நான்கு நூல்களும் எழுத்து இதழ்த் தொகுப்பும்

அன்பின் ஆசிரியருக்கு,

வணக்கம். நெடுநாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். நலம் விழைகிறேன். நீங்கள் வெளியிட்ட மதாரின் ‘வெயில் பறந்தது’ கவிதைத் தொகுதிக்குப் பின் நான்கு நூல்கள் இப்போது வெளிவருகின்றன. நூல்களைப்பற்றி சில வார்த்தைகள்.

நாரத ராமாயணம்புதுமைப்பித்தன்

இந்நூலுக்கு இதுவரை நம்பகமான ஆய்வுப் பதிப்பு வெளியாகவில்லை. இருவேறு மறுபதிப்புகள் இருந்தும் அவை பிழைகள் உள்ளவையே. அவற்றில் உள்ள குறைகள் களையப்பட்ட மறுபதிப்பு இது. முன்னோடிப் பதிப்பாசிரியர்கள் இந்நூலை இதுவரை பதிப்பிக்கவில்லை என்பதை அறிய ஆச்சரியம் மேலிட்டது. அதுவே இப்பதிப்பைக் கொண்டுவருவது குறித்த ஊக்கத்தையும் கூடவே கொஞ்சம் தயக்கத்தையும் கொடுத்தது. ஆ. இரா. வெங்கடாசலபதி அவர்களிடம் இந்நூலை வெளியிடும் விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டபோது அவர் அளித்த ஆலோசனைகள் என் தயக்கத்தைப் போக்கின. விரைவில் இந்நூலுக்கு அவரது செம்பதிப்பும் வரவுள்ளது. நாரத ராமாயணத்தின் இந்தப் பதிப்பை சுகுமாரன் தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்குச் செய்தது போன்ற ‘ஆர்வப் பதிப்பு’ என்று சொல்லலாம். நண்பர் சிவராமன் அவர்களுடனான உரையாடல்களும் இந்நூலை பதிப்பிக்கும் விருப்பத்திற்கு உறுதி சேர்த்தன. ஓராண்டுக்கு முன் மின்னூலாக வெளியானதுபோது அதிகமாக வாசிக்கப்பட்டாலும் அதன் வழியே இந்நூலைப் பற்றிய குறிப்பிடத்தக்க வாசிப்புகள் வரவில்லை. (எஸ்.ரா.வின் கட்டுரையும் ஜமாலனின் கட்டுரையும் இணையத்தில் கிடைக்கின்றன.) இப்போது இந்நூலுக்கு உரிய கவனம் கிடைக்கும் என நம்புகிறேன்.

வாசிகள்நாரணோ ஜெயராமன்

எழுபதுகளில் கசடதபற, ஞானரதம், பிரக்ஞை, அஃக் ஆகிய இதழ்களில் வெளியான நாரணோ ஜெயராமனின் ஒன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு. அவர் எழுதிய எல்லா கதைகளும் இதற்குள் வந்துவிட்டன. பொன். தனசேகரன், என். சிவராமன், க்ருஷாங்கினி, அழகியசிங்கர், விமலாதித்த மாமல்லன், ஜி. குப்புசாமி ஆகியோரின் முயற்சியால் தொகுக்கப்பட்டது. ஜனமித்திரன் இக்கதைகள் பற்றி முன்னுரை வழங்கியிருக்கிறார்.

நான் கண்ட மகாத்மாதி. சு. அவினாசிலிங்கம்

பாவண்ணன் அவர்கள் ஓர் உரையாடலில் இந்நூலைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். இந்நூலின் முதல் பதிப்பைக் கொடுத்துப் பதிப்பிக்க உதவியதும் அவரே. இந்நூலைப் பற்றிய அவரது விரிவான கட்டுரை ‘சத்தியத்தின் ஆட்சி’ நூலில் இடம்பெற்றிருக்கிறது. அந்த நூலைத் தொடர்ந்து ‘எல்லாம் செயல்கூடும்’, ‘மண்ணில் பொழிந்த மாமழை’ என மேலும் இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்துவிட்டன. அதற்காக அவர் மேற்கொண்ட தேடலும் உழைப்பும் மிகப்பெரியது. மூன்று நூல்களிலும் அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் காந்திய ஆளுமைகள் பற்றிய பல நூல்கள் நெடுங்காலமாக மறுபதிப்பு காணாதவை. அவை ஒவ்வொன்றையும் மீள்பதிப்பு செய்யவேண்டிய பொறுப்பு பதிப்பாளர்களுடையது. அதில் முதல் சிறு பங்களிப்பு இந்நூல்.

திருச்சி ஜெயில்எல். எஸ். கரையாளர்

இந்நூலைப் பற்றி உங்கள் ‘முன்சுவடுகள்’ நூலில் அறிமுகம் கிடைத்தது. தமிழினி பதிப்பகம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் மறுபதிப்பு செய்தது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலிருந்து நவயுகப் பிரசுராலயம் வெளியிட்ட முதல் பதிப்பும் கிடைத்தது. முதல் பதிப்பைக் கொண்டே இந்தப் பதிப்பு வெளியாகிறது. முதல் பதிப்பின் முன்னுரைகள், சிறையில் இருந்த சத்தியாக்கிரகிகளின் பெயரும் கைதி எண்ணும் கொண்ட அட்டவணை ஆகியவை இப்பதிப்பிலும் உள்ளன. இந்நூலைப் பதிப்பிக்கும் அனுமதியைப் பெற நூலாசிரியரின் மகன் டாக்டர் ஜவகர் ராமநாதன் அவர்களைச் சந்தித்து அனுமதி பெற்றோம். அவர் கனிவோடு இந்நூலைக் மீள்பதிப்பு செய்யும் வாய்ப்பைத் தந்திருக்கிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை இந்நூல்களுக்கான சிறு அறிமுகக் கூட்டம் நெல்லையில் நடக்கவுள்ளது. ஒருநாள் இந்நூல்களை உங்களிடம் அளிக்க வேண்டும்.

*

கிண்டில் மின்னூல் வெளியிடும் வேலை நின்றுபோய் இரண்டு மாதம் ஆகிவிட்டது. நாட்டுடைமையான க. நா. சு. நூல்களுக்கு ஒருவர் உரிமை கோரியதால் 2017 முதல் வெளியிட்டிருந்த நூற்றுக்கணக்கான நூல்களும் மொத்தமாக நீக்கப்பட்டுவிட்டன. என் கணக்கும் முடக்கப்பட்டுவிட்டது. மீட்கும் முயற்சி பயனளிக்கவில்லை. பலர் உதவியும் ஊக்கமளித்தும் வந்ததால் செய்யமுடிந்த பணி. இதைத் தொடரமுடியாத நிலையை எண்ணும்போது சோர்வாக இருக்கிறது. இருப்பினும் அச்சில் வெளியிடத் திட்டமிட்டிருந்த நூல்கள் வெளியாகும் தருவாயில்தான் இது நிகழ்ந்திருக்கிறது. கூடியவரை அச்சில் நூல்களைத் தொடர்ந்து வெளியிட முயல்வேன்.நான்கு நூல்கள் அச்சில்

*

‘எழுத்து’ இதழ்களை மின்னூல்களாக்கி வெளியிடும் வேலையும் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை 10 இதழ்கள் முடிந்துள்ளன. மொத்தம் 2500 பக்கங்களுக்கு மேல் கொண்ட 112 இதழ்கள். முழுக்க முழுக்க ‘எழுத்து’க்கு மட்டுமே இடமளித்திருப்பதால் ஒவ்வொரு இதழுமே மின்னூலாக நூறு பக்கங்களை எட்டுகிறது. இப்பணி செப்டம்பர் 29ஆம் தேதி செல்லப்பாவின் பிறந்தநாளில் தொடங்கியது. சரியாக ஓராண்டிற்குள் முடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்து ‘சொல் புதிது’ இதழையும் இப்படிச் செய்யவேண்டும் என்று ஆவல். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்.

எழுத்து இதழ்த் தொகுப்பு
https://cutt.ly/6EYJg1G

அன்புடன்

ஸ்ரீநிவாச கோபாலன்

அன்புள்ள ஸ்ரீநிவாச கோபாலன்

முதல்விஷயம், க.நா.சு நூல்கள் தவிர எஞ்சிய நூல்களுக்கு காப்புரிமை இல்லை என்றால் வலையேற்றம் செய்யலாம். உங்களிடம் பழைய பிரதிகள் இருக்கும் அல்லவா?

நாட்டுடைமை ஆக்கப்பட்ட க.நா.சுவின் நூல்களுக்கு பொய்யாக உரிமைகோரிய திரு.அருண்குமார்  மீது சட்டநடவடிக்கை எடுக்கமுடியும். அதற்கான சட்ட உதவிகளை செய்கிறோம். அவர் இந்தியாவில் இருந்தாரென்றால் அவர்மேல் குற்றவியல் மோசடிச் சட்டம் கீழ் வழக்கு தொடுக்கலாம். அதை நீங்கள்கூட செய்யவேண்டியதில்லை. ஒரு வாசகர் குழுமம் அமைத்தே செய்யமுடியும். அவர்மேல் மோசடி வழக்கு தொடுத்துள்ள செய்தியை அமேஸானுக்கு தெரிவிக்கலாம்.

[ஆனால் அந்த அருண்குமார் என்னும் ஐடி போலிப்பெயரில் இணையத்தில் உலவும் விஷமிகளில் ஒருவராகவே இருப்பார். இங்கே சட்டபூர்வமாக நூல்களை வெளியிடுபவர்களை மோசடிப்பேர்வழிகள் தடைசெய்ய முடிகிறது. சட்டவிரோதமாக திருட்டு நூல்களை இணையத்தில் வெளியிடுபவர்களை எதுவுமே செய்யமுடிவதில்லை]

இந்நூல்கள் பல அச்சில் இல்லாதவை, அவை இணையத்தில் கிடைப்பது மிகச்சிறந்த விஷயம். ஈழநூல்களுக்கு இப்படி ஓர் அரிய சேகரிப்பு உள்ளது. அது ஓர் அமைப்பால் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தனியொருவராக செய்கிறீர்கள்

வாழ்த்துக்கள்

ஜெ

முகம் விருது விழா

ஸ்ரீனிவாச கோபாலன் – கடிதங்கள்

ஸ்ரீநிவாச கோபாலன் – பேட்டி

 

முந்தைய கட்டுரைகேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைகலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்