பொலிவன, கடிதங்கள்

தொடர்புக்கு :[email protected]

அன்புள்ள ஜெயமோகன்,

பொலிவதும் கலைவதும் சிறுகதையை படித்து முடித்தபின் வாசகர் கடிதங்களை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு வாசகர் கடிதத்தில் திபெத் புத்தத் துறவிகள் ஓவியம் வரைந்து பின் அவர்களே கலைக்கும் யூ டூப் வீடீயோவை பார்த்தேன். அந்த  வீடீயோவை பார்க்கும்பொழுது பொலிவதும் கலைவதும் என்ற பிரபஞ்ச ஆடலை உணர்ந்தேன். பிரபஞ்ச ஆடலை நமக்கு அவர்கள் நடித்துக்காட்டுகிறார்கள். கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது அதனால் கடற்கரை ஓரமாக ஊர்களில் மழைக்கு வாய்ப்புண்டு என்கிற வானிலை செய்தி நினைவுக்கு வந்தது. இலக்கியம் அறியும்போது அறிவியல் இன்னும் நுணுக்கமாய் புரியும்போல. அந்த பிரபஞ்ச ஆடலே வாழ்வின் விதியாய் உள்ளது. இந்திரா பொலியும் போது சுந்தர் கலைகிறான். இதை அவன் என்று உணர்வான்?

களமெழுத்து பாட்டின் முடிவில் அவனுக்குள் இருக்கும் பிரபஞ்ச துளி அவனுக்குமுன் உணர்ந்துகொள்கிறது. பின் அவன் மெதுவாய் அறிகிறான். மீண்டும் காலை களம் முழுக்க கலந்த ஓவியத்தை பார்க்கும்போது தெளிவாய் அறிந்துகொள்கிறான். கலைந்த ஓவியம் மீண்டும் சேராது. ஆனால் வாழ்வு பொலிய முடியும். சாப்பிட்டபின் கிளம்ப தீர்மானித்துவிட்டான். இனி அவன் அங்கு போகப்போவதில்லை. மீண்டும் கலையப்போவதில்லை.

அன்புடன்,

மோகன் நடராஜ்

***

அன்புள்ள ஜெ

நூறு கதைகள் தனித்தனி தொகுதிகளாக வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்னுடைய வாழ்க்கையின் மறக்கமுடியாத நான்கைந்து மாதங்களை அளித்தவை அவை. இலக்கியம் இந்த அளவுக்கு வாழ்க்கைமேல் நம்பிக்கையை அளிக்க முடியுமா, வாழ்க்கையை ஒளியாக ஆக்கமுடியுமா என அதற்கு முன்னால் அறிந்திருக்கவில்லை. நினைக்க நினைக்க தித்திக்கும் நாட்கள் அவை. அத்தனை கதைகளுமே ஆனந்தமானவை. கற்பனையில் விரிந்துகொண்டே இருப்பவை.

அந்த அனுபவத்தை மீண்டும் அடையவேண்டும் என்றால் மின்னூலில் படிக்கக்கூடாது. அச்சுநூலில்தான் படிக்கவேண்டும். புதிய புத்தகம் போல படிக்கவேண்டும். அதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்

ஆனந்த் குமார்

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க

குமரித்துறைவி அச்சுநூல் வாங்க 

வான் நெசவு அச்சுநூல் வாங்க

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்

முந்தைய கட்டுரைவெள்ளை யானை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித்