலில் நெசவு குறித்த நீண்ட விவரணைகளும், கலைச் சொற்களும் அதன் பொருளும் வழங்கப்பட்டுள்ளன. பிரபுராமின் நினைவு கூறல் வழியாக அவனுடைய தந்தையின் வாழ்வு குறித்த சித்திரம் ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. தன் வாழ்விற்கான விழுமியங்களை அவன் பெற்றுக் கொண்ட விதம் இவ்வத்தியாயத்தில் கூறப்படுகிறது. நெசவு குறித்த அனுபவம் உடையவர்களுக்கு இந்நாவல் நிச்சயம் மேலான வாசிப்பனுபவத்தை நல்கும் என்பதில் ஐயமில்லை.
நுண்ணர்வு கொண்ட பிரபுராமின் அவதானிப்பில் மனிதர்களின் குணமாறுதல்கள் அழகாக நாவலெங்கும் சொல்லப் படுகிறது. மனைவியின் நடவடிக்கைகள், கேசவனின் உடல்மொழி மாற்றம், தந்தை எனும் பிம்பம் அடிபடுவதின் வலி, ராம வேடதாரிக்கு உதவ முடியாததன் கையறு நிலை, அவரைக் கண்டு ஒளியும் குற்றவுணர்வு, அவரை அவன் மனைவி கையாளும் விதம் முதலியன வெகு யதார்த்தமாகவும், சிறப்பாகவும் சொல்லப் பட்டுள்ளது.
மனித வாழ்வின் இருப்பு (existence) குறித்த அடிப்படை வினாக்கள் எழுப்பும் இக்கதை அதில் ஊழ், காலம், சூழல் முதலியவற்றின் பங்கு குறித்தும் ஆதாரமான கேள்விகளை எழுப்பும் நல்ல இலக்கியப் படைப்பு என்பது என் கருத்து.
தேவதாஸ்