கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3

 

கேளாச்சங்கீதம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

கேளாச்சங்கீதம் கதையையும், அதற்கு வந்த கடிதங்களையும் வாசித்தேன். இலக்கியம் என்பதன் அடிப்படை அலகு அதில் இருக்கும் நிஜ வாழ்வனுபவம். அதிலும் சிறுகதை என்பது ஒரு வாழ்க்கை துண்டு. எந்த ஒரு நல்ல  சிறுகதையும் அது முடியுமிடத்தில் இருந்து வாசகனிடம் வளரத் துவங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதிலும் உங்களின் சிறுகதைகள் அவற்றின் தலைப்போடு இணைத்து இறுதி வரியை வாசிக்கையில் வாசகனிடம் எழுப்பும் கேள்விகள் அசாதாரணமானவை. அவற்றைத் தொடர்ந்து செல்லும் வாசகன் அவற்றின் பதிலாகக் கண்டடைபவை அக்கதை உத்தேசிக்கும் தரிசனங்கள்.

இக்கதைக்கு வந்த கடிதங்கள் அனைத்தும் இக்கதையின் நம்பகத்தன்மையை, அவரவர் சுய அனுபவங்களோடு இணைத்து வாசித்தவற்றை முன்வைத்தன. உண்மையில் பெரும் திகைப்பே ஏற்பட்டது. கொச்சன் வைத்தியர் சொல்வது போல் மரணமாகி வரும் மதுரம். வெண்முரசில் விருத்திரனிடம் தோற்று தேனீயாக மாறி தேனிலேயே ஊறி, அதிலேயே கிடந்து மயங்கும் இந்திரனின் சித்திரம் தான் நினைவுக்கு வந்தது. வைத்தியருக்கு இந்த கைவிஷத்தின் குணங்களும், விளைவுகளும், அதை முறிக்கும் வழிகளும் நன்கு தெரிந்திருக்கின்றன. ஏனெனில் அவரே அவரது மகனை மீட்க போராடி தோற்றவர் தான். ஆனால் கதை உத்தேசிப்பது இவற்றைத் தான் என்றால் அதன் தலைப்பை கைவிஷம் என்றே வைத்திருக்கலாமே. கேளாச்சங்கீதம் என ஏன் வைக்க வேண்டும்?

வைத்தியரின் கடைசி வாக்கியம், “முள்ளு நுனில்ல பனித்துளின்னாக்கும் மனுசனப் பத்தி சொல்லிருக்கு”. முள்  தங்க விடாது. பனித்துளியோ ததும்பிக் கொண்டிருப்பது. அந்த ததும்பலே அதை அந்த முள் கிழித்து வடிவழிக்க வைப்பது. இப்படி நித்யகண்டம் பூர்ண ஆயுசு என இருக்கும் வாழ்வில் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பது தான் துன்பசாகரத்தில் வீழாமல் இன்பசாகரத்தில், ஆனந்தசாகரத்தில் விழும் விதி. கதையிலும் சரி, இதற்கு வந்த கடிதங்களிலும் சரி, இந்நிலைக்குச் சென்ற ஆண்களைக் கவர்ந்த பெண்கள் எவரும் பேரழகிகளோ அல்லது வசிகரிக்கும் யட்சி அம்சம் கொண்டவர்களோ அல்லர். பின் ஏன் அந்த ஆண்கள் இப்படி மாட்டிக் கொள்கிறார்கள்? கந்தர்வர்கள் ஆகிறார்கள்? இது அவர்களின் இயல்பு. நவீன நரம்பியல் இதை மூளையின் அமைப்போடும், ரசாயனங்களோடும் தொடர்பு படுத்தி விளக்கவும் கூடும். ஆனால் விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு வசீகரம் இந்த நிலையில் இருக்கிறது.

இதில் சிக்கிய ஆண்களின் நிலை தெளிவாகவே தரப்பட்டிருக்கன்றது. ஆனால் அந்த பெண்களின் நிலை? இதில் கணேசனைக் கவர்ந்தவள் அவனை வெளிக்கொணர என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் எனத் தான் சொல்கிறாள். அப்படியெனில் இந்த கைவிஷம் எப்படி அவளிடமிருந்து கணேசனுக்கு வந்து சேர்ந்திருக்கும்? அதற்கும் ஒரு சாத்தியத்தை கொச்சன் வைத்தியர் சொல்கிறார். கனவில் நடந்திருக்கலாம் என்கிறார். மனம் குவிந்து பிற அனைத்தையும் விலக்கி கணேசனின் பெயரை மட்டுமே லட்சத்திஎட்டு முறை உருப்போட்டு அவள் செய்த கைவிஷம், அக்கனவிலேயே அவனுக்கு கைமாறுகிறது. எனவே தான் இதை உத்தம மந்திரம் என்கிறார் வைத்தியர். அதைச் செய்தவளை தவறாகப் பேசுவதைத் தடுக்கவும் செய்கிறார். ஆனால் நிஜ உலகில் இப்படி தன் மனதில் ஒரு ஆடவனை இப்படி, இந்த அளவு எண்ணியிருப்பதை அப்பெண்கள் அறியாமலேயே கூட இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் தங்களுடன் கல்லறைக்குக் கொண்டு செல்லும் ரகசியமாகவும் இருக்கலாம். எனவே தான் வைத்தியர் எட்டு வருடம் போராடியும் அவர் மகனை கந்தர்வனாக்கியவள், கொடூர வாதைகளை மட்டும் அனுபவித்தாலும் அவனை விடவில்லை. மானுட மனதின் செயல் வழிகளை நாம் முழுதறிந்து விட முடியுமா என்ன? பத்து லட்சம் காலடிகள் கதையில் இதே போன்றதொரு நிகழ்வு வருகிறது. அங்கும் ஹாஜி எம்.ஏ.அப்துல்லா அவர்களின் மகன் ஹாஷிம் இப்படி திருமணமான, அவனை விட நான்கு வயது மூத்தவளான ஒரு பெண்ணிடம் சிக்கிக் கொள்கிறான். அவளும் அவனை கடைசி வரை நினைத்துக் கொண்டிருப்பேன், அவள் கணவனின் அத்தனை குரூரங்களையும் சகித்துக்கொண்டு என்று தான் சொல்கிறாள். இதை எளிய பழிவாங்கும் உத்தி எனக் கடந்து விடலாகாது.

ஆனால் இன்னொன்று உண்டு. துயர்கள் மட்டுமே சாத்தியமான வாழ்வில் நித்திய ஆனந்தத்தை மட்டுமே நல்கும் இந்நிலையை ஏன் நாம் வியாதி என்கிறோம்? நம்மை விடுங்கள், அந்த நிலை விலகும் காலை வேளைகளில் கணேசனே ஏன் இதை வியாதி என நம்புகிறான்? அந்த நிலை என்பது தான் என்ன? ஒரு வார்த்தையில் சொன்னால் ‘பரவசம்’. நாமனைவரும் வாழ்வில் சில நிமிடங்களுக்காவது அந்த பரவசத்தை அனுபவித்திருப்போம். அவை சில நிமிடங்களே என்பதால் நம் வாழ்வின் அருங்கணங்களில் ஒன்றாக அவை இருக்கும். ஏனெனில் அவற்றை நாம் அறிந்திருக்கிறோம். இங்கே கணேசன் முதலானவர்களுக்கு அந்த அறிதலின் சாத்தியங்கள் இல்லை. யோக சாதனைகளில் சாதகன் இந்த நிலைக்கு வருவது உண்டு. அங்கே குருவின் துணை இல்லையேல் சாதகன் மீளவியலாது. அறியாத எதுவும் மானுடனுக்குத் துயர் தானே! துயரளிக்கும் எதுவும் நோய் தானே! நோய் என நம்பினால் மட்டும் தானே குணம் சாத்தியம்.

கேளாச்சங்கீதத்தை கேட்காமலே இருப்போமாக…. கேட்டால் அதை அறிந்து கொள்ள அருளிருக்கட்டும்… மீண்டும் ஒரு அபாரமான கதை ஜெ.

அன்புடன்,

அருணாச்சலம் மகாராஜன்

 

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் வாசித்தேன். இது உங்களுடைய ஒரு recurring theme என நினைக்கிறேன். முதன்முதலாக விஷ்ணுபுரத்தில் வரும் திருவடி ஆழ்வார் தான் இந்த நிலையில் இருக்கிறார். லலிதாங்கியின் ஒரு கணம் அவரை பித்துப்பிடிக்கச் செய்துவிடுகிறது. அது அவரை தூய ecstasy நோக்கி கொண்டு செல்கிறது. அதுவே இறையனுபவமாகவும் ஆகிவிடுகிறது. ஆனால் அதில் வரும் வைத்தியர் அதை ஒரு உடல்நிலைச் சிக்கல் என்றுதான் சொல்கிறார். வைத்தியரிடம் திருவடியை கொண்டுசெல்லும் ஒரு காட்சி இருக்கிறது. திருவடி அந்த பித்தில் வலிப்புகள் வந்து துடித்தபடியே இருக்கிறார். அந்த மாபெரும் இனிமையை அவர் உடல் தாளவில்லை என்று வைத்தியர் சொல்கிறார்.

அதன்பின் ஒரு நேரடி அனுபவக்குறிப்பு வாழ்விலே ஒருமுறை நாவலில் உள்ளது. நூறுகதைகளில் தங்கத்தின் மணம் குறிப்பிடத்தக்க படைப்பு. இது நீங்கள் கேட்டு அறிந்த கதை அல்லது அனுபவம் மட்டும் அல்ல. இது உங்கள் சொந்த அனுபவமாகவும் இருக்கும் என நினைக்கிறென். இந்த அனுபவத்தில் உள்ள mystic தன்மையும் உங்களை கவர்கிறது. கூடவே இதை வெறும் உடல்நிலைச்சிக்கலாக, நரம்புச்சிக்கலாக மட்டுமே பார்க்கமுடியுமா என்றும் முயர்ச்சி செய்கிறீர்கள். இந்த ஆதாரமான கேள்வியை உங்களால் தாண்டமுடியவில்லை என தோன்றுகிறது

சாரங்கன்

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைஅஜ்மீர்,பிருத்விராஜ்- கடிதம்
அடுத்த கட்டுரைகாடு- எம்.கே.மணி