அஜ்மீர் கடிதங்கள்-4

க்ருபா கரோ மகராஜு மொய்னுதீன்!

குவாஜா ஜி மகாராஜா!

அஜ்மீர் ஜானே!

வணக்கம் ஆசிரியரே,

தங்களின் அஜ்மீர் பயணம் குறித்த கட்டுரைகளை தளத்தில் கண்டேன். பரீட்சைகள் அதிகம் இருந்ததால்  இன்னும் அவற்றை வாசிக்கவில்லை.  உங்கள் தளத்தில் இருந்த சில  கவ்வாலிகளையும், நேற்று ஹஸ்ரத் அமீர் குஸ்ரோ இயற்றிய பஹாஹுதின் கான் அவர்கள் குரலில் கவ்வாலி ஒன்றையும் கேட்டேன்.

பழைய பாடல்களை பொதுவாக தவிர்த்து விடும் எனக்கு, கவ்வாலிகளில் உள்ள  எளிமை, நிலத்தை மறந்து வானை நோக்கி செல்பவர் பாடுவது போல் தோன்றும் பிம்பம் என என்னை மிகவும் சாந்தப்படுத்துகின்றன.  பாடலின்  மொழிபெயர்ப்பும்  கூடுதல் அருள்..

கண்ணீர் பெருக்கி கப்பலிட்டு அதில் ஏறி வருவேன் க்வாஜா..!!

இந்த ஒரு தமிழ் சூஃபி பாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

க்வாஜா என்றாலே இந்த பாடல்தான் எனக்குள் ஒடத்துவங்கும். நீங்கள் அஜ்மீரில் இருப்பதால் இவற்றை  உங்களுக்கு பகிர தோன்றியது.

நானே இப்போதுதான் சூஃபி மரபு பக்கம் திரும்பிகொண்டிருக்கிறேன். அஜ்மீர் தர்காவிலிருந்து என் பாப்பத்தா(தாத்தா)விற்கு வரும் கடிதங்களை  எல்லாம் கேலிசெய்திருக்கிறேன்.அவர் மவுத் ஆன பின்பு என் வீட்டில் யாரும் தர்காவை ஆன்மிக நோக்கில் சென்று பார்ப்பதே இல்லை. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறையேனும் நாகூர் செல்லும் வழக்கம் உண்டு, அதுவும் கடைகளை சுற்றிப்பார்ப்பதோடுதான். சில குடும்பங்களில்  அந்த பக்கம் கூட செல்வது இல்லை. வேறென்ன காரணம் இருக்கும்…

இப்போது எனக்கு இருக்கும் ஆன்மிக சாய்வு மற்றும் மரபு மீதான அணுக்கம், அங்கே புனித பயணமாக ஒருநாள் தனித்து செல்ல வேண்டும் என எண்ண வைக்கிறது. இந்த பயணம் தங்களுக்கு மேலும் ஒளியூட்ட என் மனமார்ந்த பிரார்த்தனைகள்…

அன்புடன் ஸலாம்களுடன்,

சஃபீர் ஜாஸிம்

***

அன்புள்ள ஜெ

குவாஜா மொய்னுதீஷ் சிஷ்டி பாடல்களையும் கூடவே சூஃபி இசையையும் கேட்பது பித்துப்பிடிக்கச் செய்யும் அனுபவமாக அமைந்தது. எங்கெங்கோ கொண்டுசென்றது. பித்து இல்லாமல் நம்மால் இறையனுபவத்தை அடையமுடியாது. பித்து என்பது நாம் இருக்கும் அன்றாட உலகில் இருந்து வெளியே செல்வது. இங்கே அன்றாடத்தில் நின்றபடி நம்மால் இறையனுபவத்தை உணர முடியாது. இங்கே நாம் நம் கவலைகள் குழப்பங்கள் பயங்களுடன் இருக்கிறோம். இறைவனிடம் பேரம் பேசுகிறோம். அல்லது கணக்கு சொல்லுகிறோம். அல்லது பிச்சையெடுக்கிறோம்.

இறைவனிடம் கையெந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்பது அபாரமான பாடல். ஆனால் அது உலகியல்பக்தி. இறைவனிடம் கையேந்தாமல் நிறைந்த நிலையில் யா அல்லாஹ் என அழைப்பவனிடமே அல்லாவின் பேரரருளும் பெருங்காட்சியும் வந்து சேர்கின்றன. அவன் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொண்டு ஒரு பளிங்கு உருண்டை போல ஆகிவிடுவான் என்றால் நிலவின் ஒளிபோல அவனை அல்லாஹின் அருள் தீண்டும்.அவன் சுடர்விடுவான்

சிஷ்டி அவர்களின் கவிதைகளில் இரண்டு படிமங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆடி, நிலவு. நிலவு தூய்மையான ஆடியில் பிரதிபலிப்பதே இறையனுபவம்

சிராஜ்

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்

முந்தைய கட்டுரைதீபாவளிக்கு நூற்பின் ஆடைகள்
அடுத்த கட்டுரைகேளாச்சங்கீதம் [சிறுகதை]