நண்பர் ஒருவர் கவனத்திற்குக் கொண்டுவந்த இணைப்பு. ஒரு சிறு செய்தித்துணுக்கு. ஜ்யோதிஷ் என்னும் வாசகர்.
அடிப்படைக் கல்வி மட்டும் கற்றவர். ஆட்டோ ஓட்டுகிறார். தாய் இறந்தபின் தனிமை தாளாமல் வாசிக்க ஆரம்பித்து மிகச்சிறந்த இலக்கியவாசகராக ஆகிவிட்டிருக்கிறார். கோழிக்கோடு பல்கலைக்கழக நூலகர் அவர் வாசிப்பதைக் கண்டு பட்டதாரிகளுக்கு மட்டுமே நுழைவனுமதி உள்ள கோழிக்கோடு பல்கலைகழக சிறப்பு நூலகத்திற்குள் அழைத்துச்சென்று அனுமதி வாங்கி அளித்திருக்கிறார்.
அவர் வாசித்தவர்களில் பிடித்த எழுத்தாளர் எவர் என்னும் வினாவுக்கு என் பெயரைச் சொல்கிறார். “தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன். குறைவாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார்” என்கிறார். வைக்கம் முகம்மது பஷீரை திரும்பத்திரும்ப வாசிப்பதாகச் சொல்கிறார்.
சமீபத்தில் பள்ளிக்கே செல்லாமல் வாசிக்க ஆரம்பித்து என் எழுத்துக்கள் வரை வந்தவரான செந்திலின் பேட்டி இத்தகைய ஆச்சரியத்தை உருவாக்கியது. ஆனால் அத்தகைய பல வாசகர்களை நான் அறிவேன். முறையான கல்வி கற்காதவரும் இரும்புத்தொழிலாளருமான ராதாகிருஷ்ணன் அவ்வாறு பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகமானார். இன்று அவர் அறியப்படும் ஓர் எழுத்தாளராக ஆகியிருக்கிறார்.
ஆச்சரியமாக இருந்தது. தமிழில் நான் எழுதியவற்றின் நூற்றிலொரு பங்குகூட மலையாளத்தில் எழுதவில்லை. மலையாளத்தில் எழுதுவதில் ஒரு தயக்கமும் உண்டு. காரணம் கையால் எழுதவேண்டும் என்பது. ஜ்யோதிஷுக்காக மலையாளத்தில் நிறைய எழுதவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.