இனிய ஜெயம்
சிற்சில பயணங்கள். இன்றுதான் கட்டுரைத் தொடரை ஒரே அமர்வில் முழுமையாக வாசித்தேன்.
அஜ்மீர் யாத்திரையில் மானசீகமாக உங்கள் அருகே நானும் இருந்தேன். அந்த உணர்வுக்கு ஸ்தூலமான உருவம் அளித்தது உங்களது பயணக் கட்டுரை. சஸ்ய ஷியாமள கோமளம் என முகம் காட்டும் திணையிலிருந்து கிளம்பி, வெம்பாலை என முகம் காட்டும் திணைக்கு உங்களுடனும் ஷாகுல் உடனும் சென்று இறங்கி, அதன் கலை வரலாறு பண்பாட்டு குறுக்குவெட்டுக்குள் சுற்றிச் சுழன்று, மீண்டு மழையில் பசுமை செழித்து நிற்கும் குமரி நிலத்துக்கு வந்து சேர்ந்தேன்.
நீங்கள் பயணத்தில் இருக்கும்போதே நீங்கள் உள்வட்டத்தில் பகிர்ந்திருந்த ஞானி ஹாஜா மொய்னுதீன் அவர்களுக்கு உங்கள் சிரம் மேல் ஏந்தி சென்ற வணக்கக் கம்பள புகைப்படம் ‘கேஷுவலாக’ முகநூலுக்கு பரவி, முகநூல் சுண்டெலிகளும் இந்துத்துவ பூனைக்குட்டிகளும் சேர்ந்து கீச் மூச் மியாவ் வியாவ் என்று தங்கள் ஜலபுலஜங்ஸ் ஐ துவங்கி விட்டனர்.
பூனைக்குட்டிகள் அறியாத பலவற்றில் இதுவும் ஒன்று. அக்காணிக்கை ஒரு மரியாதை. சமர்ப்பணம். ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்கள் அதை இயற்றி இருக்கிறார்கள். இந்த வருடம் அக் காணிக்கையை செலுத்திய முக்கியப் பிரமுகர்களில் ஒருவர், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள்.
கட்டுரையில் மிக முக்கிய அலகுகளில் ஒன்று அன்றைய சூழலில் நாயக உருவாக்கங்கள் குறித்த வரையரையும் அந்த வரிசையில் வரும் மகாராஜா பிரித்விராஜின் நாயக உருவாக்கமும், கோரி பிருத்வி இரு பக்கங்களிலாக அமைந்த நாணயம் சுட்டும் யதார்த்த தளமும். நிச்சயம் பூனைக்குட்டிகள் இந்த நாணயம் சுட்டும் யதார்த்தத்தை மியூட்டில் போட்டு விட்டு, ப்ரிதிவிராஜ காவியத்தில் நீங்கள் சுட்டிய சம்பவத்தை எடுத்துக்கொண்டு “ஐயையோ இந்த ஜெயமோகனே இப்புடித்தான்” என்று தங்கள் ஜலபுலஜங்ஸ் ஐ துவங்குவார்கள்.
எல்லா பெருங்கதையாடல் போலவே பிருத்விராஜ் ராஜாவின் கதையும் ப்ரிதிவிராஜ விஜயம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டே துவங்குகிறது. இங்கே நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டிய ஆளுமை திரு ஜான் ஜார்ஜ் புஹ்லர் அவர்கள். ஹனாவர் அவரது சொந்த மண். ஜெர்மன், கிரேக்கம், லத்தின், அரபி, சமஸ்க்ருதம் உட்பட பல மொழிகளை பண்டிதர் எனும் அளவு கற்றவர். முறையாக தொல்லியல் பயின்றவர். அன்றையதேதிக்கு அறிவுத்துறை கவனம் கொள்ளும் பல நூல்களை எழுதியவர்.
மாக்ஸ் முல்லர் வழிகாட்டுதலின் பேரில் இந்தியா வரும் ஜான் புஹ்லர் மும்பை பல்கலை கழகத்தில் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்கிறார். அவரது சமஸ்கிருத ஆய்வு, தேடல்கள் இதன் வழியாக அவர் கஷ்மீரில் 1875 இல் கண்டு பிடித்த பூர்ஜர மரப்பட்டையில் எழுதப்பட்டிருந்த சம்ஸ்கிருத கையெழுத்துப் பிரதியான முழுமையற்ற காவியமே ப்ரிதிவிராஜ விஜயம்.
அஜமேரு நகரத்தில் அவதரித்து முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்கும்படி பிரம்மன் விஷ்ணுவை பணிக்கிறார். அதற்கென அவதரித்தவரே பிருத்விராஜ். இப்படித் துவங்கும் காவியம், ராமரின் குணங்கள், ராமராஜ்யம் எனும் ஆட்சி முறை என்ரெல்லாம் அன்றைய லட்சியவாதம், காவிய இலக்கணம் ஆகியவற்றின் பின்னணியில் ப்ரிதிவிராஜ் ராஜாவை பொருத்தி அவரது சரிதத்தைப் பாடுகிறது.
இந்தக் காவிய உயர் நவிற்சி, உருவம் உத்தி, எழுதிய ஆஸ்தான கவியின் சார்பு, அதிலிருந்து எவ்வாறு ஊகித்தும் ஒப்பு நோக்கியும் புறவய வரலாறு ‘பிரித்து’ எடுக்கப்பட்டது என்பது சார்ந்து சில ஆய்வுக் கட்டுரைகள் archive இல் கிடைக்கின்றன.ஆக இந்த குறுகிய சார்பு எல்லைகள் வழியே தெரியும் பிருத்வியின் வன்முகத்தை விட அவரது வன்மைச் செயல்கள் அதிகமாக இருக்கும் என்பதே உண்மை. இந்த சாதாரண அடிப்படையான ஊகஉண்மையை அந்த பூனைக்குட்டிகள் வசம் சொல்லிப் பாருங்கள். மியாவ் கியாவ் என்று கதறி சாபம் விட்டு கண்ணீர்க் கடலில் மிதப்பார்கள்.
கொஞ்சம் பின்னால் திரும்பி பார்த்தால் இந்த பூனைக்குட்டிகள் உருவாக்கிய நாயகர்கள் எல்லோர் நிலையும் இப்படித்தான் இருக்கிறது என்பது தெரியும். யதார்த்த ஆளுமை வேறு, இவர்கள் அவர்கள் மீது சுமத்தும் நாயக பிம்பம் வேறு. சிறந்த கடந்தகால உதாரணம் வீர சிவாஜி. சில வருடங்கள் முன்பு பூனைக்குட்டிகள் கூடி மியாவ் கியாவ் வியாவ் என்று வெற்றி முழக்கம் எழுப்பி அஃப்சல் கான் கல்லறை மாடத்தை தரைமட்டம் ஆக்க இந்துக்களுக்கு அறைகூவி அழைப்பு விடுத்தன. இடதுசாரிகள் தலையிட்டு அந்தக் கல்லறை மாடத்தைக் கட்டியவரே வீர சிவாஜிதான் எனும் ‘ஆதார பூர்வமான’ வரலாற்றை சுட்ட, அதிசயமாக அது பூனைக்குட்டிகளும் விளங்க, அந்த அபாயம் அன்று நின்று போன சேதியை இப்போதும் இணையத்தில் எடுத்து வாசிக்கலாம்.
சிறந்த இந்தக் கால உதாரணம் ‘இந்துத்துவ’ அம்பேத்கார். அவர் எழுதிய, பெரியாருக்குக்கு கொஞ்சமும் சளைக்காத (ஆனால் ஆய்வு நூல்) இந்து மதத்தின் புதிர்கள் நூலை எப்படி மண் பறித்து மூடுவது என்று இன்னமும் பூனைக்குட்டிகளுக்குப் புரியவில்லை. அடுத்து சர்தார் வல்லபாய் படேல். மூவாயிரம் அடி உயர (அல்லது முப்பதாயிரமா) சிலையாக இன்று எழுந்தருளும் அதே வல்லபாய்தான், சுதந்திர இந்தியாவில் rss கு தடை விதித்தவர். இந்த பூனைக்குட்டிகளின் பரம எதிரி நேருதான் அந்த தடையை நீக்கியவர். பூனைக்குட்டிகள் அரசியலை அன்று நேரு கையில் எடுத்திருத்தால் அன்றைய காந்தி கொலைச்சூழலில் இந்தியா இருந்த கொந்தளிப்பு நிலையை, தனக்கிருந்த அதிகாரம் மக்கள் ஏற்பு இவற்றை பயன்படுத்தி, படேல் மற்றும் இந்துத்துவ தரப்புகளை அன்றே அவர் அரசியல் அனாதை என்று ஆக்கி இருக்க முடியும். நேரு தான் காந்தியின் மைந்தன் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
என்றுமுள்ள நாயகன் வீர சாவர்க்கர் கதை… வேண்டாம்…அப்பா சொல்லுவார் யானைக்கு ஒரு காலம்னா, பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று. இது பூனைகளின் காலம். எனக்கு பூனைக்கடி தாங்காது. ஆகவே இங்கே நிறுதிக் கொள்கிறேன் :).
கடலூர் சீனு
அஜ்மீர் பயணம்- 7
அஜ்மீர் பயணம்-6
அஜ்மீர் பயணம்- 5
அஜ்மீர் பயணம்- 4
அஜ்மீர் பயணம்-3
அஜ்மீர் பயணம்-2
அஜ்மீர் பயணம்-1