நினைவுகளின் நிறைவு

அருண்மொழி தன் நினைவுகள் தொடரை முடித்துவிட்டாள். மொத்தம் 25 கட்டுரைகள். அவற்றில் இசை பற்றிய மூன்று கட்டுரைகளை தவிர்த்தால் 22 கட்டுரைகளும் ஒரு நாவல் போல ஒன்றிலிருந்து ஒன்றாக கிளைத்து அழகிய அமைதியான நிறைவை வந்தடைந்துள்ளன.

தமிழில் எழுதப்பட்ட நினைவுகளில் இவை மிக முக்கியமானவை என நினைக்கிறேன். முக்கியமானவர்களின் தன்வரலாறுகளுக்குச் சமானமாக வேறொரு வகையில் முக்கியமானவை சாமானியர்களாக தங்களை உணர்பவர்களின் தன்வெளிப்பாடுகள். ஏனென்றால் அவை கலப்படமற்ற காலப்பதிவுகள். அதிலும் தமிழ்ச்சூழலில் பெண்களின் வாழ்க்கைப்பதிவுகள் மிகமிக முக்கியமானவை.

அருண்மொழியின் முன்னோடி எழுத்தாளர்கள் அசோகமித்திரன், தி.ஜானகிராமன் மற்றும் அ.முத்துலிங்கம். ஆகவே அடங்கிய தொனியிலேயே இக்கட்டுரைகள் பேசுகின்றன. மிகமெல்லிய நகைச்சுவை ஓடிக்கொண்டிருக்கிறது. உணர்ச்சிமிக்க தருணங்களையும் மிகமெல்லிய கோட்டோவியமாகவே தீட்டியிருக்கிறாள். பெரும்பாலும் எல்லா கட்டுரைகளிலும் சிறுகதைக்குரிய வடிவஅமைவு உள்ளது. படிமங்கள் வழியாக மறைமுகமாகவே மையம் உணர்த்தப்படுகிறது.

உண்மையிலேயே எனக்கு முப்பதாண்டுகளாக மிக அணுக்கமாகத் தெரிந்த ஆளுமை என்றால் அருண்மொழி நங்கைதான். அவளுடைய நுண்ணிய நகைச்சுவைத்திறன், விரிவான வாசிப்பு, கற்பனை எல்லாமே தெரியும் என்றாலும் இந்த படைப்புத்திறன் வியப்புக்குரியதாகவே உள்ளது. படைப்புத்திறன் வெளிப்படும் வரை அதை ஊகிக்கவே முடிவதில்லை.

இந்தக் கட்டுரையிலேயே அந்த நுட்பம் தன்னிச்சையாக வந்தமைந்துள்ளது. ஊரைவிட்டு வெளியேறும்போது இறுதியாக விடைபெறுவது ஊருடன் ஒட்டாமல் வெளியே நின்றிருக்கும் சிவன்கோயிலிடமும் பண்டாரத்திடமும் என்பது ஒருவகையில் முரண்பாடு. இன்னொருவகையில் இயல்பானது. ஊர் என்னும்போது நாம் முதலில் நினைவுகூர்வது அவற்றையெல்லாம்தான். ஏனென்றால் அவைதான் ஊரின் சாராம்சம்

இனிமேல் நாவல் எழுதவேண்டும் என்று நினைக்கிறாள். நாவலை விரைவில் அவள் தொடங்கவேண்டும் என விரும்புகிறேன்.

ஊருக்கு வெளியே- அருண்மொழி நங்கை

முந்தைய கட்டுரைதியானமும் உள்ளமும்- கடிதம்
அடுத்த கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6