இல்லம்தேடி கல்வி- கடிதங்கள்

இல்லம்தேடி கல்வி- ஒரு மாபெரும் வாய்ப்பு

அன்புள்ள ஜெ

இல்லம் தோறும் கல்வி திட்டம் பற்றி உங்கள் இணையதளத்தில் முதலில் வாசித்ததும் மிக அருமையான திட்டம், அரசு கண்ணில் படவேண்டும் என நினைத்தேன். தகுதியானவர்களின் கவனத்துக்குச் சென்று அது நடைமுறையாகியதும்கூட இது குழந்தைகளுக்கு மிக உதவியான திட்டம் என்னும் நிறைவு உருவானது. ஆனால் அதில் கற்பிப்பவர்களுக்கு இப்படி ஒரு மாபெரும் கல்வி வாய்ப்பு இருப்பதை கவனிக்கவில்லை. அதை நீங்கள் எழுதியதும்தான் கவனித்தேன்

இன்றைய கல்வியில் நடைமுறைப்பயிற்சி மிக முக்கியமானது. கிராமியத்தொடர்பு நிகழ்ச்சி என்றபெரில் பெரும் பொருட்செலவில் இதைச் செய்துகொண்டிருக்கிறோம். இந்தத்திட்டம் அரசு செலவிலேயே மாணவர்கள் மிகச்சிறந்த கிராமியத் தொடர்புத்திட்டத்தை பயில வாய்ப்பு. மிகமுக்கியமான சுட்டிக்காட்டல். நன்றி

தெய்வநாயகம்

***

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்

இல்லம் தேடி கல்வி திட்டம் ‘ஐந்து மாணவர் ஓர் ஆசிரியர்’ என்கிற உங்களுடைய  மிகச்சிறந்த ஒரு கல்விமுறை வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தீர்கள். இம்முறையை சாத்தியப்படுத்தினால் நிச்சயம் நாம், பின்தங்கிய  ஆரம்ப கல்வி மாணவர்களின் திறனை மேம்படுத்திவிடலாம் என உறுதிபட நம்புகிறேன். இவ்விடத்தில் ஜெயமோகன் அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துகளை நம்பிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

“ஐந்து மாணவர் ஓர் ஆசிரியர் ”  – என்கிற எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வரிகள் தமிழக அரசு கவணிக்கும் என நாங்கள் நம்புகிறோம் .

அன்புடன்

ப.கலைச்செல்வன்

***

அன்பின் ஜெ,

வீட்டிற்கு வடக்கே, நூற்றி ஐம்பது மீட்டர் தொலைவில் இருக்கும் பால்வாடி எனப்படும் அங்கன்வாடியிலும், வீட்டிற்கு தெற்கே முன்னூறு மீட்டரில் இருக்கும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் படித்து வளர்ந்தவன்.

பேக் பைப்பர் விளம்பரத்தில் , குழலூதுபவரின் ஆணைக்கு மயங்கி பின் செல்லும் குழந்தைகளை போல, அங்கன்வாடியில் அடியெடுத்து வைத்ததும், ஆயாம்மா கொடுக்கப் போகும்  அரை ரவா உருண்டைக்காக, அவரின் பின்னே, தலைச்சங்காடு கிராமத்தின்எல்லா தெருக்களிலும் பூந்து புறப்பட்டு, வீட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஒளிந்திருக்கும் பசங்களை இழுத்து சேர்த்துக் கொண்டு வருவோம்.

எதையாவது எடுத்து வச்சி படிடா...” என்ற வார்த்தைகள் அனேகமாக கிராமத்தின் எல்லா வீடுகளிலும் கேட்டுக்கொண்டே இருக்கும்.,

இதில் நண்பர்கள், அவர்களின் மகன்களும் மகள்களும் தன்னார்வலர்களாகச் சற்றேனும் பங்குபெறவேண்டுமென விரும்புகிறேன்

படிக்கையில், உங்களின் ஆணையெனவே மனதில் தோன்றியது.  தன்னார்வலராக பதிவு செய்துவிட்டேன்.

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

***

முந்தைய கட்டுரைபழந்தமிழகத்தில் இந்து தெய்வங்கள்
அடுத்த கட்டுரைதீபாவளிக்கு நூற்பின் ஆடைகள்