கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்

அன்புள்ள ஜெ,

பி.கே.பாலகிருஷ்ணனின் ‘நாவல்: ஸித்தியும் சாதனையும்’ நூலில் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் தொடர்பான ‘கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்’ என்ற கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறேன். Ms- word வடிவிலும் இணைத்திருக்கிறேன். இந்த கட்டுரையில் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் ஏன் அசாதாரணமான கதாப்பாத்திரங்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்ற நவீனத்துவ நோக்கிலான கேள்விக்கு பி.கே.பாலகிருஷ்ணன் தன் நோக்கில் விரிவாக பதிலளித்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் விஷால்ராஜா (தஸ்தாயெவ்ஸ்கியை நிராகரித்தல்- நபக்கோவ்) நபக்கோவ் தஸ்தாயெவ்ஸ்கியை நவீனத்துவ ரீதியாக விமர்சித்திருக்கும் விஷயங்களை விஷால்ராஜா தன் வாசிப்பின் நோக்கில் மறுத்து கடிதம் எழுதியிருந்தார். நீங்கள் நபக்கோவின் எல்லைகள், நவீனத்துவ அழகியலின் எல்லைகள், நவீனத்துவ இலக்கணம் செவ்வியல் நாவல்களை அணுக தடையாக இருப்பது பற்றியும் எழுதியிருந்தீர்கள்.

அன்புடன்
மணவாளன்.

கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்

பி.கே.பாலகிருஷ்ணன்

தஸ்தாயெவ்ஸ்கிக்கு உலக இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுத்தந்த நான்கு நாவல்களும் க்ரைம் நாவல்கள் தான். ‘குற்றமும் தண்டனையும்’, ’கரமசோவ் சகோதரர்கள்’ இந்த இரண்டு நாவல்களிலும் வெவ்வேறான இயல்புகள் கொண்ட மனிதர்கள் ஒரு கொலையை எதிர்கொள்வதை மையமாகக்கொண்டு இயங்குகிறது. மற்ற இரண்டு முக்கிய நாவல்களான ’அசடன்’, ‘டெவில்ஸ்(Devils)’ இந்த இரண்டு நாவல்களிலும் நிகழ்வுகள் பரிணமித்து இறுதியாக ஒரு கொலை நடப்பதுடன் நாவல் முடியும். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை வடிவம் சார்ந்த நோக்கில் ஆராய்ந்தால் அவரை ’க்ரைம் நாவலாசிரியர்’ என்றுதான் சொல்ல முடியும். உலகின் மகத்தான நாவலாசிரியர்களில் ஒருவரான தஸ்தாயெவ்ஸ்கியை ’க்ரைம் நாவலாசிரியர்’  என்று சொல்வது ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இலக்கிய வகைமைகளில் தாழ்த்தப்பட்ட இனம் என்றுதான் ’க்ரைம் நாவல்களை’ சொல்லவேண்டும். க்ரைம் நாவல்கள் மிகக் கீழான ரசனை கொண்டவர்களுக்காக, மனிதனின் பண்படாத உணர்வுகளை தூண்டிவிடும் தரம்தாழ்ந்த இலக்கிய வகைமை.

பைபிள் உலக இலக்கியத்தின் அரிய மூலதனங்களில் ஒன்று. தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கியமான நான்கு நாவல்களும் (குற்றமும் தண்டனையும், அசடன், கரமசோவ் சகோதரர்கள், டெவில்ஸ்) பைபிளின் இயல்பை கொண்டவை. இந்த நான்கு நாவல்களின் சிறப்பம்சங்களாக அவற்றின் பைபிள் போன்ற தொனியையும், இயல்பையும் சொல்லலாம். ’க்ரைம் நாவல்’ என்ற உடலில் பைபிளின் ஆன்மாவை இணைப்பது என்பது தஸ்தாயெவ்ஸ்கி மட்டுமே அறிந்த வித்தைகளில் ஒன்று. எப்படி தஸ்தாயெவ்ஸ்கியால் பைபிளின் இயல்புகள் கொண்ட க்ரைம் நாவலை எழுத முடிந்தது? எப்படி தஸ்தாயெவ்ஸ்கியால் மட்டுமே இதை செய்ய முடிந்தது? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடிந்தால் அந்த பதில்களை அடிப்படையாகக்கொண்டு  நாவலாசிரியர் என்பவருக்கு இயல்பாகவே உள்ள கலைத்தன்மை , நாவலாசிரியரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களுக்கும் அவரது நாவல்களுக்குமான உறவு, அந்த உறவை உருவாக்குவதில் நாவலாசிரியரின் மன அமைப்பிற்கும் கதைத்தொழில்நுட்பத்திற்கும் உள்ள பங்கு – இவற்றைப்பற்றி சில பொதுவான கருதுகோள்களை  உறுதியுடன் வெளிப்படுத்த முடியும்.

தஸ்தாயெவ்ஸ்கி எழுத ஆரம்பத்ததிலிருந்தே ரஷ்ய இலக்கியத்தில் பொருட்படுத்ததக்க  இடத்தை பெற்றுவிட்டார். எனினும் அவர் தன் வாழ்வின் கடைசிகாலகட்டத்தில் எழுதிய நான்கு நாவல்களால்தான் உலக இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர் என்ற நிலையை அடைகிறார். இது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைவரலாறு சார்ந்த மறுக்கமுடியாத தரவு. குற்றமும் தண்டனையும் நாவல் எழுதும்வரை தஸ்தாயெவ்ஸ்கி தரம்குறைந்த படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார் என்றோ, அந்த படைப்புகளில் மகத்தான ஒரு நாவலாசிரியனின் மேதைமை இல்லவே இல்லை என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய எல்லா இலக்கியப்படைப்புகளிலும் அவரது கலைமனதின் சுவடுகளை காணமுடியும். அவற்றில் பெரும்பாலானவை நல்ல இலக்கிய ஆக்கங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், குற்றமும் தண்டனையும் நாவல் வெளிவருவது தஸ்தாயெவ்ஸ்கியின் இலக்கியப்பயணத்தில் மிகப்பெரிய சம்பவம். அத்துடன் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் வேறொன்றாக ஆவதை நம்மால் காணமுடியும். ’குற்றமும் தண்டனையும்’ நாவலில் தொடங்கி கடைசியாக ’கரமசோவ் சகோதரர்கள்’ வரையுள்ள இந்த புதிய இலக்கியப்பயணத்தில் தஸ்தாயெவ்ஸ்கி உலக இலக்கியத்தின் முதன்மையான கலைஞர்களில் ஒருவராக ஆகிவிடுகிறார். அன்று முதல் அவரின் இலக்கியப்படைப்புகள் ஒரு ஒளிவட்டம்  சூடியிருப்பதை காணமுடியும். பழைய கீர்த்தனைதான். ஆனால் இன்னும் ஆழமாக, இன்னும் விசித்திரமான மறைபிரதிகளுடன் அது முழங்க ஆரம்பிக்கிறது. இந்த புதிய முழக்கம் கலைமனதில் ஒரு அபூர்வமான தருணத்தில் நிகழ்ந்த தற்செயல் என்று சொல்லமுடியுமா என்ன? அப்படி சொல்லமுடியாது. ஏனெனில், மீண்டும் மீண்டும் வரும் ஒவ்வொரு ஆலாபனையிலும் இந்த மறைபிரதியின் விசித்திரமும் கம்பீரமும் புத்தம்புதியது என நிகழ்ந்தபடியே இருக்கிறது. வீணையின் ஸ்வரஸ்தானங்களில் இதுவரை எந்த கலைஞனின் விரலும் தொட்டிறாத ஒரு புதிய சுருதியை தஸ்தாயெவ்ஸ்கியின் விரல் மீட்டிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். குற்றமும் தண்டனையும் நாவலிலிருந்து இந்த அபூர்வமான சுருதியின் சாத்தியங்களை ஆராய்ந்து ஒரு நாதலயத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.

தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த புதிய வெளிப்பாடு அவரது கலைமனம் அடைந்த உந்துதல் மட்டுமல்ல. அந்த வெளிப்பாட்டை ஒரு அடிப்படையான நிலையாக மாற்றக்கூடிய அளவுக்கு கதைத்தொழில்நுட்ப தேர்ச்சியையும் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் நம்மால் தெள்ளத்தெளிவாக காணமுடியும்.   தஸ்தாயெவ்ஸ்கியின் கலைத்தன்மையில் உண்டான இந்த மாற்றம் என்பது என்ன? எந்த புதிய சுருதியை தஸ்தாயெவ்ஸ்கியின் விரல்நுனி மீட்டியது?
இது ஆராய்ந்து பதில் தேடவேண்டிய அளவுக்கு ஒரு அரிய ரகசியம் ஒன்றுமில்லை. இந்த கேள்விக்கான பதிலை தஸ்தாயெவ்ஸ்கி பற்றி எழுதிய பொருட்படுத்தத்தக்க ஆய்வாளர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

தஸ்தாயெவ்ஸ்கி தன் படைப்புகளின் பேசுபொருளாக ’குற்றம்’ என்ற விஷயத்தை கண்டுபிடித்ததுதான் அவர் படைப்புலகில் ஏற்பட்ட அடிப்படையான மாற்றம். மழைக்காக தவமிருந்த வரண்ட பூமியில் புதுமழைத்துளிகள் விழுந்தது போல தஸ்தாயெவ்ஸ்கி ‘குற்றம்’ என்ற பேசுபொருளை தேர்ந்தெடுத்தார். அதுவரை கம்பீரமான சிங்கம் போன்ற அவரது கலைமனம் ‘குற்றம்’ என்ற இறைச்சித்துண்டுகள் கிடைக்காமல் கிடைத்ததை உண்டபடி சோர்வுடன் இருந்தது. எல்லா மேன்மைகளுடனும் எழுந்து நின்று வானத்தையும் பூமியையும் நடுங்கவைக்கும்படி கர்ஜிக்க வேண்டும் என  அந்த சிங்கத்தின் சுருங்கிய தசைகளும் இதயமும் பரபரத்தபடியே இருந்தது. குறுதித்துளிகள் சொட்டும்படி கடித்துக் கிழிக்க ’குற்றம்’ என்ற இரை கிடைத்தவுடன் அந்த சிங்கம் பிடறி சிலுப்பி எழுந்து நின்றுவிட்டது. தன் அசலான குரலில் கர்ஜிக்கத்தொடங்கியது.

ஒரு கலைஞன் தன் கலையை தானே கண்டடையும் தருணம் என்பது அவனது வாழ்க்கையில் விலைமதிக்கமுடியாத அரிய தருணம். பெரும்பாலும் அந்த தருணம் ஆச்சர்யமூட்டும் அளவுக்கு அவ்வளவு தற்செயலானது. அசாதாரணமான கலைஞன் அந்த தற்செயலான முகூர்த்தத்திற்காக என்றும் தவித்தபடியே இருக்கிறான். என்றைக்காவது ஒருநாள் அந்த அரிய தருணம் வருகிறது. அந்த தருணத்திலிருந்துதான் கலைஞனின் அகம் முழுமையாக வெளிப்பட ஆரம்பிக்கிறது. ஒரு யுகம் முழுவதையும் படைப்பதுதான் தன் பணி என்று தெரிந்தவுடன் பால்சாக்(Balzac)  ” La Comédie humaine “  என்ற 91 தொகுதிகொண்ட நாவலை எழுதத் தொடங்குகிறார். La Comédie humaine வழியாக பால்சாக்கின் கலைமனம் தன்னைத்தானே கண்டுகொள்ளும் அபூர்வமான தருணத்தில் காலடி எடுத்துவைக்கிறது. ஒரு அரிய தருணத்தில் எல்லையில்லாதபடி மிகமிக விரிவான ஒரு போர்க்களத்தில்தான் தன் கலைமனம் முழுமையான வெளிப்பட முடியும் என்று கண்டுடைந்த டால்ஸ்டாய் ‘போரும் அமைதியும்’ நாவலை எழுத ஆரம்பிக்கிறார்.

தஸ்தாயெவ்ஸ்கிக்கு அந்த அரிய தருணத்தை கண்டடைய தன் வாழ்வின் கடைசிகட்டம்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த தருணத்திற்கு பின் தஸ்தாயெவ்ஸ்கியின்  கலைமனம் குற்றம், குற்றம் செய்வதற்கான விழைவு போன்ற விஷயங்கள் வழியாக காட்டுக்குதிரை போல கடிவாளம் இல்லாமல் கட்டற்று பயணிக்க ஆரம்பித்தது. அந்த குதிரையின்  இலக்கு  பிரபஞ்ச ரகசியங்கள் நட்சத்திரங்கள் போல ஒளிரும் சூனியமான வான்வெளி. அங்கு சென்றவுடன் வானம் என்ற பாழ்வெளியின் பிரம்மாண்டத்தை தாளமுடியாமல் அது எழுப்பிய வேதனை நிறைந்த அலறல்கள் பூமியில் எதிரொலித்தன. அப்படி அலறுவதற்காகவே, அது பூமியில் எதிரொலிப்பதற்காகவே பிறந்தவர்தான் தஸ்தாயெவ்ஸ்கி. குற்றம் என்ற காட்டுக்குதிரையை கண்டுகொண்ட அந்த நிமிடம்தான் தஸ்தாயெவ்ஸ்கியின் அபூர்வத் தருணம்.

’குற்றம்’ என்பது தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கியமான நாவல்களின் பேசுபொருள் மட்டுமல்ல. ’தஸ்தாயெவ்ஸ்கித்தன்மை’ (Dostoyevskian) என்பதன் மையம் ’குற்றம்’தான். ’தஸ்தாயெவ்ஸ்கித்தன்மை கொண்ட  கதாப்பாத்திரங்கள்’ (Dostoyevskian characters) எல்லோரும்  குற்றவாளிகளோ, குற்றம் செய்யும் விழைவு கொண்டவர்களோ தான். அவரது தனித்தன்மையான  படைப்புலகம் மனிதர்களை குற்றவாளிகள், குற்றமற்றவர்கள் என பிரித்துப் பார்ப்பதில்லை. தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம்  குற்றம் செய்யும் விழைவை அடிப்படையாகக்  கொண்ட ‘அதிமானுடரும்’ ‘சிறுமையானவர்களும்’ மட்டுமே நிறைந்த உலகம். இந்த விசித்திரமான மனிதர்கள் நிறைந்த கதைக்களத்தில் ’குற்றம்’ என்பது எண்ண ஓட்டங்களில், சம்பவங்களில் வெறுமனே அதிர்ச்சிமதிப்பை ஏற்படுத்துவதோ, நாவலின் இறுதித் திருப்பத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டதோ அல்ல.  தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் ’குற்றம்’ என்பது எல்லாவற்றின் தோற்றுவாயாக, ஆன்மிகமான முழுமைக்காக தயார்படுத்தும் ஒரு உயிர்த்துடிப்பாக இருக்கிறது. அங்கு எளிய மனிதர்கள் கொலை என்ற சுழியில் ஆட்பட்டு வெளியேற துடிதுடிக்கிறார்கள். அவர்களின் மனதில் ஏற்பட்ட ஆழமான காயங்கள் வழியாக அவர்களின் ஆன்மாவை முழுமையாகவே நமக்கு காண்பிக்கிறார்கள். நான் சொல்லவரும் விஷயத்தை தெளிவாக்க கரமசோவ் சகோதரர்கள் நாவலின் முக்கிய கதாப்பாத்திரங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

கரமசோவ் சகோதரர்கள் நாவலின் கதாநாயகர்களில் ஒருவனான மித்யா(Mitya) தன் தந்தை ஃபியோதர் கரமசோவை (Fyodor Karamazov) கொல்லப்போவதாக வஞ்சினம் உரைத்தவன். வேறு ஒருவரால் தந்தை கொலைசெய்யப்பட்டு இறந்தபிறகுகூட, தானே தந்தையை கொன்றிருக்கவேண்டும் என்று சொன்னவன். ஆனால் மித்யா கருணை, சுயமரியாதை போன்ற மேன்மையான குணங்களின் வடிவமும்கூட. ஃபியோதர் கரமசோவின் இரண்டாவது மகன் இவான்(Ivan) அறிவுஜீவி, பண்பட்டவன். அவனும் தந்தையை கொலைசெய்ய விழைந்தவன், மறைமுகமாக அந்த கொலைக்கு தூண்டுதல் அளித்த ஆளும்கூட. நேர்மறையான, கள்ளமற்ற குணநலன்களை மட்டுமே கொண்ட மூன்றாவது மகன் அல்யோஷா(Alyosha) கூட தந்தை இறந்தபின்பு குற்றவுணர்வின் வெம்மையை அனுபவிக்கிறான்.

ஃபியோதர் கரமசோவை உண்மையாகவே கொலை செய்தது ஸ்மர்டியாக்கோவ் (Smerdyakov) என்ற குற்றம் செய்யும் விழைவுகொண்ட தீமைநிறைந்த கதாப்பாத்திரம்.  ஃபியோதர் கரமசோவின் மகன் இவான் முன்வைத்த வாழ்க்கை சார்ந்த தத்துவம் ஸ்மர்டியாக்கோவிற்கு கொலை செய்யும் தைரியத்தை அளித்திருந்தது. இந்த நாவலில் இறைநம்பிக்கையால் ஒளிரும் நன்மை மட்டுமே கொண்ட ஃபாதர் ஸோசிமாவின் வாழ்க்கையின் அடித்தளம் கடுமையான குற்றத்தை  தொடர்ந்து ஏற்பட்ட பச்சாதாபத்தாலும் கருணாயாலும் எழுப்பப்பட்டது. இந்த முக்கிய கதாப்பாத்திரங்கள் போக மற்ற கதாப்பாத்திரங்களும் நாவலின் முக்கிய சம்பவமான ’தந்தைக்கொலை’ என்ற சுழலில் ஆட்கொள்ளப்பட்டவர்கள். அந்த கதாப்பாத்திரங்கள் ’தந்தைக்கொலை’க்கு எதிர்வினை ஆற்றுவது வழியாக, தங்களின் குற்றம் செய்வதற்கான விழைவு வழியாக அவர்களின் ஆழ்மனம் முழுவதையுமே நமக்கு காட்டுகிறார்கள். எளிமையாகச் சொன்னால் இந்த நாவலில் உள்ள அத்தனை கதாப்பாத்திரங்களும் குற்றவாளிகள்தான். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் இருந்தபடி அந்த கதாப்பாத்திரங்களை குற்றவாளிகள் என்று சொல்ல வாசகர்கள் யாருக்கும் தைரியம் வருவதில்லை.

தஸ்தாயெவ்ஸ்கியின் விசித்திரமான புனைவுலகில் ’குற்றம்’ என்ற நுழைவுச்சீட்டை காண்பித்து மட்டும்தான் மனிதர்கள் உள்ளே நுழைய முடியும். அந்த மனிதர்கள் சாத்வீகமானவர்களாக, வீரர்களாக, பெருந்தன்மையானவர்களாக, அற்பமானவர்களாக, கோழைகளாக என எப்படிப்பட்டவர்களாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், ’குற்றம்’ என்ற நுழைவுச்சீட்டு அவசியம். தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் சாத்தான் போல தீமையே உருவானவர்களை, அன்பே வடிவானவர்களை காணலாம். ஆனால் அவரது புனைவுலகில் சாமானியர்களை காணவே முடியாது. முன்பே குறிப்பிட்டது போல அவரது புனைவுலகில் தீமை மட்டுமே கொண்டவர்கள்; அன்பு மட்டுமே நிறைந்த பரிசுத்த ஆன்மாக்கள், புழுக்களைப்போல சந்தேகங்களின் பிடியில் சிக்கி அருவருப்பூட்டும்படி துடிக்கும் அதிமானுடர்- இவர்கள் அனைவருமே ஒரேபோல குற்றத்தின் பிடியில் சிக்கிய குற்றவாளிகள் தான். நம் மனதில் இயல்பாகவே ஒரு கேள்வி எழுந்துவரும்: ஏன் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் இம்மாதிரியான அசாதாரணமான கதாப்பாத்திரங்கள் மட்டுமே இருக்கிறார்கள்?

தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை அனுபவங்களில் மிக முக்கியமான ஒரு அம்சம் இங்கு அறிமுகமாகிறது. பூக்கள் விரிவதுபோல எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் ‘poor folks’ என்ற நாவல் எழுதி ரஷ்ய இலக்கியத்தில் கவனம் பெருகிறார். சில வருடங்களிலேயே தஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையில் அடைக்கப்படுகிறார். ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த நிலப்பரப்பின் நாலா பக்கத்திலிருக்கும் மிகக் கொடிய குற்றவாளிகளும் அதே சிறையில்தான் இருக்கிறார்கள்!  ’சாமானியம்’ என்பதை தவிர்த்து மற்ற எல்லா உணர்வுநிலைகளும் கொண்ட குற்றவாளிகளுடன் நான்கு வருடம் தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசம் அனுபவிக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் பொருட்படுத்தக்க ஒருவரான இ.ஹெச்.காரின் [E.H. Carr] தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய அவதானிப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.

” ……அவருக்கு சில ஆழ்மன ரீதியான பாதிப்புகள் கணி்சமான அளவில் உருவாகியிருந்தன.   நீட்சே தஸ்தாயெவ்ஸ்கியை ’ இருள் உலகின் தெய்வங்களுடன் நிரந்தரமாக போரிட்டபடியே வாழ்ந்தவர்’ என்று சொல்கிறார்: ‘ மிக கவனமாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அசுரத்தன்மை கொண்ட இந்த போராட்டத்தில் தஸ்தாயெவ்ஸ்கி தானே ஒரு இருள்தெய்வமாக ஆகிவிடுவதற்கான சாத்தியம் எப்போதுமே இருந்தது. அடியற்ற ஆழம் கொண்ட பிலம் ஒன்றை உற்று நோக்கினால் அந்த பிலம் உங்கள் ஆன்மாவை இந்த பக்கத்திலிருந்து திரும்பிப்பார்க்கத் தொடங்கும்.‘ சைபீரியாவில் உள்ள ஓம்ஸ்க் என்ற பகுதியில் சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்ட மனிதர்களுடன் நான்கு ஆண்டுகள் தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசம் அனுபவித்தார். இவர்கள் மனித சமுதாயத்தின் நீதித்தொகுதிகளிலிருந்து, நன்னெறிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘அற்ப மானுடர்’ – பெரும்பாலும்  விலங்கு போன்ற ஒரு வாழ்க்கை நிலைக்கு திரும்பிப்போக முடிந்த ‘அரை-மனிதர்கள்’(Sub-human). இயற்கையின் ஆதார இயல்புகள் தூய வடிவில் நுரைத்து கொப்பளித்துக்கொண்டிருக்கும் அந்த பிலத்தை தஸ்தாயெவ்ஸ்கி காண்கிறார். பதிலுக்கு அந்த பிலம் தஸ்தாயெவ்ஸ்கியின் ஆன்மாவிற்குள் நுழைகிறது. சிறையில் நுழைவதற்கு முன்னரே தஸ்தாயெவ்ஸ்கி இயல்பாகவே ஒரு அசாதாரணமான ஆளுமையாக இருந்திருக்கலாம். அவர் இயல்பாகவே அசாதாரணமானவராக இருந்தாரோ, இல்லையோ சிறையில் அசாதாரணமான உலகத்துடன் பொருந்திக்கொள்ள தஸ்தாயெவ்ஸ்கி கற்றுக்கொண்டார். சிறைவாசத்துடன் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைப்பார்வையே ஒட்டுமொத்தமாக மாறியது. சிறையில் அனுபவித்த அந்த ’அசாதாரணமானதன்மை’யை மட்டுமே ‘ஃபோக்கஸ்’ செய்தது என்பதால் எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாகப் பார்க்க அவரால் முடியவேயில்லை. அந்த சிறையில் சாமானியமான மனிதர்கள் எவ்வளவு குறைவோ அந்த அளவுக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் சாமானிய கதாப்பாத்திரங்கள் மிகக்குறைவாக இருப்பதைக் காணலாம். தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசத்திற்கு பிறகு எழுதிய படைப்புகளில் மனிதர்களின் சாமானியமான உணர்வுநிலைகள் எதுவுமே இல்லாததாக ஆனது. அது குற்றவாளிகளின், கள்ளமற்றவர்களின் உலகமாக ஆகிவிட்டது- நன்மை அல்லது திண்மை மட்டுமே கொண்டவர்கள் நிறைந்த அருவருப்பூட்டும் உலகம்”

இ.எச்.காரின் [E.H. Carr]  இந்த அவதானிப்பை விரிவாக விளக்கவேண்டிய அவசியமில்லை. தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் ஏன் அசாதாரணமான மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்ற கேள்வியை கேட்பவர்களிடம் இ.எச்.காரின் அவதானிப்பை முன்வைத்தால் இனி அந்த கேள்வியை கேட்கமாட்டார்கள். சைபீரிய சிறைவாசம் முடிந்து இலக்கியச்செயல்பாட்டை தொடர்ந்த தஸ்தாயெவ்ஸ்கியால் சாமானிய மனிதர்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவருக்கு ’சாமானியம்’ என்பதே மிகமிக அசாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் ‘insulted and humiliated’ நாவலில் தொடங்கி கடைசி நாவலான ‘கரமசோவ் சகோதரர்கள்’ வரை இ.எச்.காரின் இந்த அவதானிப்பு பொருந்தும்.

சைபீரிய சிறைவாசத்தில் குற்றாவளிகள் மட்டுமே கொண்ட உலகம் அறிமுகமான நேர்ந்ததால் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் குற்றத்தையும், குற்றவாளிகளையும் கையாளும் ஒரு புனைவுலகமாக ஆகிவிட்டிருக்கிறது என்று யாராவது நினைத்தால் அந்த புரிதல் பிழையானது. தன் சிறைவாசத்தில் நிகழ்ந்த அனுபவங்களை அப்படியே பதிவுசெய்யவோ அல்லது நேரடியாக அதை மட்டுமே சார்ந்த படைப்புகளையோ தஸ்தாயெவ்ஸ்கி எழுதவில்லை. தன் சொந்த வாழ்க்கையின் மிக கடுமையான அனுபவமான வறுமையை ஒருபோதும் முக்கியமான பேசுபொருளாக ஆகவில்லை. மாறாக, தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் அந்த சிறைவாச அனுபவத்தை ஆவேசத்துடன் உள்வாங்கிக்கொண்டது. அவ்வாறு உள்வாங்கிக்கொண்டதால் அவரின் கதாப்பாத்திரங்கள் சார்ந்த பார்வையும், நாவலின் கதைக்களமும் பிரத்யேகமான முறையில் மாற்றமடைந்தது.

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் வாசகர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் குற்றவாளிகளின் உலகிற்கும் தஸ்தாயெவ்ஸ்கிக்குமான உறவு என்ன என்பதுதான். தஸ்தாயெவ்ஸ்கி சிறையில் உள்ள குற்றவாளிகளை வெறும் ஒரு பார்வையாளனாக நின்ற பார்த்தவர் அல்ல. குற்றவாளிகளுடன் தானும் ஒரு குற்றவாளியாகவே நான்கு வருடம் வாழ்ந்தவர். அவர்கள் சிறையில் அனுபவித்த கொடிய சித்திரவதைகளை ஏறக்குறைய அதே அளவுக்கு தஸ்தாயெவ்ஸ்கியும் அனுபவித்தார். எந்த மனிதனிலும் இம்மாதிரியான அனுபவம் கசப்பைதான் ஏற்படுத்தும். சிறையில் சித்திரவதைகளை அனுபவிக்கும் குற்றவாளிகள் முதலில் இழப்பது ‘மனிதத்தன்மை’யைத்தான். பிழையாகக் கையாளப்படுவதால் கைதிகளின் ’மனிதத்தன்மை’ என்றென்றைக்குமாக சீரழிந்துவிடுகிறது. இதை காண நேரும் எந்த ஒரு கலைஞனுக்கும் தார்மீகமான கோபம் ஏற்படும். அது மட்டுமல்ல, இம்மாதிரியான அனுபவங்களை எதிர்கொள்ளும் எந்த ஒரு கலைஞனுக்கும் இந்த தண்டனைகளுக்கு காரணமான சமூக அமைப்பின் மீது வெறுப்பும் எதிர்ப்பும் தீபோல கனன்றபடியே இருக்கும். அதுவும் தஸ்தாயெவ்ஸ்கி புகழின் உச்சிவரை சென்றுகொண்டிருந்த கட்டத்தில், அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்.

ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியை பொறுத்தவரை மேலே குறிப்பிட்டது போல   எதுவுமே நிகழவில்லை. தஸ்தாயெவ்ஸ்கி  சிறையில் தான் அநியாயமாக சித்திரவதை செய்யப்பட்டதை பின்பு ஒரு தருணத்திலும் கோபத்துடன், வெறுப்புடன் வெளிப்படுத்தியதில்லை. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் சைபீரிய சிறை அனுபவங்களை நேரடியாகவே கையாண்ட ஒரே ஒரு நாவல்- ‘house of the dead’ . அந்த நாவலில் விவரிக்கப்படும் சிறை சார்ந்த விஷயங்களில் தஸ்தாயெவ்ஸ்கியின் சொந்த வாழ்க்கையின் சிறைவாச அனுபவங்களின் எந்த சுவடையும் நம்மால் காண முடியாது. தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த ‘ஒட்டுதலின்மை’ ஆச்சர்யமானது. வாசகர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். தஸ்தாயெவ்ஸ்கியின் கடுமையான சிறைவாச அனுபவங்களை நேரடியாகவே சார்ந்த இந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் மற்ற நாவல்களுடன் ஒப்பிட்டால் தர அடிப்படையில் கீழே உள்ள நாவல் என்றுதான் சொல்லமுடியும். ‘House of the dead’  ஒரு தோல்வியடைந்த  நாவலாக ஆனதற்கு பிரத்யேகமான ஒரு அர்த்தமும் இருக்கிறது. கலைஞனுக்கும் அவனது வாழ்க்கை அனுபவங்களுக்குமான உறவைப்பற்றி ஆராயும்போது அதிலுள்ள முக்கியமான அம்சங்களை ‘house of the dead’  நாவல் எடுத்துக்காட்டுகிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் தரம்தாழ்ந்த ஒரு நாவல் என்பது மட்டுமல்ல, தஸ்தாயெவ்ஸ்கித்தன்மையே இல்லாத ‘Undostoveskyan’ நாவல்தான் ‘The House of the dead’. தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கியமான நாவல்களை ஒருமுறைகூட பாராட்டாத இயலாத தல்ஸ்தோய் (தல்ஸ்தோய்க்கு என்றுமே தஸ்தாயெவ்ஸ்கி படைப்புகள் மேல் வெறுப்பும், மதிப்பின்மையும் இருந்தது) ‘House of the dead’ நாவலை மட்டும் ஒரு மகத்தான கலைப்படைப்பு என்று ஆவேசமாக புகழ்ந்த்திருக்கிறார். தல்ஸ்தோய் இந்த வஞ்சப்புகழ்ச்சி ஒன்றை மட்டுமே எடுத்துக்கொண்டு  ‘House of the dead’ ஒரு தோல்வியடைந்த நாவல் என்பதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம். தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைப் பார்வையையே மாற்றியமைத்த  சிறை அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதிய  ‘House of the dead’  நாவல், ஏன் அவரின் தரம்குறைந்த படைப்புகளில் ஒன்றாக ஆனது? ஏன் இந்த ஒரு நாவலில் மட்டும் தஸ்தாயெவ்ஸ்கியின் கலைத்தன்மையின் சுவடுகள் சுத்தமாகவே இல்லை?

இதற்கான பதில் மிக எளிமையானது. கலைமனதால் உள்வாங்கப்படாத வாழ்க்கை அனுபவம் என்பது ஒரு அறிக்கைதான். அதற்கு அப்பால் அந்த அனுபவத்திற்கு வேறெந்த மதிப்பும் கிடையாது. அந்த அறிக்கை தயாரிப்பவரின் திறனையும், தேர்ச்சியையும் பொறுத்து வாசிப்பவர்களுக்கு ஈர்ப்புள்ளதாகக்கூட இருக்கலாம். கதைத்தொழில்நுட்பத்தில் நல்ல திறன் கொண்டவர்களால் அந்த அறிக்கையை கச்சிதமான வடிவத்திற்கு கொண்டுவந்துவிட முடியும். ஆனால் நல்ல கலைஞனின் உந்துதலால் இயற்றப்பட்ட கலைப்படைப்பிற்கு நிகராக அந்த அறிக்கையை வைக்க முடியாது. கலை சார்ந்த இந்த அடிப்படையான உண்மையை தஸ்தாயெவ்ஸ்கியின் ‘house of the dead’ என்ற தோல்வியடைந்த நாவல் எந்த பொருள்மயக்கமும் இல்லாமல் தெள்ளத்தெளிவாக சொல்கிறது.

குற்றவாளிகளின் உலகத்தில் குற்றவாளியாகவே வாழ்ந்த அனுபவங்கள் அளித்த பாதிப்புகளை தன் கலைமனதில் உள்வாங்கிக்கொண்ட தஸ்தாயெவ்ஸ்கி  பின்னர் ரொம்ப காலம் அதை வெளிப்படுத்துவதற்கான தவத்தில் இருந்தார். தஸ்தாயெவ்ஸ்கியின் பாத்திரப்படைப்பு சார்ந்த புரிதல்கள் ஒட்டுமொத்தமாகவே மாறின. சிறைவாழ்க்கைக்கு பின்பு தஸ்தாயெவ்ஸ்கி  எழுதிய எல்லா படைப்புகளிலும் அவரது வாழ்க்கைப்பார்வையில் வந்த மாற்றம் பின்னணியாக இடம்பெற்றது. இ.எச்.கார் [E.H.Carr] அவதானித்துபோல “ சைபீரிய சிறையில் சாதாரண மனிதர்கள்    எவ்வளவு அரிதானவர்களோ , அதேபோல தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகில் சாதாரணமான மனிதர்கள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள்.”

ஆனால் தஸ்தாயெவ்ஸ்கிக்கு இயல்பாகவே இருந்த மேதைமையும், கற்பனைத்திறனும் முழுமையான வெளிப்பாட்டிற்கான வெளியைத் தேடி இருட்டில் தடுமாறியபடியே இருந்தது. Insulted and humiliated நாவலிலிருந்து ஆரம்பிக்கும் இந்த தேடல் ’குற்றமும் தண்டனையும்’ நாவலில் பூர்த்தியடைகிறது. அதிலிருந்து தனக்கு பொருத்தமான ஒரே ஒரு பேசுபொருள்  ‘குற்றம்’ மட்டும்தான் என்று தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் கண்டுகொள்கிறது. அந்த கண்டடைதலுக்கு பிறகு தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் உலக இலக்கியத்தின் அருமணிகள் நிறைந்த களஞ்சியத்திற்கு இடம் மாறிவிடுகின்றன.

ஒருவிதத்தில் பார்த்தால் இந்த விளக்கம் அபத்தமாக இருப்பதாகக்கூட தோன்றும். சிறைவாழ்க்கை முடிந்தபின் தஸ்தாயெவ்ஸ்கி  Insulted and Humiliated(1861), The House of the  Dead(1861), நிலவறைக்குறிப்புகள்(1864) என்ற மூன்று நாவல்களுக்கு பிறகு எழுதிய நான்காவது நாவல்தான் ‘குற்றமும் தண்டனையும்(1866)’. சிறைவாழ்க்கை முடிந்தபின் தன் கதாப்பாத்திரங்கள் முழுக்கவே குற்றவாளிகளைக் கொண்டு உருவாக்க ஆரம்பித்த தஸ்தாயெவ்ஸ்கி  ’குற்றமும் தண்டனையும்’ நாவல் முதல்தான் தனக்கு உவப்பான பேசுபொருள் ’குற்றம்’ தான் என்பதை  கண்டுபிடித்தார் என்று சொல்வது அவரது எல்லா நாவல்களையும் வாசிக்காதவர்களுக்கு முரண்பாடாக தோன்றும். ஆனால், நுட்பமான வாசகர்களுக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் வந்த இந்த மாற்றம் எவ்வளவு அடிப்படையானது என்று புரிந்துகொள்ள எந்த சிரமமும் இருக்காது.

குற்றமும் தண்டனையும் நாவல் முதல் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் குற்றம் என்ற பேசுபொருளை மட்டுமே கொண்டு தன்னளவிலேயே முழுமையான ஒன்றாக ஆகியது. அந்த புனைவுலகில் குற்றவாளிகள், குற்றமற்றவர்கள் என்ற பிரிவினை இல்லாமலாகிறது. அதாவது ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் முதல் தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் ’மனிதன்’ என்ற சொல்லிற்கு பதிலாக ’குற்றவாளி’ என்ற சொல்லை பயன்படுத்த ஆரம்பித்தது என்று சொல்லலாம்.  ’குற்றம்’ என்ற இந்த புதிய பரிபூரணமான பிரபஞ்சத்தில் ஒரு பூமி இருக்கிறது. ஒரு சொர்க்கம் இருக்கிறது. ஒரு நரகம் இருக்கிறது. எல்லாவிதமான மனிதர்களும் இருக்கிறார்கள். அந்த உலகில் கொலையில் பங்கேற்றதற்கு பின்புதான் பரிசுத்தமானவர்கள், சாத்வீகமானவர்கள், தீமை நிறைந்தவர்கள் என மனிதர்கள் பலவாராகப் பிரிகின்றனர். அவர்கள் கொலைக்குப் பின்பு உள்ள சஞ்சலமான மனநிலையிலூடாக தங்கள் ஆன்மாவை முழுமையாகவே நமக்கு காண்பிக்கிறார்கள். அங்கு எல்லாவற்றிற்குமான மையம் குற்றம்தான். எல்லாமே குற்றத்திலிருந்து தொடங்கும் விசித்திரமான பிரபஞ்சம்.

’கொலை’யை தன் முக்கியமான பேசுபொருளாக கொண்ட தஸ்தாயெவ்ஸ்கியின் நான்கு நாவல்களும் மகத்தான இலக்கியப்படைப்புகளாக ஆனதற்கான காரணம் இந்த நாவல்கள் வழியாக தஸ்தாயெவ்ஸ்கி ’குற்றம்’ என்பதை எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக, என்றென்றைக்குமான ஒன்றாக உயர்த்தியிருக்கிறார். மேலும் இந்த நாவல்களில் குற்றத்தில் பங்கேற்பதன் வழியாக தூய்மையானவர்களும் சாத்தான்களுக்கும் தங்களைத் தாங்களே கண்டுகொள்ளும் நாடகமேடையாக மாற ‘க்ரைம் நாவலின்’ இந்த புகழ்பெற்ற சட்டகம் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இவ்வாறு ‘குற்றம்’ ஒட்டுமொத்ததன்மையை அடைந்தது தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனதை இயங்கவைப்பதற்கு பொருத்தமானதாக ஆனது. தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் தன் சிறை சார்ந்த  அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டவுடன் ’குற்றம்’ என்பது என்றென்றைக்குமான ஒன்றின் குறியீடாக விரிவடைந்தது என்றும் சொல்லலாம். அதுமட்டுமில்லை, தஸ்தாயெவ்ஸ்கியின்  வேறொரு அடிப்படை கேள்வியை பாதிக்க இந்த புதிய பேசுபொருளான குற்றத்தால் முடிந்திருக்கிறது.

இறைவனின் இருப்பு பற்றிய ஆழமான சிந்தனைகளில் ஆட்பட்டிருந்த அல்லது அப்படி ஒரு சிக்கலான கேள்வியில் முழுமையாகவே மூழ்கிவிட அன்றுவரை தவம் செய்துகொண்டிருந்த தஸ்தாயெவ்ஸ்கி ’குற்றத்தை’ மனிதனின் ஆதிபாவமாக குறியீட்டு ரீதியாக விரிவாக்கியவுடன் அவரது கலைமனம் தன்னை முழுமையாகவே வெளிப்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலிருந்து க்ரைம் நாவலாசிரியரான தஸ்தாயெவ்ஸ்கி பைபிளின் இயல்பை வெளிப்படுத்தும் நாவலாசிரியராக வளர ஆரம்பிக்கிறார். ’மதிப்பிற்குரியவர்களே, சொந்த தந்தையின் மரணத்தை விழையாத யாராவது ஒருவர் இருக்கிறீர்களா?’ என்று இவான் கேட்கும்போது, ‘ மரியாதைக்குரியவர்களே, நான் என் தந்தையை கொலை செய்யவில்லை. ஆனால் செய்யாத கொலைக்கு கிடைக்கும் தண்டனையை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு இறைவன் காட்டும் மீட்பிற்கான வழி என்று அதை எடுத்துக்கொள்கிறேன்’ என்று மித்யா சொல்வது ’ நானும் ஒரு கரமசோவ். அதனால் நானும் பாவிதான்’ என்று அல்யோஷா குற்றவுணர்வின் வெம்மையை அனுபவிக்கும்போது, மித்யாவின் செயல்பாடு தந்தைக்கொலைக்குதான் இட்டுச்செல்லும் என கண்டுகொள்ளும் ஃபாதர் ஸோசிமாவ் நிகழப்போகும் அந்த குற்றத்தின் முன் பயபக்தியுடன் தலை வணங்கும்போது தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் ’குற்றம்’ என்பதன் குறியீட்டு ரீதியான முக்கியத்துவம் என்ன என்பதை நம்மால் தெளிவாக காணமுடியும். சாதாரணமாகப் பார்த்தால், தஸ்தாயெவ்ஸ்கியின் கதாப்பாத்திரங்கள் செய்யும் கொலைகளை கசாப்புக்கடையில் குருதித்துளிகள் சொட்டும்படி இறைச்சி வெட்டப்படுவது போல இங்கு மனித இறைச்சி வெட்டப்படுகிறது என்று தோன்றும். ஆனால், அப்படி அல்ல. ஒவ்வொரு நாவலிலும் ’குற்றம்’ நிகழ்ந்து அதன் பாதிப்புகள் காட்டப்பட்டு நாடகீய உச்சத்தை அடையும்போது  கதாப்பாத்திரங்கள் எதிர்கொள்ளும் சித்திரவதையான அனுபவங்கள் மனித இனத்தின் ஒட்டுமொத்தமான குற்றவுணர்வாக, பச்சாதாபமாக மாறுகின்றன. அந்த பச்சாதாபத்தையும் குற்றவுணர்வையும் வெளிப்படுத்துபவர்கள் இந்த உலகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. என்றென்றைக்குமானவை மட்டுமே கொண்ட வேறு ஒரு உலகிலிருந்து வலியை சகித்துக்கொண்டு ஆனந்தமடையும் ஆன்மாக்கள். அவர்கள் எழுப்பும் அசிரீரிகளைதான் நாம் தஸ்தாயெவ்ஸ்கியின் கதாப்பாத்திரங்கள் வழியாக கேட்கிறோம். அதனால் தஸ்தாயெவ்ஸ்கியின் க்ரைம் நாவல்களை பைபிளை போல மறைபிரதிகளை ஏற்படுத்தும் ‘நாவல்-பைபிள்’ என்றுதான் சொல்லமுடியும்.

தமிழில் அழகியமணவாளன்

நாவலும் மறைபிரதியும் – பி.கே.பாலகிருஷ்ணன்

நாவலின் பேசுபொருள் -பி.கே.பாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைநான்கு நூல்களும் எழுத்து இதழ்த் தொகுப்பும்
அடுத்த கட்டுரைஅருண்மொழியின் சொற்கள்