கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2

கேளாச்சங்கீதம்

‘அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

மீண்டும் ஒரு சிறுகதை.  பரவசமும் பழைய நினைவுகளும் மகிழ்ச்சியுமாக வாசித்தேன். நீலி அவுரிச்செடியும் வருவதால் கூடுதல் மகிழ்ச்சி. நீலியின் பல்வேறு மருத்துவப்பயன்களில் முதன்மையானது விஷம் முறிக்கும் அதன் தன்மைதான்.

நானே கதைசொல்லியாக, அணைஞ்சபெருமாளின் கூட வந்தவராக, கொச்சன் வைத்தியரிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தெனென்றும், இல்லையில்லை நான்தான் கணேசனென்றும் ஒரே சமயத்தில் தோன்றியது

கணேசனைப்போல,அன்பெனும், நேசமென்னும், காதலென்னும், பிரியமெனும் பிடியில் அகப்பட்டுக்கொண்டிருக்காதவர்கள், அந்த நஞ்சை அருந்தாதவர்கள்  இருக்கமுடியாதல்லவா? எவ்வளவு  விஷம் உள்ளே  போனதென்பதில்தான் வேறுபாடு இருக்க முடியும்

 “தேனுதான் தேனீயை ஒண்ணாச் சேந்து ஒற்றைக்கூடா வச்சிருக்குது. தேனீ தேனிலே பிறந்து வளருது. தேன் தேடி அலையுது. தேனிலே சாவுது… அந்த தேனுதான் இது. இது அமிர்த மதுரம். நோயா வரும். சாவா வரும். அப்பமும் இது மதுரம்தான்

நெஞ்சில் விஷம் நிறைந்து பூத்திருக்கிற, பெரும்பாறைகளை உச்சிமலையில் கட்டிவைத்திருக்கும் கொலைப்பகவதியின்  பூட்டில் சிக்கிக்கொண்டிருக்கும் கணேசனை பிரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி இனிய துயரில் இருப்பதும் ஒரு கொடுப்பினைதான்.லக்‌ஷ்மி மணிவண்ன்ன் சொல்லி இருப்பார் ஒரு கவிதையில்  தூய அன்பென்னும் துயர் என்று.

இப்படி ஒரு சம்பவம் என் வீட்டிலும் நடந்தது.  ஒரு பெண்ணின் பிரியத்தில் விழுந்த ஒருவரை வீட்டு பெரியவர்கள் யாரோ  கைவிஷம் வைத்து விட்டதாக நம்பினார்கள். மருந்து வைப்பது என்று இங்கு சொல்வார்கள்

என் அப்பாவின் ஆசிரியரான ஒரு பெரியவரின்  குடும்பத்துக்கு சொந்தமான  பகவதி கோவிலில்  இதை கண்டுபிடிக்க முடியும் என்று சம்பந்தப்பட்டவரை தவிர மற்ற  எல்லோருமாக போனோம். கேரளாவில் ஒரு சின்ன கிராமத்தில் கோவில். பெரியவருக்கு தள்ளாத வயது, ஆனாலும் கோவிலில்தான் இருந்தார். அவர் மகன் அங்கு பூசை செய்து கொண்டிருந்தார். தீர்த்தம் வழங்குகையில் எனக்கு மட்டும் செம்பிலிருந்த சிறு நந்தியாவட்டை மலர் கையில் விழுந்த்து. ’’என்ன நட்சத்திரம் நீ’’ என்று அவர் என்னை அப்போது கேட்டது நினைவிருக்கிறது

கோவில் பிரகாரத்தில் இருந்த சின்ன சிலைக்கு பாலாபிஷேகம் செய்கையில் பாலின் நிறம் நீலமாக மாறினால் கைவிஷம் வைத்தது உறுதியாகும்.  வீட்டிலிருந்து பால் கொண்டு போயிருந்தோம் அது முருகன் சிலை என்றுதான் நினைவு பலவருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு முன்பாக அதன் மீது வேறு சிலரும் வீட்டிலிருந்து கொண்டு வந்த பாலை ஊற்றினார்கள் வழிந்து அப்படியே  நிறம் மாறாமல் கீழே வந்தது. எங்களுக்கும் அப்படியேதான் வரும் என்று நினைத்திருந்தேன் கொஞ்சம் அசுவாரசியமாக கூட இருந்தேன் என்றும் சொல்லலாம். ஆனால் அந்த நின்ற கோலத்திலிருந்த சிறு கரிய சிலை மீதிருந்து   எங்கள் வீட்டு பாலை ஊற்றுகையில நீலமாக கீழே வழிந்தது.

நம்பவே முடியாமல் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தேன் ’’அவரை அவர் வழியிலேயே விட்டுவிடுவதை தவிர வேறு வழியில்லை ’’என்று பெரியவர் சொன்னார் வாடகைக்காரில் போயிருந்தோம் வீடு திரும்பும் வரை சம்பந்தபட்டவரின் அம்மா ஒருவார்த்தை கூட பேசாமல் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.

கேளாச்ச்சங்கீதம் கேட்டவரை அப்படியேதான் விட்டுவிட்டோம்

அன்புடன்

லோகமாதேவி

அன்புள்ள ஜெ

 

கேளாச்சங்கீதம் படித்து திகைத்துப் போய்விட்டேன். இது என்னுடைய தம்பியின் வாழ்க்கை. இது ஏன் நிகழ்கிறது என்று சொல்லிவிடமுடியாது. இன்றைய நவீன யுகத்தில் மூடநம்பிக்கைக்கு எல்லாம் இடமில்லை. இது ஏதோ உளவியல்நிகழ்வு. அல்லது மூளையின் செரட்டோனின் விளைவு. ஆனால் இது இருக்கிறது. கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தம்பி ஒரு பெண்மேல் பித்தாக ஆனான். இவ்வளவுக்கு படிப்போ பழக்கமோ இல்லாதவன் கிடையாது. நல்ல படிப்பு. ஏராளமான பெண்கள் தோழிகளாகவும் இருந்தனர். உற்சாகமான வாழ்க்கை. ஆனால் ஏதோ நடந்தது. ஒருபெண்மேல் பைத்தியமாக ஆனான். அவள் இவனுக்கு தெரிந்தவள். ஆனால் திருமணம் ஆனவள். அவள் மெல்லிசையில் பாடுவாள். அதுதான் காரணமாக இருக்கலாம்.

யார் சொன்னாலும் கேட்கமாட்டான். அப்பா அடித்ததில் கையெலும்பே ஒடிந்துவிட்டது. இரவும் பகலும் அவள் நினைப்பு. அவள் போகும் பாதையிலோ அவள் வீட்டு முன்னாடியோ நிற்பான். அவள் பெயரை ஒரு நாநூறு பக்கம் நோட்டு முழுக்க எழுதி வைத்திருந்தான். அவளுடைய ஆடைகளை திருடிக்கொண்டு வந்துவிடுவான். கடைசியில் போலீஸ் கேஸ் ஆகியது. அடி கிடைத்தது. ஆனாலும் அவனால் மீள முடியவில்லை

அவனுக்கு அவ்வப்போது மீளவேண்டும் என்று தோன்றும். ஆனால் மீளவே முடியாது. மறுபடி அங்கே போய்விடுவான். அவனை வெளியூரில் கொண்டுவிட்டால் திரும்பி வந்துவிடுவான். இப்படியே மூன்றாண்டுகள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சரியாகிவிட்டான். ஆனால் படிப்பு போய்விட்டது. ஒரு சின்ன கம்பெனியில் வேலை செய்கிறான். இப்போது அவனுக்கு அதெல்லாம் பெரிதாகப் படவில்லை. இப்போது கொஞ்சம் குடிப்பழக்கம் உண்டு. ஆளே மாறிவிட்டான். கொஞ்சம் பொறுக்கி மாதிரி அடிக்கடி பேசுவான். அந்தப்பெண் மேல்கூட எந்த பிரியமும் இப்போது இல்லை.

கேளாச்சங்கீதம் அந்த மனநிலையை பூடகமாகவும் உருவகமாகவும் சொல்கிறது. அதைப்படிக்கையில் இதெல்லாம்தான் வாழ்க்கை என்ற நினைப்பு வந்தது

ஆர்

முந்தைய கட்டுரைவாசகன் அடிமையா?
அடுத்த கட்டுரைநான்கு நூல்களும் எழுத்து இதழ்த் தொகுப்பும்