தொடர்புக்கு: [email protected]
அன்புள்ள ஜெ
புனைவு களியாட்டின் நூறு கதைகளை அவை வெளி வந்து கொண்டிருந்த நேரத்தில் பார்த்தாலும் நான் வாசிக்கவில்லை. இன்றுவரை அவற்றை மொத்தமாக வாசிக்கவில்லை. ஏறத்தாழ முக்கால்வாசி கதைகளை வாசித்துள்ளேன். இன்னும் இருபது கதைகளாவது இருக்கும் வாசிக்க.
இப்போது ஏன் அப்படி செய்தேன் என யோசிக்கையில் இயல்பாக எழுந்து வரும் விடையென்பது இளையவர்களுக்கு உரிதான அசட்டு ஆணவம் அன்றி வேறல்ல என்றே தோன்றுகிறது. அன்று ஒரு கதையை வாசித்தவுடன் அப்படியே உணர்வெழுச்சியும் கருத்துகளும் மண்டையில் இருந்து கொட்ட வேண்டும் என நினைத்தேன். அந்த நிலையை அடையும் வரை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டியதில்லை என நினைத்து கொண்டேன். இன்று பார்க்கையில் என்னை பார்த்து நானே சிரித்து கொள்கிறேன். எத்தனை மடத்தனமான விஷயம் அது !
எல்லா கதைகளும் வாசித்தவுடனே திறந்துகொள்ளுமளவுக்கு நமக்கு வாழ்க்கை அனுபவமோ வாசிப்பு பின்புலமோ இல்லாமல் இருக்கலாம். அவையிருந்தும் கதை கேட்கும் கூர்ந்த கவனத்தை கொடுக்காமல் போகலாம். சில கதைகள் அவற்றின் இயல்பினால் நமக்குள் விதையென விழுந்து வளர செய்யலாம். அதனால் ஒரு வாசகன் தொடர்ச்சியாக சிறுகதைகளை கூர்ந்து வாசித்து கொண்டே இருக்க வேண்டும். அதுவே வாசிப்பின் ரசனையும் கூருணர்வும் மேம்படுவதற்கான வழி.
இவையெல்லாம் உங்கள் கட்டுரைகளிலும் நவீன தமிழிலக்கிய அறிமுகம் நூலிலும் வெவ்வேறு சொற்களில் தாங்கள் கூறியவை தான். ஆனால் எப்போதுமே சொற்கள் நமது அனுபவமாகி பின் நமது அறிதலாக சொந்த சொற்களில் வெளிப்படுவதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. என்ன தான் ஆசிரியர் புத்தி சொன்னாலும் என்னை போன்றவர்கள் பட்டுகெட்டு தான் புரிந்து கொள்வோம் என அடம்பிடித்தால் யாரும் எதுவும் செய்வதற்கில்லை.
இப்போது வாசிக்காமல் இருக்கும் கதைகளில் இருந்து மனம் போனபோக்கில் எடுத்து வாசித்து வருகிறேன். அப்படி சமீபத்தில் வாசித்த கதைகளில் ஒன்று தான் ஆடகம். ஆடகம் கதையை வாசித்தவுடன் சட்டென்று வெண்முரசின் நீர்க்கோல தமயந்தியின் கான் வாழ்க்கை நினைவிற்கு வந்தது.
இந்த கதை வாசிப்பதற்கு சில நாள் முன் நம்முடைய வெண்முரசு இசை கொண்டாட்டம் நிகழ்ந்தது. அன்று நீங்கள் பேசுகையில் உங்களுடைய ஆசிரியர் கூறிய இரண்டு அறிவுரைகளை கூறினீர்கள். ஒன்று, வெண்முரசு போன்ற பெருங்காவியங்கள் சாந்தமும் இனிமையிலும் முடிய வேண்டும். இரண்டு, தவம் செய்பவன் தவத்தையும் உதறிவிட வேண்டும். முதல் விஷயம் பற்றி பேசுகையில் முதலாவிண் முடிந்தும் அந்த தத்தளிப்பு இருந்ததையும் பதினைந்து நாட்களுக்கு பிறகு கண்ணன் பிள்ளைத்தமிழ் நிகழ்ந்து அது இனிதே நிறைவடைந்தை கூறினீர்கள். இரண்டாவதை பற்றி சொல்கையில் நூறு கதைகள் எழுதி முடித்தவுடன் பெருமளவு வெளிவந்துவிட்டதையும் குமரித்துறைவி நிகழ்ந்தேறிய பின் முழுமையாக எச்சமில்லாமல் கடந்து சென்று விட்ட அனுபவத்தயும் பகிர்ந்து கொண்டிருந்தீர்கள்.
ஆடகம் வாசித்தவுடன் ஒன்று தோன்றியது. தவம் செய்பவன் உலகில் ஆடும் ஜெயமோகன் அல்ல, ஒவ்வொரு கலைப்படைப்பு பிறந்து வருகையிலும் எங்கோ தொலைவான் கோட்டில் அமர்ந்து கதை எழுதும் ஜெயமோகன் என்ற கலைஞன் தான். அந்த கலைஞன் வெண்முரசு எனும் தவத்தால் வண்ணத்துப்பூச்சியாக மாறியவன். நூறு கதைகள் என்பவை சிறகெழுந்த வண்ணத்துப்பூச்சி கூட்டை பிளந்து வெளிவரும் நிகழ்வு போன்றது. குமரித்துறைவி அஃது அருந்திய அமுதமாகி மண்ணில் பொழிந்த முதற்தேன் துளியாகும்.
இந்த நூறு கதைகளின் வழி பெருவிசை கொண்ட அந்த கலைமனம் ஒரு பெருங்காவியத்தின் வழி தான் கண்டடைந்த மெய்மையை நூறு வெவ்வேறு துண்டுதுண்டான வாழ்க்கை தருணங்களின் வழி கண்டடைகிறது. இன்னும் வெண்முரசையும் சரி நூறு கதைகளையும் சரி முழுமையாக வாசித்து முடிக்கவில்லையெனினும் வாசித்தவரை நினைவில் ஓட்டி பார்க்கையில் ஆடகம் போல நேரடி தன்மை இல்லாவிட்டாலும் சாரம்சத்தில் அத்தனை கதைகளும் வெண்முரசின் வெவ்வேறு கதைகளின் சாரம்சமும் ஒன்றென உணர முடிகிறது.
அன்புடன்
சக்திவேல்
ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க
குமரித்துறைவி அச்சுநூல் வாங்க
வான் நெசவு அச்சுநூல் வாங்க
விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்
கதைகள் கடிதங்கள்