குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-7

பெருவளமோ பேரிடரோ அல்ல
நான் விழைவது…
எனக்கென காதலன் விரும்புவதே
நான் விழைவது.

தொடர் துன்பங்களில் எனை இருத்த
அவன் விரும்பினால்
தொடர்ந்து துன்பங்களில் இருப்பதே
நான் விழைவது.

செல்வமும் புகழும் வேண்டுவர் பலர்
மகிழ்வாக துன்பத்தைத் தாங்கும்
வலிமையான மனமே…
நான் விழைவது.

மண்ணில் அதிகாரம், சொர்க்கத்தில் இன்பங்கள்
ஊக்கமுடையோர் வேட்கிறார்கள்!
அவற்றை அல்ல – கடவுள் உடனிருப்பே
நான் விழைவது.

தங்கள் ஆசைகள் நனவாக…
உன்னை வேண்டுகிறார்கள்
நீ விரும்புவதையே, நான் விரும்புவதே,
நான் விழைவது.

நீண்ட ஆயுளை விரும்புகிறார்கள்,
நீண்ட காலம் வாழ …
மொய்ன், மெய்யான இறப்பின் தருணத்தில் மரணமே
நான் விழைவது.

நான் அந்த அழகான
ஒருவனைப் பார்த்தேன்
கவனம் சிதறுகிறது
காதலர்களே…

நான் அவனுக்கென
அன்பின் மதுவால்
நிறைந்திருக்கிறேன்.
காதலர்களே.

முதல்நாள் தெய்வீக உதடுகள்
காதில் சொன்ன ரகசியங்களால்
நான் தொன்மம் ஆனேன், என்றும் நினைவில் இருக்கிறேன்,
எல்லா நாவிலும் இருக்கிறேன்; காதலர்களே!

நான் கேட்டேன், “உனது முகத்தைக் காட்டு”
விடை, “நான் மறைவில் இல்லை..
உற்று நோக்கும் திறன் கண்களுக்கு வேண்டும்!”
காதலர்களே.

அழகியரின் முகங்களில் படைத்தவனின் அழகு
அவர்கள் இருப்பிடத்தின் வாசலில்
தலை வணங்குகிறேன்
காதலர்களே!

காதலனின் அழகு
விட்டிலென ஒளி நோக்கி எனை ஈர்க்கிறது
மறுக்கவியலா தெய்வீக அழைப்பு
காதலர்களே!

எனது ஓய்விடம் இறைவனின் மாளிகை
இப்பாலைநிலக் குடிசையை
எப்படி எனது ஓய்விடம் ஆக்குவது?
காதலர்களே!

எனது நொறுங்கிய இதயத்திடம் கேட்டேன்,
கடவுள் எப்படிப் பட்டவர்? நீ எப்படிப் பட்டவள்?
விடை “பொக்கிஷமும் பாலைப் பாழ்வெளியும் போல”
காதலர்களே!

முன்பு நினைத்திருந்தேன்
எனது உடல் பெருங்கடல், என் இதயம் சிப்பி, இறைவன் அதில் முத்து
இன்று நான் ஒரு முத்து, கடவுள் அப்பெருங்கடல்
காதலர்களே.

எனது உடல் இதயத்துடன் இணைந்தது
இதயம் ஆன்மாவுடன், ஆன்மா இறையுடன்..
உடலும், இதயமும், ஆன்மாவும் நான் அல்ல, நான் ஒன்றே!
காதலர்களே.

மதுகொணர்பவனுக்கும் எனக்குமிடையே
எண்ணற்ற திரைகள்
போதையின் அழுகையில் அத்தனையும் கிழித்தெறிந்தேன்
காதலர்களே.

தெய்வீகக் காதலனை
மொய்ன் விழைந்துவிட்டார்
வேறு யாரையும் அவர் அறிவதில்லை
காதலர்களே.

சூரியனின் அழகை
தூய நீரில் பார்ப்பது போல
ஆன்மாவின் ஆடியில்
அவனது அழகைப் காண்கிறேன்

காதலனின் அழகிய முகம்
அறிவை குருடாக்கியது
மனதின் நூறு திரை வழியாக
அவனைக் காண்கிறேன்

ஆன்மஆடியில் தெரியும் அழகு
தெய்வீக சாரத்தின் காட்சி
இத்தனை பேரழகு அவனுடையதே
என்று காண்கிறேன்

அவனை ஏற்றநாள் முதல்
காதலின் மதுவில் இருக்கிறேன்
அறிவும், ஞானமும் விழிகளை இழந்தது
இயலவில்லை காண..

என்னை இழந்த பின்னும்
ஏதோ எஞ்சியிருக்கிறது
இதோ அவனில் கலக்கிறேன்
கூடலைக் காண்கிறேன்

தெய்வீக சாரத்தை அணுகுவது
முதலில் சிரமமாக இருந்தது
இந்த இறுதி சிரமமோ
மேலும் சிரமமாய் காண்கிறேன்

இறையோடு கூடிடும் போது
அனைத்தும் சிறிதாகிறது
தேவதை சிறகுகள் – ஆந்தைகள் போல ஈக்கள் போல
எனக் காண்கிறேன்

மொய்ன் அறிதலின் பாதையில்
கதிர் ஒளியில் சிறுதுகள் போல
எரிந்து போனான் நித்தியமாக
காண்கிறாயா?

திரைவிலக்கு, முகத்தை காட்டு
என்னை இலாதக்கு எனதன்பே..
உன் அழகைக் காட்டு, காதலின் மதுவில்
போதையில் ஆழ்த்து..

அங்கு பறந்துவர என்னால் இயலவில்லை,
இந்த பூமியில் இருக்கும்போது
என் ஆத்மாவின் பறவையால் சிறகுகளை விரிக்க முடியாது
அவை உடலுடன் இணைந்துள்ளன!

நித்தியத்தில் உள்ள ஆன்மாவின் அரசப் பருந்து,
ஒரு நாள் பறந்துவிடும்,
வடிவத்தில் அதை என்றைக்குமாய்
அடைத்து வைக்க முடியாது

சொர்க்கத்தை என்னிடம் புகழ்வதை நிறுத்துங்கள்,
இந்நிலையில் இருந்து என்றோ நான் விட்டுவந்த
அந்நிலைக்கு போகச் சொல்கிறீர்கள்
எனத் தெரியவில்லையா?

அழகியரின் முகத்தின் அழகில்
அழகைப் படைத்தவனைப் பார்க்கிறேன்
இரண்டும் ஒன்றுதான்
அழகியரை நான் வணங்குகிறேன்

புதிதாக நான் காதலின் போதையில் வீழ்ந்து
குடிகாரன் ஆகவில்லை
முழுதாய் நிறைந்து
போதையில் ஆழ்ந்தேன் முதல் நாளிலே!

தெய்வீக அன்பின் கடலில்
வீழ்ந்து மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
கைஸர், எனது இந்தப் படகு
நொறுங்கி அழிந்து போனது.

இறை வெளிப்பாட்டின் ஒளியில்
எண்ணற்ற துகள்களாய் சிதறினேன,
இதோ ஒவ்வொரு துகளும்
முழுமை கொண்டன!

இதயக் கிண்ணத்தின் இருத்தல் களிம்பகற்றி
மேலும் துலக்கிவைக்க
தெள்ளத்தெளிவாக தெரிகிறது
அவன் உருவம்

வெற்றுக் கைகளுடன் உலகை விட்டு செல்லுமாறு
என் வாழ்வை ஆக்குங்கள் இறையே;
மனந்திரும்புதலின் கண்ணீரால்
என் கரங்கள் சுத்தமாகட்டும்!

உலகின் இன்பங்களை
இதயத்தில் இருந்து அகற்றிவிடு மொய்ன்…
இதயத்தின் ஆழத்தில் நானிருப்பேன்
காதலின் வலி மட்டுமாக!

தமிழாக்கம் சுபஸ்ரீ

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்

முந்தைய கட்டுரைமணிரத்னம், ஒரு பழைய பேட்டி
அடுத்த கட்டுரைஅஜ்மீர் பயணம்- 7