கடவுளை விரும்பினேன்
சொர்க்கமும் இனிமைகளும்
நாடுவதில் இருந்து
நான் விடுபட்டேன்..
இரு உலகின் செல்வங்களும்
விழையவில்லை
காதலனுக்காக
நான் விடுபட்டேன்.
இறைவனின் மேசையில் இருந்து
தெய்வீக விருந்து உண்டேன்..
உலகில் இருத்தும் அன்னமும் நீரும் வேண்டேன்
நான் விடுபட்டேன்.
பிறப்பின் தினம், தெய்வீக அன்பின் செவிலித் தாய்
ஆன்மாவுக்கு அமுது கொடுத்தாள்
இங்கு தொட்டிலில் அன்னையின் பாலும் வேண்டேன்
நான் விடுபட்டேன்.
என்றுமுள்ள வாழ்வின் அமுதத்தை
அந்த உதடுகளிடம் இருந்து பெற்ற பிறகு
கைசரின் அழியா வாழ்வின் நீர் வேண்டேன்
நான் விடுபட்டேன்.
பிரிவு எனை அச்சுறுத்தியது
லாலா மலரில் புள்ளிகளைப் போல:
அவனுடன் கலந்தபின் வடுக்கள் அகன்றன
நான் விடுபட்டேன்!
போதகனே, காதலர்களுக்கு
சொர்க்கத்தின் அழகை சொல்ல வேண்டாம்
கடவுளின் அழகைக் கண்டுவிட்டேன் – அழகுகளில் இருந்து
நான் விடுபட்டேன்.
நான் படைப்பின் சிறையில் இருந்து தப்பிய
தெய்வீகக் காதலின் பறவை
உருவையும் ஆன்மாவையும் கிழித்து விட்டேன் – இருத்தலில் இருந்து
நான் விடுபட்டேன்.
படைப்பின் எல்லைகளைத் தாண்டி
பேரிருப்பின் உலகில் நுழைந்தேன்
மாய இருப்பின் குறுகிய வழிகளை நீங்கி
நான் விடுபட்டேன்!
கற்றவரும் அறிஞரும்
அறிவார்ந்த ஞானம் தேடுவர்
வறண்ட அறிவின் ஆழ்ந்த தேடலில் இருந்து
நான் விடுபட்டேன்.
எனது விழிகளால் அனைத்து மதங்களின்
ஆதார உண்மையைக் கண்டேன்:
அவர்களது வாதங்கள், ஐயங்கள், நிரூபங்களில் இருந்து
நான் விடுபட்டேன்.
தெய்வீக சாரத்தின் வெளியில்
இருமை இருப்பதில்லை
இம்மண்ணுலகில் என் பெயரில் இருந்தும்
நான் விடுபட்டேன்.
நான் காண்பதெல்லாம்
இறையின் வடிவமும் இருப்பும்..
காதல், ஞானம், நம்பிக்கை, துரோகம், கடவுளை அறிதல்..
நான் விடுபட்டேன்.
இறையருளால், உலகின் சந்தைக்கு
கடவுளின் நம்பிக்கையுடன் சென்றேன்
மனிதத்தின் கொடூரம், அறீவினம் தொடாமல்
நான் விடுபட்டேன்.
எல்லா பிரபஞ்சங்களின் இறை
எனது கட்டளைகளை ஏற்கிறான்
அவனது வாயிற்காவலர்களின் மருட்டலில் இருந்து
நான் விடுபட்டேன்!
காதலியும் காதலனும் இணைவதில் திரைகள் இனி இல்லை..
நான் அவனை சேர்ந்தேன்..
எனது நம்பிக்கைகளில் இருந்தும்
நான் விடுபட்டேன்.
மொய்ன், உனது பாதையில் செல்
பிறரைத் துறந்து விடு
உலகின் புகழும் இகழும் தொடுவதில் இருந்து
நான் விடுபட்டேன்!
அவன் ஒருவனே காதலன்
நேசிக்கத் தகுந்தவன்
அவன் ஒருவனே..
தனிமையில் துணைவன்
கூட்டத்தில் மதுகொணர்பவன்
அவன் ஒருவனே!
இதயத்தின் ஆடியில் ஒரு முகம் தெரிந்தது
எனது ஆன்மாவின் ஆழத்திலும் உடலிலும் நான் உணர்வது
அவன் ஒருவனே.
இருப்பென்னும் ஆடையை கிழித்துவிட்டால்
ஆடையின் உள்ளே யாரென்றறிவாய்
அவன் ஒருவனே!
இதயம் காதலின் ரகசியத்தை அஞ்சாமல் சொல்கிறது
அதற்குத் தெரியும் பார்க்கப்படுவதும் ஒளிந்துகொள்வதும்
அவன் ஒருவனே!
நான் என்பதும் நாம் என்பதும் பிழைத்தோற்றம்
கடந்து செல்.. நான் என்பதும் நாம் என்பதும்
அவன் ஒருவனே!
குழலின் வாயில் தன் உதடு பதிக்கும் குழலன் போல
நேசிப்பவர்கள் வாயில் தன் உதடு பதிப்பவன்
அவன் ஒருவனே!
கோப்பையில் மதுவுக்கு என்ன இடம் மதுகொணர்பவன் யார்?
பேசாதிரு மொய்ன் மூச்சையும் நிறுத்து – அனைத்தும்
அவன் ஒருவனே!
நீ ஒரு அரசன்
நீ பறந்தது அரசனின் கைகளில் இருந்து
அரசனை நாடி, அரசனைச் சேர
பறந்து கொண்டேயிருக்க வேண்டும்
உத்வேகத்தின் குதிரை
நூறடிகள் வைத்து உன்னிடம் வந்தது
உனது தயக்கங்களை துறந்துவிட்டு
ஓரடி வைத்துவிட வேண்டும்
எவ்வளவு காலம் அவனைத் தேடி
வாயில்களைத் தட்டுவாய்?
உள்ளே பார் உன் பார்வைக்காக
பலபெயர்களில் காத்திருக்கக்கூடும்
ஒளியின் தேசத்தில் இருந்து
பொருளின் உலகுக்கு ஆன்மா வந்தது
இறுதியில் இருப்பின் எல்லையில்
அதன் உலகுக்கு அது மீளட்டும்
எனது இதயக் கோட்டையின் அரசன்
நிலத்திலும் நீரிலும் அவன் அமைவதில்லை
எல்லையற்ற வெளியில்
அவன் கூடாரம் அமையட்டும்
இந்த இதயம் மற்ற காதலின்
துருவிலிருந்து தூய்மையான போது
கடவுளின் அழகின் ஒளி
இருப்பின் ஒவ்வொரு அணுவிலும் தெரியட்டும்
வாழ்வென நாம் சொல்லும் இந்த ஆடியில்
அந்த முகத்தைக் காண்கிறேன்
தூய்மையான நீர் கதிரவனை
தெளிவாகக் காட்டும்
வாழ்வின் சமுத்திரத்தில் ஒரு துளியை
மறைபொருள் எடுத்துக்கொண்டது..
துளி நதிக்குத் திரும்பியது
இயற்கையில் அது ஒன்றாகட்டும்
நானே கடவுள் – நான் சொல்லவில்லை
அவனே சொல்லச் சொல்கிறான்
பிரகடனப்படுத்த காதலன் ஆணையிடும்போது
அதுவே அவன் சொல்லாகட்டும்
உனது சாரத்தை நான்
ஆராய வேண்டுமென்றால்
அனைத்தின் நிரந்தரமும்
உன்னையே சார்ந்திருக்கட்டும்
உனது இருப்பெனும் சுள்ளிகள்
மோசஸ் கண்ட ஒளியாகும்
உனது தலையில் இருந்து
சுயநலத்தின் கரித்துகள்கள் அகலட்டும்
சொர்க்கத்தின் உச்சத்திற்கு விரைந்து
காதலன் எங்கே என்றேன்
கடவுள் சொன்னார் – இரவும் பகலும் உன்னோடு அவனிருக்க
கேள்விகள் எழாதிருக்கட்டும்
இறை என்கிறாய் மொய்ன்
ஈருலகங்களில் இறை இல்லாதது எது
நூறு விவாதங்கள் இதை நிரூபிக்கிறது – இருந்தும்
யாரும் அறிவதில்லை
இதயத்தில் இருந்தும் ஆன்மாவில் இருந்தும்
உனது காதல் என்னைத் திருடியது
என்னிடம் இருந்து…
உன்னுள்ளே இருக்கிறேன்
அவர்கள் உன்னை பிரித்தறிய முடியாது
என்னிடம் இருந்து!
அழகிய சுடர் விட்டிலை அழைக்கிறது
உன் அழகின் ஒளியின் ஒற்றைப் பார்வையில்
உனைத்தேடி பறந்து விலகி வருவேன்
என்னிடம் இருந்து.
மாலை முதல் காலைவரை உன்னுடன்
உன் ரகசிய அறையில்
காலை வந்ததும் முகத்தை ஏன் மறைக்கிறாய்
என்னிடம் இருந்து?
நான் எவ்வளவு விலகினாலும் தேடி வருவாய்
உனது உறுதியை அதிகரிக்கிறாய்
தாமதத்தை அறிந்ததும்
என்னிடம் இருந்து.
இங்கு அனைவருக்கும் மன்சூரைப் போல
மரணம் விதிக்கப்பட்டாலும்..
என்றுமுள்ள வாழ்வில் புகழின் வரிசை பெறுவார்கள்
என்னிடம் இருந்து..
கடவுளின் முகத்தின் தோற்றம் காண
என்னைப் பாருங்கள்
ஆடியில் என பிரதிபலிக்கிறது – பேதமில்லை என்பேன்
என்னிடம் இருந்து!
உங்களது உடல் ஏமன் போலாகட்டும்
ஆன்மா உவைஸ் கராணி போலாகட்டும்
அத்தகைய நம்பிக்கையில் கடவுளின் வாசம் மலர்கிறது
என்னிடம் இருந்து!
நீ சொன்னாய்!
திரையை விலக்கி என் அழகைக் காட்டினால்
மயக்கம் மதுவினாலா என்று அறிவாய்
என்னிடம் இருந்து!
நான் சொன்னேன்! மொய்னைப் போல
பல கோப்பைகள் அந்த மதுவை அருந்தியபின்
மலைகளைப் போல அமைதியாவேன் – மூச்சும் எஞ்சாது
என்னிடம் இருந்து!
தமிழாக்கம் சுபஸ்ரீ