கென்யா வாழ்க்கை- வெங்கடேஷ் சீனிவாசகம்
அன்பின் ஜெ,
நலம், நலமறிய ஆவல்.
நேற்று (17.10.2021) தகடூர் புத்தகப் பேரவையின் இணைய வழி தொடர்நிகழ்வான “சாப்பாட்டுப் புராண”த்தில் செல்வனின் “பேலியோ டயட்” நூல் அறிமுகமும் (சம்பத் ஐயா), மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களின் சிறப்புரையும் சிறப்பாக நிகழ்வுற்றது. கேள்வி பதில் பகுதியை தங்கமணி சார் ஒருங்கிணைத்தார். கடந்த ஐந்து வருடங்களாக பேலியோ உணவு முறையில் இருக்கும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் ஐயா நன்றியுரை வழங்கினார்.
நான் பேலியோ உணவுமுறைக்கு மாறி நான்கு வருடங்களுக்கும் மேலாகிறது. 2016-ல் பேலியோ உங்களால் அறிமுகமான கோவை புதுவாசகர் சந்திப்பு நிகழ்வு மனதில் நிழலாடியது.
2016 ஏப்ரலில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த புது வாசகர் சந்திப்பில் (கோவை காந்திபுரத்தில்) கலந்துகொண்டேன்.அப்போதுதான் உங்களை முதன்முதலில் பார்ப்பது. பரவசமும், வியப்பும் கலந்த ஒரு கனவு நிலையில் இருந்தேன். இருநாள் நிகழ்வு. முதல்நாள் மதிய உணவு சாப்பிட்டு முடித்து கைகழுவிக் கொண்டிருந்தபோது, பின்னால் நீங்கள் நின்றிருந்தீர்கள். நான் நடக்க சிரமப்படுவதைப் பார்த்துவிட்டு (வலதுகால் இரண்டு வயதிலிருந்தே இளம்பிள்ளை வாதத்தால் சிறிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது) “நீங்க வெயிட் கம்மி பண்ணணும் வெங்கி (அப்போது என் எடை 90 கிலோவிற்கும் அதிகம்), பேலியோ ட்ரை பண்ணுங்க” என்றீர்கள். ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் விஜய் சூரியன், அரங்கா பேலியோவை வெற்றிகரமாகத் துவங்கி தொடர்ந்துகொண்டிருந்தனர். உணவில் அதிக கார்போஹைட்ரேட் ஏற்படுத்தும் சிக்கல்களை நண்பர்களும் சொன்னார்கள்.
அதன்பிறகுதான் பேலியோ பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆனாலும் துவங்குதில் தயக்கமும், தாமதமும் ஆனது. ”பேலியோ என்றாலே அசைவம்தான்; சைவ பேலியோ கடைப்பிடிப்பது மிகவும் கடினம்” என்ற வதந்தி வேறு காதுகளில் விழுந்துகொண்டிருந்தது (அசைவம் சாப்பிடுவது நிறுத்தி 27 வருடங்கள் ஆகியிருந்தது அப்போது). ஒரு மாத விடுமுறையும் சீக்கிரம் முடிவுக்கு வந்ததால், அவசர அவசரமாக கென்யாவிற்கு திரும்பினேன். கிட்டத்தட்ட பேலியோவை மறந்தும் போனேன். அம்முதான் மறுபடி இந்தியாவிலிருந்து நினைவுபடுத்தினார். அம்மு பேலியோ பற்றிய செல்வனின் புத்தகத்தையும், மல்லிகை பிரசுரத்தின் பேலியோ அனுபவங்கள் கொண்ட சிறு புத்தகத்தையும் படித்து, யு ட்யூபில் வெவ்வேறு நகரங்களில் நடந்த பேலியோ நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு ஃபோன்செய்து “நான் பேலியோ டயட்டிற்கு மாறப் போகிறேன்” என்றார். (அம்முவிற்கு பல வருடங்களாகவே அசிடிடி பிரச்சனை இருந்து வந்தது GERD). என்னையும் துவங்கச் சொன்னார். நான் இங்கு கென்யாவில் எனக்குத் தெரிந்த அளவு தனியே சமைத்து சாப்பிட்டு சமாளித்துக் கொண்டிருந்ததால், என்னால் பேலியோ டயட்டை துவங்கி சரியாகத் தொடர முடியுமா என்ற சந்தேகத்தில் தட்டிக் கழித்தேன். அம்முவின் இரத்தப்பரிசோதனை முடிவுகளை மட்டும் ஆரோக்யம் & நலவாழ்வு குழுமத்தில் பகிர்ந்தேன். விஜய் சூரியனிடம் தொலைபேசியில் அம்முவிற்கு இருக்கும் விட்டமின் டி குறைபாடு பற்றி சொன்னபோது, அவர்தான் சன் செஸ்ஸன் பற்றி விளக்கினார். நானும் பேலியோ துவங்கலாம் என்றும், இங்கு கென்யாவில் என்னென்ன உணவுப் பொருள்கள் கிடைக்கிறது என்று சொன்னால் வழிகாட்டுவதாகவும் சொன்னார். இதற்கிடையில் என் இரத்த க்ளுகோஸ் அளவுகள் ஏற ஆரம்பித்தன.
2017 மே மாதத்தில் மறுபடி விடுமுறையில் இந்தியா வந்தபோது, முதல் வேலையாய் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தேன். HbA1c 11.4 காட்டியது. ட்ரைகிளிசரைட், LDL அளவுகளும் அதிகமிருந்தன. இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்று முடிவுசெய்து கோவையில் தியாகு நூலகம் நடத்தும் நண்பர் தியாகுவிற்கு ஃபோன் செய்து யாரைச் சந்திக்கலாம் என்று கேட்டபோது ஈச்சனாரியில் டாக்டரைப் பாருங்கள் என்று தொலைபேசி எண் தந்தார்.
தொலைபேசியில் டாக்டரிடம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிக்கொண்டு இயல் அம்முவோடு ஈச்சனாரியில் அவரது கிளினிக்கில் சந்தித்தேன். அதிக கார்ப் உடலில் என்ன செய்கிறது என்று படம்போட்டு விளக்கினார். என் இரத்தப் பரிசோதனை முடிவுகளுக்கான விளக்கத்தையும் டயட் சார்ட்டையும் மின்னஞ்சலில் அனுப்புவதாக சொன்னார். தொடர்ந்து மின்னஞ்சலில் தொடர்பில் இருக்கலாம் என்றார்.
டாக்டரைப் பார்த்துவிட்டு ஈச்சனாரியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்றோம். மாலை ஆறு மணி இருக்கும். அம்முவும், இயலும் கோயில் உள்ளே தரிசனத்திற்குச் சென்றார்கள். நான் கூட்டத்திற்குத் தயங்கி கோவிலின் வெளியே காரிலேயே உட்கார்ந்து கொண்டேன். மனம் பேலியோ குறித்தான யோசனையிலேயே இருந்தது. பேலியோவைக் கடைப்பிடிக்க முடியுமா, வேறு வழிகள் ஏதேனும் இருக்கிறதா, அம்மு உடன் இருந்தாலாவது தாக்குப் பிடிக்கலாம், தனியே கென்யாவில் எப்படி பேலியோவை சமாளிப்பது, என்னதான் டாக்டர் சைவ பேலியோவிற்கு பாராவை உதாரணம் காட்டி ஊக்கப்படுத்தினாலும், என்னால் முடியுமா?, சைவ பேலியோ முடியவில்லையென்றால், 25 வருடங்களாய் விலக்கியிருந்த அசைவ உணவுப் பழக்கத்திற்கு மறுபடியும் திரும்ப வேண்டியிருக்குமோ, அப்படித் திரும்ப எனக்கு மனம் ஒத்துக்கொள்ளுமா…என்று முன்னும் பின்னுமாய் பல்வேறு யோசனைகள்.
மேற்கில் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தான். வெளிச்சம் குறைந்து, கோவில் வெளியில் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. உள்ளிருந்து அம்முவும், இயலும் வந்தார்கள். உள்ளங்கையில் கொண்டுவந்த விபூதியை அம்மு என் நெற்றியில் இட்டுவிட்டு, கண்களுக்கு மேல் கைவைத்து மறைத்துக்கொண்டு, நெற்றியை ஊதினார். கண்களை மூடியபோது, உள்ளிருக்கும் அவனிடம் கைகூப்பினேன் “உடன் இரு”.
2017 ஜூன் ஒன்றாம் தேதி கிளம்பி கென்யா வந்தேன். அம்மு, ஐந்து லிட்டர் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயும், நான்கு கிலோ பாதாமையும் கொடுத்தனுப்பியிருந்தார். வெஜ் பேலியோவில் துவங்கலாம் என்றும், முடியவில்லையென்றால் முட்டை அல்லது நான் வெஜ்ஜிற்கு மாறிக்கொள்ளலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன்.
ஒரு சுபயோக சுபதினத்தில் (2017 ஜூன் மூன்றாம் தேதி) பேலியோ உணவுமுறையை ஆரம்பித்தேன். இதோ இன்று 2021 அக்டோபரோடு நான்கு வருடங்கள் நான்கு மாதங்கள் ஆகிறது. சிற்சில மாற்றங்களோடு இன்னும் பேலியோதான் தொடர்கிறது. பேலியோ பல அடிப்படைப் புரிதல்களைத் தந்தது. மனதின் பல தடைகளை அகற்றி விசாலம் தந்தது.
பேலியோ ஆரம்பித்த முதல் வாரத்திலேயே டயாபடிக் மாத்திரைகளை நிறுத்திவிட்டேன் (டாக்டரை ஆலோசித்துவிட்டு).பேலியோ ஆரம்பித்தபோது எடை 91.6 கிலோ. மூன்று மாதத்திலேயே எடை 76.6 கிலோவுக்கு வந்தது. LDL 197 mg/dl-லிலிருந்து 117-க்கும், ட்ரைகிளிசரைட் 253 mg/dl-லிலிருந்து 121-ற்கு கீழிறங்கின். தொடர்ந்து பேச்சினூடே என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்திய பாலாவை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
2017 ஜூன் ஒன்று (பேலியோ ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்) அதிகாலை ஒரு மணிக்கு, கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில்அம்முவும், இய லும் வழியனுப்பியபோது, இயல் சொன்னார் “அப்பா, அடுத்தவருடம் விடுமுறைக்கு இந்தியா வரும்போது நல்லா ஃபிட்டா வரணும்” என்று. பயணங்களின் விடைபெறல் தருணத்தில் எப்போதும் இருக்கும் நெகிழ்விலிருந்தேன். இயல் சொன்னதைக் கேட்டதும், அம்முவிற்காகவும் இயலுக்காகவுமாவது இதை செய்தே தீருவது என்று முடிவெடுத்தேன்.
அம்முவிற்கும் இயலுக்கும் என் ஆரோக்கியத்தைத் தவிர வேறென்ன சிறப்பான பரிசாய் தந்துவிடமுடியும்?
மிக்க நன்றி ஜெ. மகிழ்வும் அன்பும்.
வெங்கி