சொற்கள் எனை விலகும்போது
நான் என்ன சொல்ல?
அறிவின் நியதிகளை இதயம் மறக்கிறது
கடலில் இருந்து விலகும்
நீரோடை சலசலக்கிறது
கடல் கலப்பதோ மௌனமாகிறது
நேற்றிரவு ஞானத்தின் சொற்களை
அவனது உதடுகள் உதிர்த்தன
நாவுரைத்து செவியுணரா சொற்கள்..
மறைத்திடும் திரையை
முகத்திலிருந்து விலக்கினான்
அணுக்கமற்றவர்களுக்கு
அம்முகம் மூடப்பட்டேயிருக்கும்
இறைவனின் பாதையில் இருந்து
பக்தன் திரும்பி வந்தான்
நடந்து சென்றவன்
பிறரது தோளில் ஏறி வந்தான்
உனைப்பிரிந்த இரவில்
என் ஆன்மா உடலை விட்டுச் சென்றது:
ஒன்றிணையும் நாளில் அது
விரைவாக என் மடிக்குத் திரும்புகிறது.
மதுவின் கசப்போடு
உதடுகளைத் தீண்டும் சொற்கள்
எதிரிகளுக்கு விஷம் என்றாகலாம்
எனக்கு அவை தேனமுது.
இம்முலையைத் துறந்து
தெறித்த முத்துக்கள் எவை?
கடவுளின் ரகசியங்களின் பெருங்கடல்
புயலாக மாறுகிறது!
மதுகொணர்பவனே
நிதானமாக இருப்பவர்களுக்கு
மதுவை ஊற்றுக!
மொய்ன், நித்தியத்திலிருந்து அருந்தி
போதையில் இருக்கிறார்!
என்னிடம் வருக நண்பனே
எப்போதும் உண்மையாயிருப்பேன்
நீ என்ன கொண்டு வந்தாலும்
அதை வாங்கிக்கொள்வேன்… நான்.
நீ உளம் மகிழ்ந்து
அற்புதத்தைப் பார்க்க விரும்பினால் அருகில் வருக:
தோட்டமாய், மலர்விரிப்பாய், மலராய்
இருக்கிறேன் நான்.
உன் பாவங்களை நினைத்து
இதயம் வருந்தினால் என்னிடம் வருக
நோய்கொண்ட இதயங்களின்
மருத்துவன் நான்.
பலிபீடத்தில் இரகசிய இடங்களில்
வணங்கப்படுபவன் மட்டுமல்ல:
குடிகாரர்களின் இசைக்கலைஞன் நான்,
மதுவறைகளில் மதுஊற்றுபவன் நான்.
மடாலயங்களின் ஏகாந்தத்தில்
எனைத் தேடுபவனே வெளியே வருக
சந்தை வெளியில் உனை அடைந்திட
அலைந்து திரிகிறேன் நான்.
ஓட்டுபோடப்பட்ட சூஃபி மேலாடைக்கும்
பொன்மகுடத்துக்குமான ஆசையை விட்டுவிடு
என் தொப்பியையும் மேலங்கியையும்
உனக்கு வழங்குகிறேன் நான்.
உன் இயலாமையைக் கண்டு
மனம் தளரவோ கலங்கவோ வேண்டாம்…
ஒவ்வொரு இடத்திலும் துணையாகவும்,
இதயத்தில் அன்பாகவும், இருக்கிறேன் நான்.
துன்பத்துடன் உன் இதய ரகசியங்களை சொல்ல வேண்டாம்
உன் ஆத்மாவின் தனித்த அறையில்
அதற்குத் துணைநின்ற சதிகாரனாக
இருக்கிறேன் நான்.
உனைச் சுற்றி வட்டங்களை
எவ்வளவு காலம் வரைவாய்?
மையப் புள்ளியாக அமைக
உனைச் சுற்றி வருவது நான்..
நீ ஒரு முத்தென மயங்கும் களிமண்: பயனற்றது!
தெய்வீகப் பெருங்கடலின்
விலைமதிப்பற்ற முத்தை
கண்டுதருகிறேன் நான்!
காதலின் நெருப்பால் எரிக்கப்பட்ட
மொய்னின் உலர்ந்த விறகான உடல்
ஒரு தீப்பொறியாக மாறியது
அவர் தன்னிடம் சொன்னார் நெருப்பாகிறேன் நான்!
சுயமும் குணங்களும்
பிரிந்து இருப்பதால்
கடவுளைத் தவிர வேறு எங்கு பார்த்தாலும்…
ஏதும் பார்க்கவில்லை நான்!
அழியும் கண்ணால்
அழிவற்றவனைக் காண முடியாது என சொல்லாதே:
அவனைப் பார்த்த அளவுக்குத் என் தாழ்ந்த சுயத்தை
பார்க்கவில்லை நான்!
வருத்தப்பட வேண்டாம்!
கறை படிந்த ஆடி…பார்வையற்ற விழி..
நீங்கள் ஒருவொருக்கொருவர் கூச்சலிடுகிறீர்கள்..
பார்க்கவில்லை நான் என்று..
நிலவை நான் பார்த்ததெங்கே
என்று கேட்கவேண்டாம் நான் சென்றபிறகு
என்னுடன் நான் மட்டும் தனித்திருக்க
எவ்விடத்தில் பார்க்கவில்லை நான்?
என்னை சோதிக்க விரும்பும் எந்தப் பேரிடரிலும்
என்னை ஆழ்த்து! சோதனை செய்!
உன்னைப் பார்த்தபின் பேரழிவு தரும் ஒரு பேரிடரை…
பார்க்கவில்லை நான்!
நான் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாயோ
அதைச் செய்ய சித்தமாக இருக்கிறேன்:
உன்னிடமிருந்து வருவது ஏதாகிலும் அது பரிசு,
வேறு எதுவும் பார்க்கவில்லை நான்!
எத்திசையில் எனைக் கொண்டு சென்றாலும்
உன்னை வாழ்த்துவேன்
உன்னிலிருந்து பிரிந்து ஒரு கணமும், எப்போதும்…
பார்க்கவில்லை நான்!
மொய்னின் ஆன்மா
கடவுளுக்கு அருகில் உயர்த்தப்பட்டது…
தேர்ந்தெடுக்கப்பட்ட நபியை பின்தொடர்வதைத் தவிர
ஏதும் பார்க்கவில்லை நான்!
என் கீழ்மையிலிருந்து
வெகு தொலைவில் இருக்கும்போது
பார்ப்பவனும் பார்க்கப்பட்டவனும்
ஆகிறேன் நான்!
மதுவும் கிண்ணமும்,
மதுஅளிப்பவனும் அருகிருக்க
நாள் முழுவதும் போதையில்
மயங்குகிறேன் நான்!
கடவுளின் சங்கமத்தின் கோப்பையிலிருந்து
எனக்கு ஒரு பானம் கொடுங்கள்
கடந்து செல்லும் உலகில்
இன்னொரு மன்சூர் நான்!
‘நானே கடவுள்’ என்னும் ரகசியத்தை
சொல்லச்செய்யும் கோப்பையில் இருந்து
எனக்கு மது அளியுங்கள்
என்றைக்குமாக மன்னிக்கப்படுவேன் நான்!
மெய்மையின் சூரிய ஒளியிலிருந்து
அணுவின் மகிமை வெளிப்படுகிறது
வௌவாலின் விழிகள் அவ்வொளியைத் தாங்காது
மறைந்திருப்பது நல்லது நான்!
மொய்ன் அன்பின் நகரத்திலிருந்து வருகிறான்…
இது புகழ்பெறுமென்றால்
ஒரு அதிசயமா நான்?
நான் கொண்டிருக்கும் இந்த வலி
ஒருவருக்கும் சொல்ல முடியாதது..
காதலனின் இதயத்தின் நெருப்பு
உலர்புல்லிடம் காட்ட முடியாதது..
என் இதயத்திடம் உன்மீதான காதலை
அவ்வப்போது சொல்வதுண்டு
ஆனால் இதயம் அஞ்சிவிட்டது
இக்கதை சொல்ல முடியாதது..
இதயத்தை உடலில் இருந்து பிடுங்கி விடு
ஆன்மாவை வேட்டையாடுகிறேன்
அரசனின் தெய்வீகப் பருந்தை
கழுகென்று சொல்ல முடியாது!
உனது மாணிக்கக் கல்லுக்கு ஏங்குபவன்
கண்ணீர் குருதியின் படுக்கையில் கிடக்கிறான்
ஏழை காதலர்களின் தலையணை
பட்டு நூலால் இருக்கமுடியாது
உங்கள் சேவையில்
பல தோல்விகள் என் தவறுகள்…
என் முகத்தில் நீங்கள் சொல்லலாம்,
முதுகுக்குப் பின்னால் இருக்கமுடியாது.
உங்கள் அன்பின் வேதனையின் இரகசியங்களை
மொய்ன் சொல்வதில்லை:
அரசர்களின் தாபங்கள்
அனைவரும் அறிவதாக இருக்க முடியாது!
தமிழாக்கம் சுபஸ்ரீ