கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4

கேளாச்சங்கீதம்

வணக்கம்

நலம் தானே! கேளாச்சங்கீதம் கதை படித்தேன். நீலி எனக்கு ஒரு கணம் காடு நாவலில் இருந்த platonic love ஐ நினைவூட்டியது. அற்புதம் என்பதை தாண்டி வட்டாரமொழி வழக்கை உங்கள் பலமாக நான் நோக்குகிறேன். நீங்கள் அதை உங்கள் பலவீனமாக எப்போதும் கருதியதுண்டா ? இந்த கேள்வி அபத்தமானது என்றால் மன்னியுங்கள்.

நன்றி

ஷாதீர் யாசீன்

 

அன்புள்ள ஷாதீர்,

தன்னை முற்றாக இழந்து இன்னொன்றில் தோய்வது என்பதுதான் பெருநிலை அனுபவம். அது காமம் தொடங்கி கடவுள் வரை செல்கிறது. அது வதையும் இன்பமும் அடிமைத்தனமும் விடுதலையுமான நிலை.

வட்டார வழக்கில் இருந்து ஓர் எழுத்தாளனால் விடுபடவே முடியாதென்றால் அது அவனுடைய பலவீனம். என்னால் வட்டார வழக்கை மிகச்சிறப்பாக கையாள முடியும். ஆனால் என் எழுத்துக்களில் மிகப்பெரும்பாலானவற்றில் வட்டார வழக்கு இல்லை.

மொழியில் எனக்கு தடைகளே இல்லை.என்னால் தொல்காப்பிய நடையிலேயே ஒரு நூலை எழுதிவிடமுடியும். நூறு கம்பராமாயணப்பாடல்களை எழுதி உள்ளே சேர்த்துவிடவும் முடியும். நாட்டுப்புறப்ப்பாடல்கள், பழமொழிகள், சித்தர்ப்பாடல்கள், சொலவடைகள் என என் படைப்பில் வரும் எல்லாமே நானே எழுதுவனதான்

வட்டார வழக்கு ஓர் யதார்த்தவாதக் கதையில் அந்த யதார்த்தத்தை நிறுவி வாசகனை நம்பவைக்கும் முக்கியமான கருவி. அதேபோல உருவகக்கதையில், மிகுகற்பனைக் கதையில், கவித்துவமான கதையில் அக்கதை அந்தரத்தில் நிலைகொள்ளாமல் வாழ்க்கையின் பகுதி என்று காட்டவும் அது உதவுகிறது.

இந்தக்கதையில் ஏன் வட்டார வழக்கு வருகிறது? அது ஒரு புனைவு உத்தி. கதை பேசும் விஷயம் அருவமான, என்றுமுள்ள ஓர் அதீத நிலை. அது எந்த அளவுக்கு abstract ஆக உள்ளதோ அந்த அளவுக்கு concrete ஆன கதைச்சூழலும் கதைமாந்தரும் தேவை. அதிலுள்ள உரையாடல்வரிகள் நேரடியாகவே கவிதைகள். ஆனால் அப்படி அல்ல, அவை கதையில் சிலர் பேசிக்கொள்வன தான் என நம்பவைக்கவேண்டியிருக்கிறது. அதற்கு வட்டார வழக்கு உதவுகிறது

ஜெ

 

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு.

வணக்கத்துடன் தமிழரசி எழுதுவது

இந்த உலக நியதிப்படி ஒரு துளி அமிர்தம் போதும். தொண்டைக்கு உள்ள போயிருச்சின்னா அமிர்தமே ஆனாலும் செமித்து மலமா மாறியாகனும். செமிக்காம இருக்கறது எல்லாமே விஷம்தான்.  ஒரு துளி போதும் என்னுமிடத்தில் கணேசனுக்கு ஒரு கலமே கிடைச்சிருக்கு.  கணேசன் ஆசிர்வதிக்கப்பட்டவன். உலக நியதிப்படி சபிக்கப்பட்டவனும் கூட. இரண்டு தட்டுலயும் ஆசிர்வாதமும் சாபமும் சம அளவில் வைக்கப்பட்டு சின்ன காத்துக்குக் கூட கணேசனோட துலாமுள் நடுங்கிகிட்டே இருக்கிறது.

எல்லோருக்கும் இந்த ஒரு துளி அமிர்தம் ஏதோ ஒரு கால கட்டத்தில் ( முக்கியமா இளமையில்) கிடைச்சிருக்கும்.  அதோட தித்திப்பும் கிறக்கமும் மனசுக்குள்ள ரகசிய புத்தகமா தங்க எழுத்தில் எழுதி இருக்கும். அவ்வப்போது அதை திறந்து பார்க்காதவர் யார்.

இந்தத் துளி அமிர்தம் இல்லாத வாழ்க்கை வியாபார கணக்கெழுதிய பேரேடு.  துளி அமிர்தத்தை ருசிச்ச வாழ்க்கை காவிய புத்தகம். ’படிச்சிப் படிச்சி தீராது’ அது.

கேளாச்சங்கீதமங்ற வார்த்தையே கவிதை. நினைவுகளை எங்கெங்கோ கொண்டு செல்கிறது.

நன்றி.

தமிழரசி.

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா பங்களிப்பு
அடுத்த கட்டுரைஅமுதம், கடிதம்