பழந்தமிழகத்தில் இந்து தெய்வங்கள்

அன்புள்ள ஜெ

பா.இந்துவன் எழுதிய இந்தப்பதிவை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

ஆனந்த்

தமிழகத்தில் இந்து தெய்வங்கள்.

பா இந்துவன்

சமணமும் பௌத்தமும் அதனதன் நிலப்பரப்பில் உருபெறுவதற்கு முன்பே தமிழக நிலப்பரப்பில் திருமால் வழிபாடு, முருகன் வழிபாடு, இந்திர வழிபாடு, வருண வழிபாடு, கொற்றவை வழிபாடு முதலான வழிபாடுகள் இருந்ததற்கு சான்றாக இன்றிலிருந்து 2700 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டதாக பெரும்பான்மையான அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தொல்காப்பியத்தில்,

“மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

– தொல்காப்பியம்.

என்ற வரிகளை மேற்கோளிடலாம். அன்றைய தமிழகத்தின் தென்பகுதியில் பொ.மு மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் குடிமல்லம் சிவன்கோவில், சாளுவன்குப்பம் முருகன்கோவில் முதலான தொல்லியல் துறையினரால் நிரூபணம் செய்யப்பட்ட கோவில்கள் இருந்ததோடு இதே காலகட்டத்தில் சிவன், முருகன், திருமால், பலராமன் போன்ற நாற்பெரும் தெய்வங்களின் வழிபாடு பரவலாக இருந்தது என்பதற்கு சான்றாக புறநானூற்றில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதிய பாடலை மேற்கோளிடலாம்…!

“ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும், கடல்வளர் புரிவளை புரையும் மேனி அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,

மண்ணுறு திருமணி புரையும் மேனி

விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும் மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என ஞாலம் காக்கும் கால முன்பின் தோலா நல்இசை நால்வர் உள்ளும் கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்; வலிஒத் தீயே வாலி யோனைப்; புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை; முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்”

– புறநானூறு.

பொருள் : காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன். கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன்.

இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள். இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன்.

இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ? என்று பாண்டியனைப் பார்த்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கேட்பதாக அமைகிறது இந்த பாடல். இது பொ.மு மூன்றாம் நூற்றாண்டுப் பாடல்…!

வரலாறு இவ்வாறு இருக்க இவர்கள் எதன் அடிப்படையில் சைவமும் வைணவமும் நிலைபெறுவதற்கு முன்பே இங்கு சமணமும் பௌத்தமும் செழித்திருந்தது என்கிறார்கள்?

***

அன்புள்ள ஆனந்த்,

தமிழிலக்கியத்திலோ வரலாற்றிலோ அடிப்படையான வாசிப்பும் நேர்மையும் கொண்டவர்கள் எவரும் பௌத்தத்திற்கு முன்பு தமிழகத்தில் திருமால், இந்திரன், முருகன் வழிபாடுகள் இருந்ததில்லை என்னும் அபத்தத்தைச் சொல்ல மாட்டார்கள். தமிழில் இலக்கியம் எப்போது கிடைக்கிறதோ அப்போதே மகாபாரதம், ராமாயணம் பற்றிய குறிப்புகள் பாடல்களில் கிடைக்கின்றன. தமிழகத்தின் ஐந்திணையின் தெய்வங்கள் எல்லாமே இந்து தெய்வங்கள்தான்.

அறிவுடையோர் அந்த ஏராளமான தரவுகளை மறுக்கப்போவதில்லை. மேடையில் வாய்நுரை தள்ளும் அறிவிலிகள் கூச்சலிடலாம். பாமரர் கைதட்டலாம். நேர்மையை அரசியலுக்கு அடகுவைத்துவிட்டால் மாயோன் என்றால் மாமரத்தில் காய்த்தவன் என்றும் முருகு என்றால் முருக்கு மரத்து பூ என்றும் திரிபிலக்கிய ஆய்வுகள் செய்யலாம். அதுவும் இங்கே நிகழ்கிறது.

இத்தனை மூர்க்கமாக, இத்தனை ஆதாரமில்லாமல் இந்த தொடர்பிரச்சாரம் ஏன் நிகழ்கிறது? இது வெறும் அரசியலுக்காக என நம்பவேண்டுமென்றால் மழலையின் மனம் வேண்டும். இது அப்பட்டமாகவே மதமாற்ற நோக்கம் கொண்ட செயல்பாடு. பெரும்பணம் செலவிடப்படும் ஒரு கருத்துத்தள ஊழல். இவர்கள் எளிய கூலிப்படைகள்.

ஜெ

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை
அடுத்த கட்டுரைஇல்லம்தேடி கல்வி- கடிதங்கள்