தொடர்புக்கு: [email protected]
விஷ்ணுபுரம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கி நூல்களை வெளியிடுவது என்பது முதன்மையாக கோவை செந்தில்குமாரின் திட்டம். அவர் அதை சில ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். என் அனைத்து நூல்களும் ஓரிடத்தில் கிடைக்கவைப்பதே முதன்மை நோக்கம். ஒரே இணையதளத்தில் அனைத்தும் கிடைக்குமென்றால் அது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் நம் நண்பர்களின் நூல்களையும் காலப்போக்கில் கொண்டுவர வேண்டும். அவர்களுக்கான விழாக்கள், நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
ஆனால் நிர்வாகம் சார்ந்த, வணிகம் சார்ந்த எதிலும் ஈடுபடுவதற்கு எனக்கு மனமில்லை. ஆகவே நான் தவிர்த்து வந்தேன். அதன்பின் நண்பர்களின் கூட்டமைப்பே அதைச் செய்யலாமென முடிவெடுக்கப்பட்டது. தொடக்கமாக என் நூற்று முப்பது கதைகளும் தனித்தனி தொகுதிகளாக மின்னூல்களாக வெளியாயின. அவை அளித்த நிதிப்பின்னணியுடன் இப்போது அச்சுநூல்களாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. முதல் நூல் குமரித்துறைவி.
குமரித்துறைவி மங்கலம் மட்டுமே கொண்ட நூல். அழகும் நிறைவும் கூடியது. அவ்வகையில் இன்னொரு நவீனநாவல் தமிழில் இல்லை என நினைக்கிறேன். அத்தனை தொலைவு செல்ல வெண்முரசு போன்ற ஒன்றை ஏறிக்கடக்கவேண்டும். பலர் அதை திருமணப் பரிசுகளாக, மங்கலப்பரிசுகளாக அளிக்கவிரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
சென்ற 3 அக்டோபர் 2021 அன்று கோவையில் நிகழ்ந்த கவிதைவிவாத அரங்கில் எளிமையாக முதல்நூல் வெளியிடப்பட்டது. என் அன்புக்குரிய நண்பர் யுவன் சந்திரசேகர் வெளியிட போகன் பெற்றுக்கொண்டார். ஊட்டியில் குரு நித்யாவின் சமாதியில் நூலை வைத்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டோம்.