அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி

“நியதி” நிகழ்வுக்கு சென்று திரும்பியதில் இருந்து “குக்கூ” உடனான எனது உறவு வளர்ந்து, நீங்க முடியாத பிணைப்பாக மாறிவிட்டது. அடுத்த சில தினங்களில் நான், ஓவியர் ஜெயராம், ஆனந்த், சுப்ரமணி ஆகியோர் குக்கூ சென்று வந்தோம். மீண்டும் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி நிகழ்வு அறிவிக்கப்பட்டது. “துவம்” என்ற பெயரில் பெண்களுக்கான பருத்தி உள்ளாடைகள் தயாரித்து வரும் பொன்மணி அக்கா, கழிவுத்துணிகளில் இருந்து கைப்பைகள் தயாரிப்பை தொடங்கவிருக்கிறார். அதேபோல், வாணி அக்கா பனை ஓலைகளில் இருந்து குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளார். இவ்விரு செயல்களையும் கல்வியாளர் முத்துராமன் அவர்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வுக்கான கூடுகையாக குக்கூ நிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

குக்கூ காட்டு பள்ளியியை சூழ்ந்திருந்த பசுமை மழை நீரால் கழுவப்பட்டு அதன்மேல் முகில் விலகி படர்ந்த மென் ஒளியின் தொடுகையால் மொத்த வெளியே ஸ்படிகம் போல காட்சியளித்து கொண்டிருந்தது. நிகழ்வுக்கு பல்வேறு இடங்களிலிருந்து நண்பர்கள் வந்திருந்தனர். நிகழ்வு நடக்கவிருந்த பிரார்த்தனை கூடம் வட்ட வடிவான வெளிச்சுற்று முற்றத்துடன் கூடிய முகலாய பானியிலான கும்மட்ட உள் அரங்கை உடையது. செங்கல்களால் ஆன மேற்கூரையின் மையத்தில் ஒளி ஊடுருவக்கூடிய அரைவட்ட கும்மட்ட வடிவான கண்ணாடி பதிக்கப்பட்டு அதன் வழியே வந்திறங்கிய சூரிய ஒளி தரையில் படும் இடத்தில், பனை ஓலையால் செய்யப்பட்ட ஓலைச்சிலுவை, குருவி போன்ற பொம்மைகள் மற்றும் வண்ண வண்ண துணிப்பைகள் படைக்கப்பட்டிருந்தன.


கூடத்தின் வாயிற்படியில் “சுதந்திரத்தின் நிறம்” புத்தகம் அமர்ந்திருந்தது. முகப்பில் மரத்தொட்டில் ஒன்று கட்டப்பட்டு அதனடியில் சுவரோரமாக, கங்கைக்காக நோன்பிருந்து உயிர் நீத்த ஸ்வாமி நிகமானந்தா அவர்களின் படமும், அதன் அருகே அனுப்பம் மிஸ்ராவின் படம் வரையப்பட்டிருந்த வெள்ளை பலகையும் வைக்கப்பட்டிருந்தன. அனைவரும் பிராத்தனை கூடத்திற்கு உள்ளே வந்தமர்ந்தோம். நிசப்தத்தின் இறுக்கம் குடியேற, தூபத்தின் புகை மணம் கமழ, இலை நழுவ விடும் நீர்த்துளிகளின் ஒலி கேட்கும் அமைதியை ஆழத்திலிருந்து எழுந்த சிவராஜ் அண்ணாவின் குரல் அனைத்தது.

ஃபேஷன் டிசைனிங் படித்த பொன்மணி அக்கா, தான் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு, புளியனூரில் உள்ள விதவை பெண்களுக்கு தையல் கற்றுக்கொடுக்க தொடங்கியது முதல், தற்போது துணிப்பைகள் செய்யும் நிலையை வந்தடைந்தது வரையிலான அவரது பயணத்தை சிவராஜ் அண்ணா சுருக்கமாக கூறினார்.

பின்பு, “இந்தியாவில் பொம்மைகள் என்பவை நம்மை சுற்றியுள்ள இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து படைப்பூக்கத்துடன் செய்து, குழந்தைகளுக்கு அளிக்கப்படுபவையாகவே இருந்து வந்துள்ளன. கிராமத்தில் காலையில் வெளிக்கி செல்லும் ஒருவர், கீழே கிடக்கும் பனை ஓலையில் இருந்து ஒரு பொம்மையை செய்து, தனது குழந்தைக்கு அளித்து விடுவார். ஆனால், இன்று பெரும் தொழிற்சாலைகளில் ரசாயன சேர்க்கை மூலம் செய்யப்படும் ப்ளாஸ்டிக் பொம்மைகள் பெற்றோர்களால், அவர்களது குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கப்படுகின்றன. அந்த தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் ரசாயனங்களை கையாளுவதால் ஏற்படும் நோய்கள், மறு சுழற்சியின்மையால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள், தனிநபர் படைப்பூக்கமின்மை, இயற்கையில் இருந்து விலகுதல் போன்றவை குறித்தும் விளக்கினார். இறுதியாக, கண்ணுக்கு தெரியாமல் பாரத நிலத்தின் காற்றில் கலந்திருக்கும் காந்தியின் ஆன்ம சக்தியை பிராத்தித்து இவ்விரு செயல்களையும் துவங்குவோம் என்று கூறி, சிவராஜ் அண்ணா தனது உரையை முடித்தார்.

பின்னர் முத்துராமன் அவர்கள் தனது அனுபவங்களை பகிர ஆரம்பித்தார். காந்தியவாதியான அவரது தந்தை அவரில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், மதிப்பெண்கள் ஒரு மாணவனை தீர்மானிக்காது, செய்யும் செயல் எதுவாக இருந்தாலும், அதை முழு ஈடுபாட்டுடன் செய்வதே ஒருவனின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதை அவரது தந்தை தனது மனதில் ஆழ வேறூன்ற வைத்தார் என்று கூறினார்.

மேலும், ஈழ மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதில் உள்ள சவால்கள், கல்வி நிலையங்களில் அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், அவற்றை கடந்து பயின்றாலும் உரிய வேலை கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், பொருளியலில் தங்கப்பதக்கம் வென்ற ஈழ மாணவர் ஒருவர் வெறும் 7,000 ரூபாய் சம்பளத்திற்கு பெரிய கல்வி நிறுவனமொன்றில் பணிக்கு அமர்த்தப்பட்ட அவலம் உள்ளிட்டவற்றை கூறினார். அதையெல்லாம் கேட்டபோது, நாமெல்லாம் எத்தனை சொகுசாக வாழ்ந்து கொண்டு இன்னும் ” அது இல்லை, இது இல்லை” என்று குறைப்பட்டுக்கொண்டிருப்பது பெரும் அபத்தமாக தோன்றியது.

ஈழ மாணவர்களுக்காக அவர் ஆற்றிக் கொண்டிருக்கும் களப்பணிகளையும், அதற்கு உதவியாயிருந்த அவரது நண்பர் ஒருவரின் மரணம் ஏற்படுத்திய பாதிப்புகளையும், பிரயாகை புத்தகத்துடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதையும் அவர் கூறியபோது, என்னில் ஒரு இறுக்கம் குடிகொண்டது. கல்வி பணிகளுக்காக தாங்களும், தங்களது வாசகர்களும் செய்த பங்களிப்பு குறித்தும் அவர் கூறினார்.

திருக்கடையூரை சேர்ந்த வினோதினி என்பவர் ஆசிட் வீச்சால் தாக்கப்பட்டு முகமும், உருவமும் சிதைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்து, அங்கு சென்ற முத்துராமன் அவர்கள், அப்பெண் உயிரிழக்கும் கடைசி நொடி வரை அவருக்கு ஆதரவாக அங்கேயே இருந்துள்ளார். அந்த அனுபவத்தையும், அந்த பெண் அவரை “அப்பா” என்று கூப்பிடலாமா என்று ஒருமுறை கேட்டபோது அவருக்கு ஏற்பட்ட உணர்வுகளையும் வார்த்தைகளால் விவரிக்க முற்பட்டு தோற்றுப்போனார்.

ஊர்க்கிணறு புனரமைப்பு பணியை செய்து வரும் மஞ்சரியை காணும்போது, தனக்கு அதேப்போன்ற உணர்வு ஏற்படுவதாக கூறிய அவர், மஞ்சரியிடம் “நான் உன்னை எனது மகளாக எண்ணுகிறேன். ஆகவே, உனது தந்தையின் ஸ்தானத்தில் என்னை ஏற்றுக் கொள்வாயா?” என்று கேட்ட தருணம் என்னை நெகிழச் செய்தது.

இறுதியாக, “காந்தியம் என்பது காணாமல் போய்விட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், அது நம் ஒவ்வொருவரையும் தாங்கும் கைதடியை போல கண்ணுக்கு தெரிந்தோ, தெரியாமலோ அனைவரிடத்திலும் கைமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த கைத்தடியை ஊன்றி நடந்து சென்று அடுத்த தலைமுறைக்கு அதனை கையளித்துவிட்டுச்செல்லும் நிலமாகவே, இந்த குக்கூ காட்டுப்பள்ளியை பார்க்கிறேன்” எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அதன்பின், பரிசுகள், ஓடைக்குளியல், கூட்டுச்சமையல், கூட்டுச் சாப்பாடு, சிரிப்பு, பாட்டு என கொண்டாட்டமாக மாலை பொழுது நிறைவடைந்தது. இரவு அனைவரும் பிரார்த்தனை கூடத்தின் சுற்று முற்றத்திலும், உள்ளும் பாய் விரித்து படுத்திருந்த்தோம். அடர் இருள் சூழ்ந்திருக்க தவளைகளின் ‘குர்குர்’ சத்தங்கள் இருளை கீறிச்செல்ல, கூடத்தின் மேற்கூரை மையத்தில் இருந்த அரைவட்ட கும்மட்ட கண்ணாடியை, துளி செஞ்சுடர் ஏந்திய ஒரு மின்மினிப்பூச்சி உள்ளிருந்து முட்டி முட்டி திரும்பியது. அது அந்த கண்ணாடி அடைப்பை உடைத்து வெளியேறி, தனது துளி ஒளியுடன் இப்பிரபஞ்ச இருளுக்குள் நீந்தி ஆகாயம் செல்ல எத்தனித்ததோ!

என்னைச் சுற்றிலும் உறங்கிக்கொண்டிருந்தவர்களை பார்த்தேன். இருளை கிழித்த ஒளியுடன் அனைவரும் மின்னிக் கொண்டிருந்தனர். இவ்வொளித்துளிகளை எல்லாம் ஒன்றினைத்து ஆகாசம் ஏந்திச் செல்ல எத்தனிக்கும் அந்த மின்மினி பூச்சியென குக்கூ காட்டு பள்ளியை உணர்ந்தேன்.

அன்றிரவு கனவில் காந்தி கைத்தடியுடன் வர, அவர் பின்னால் நாங்கள் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தோம்!

பணிவன்புடன்,
வேலாயுதம் பெரியசாமி

முந்தைய கட்டுரைஇந்துமதத்தைக் காப்பது, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகண்ணும் காண்பதுமாகி… கடிதங்கள்