அஜ்மீர் பயணம்- 4

ஷாகுல் தொழுகைக்குச் சென்றுவிட்டார். அக்பரி மசூதியில் பல்லாயிரம்பேர் தொழுகைக்காக வரிசையாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். அங்கே அமர்ந்து அங்கு சட்டென்று உருவான அமைதியை கவனித்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஷாகுல் திரும்பி வந்தார்.

டீ வந்தது. மிகச்சிறிய டம்ப்ளர்களில். அங்கே அவுன்ஸ் கிளாஸ் அளவில் டீ குடிப்பதே வழமை. ஷாகுலின் வழமை ஒவ்வொரு இடத்திலும் மிகச்சரியாக தவறான கேள்வியை மிகக் கள்ளமில்லாமல் கேட்டுவிடுவது. நண்பர்களுக்கு முந்தைய நகைச்சுவைகள் நினைவிருக்கலாம். கேட்டே விட்டார். “இவ்ளவு சின்ன டம்ப்ளர்லேதான் டீ குடிப்பீங்களா? நாங்கள்லாம் நெறைய குடிப்போம்”

காதிம் இளவரசன் மென்னகையுடன் “இங்கே நாங்கள் விருந்தினருடன் நிறைய டீ குடிக்கவேண்டும். இது ஒரு மரியாதை” என்றார். “அப்ப எங்களுக்கு பெரிய டம்ளர் சொல்லியிருக்கலாமே” என்று ஷாகுல் கேட்பார் என நான் திகிலடைந்தேன். கேட்கவில்லை. எழுந்து செல்லும்போது “இப்படியா கேட்பது? அவர்களின் உபசரிப்பை குறைசொல்வது போல ஒலிக்கிறதே?” என்று ஷாகுலிடம் கேட்டேன், “எப்படி?” என்று மேலும் ஆர்வமாகக் கேட்டார்.

தர்காவில் அக்பர் அளித்த மாபெரும் கலம் ஒன்று உள்ளது. கலம் அல்ல ஒரு பெரிய உலோக அறை என சொல்லவேண்டும்.  ஐம்பதுபேர் உள்ளே வசதியாக அமரலாம். அடுப்போடு பதிக்கப்பட்டது. வெவ்வேறு உலோகக்கலவைகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கலம் அது. அதன் அடியில் தீ எரிந்து உள்ளே உணவு கொதிக்கும்போது விளிம்பு குளுமையாகவே இருக்கும்.

காதிம் எங்களை அந்த கலத்தை காண்பதற்கு அழைத்துச் சென்றார். மேலேறி அதைப்பார்த்தோம். உள்ளே அரிசி, பலவகை பருப்புகள், நெய், வெல்லம் மற்றும் கேசரி வண்ணம் போட்டு ஒருவகை பாயசத்தைச் செய்துகொண்டிருந்தனர். “இது சுத்த சைவம். ஏனென்றால் இங்கே வரும் இந்துக்கள் எல்லாரும் சைவர்கள்” என்று காதிம் சொன்னார். “அக்பர் காலத்தில் இருந்து இது வழங்கப்படுகிறது. இங்கே வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்குவது அன்றுமுதல் நிகழ்கிறது. சைவ உணவுதான்”

எதிர்ப்பக்கம் இன்னொரு மாபெரும் கலம். அதில் காணிக்கைகளை கொட்டுகிறார்கள். நோட்டுகள் மலைமலையென விழுந்தன. துணிப்பைகளில், பொட்டலங்களில் நோட்டுக்கட்டுகள். முன்பெல்லாம் அரிசிதான் போட்டுக் கொண்டிருந்தார்கள். கோதுமையும் பிற தானியங்களும் கொண்டுவந்து போடுவதும் உண்டு. அந்தக் கலம் நிறைந்து இந்தப்பக்கம் அன்னமாக மாறி உணவாகிக்கொண்டே இருக்கும். பஞ்சகாலத்தில் அதை நம்பியே வாழ்ந்திருக்கிறார்கள்.

இப்போதும் வேண்டுதலுக்காக அரிசி கொண்டு வந்து போடுகிறார்கள். ஆனால் இன்று முக்கியமாக போடப்படுவது பணம்தான். லட்சக்கணக்கான ரூபாய் அன்றாடம் வசூலாகிறது. இந்த அன்னதானம் வழியாகவே மொய்னுதீன் ஷிஷ்டி அவர்களுக்கு ஏழைகளின் காவலன் என்னும் பெயர் உருவானது. நாங்களும் காணிக்கை போட்டோம். அவை அங்கே உணவளிப்பதற்கான காணிக்கைகள். நாங்கள் பாயசத்தை பெரிய உறை ஒன்றில் வாங்கிக்கொண்டோம்.

தர்கா அவ்வேளையில் ஒரு மாபெரும் கடைவீதி போலிருந்தது. ஒரு திருவிழா களம் போலிருந்தது. பிரார்த்தனையில் அத்தனை அமைதியாக இருந்த அனைவரும் மகிழ்ச்சிக்கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். குழந்தைகளை கட்டுப்படுத்த அன்னையர் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அன்னையர் ஒரே போலத்தான் குழந்தைகளை அதட்டுகிறார்கள். இந்தியாவில் எல்லா மொழிகளிலும் குழந்தைகள் ஒரே போலத்தான் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்.

கோவிட் காரணமாக தர்கா இரவு பத்து மணிக்கு மூடப்படும். ஆனால் காதிம்கள் உள்ளே இருப்பார்கள். முன்பெல்லாம் அது மூடப்படுவதே இல்லை. நாங்கள் விடைபெற்று வணங்கி நன்றி சொன்னோம். பிரேமாராமும் காவலர்களும் எங்களை எங்கள் விடுதிக்கு கொண்டுவந்து விட்டார்கள். விடுதியறையில் அமர்ந்து பாயசத்தைச் சாப்பிட்டோம். நெய் மணம் கொண்ட இனிய பிரசாதம். ஆனால் பருப்புகள் முந்திரி நெய் என மிகமிக கலோரி கொண்டது. அதைச் சாப்பிட்டால் நான் ஐந்து கிலோமீட்டர் ஓடவேண்டும். மாறாக படுத்து உடனடியாக ஆழ்ந்து தூங்கினேன்.

காலைத் தொழுகைக்கு மீண்டும் தர்காவுக்குச் செல்லவேண்டும் என்று ஷாகுல் சொல்லியிருந்தார். நான் எழுந்தபோது அவர் ஏற்கனவே தயாராகியிருந்தார். சரசரவென பல்தேய்த்து குளிர்நீரை தலையில் கவிழ்த்து உடைமாற்றி சித்தமானேன். அஜ்மீரில் குளிர்காலம் தொடங்கவில்லை. நவம்பரில் தொடங்கி பிப்ரவரியில் உச்சமடையும். பிப்ரவரியில் குளிர் இரண்டு டிகிரி வரை இறங்கும் என்றா காதிம் முந்தையநாள் பேசும்போது.

”இங்கே எப்படி சமாளிப்பீர்கள்?” என்று கேட்டேன். “சாத்ராதான்” என்று புன்னகைத்தார். அங்கே மாபெரும் கம்பளங்களைக்கொண்டு ஒட்டுமொத்தமாக போர்த்திக்கொள்வது வழக்கம். அது அரேபியாவிலிருந்து வந்த பழக்கம் என நினைக்கிறேன். கோடையில் 51 டிகிரி வரை வெயில் செல்லும். அப்போதும் வெளியே தலைகாட்ட முடியாது. ஆனால் ராஜஸ்தானிகளுக்கு அதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.

விடியற்காலை நான்கரை மணிக்கு தெரு நிறைந்து வண்ணப்பெருக்காக மக்கள் சென்றுகொண்டிருந்தார்கள்.இரவெல்லாம் அந்த முழக்கம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு சில கல்யாண ஊர்வலங்கள் நள்ளிரவில் நடந்தன. இசை, வெளிச்சம், நடனம். மேலிருந்து ஒரு நடனத்தை வீடியோ எடுத்தேன். சரியாக வரவில்லை.கோவிட் எச்சரிக்கையெல்லாம் தெருவில் இல்லை. அங்கே இரவே கிடையாது. எனக்கு விடுதியில் தூங்கும்போதே சாலையோரம் கிடந்து உறங்கும் உணர்வே இருந்தது. நெரிசல் வழியாக முட்டி மோதி தர்கா நோக்கிச் சென்றோம்.

தெருவில் கவாலி பாடல்களைப் பாடும் குழுக்கள் பாடிக்கொண்டிருந்தன. தர்காவாசலில் முட்டிமோதும் கூட்டம். உள்ளே மக்கள் நெரித்தனர். ஷாகுல் என்னிடம் “இங்கே அமர்ந்துகொள்ளுங்கள், நான் தொழுகை முடித்து வருகிறேன்” என்றேன். இஸ்லாமியர் தொழுகைக்குச் செல்ல மற்றவங்கள் ஆங்காங்கே தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். பெண்கள் தனியாக சில கொட்டகைகளில் தொழுகை செய்தார்கள்.

கண்மூடி அமர்ந்திருந்தேன். தலைக்குள் உணர்ந்தது ஒரு தண்மையை. நீரில் கிடக்கும் பாறைபோல மூளை ஆகிவிட்டிருந்தது. நேரம் உணராமல் அமர்ந்திருந்தேன். அங்கே அமைதி நிறைந்தபோது தலைக்குமேல் இருந்த மரத்தில் செறிந்திருந்த பறவைகளின் ஓசைகள் எழுந்தன. அவை துயிலுணர்ந்து ஒளிக்காக சிறகுகளை ஒருக்க ஆரம்பித்திருந்தன.

நெடுநாட்களுக்கு முன்பும் அங்கே எங்கோ அப்படி அமர்ந்திருந்தேன். அப்போது ஓர் இஸ்லாமியப்பெரியவர் வந்து என் தலையில் கைவைத்து இந்தியில் ஏதோ சொன்னார். சப்னா என்னும் சொல் நினைவில் இருக்கிறது. கனவு. என் கனவுகள் நிறைவேறும் என்று சொல்லியிருக்கலாம். இன்று “ஆம், அனைத்தும் நிறைவேறியிருக்கின்றன குவாஜா. இனி நான் கேட்காத எதையாவது நீங்களே கண்டறிந்து தந்தால்தான் உண்டு” என்றுதான் சொல்லவேண்டும்.

ஷாகுல் வந்தார். மீண்டும் தர்கா மையத்திற்குச் சென்றோம். அங்கே ஒரு கவாலி பாடகர் குழு மையமாக அமர்ந்து பாடிக்கொண்டிருந்தது. ”கிருபாகரோ மகராஜு மொய்னுதீன்!” அதே பாடலை முன்பும் அங்கே கேட்டிருக்கிறேன். அவ்வப்போது அதை யூடியூபில் கேட்டதுண்டு. அருள்புரிக பேரரசரே, மொய்னுதீன்!

பாடகர்களுக்கு பத்து இருபது ரூபாய்களாக போட்டார்கள். அது ஒரு குறையாக எனக்குப் படவே நான் நூறு ரூபாய் போட்டேன். ஆனால் மிகச்சீக்கிரத்திலேயே பத்துரூபாய்களாகவே பல ஆயிரம் வந்து விழுந்துவிட்டது. அவர்கள் அதை பணத்துக்காக பாடவுமில்லை. வசூலான தொகையை அங்கேயே காணிக்கையாக அளிப்பது வழக்கம். நாடெங்கிலும் இருந்து கவாலி பாடகர்கள் அவ்வாறு அங்கே பாடுவதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள்.

முன்பொருமுறை ஓர் உரையில் நித்ய சைதன்ய யதி சொன்னார்.இந்தியாவில் இசைவிரும்பிகள் சென்று வணங்கியாகவேண்டிய நான்கு இடங்கள். ஒன்று சைதன்ய மகாப்பிரபுவின் சமாதிஅமைந்துள்ள பிருந்தாவனம் [அவர் மறைந்தது புரியில். ஆனால் சமாதி விருந்தாவனத்தில் என்பது தொன்மம்]. இரண்டு, புரந்தரதாசர் நிறைவடைந்த பண்டரிபுரம் [அவர் பழைய விஜயநகரத்தில் மறைந்தார். ஆனால் பண்டரிபூரில் சமாதியானார் என்பது தொன்மம்] மூன்று, தியாகராஜரின் சமாதி அமைந்துள்ள திருவையாறு. நான்கு, அஜ்மீர்.

கவாலி இசையை கேட்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். அது முழுக்கமுழுக்க இசையனுபவம் என்று சொல்லமுடியாது. இசையனுபவம் இரண்டு வகை. கணக்குவழக்குகளுடன் கச்சிதமான ஒரு வடிவத்தை அந்தரத்தில் உருவாக்குவது ஒருவகை. கர்நாடக இசை என்பது பெரும்பாலும் இதுதான். ஒருவர் ராகம் என்னும் களத்திற்குள் மெல்ல மெல்ல விரிந்து நிறைந்து வழிவது இன்னொரு வகை. இந்துஸ்தானி இசை அப்படிப்பட்டது.

கவாலி இசை பெரும்பாலும் ஒருவகை சேர்ந்திசை. ஒருவரின் உச்சத்தை இன்னொருவர் தன்னுடைய எழுமுனையாக கொண்டு மேலும் செல்கிறார்.  கேட்கும்போது ஒரு பேராறு மலையிறங்குவதைக் காண்பதுபோலிருக்கிறது. கிளைகள் மைய ஆற்றில் இருந்து பிரிந்துசெல்கின்றன. மீண்டும் வந்து இணைகின்றன. எங்கிருந்தோ புதிய ஆறு ஒன்று பொங்கி வந்து தழுவிக்கொள்கிறது. அருவிகள், கொந்தளிப்புகள், சிற்றலை நெளியும் ஆழம். மெல்லமெல்ல விசையழிந்து கடலை அடைந்து அமைகின்றது.

கவாலி இசை ஒருவகையில் தியானத்தில் அமரும் உள்ளத்தின் கட்டமைப்பு கொண்டது. சட்டென்று ஒரு பெருங்குலைவு. அதற்குள் ஓடும் ஒரு வகையான ஒழுங்கு. அவ்வொழுங்கை தொட்டு தொட்டுச் சென்றால் கலைவுகள் அனைத்தையும் இணைத்துக்கொள்ள முடியும். ஒரு பெரிய வெடிப்புச் சிதறல்கள் இணைந்து ஓர் அழகிய கோலமென ஆவதுபோல. அஜ்மீரில் அத்தனை மக்கள் முழக்கத்தின் நடுவிலும் கவாலி ஒலித்துக்கொண்டே இருந்தது.

காலைவிடியத் தொடங்கியது. வண்ணங்கள் துலங்கி வந்தன. அதுவரை இருந்த விசை ஒன்று மெல்ல தளர்வதுபோலிருந்தது. தர்காவின் பொன்சூடிய வெண்மகுடம் துலங்கி வந்தது. அங்கே நின்று படங்கள் எடுத்துக்கொண்டோம். காலையின் ஒளி படங்களுக்கு பொருத்தமானதாக இருந்தது. ரோஜாமலர்களின் வாசனை. ரோஜாவின் வாசனை மல்லிகைப்பூ போல உரத்தது அல்ல. அது ஒரு ரகசியம். பாலைவனத்தின் மலர் அது. நெடுநேரம் செவியோடு சொல்லப்படவேண்டிய மொழி கொண்டது.

அக்பரி மசூதி முன் அதிகாலையிலேயே பாயசம் அளிக்க ஆரம்பித்து விட்டிருந்தார்கள். அதற்கு பெரிய வரிசையாக நின்றிருந்தனர். பாயசம் ‘unlimited’. ஆனாலும் சிலர் பெரிய அண்டாக்களையே கையில் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஷாகுலின் அம்மாவே அஜ்மீர் செல்வதைப் பற்றிச் சொன்னபோது “வாளி கொண்டுபோ. பாயசம் தருவார்கள்” என்று சொன்னதாகச் சொன்னார்.

அஜ்மீர் தர்காவின் நினைவாக என்னுள் இருந்த காட்சி மாபெரும் வண்ணத் திரைச்சீலைகளும் கொடிகளும்தான். பச்சை சிவப்பு வண்ணங்களில். திரைச்சீலைகளை இழுத்து கூரைபோல வளைத்துக் கட்டியிருந்தார்கள். அவை பெரிய பசுவின் அடிவயிறென குழைந்து குவிந்து தொங்கின. அவை அங்கே வெப்பம் இறங்காமலும் குளிர் பொழியாமலும் காக்கின்றன. ராஜஸ்தானின் வண்ணக் கொப்பளிப்பை துணிகளில்தான் காணமுடியும். இயற்கை தவிர்ப்பதை மனிதன் உருவாக்கிக்கொள்வது அது.

அங்கே இருந்த பிற சமாதிகளை சென்று பார்த்தோம். ஒரு குளம் வேலிகட்டி மறைக்கப்பட்டிருந்தது. அது அஜ்மீரின் மிகப்பழைய குளம். சிஷ்டி அவர்கள் நீராடியது. அங்கே எட்டிப்பார்த்து வணங்கிக் கொண்டிருந்தனர். பெரிய படிக்கட்டின்மேல் இன்னொரு தொன்மையான கட்டிடம். எங்கும் பழமையும் புதுமையும் கலந்திருக்கின்றன.

காலையில் தான் அஜ்மீர் தர்காவைச் சுற்றி மலை சூழ்ந்திருப்பதைக் காணமுடிந்தது. மலையை அப்படியே கட்டிடங்களாக ஆக்கியிருக்கிறார்கள். ஆகவே கட்டிடங்களைச் செங்கற்களாகக் கொண்டு கட்டப்பட்ட ஒரு பெரும் சுவர் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அங்கே சுற்றிச்சுற்றி வந்தோம். மீண்டும் விடுதிக்கு வந்து அந்தச் சாலையில் ஒரு காலைநடை சென்றோம். ஓர் உணவகத்தில் ஷாகுலின் தட்டுசுற்று வேட்டியைக் கண்டு “இட்லி இருக்கிறது” என்று அழைத்தனர். நல்ல உறுதியான இட்லி. அதைச் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தோம். எட்டரை மணிக்கு எங்களை அஜ்மீரைப் பார்க்க அழைத்துச் செல்வதாக காவலர்கள் சொல்லியிருந்தனர். அவர்களுக்காக காத்திருந்தோம்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4
அடுத்த கட்டுரைலீலையும் நற்றுணையும்- கடிதங்கள்