முதற்கனல் வாசிப்பு

“பாரதத்தில் வாழும் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் வியாசர் என்றார் வைசம்பாயனர். மாபலி¸ அனுமன்¸ விபீஷணன்¸ பரசுராமன்¸ கிருபர்¸ அஸ்வத்தாமா¸ வியாசர் என அவர்களை சூதர்களின் பாடல்கள் பட்டியலிடுகின்றன. கொடையால்¸ பணிவால்¸ நம்பிக்கையால்¸ சினத்தால், குரோதத்தால்¸ பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.” – ‘முதற்கனல்’ நாவலில் வியாசர் அறிமுகக் காட்சியில்.

பாரதத்தின் மகத்தான புனைவியலாளரை மற்றுமொரு மகத்தான புனைவின் மூலம் போற்றியிருக்கிறார் ஜெயமோகன்..நமது வாழ்நாளின் இன்னுமொரு மகத்தான இசைக் கற்பனை வித்தகரான இளையராஜாவுக்கு ‘முதற்கனலை’ சமர்ப்பித்திருக்கிறார்.

மகாபாரதக் கதைகளின் மீது எனக்கு மட்டற்ற காதலுண்டு.. எனது பள்ளிப் பருவத்தில் இந்தக் காதலை என்னுள் விதைத்தவர் திருமுருக.கிருபானந்த வாரியார் அவர்கள்.. திருச்செந்தூர் திருவிழாக்களில் அவரது மகாபாரதத் தொடர் சொற்பொழிவுகளில் துண்டு துண்டாக அறிந்த கதைகளை ‘வியாசர் விருந்து’ என்று முழு நூலாக ‘இராஜாஜி’ அவர்களின் தமிழில் படித்தேன். அடுத்தது பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’..

வியாசரின் மூலத்தை வர்த்தமானன் பதிப்பக வெளியீட்டில் படித்தேன்..காதல் கூடியது..என்ன காரணம்..?

மகத்தான புனைவு.. ஒரு கதா பாத்திரமான வியாசரே கதையைச் சொல்லும் உத்தியாகத் தொடங்கி காட்சிகளாய் விரிகிற பாவனை.. வாசகனுக்கு பகிரங்கமாகவும் கதாபாத்திரங்களுக்கு மந்தணமாகவும் இருக்கும் கதை முடிச்சுகள்.. நேர்கோட்டில் செல்லும் ஐந்து தலைமுறைக் கதைகள்..பல்வித ரசனைகளுடன் துலங்கும் விறுவிறுப்பு குன்றாத கதைப் போக்கு.. பிசிறில்லாத பாத்திரப் படைப்புகள்..

முக்கியமாக எல்லா சர்ச்சைகளையும் வாசகனைப் பேச வைக்கும் வெளிப்படையான படைப்பு…

ஜெயமோகன் மீது ஆவல் பெருகியிருந்த காலத்தில் மகாபாரதத்தை இணையத்தில் எழுதப் போவதாக முன்னுரைத்தார். ‘தினம் ஒரு அத்தியாயமாக பத்தாண்டுகளில் ஒவ்வொன்றும் 500 பக்கங்கள் கொண்ட பத்து நாவல்களாக’ இணையத்தில் ( தொடர்கதை போல) தரப் போவதாக 2013 கிறித்துமஸ் தினத்தன்று அறிவித்து¸ சொன்னது போல 2014 புத்தாண்டு தினத்தில் ‘வெண்முரசி’ன் முதல் நாவலான ‘முதற்கனலை’த் தொடங்கினார்.

01.01.2014 இல் தொடங்கி 7 ஆண்டுகளில் 26 நாவல்களாக சுமார் 25000 பக்கங்களில் இந்தப் பாரதக் கடலை கடைந்து முடித்துவிட்டார்.. திட்டமிட்டதற்கும் முடித்ததற்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்..!

அசுர வேகம்..‘முதற்கனல்’ தொடங்கி நான்காவது நூலான ‘நீலம்’ வரையிலும் காலைக் காபிக்குப் பின் வெண்முரசில்தான் நாள் தொடங்கியது.. ஐந்தாவது நாவலான ‘பிரயாகை’ படிக்கும் போது இந்நாவல் வரிசையை நூல்களாகப் படிப்பதென தீர்மானித்தேன்.. இப்போது முதல் நாவலின் வாசிப்பனுபவத்தை எழுதத் துணிந்தேன்.

ஜெயமோகனின் வெண்முரசை இணையத்தில் படித்து வந்தபோது மகாபாரத மீளாக்கத்தில் அவரது தர்க்கவியல் முயற்சிகளை (சில பகுதிகள் விவாதத்திற்குரியவை..) ரசிக்க முடிந்தது. அதனால் இத்தகைய மீளாக்கங்களைத் தேடித்தேடிப் படித்து வந்தேன். ‘திரௌபதியின் கதை’(பிரதிபாராய் ஒரிய மூலம் – 2016) ‘இரண்டாம் இடம்’(M.K.T..வாசுதேவன் நாயர் மலையாள மூலம்) ‘பருவம்’ (எஸ்.எல்.பைரப்பா – கன்னட மூலம்) போன்ற சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்கள் இங்கு குறிக்கத் தகுந்தன. அதன் பிறகு எஸ்.ரா.வின் ‘உப பாண்டவம்’. இப்போது பூமணியின் ‘கொம்மை’ வாசிப்பில்.. என்னைப் பொறுத்த மட்டில் எல்லாவற்றிலும் வெண்முரசே செவ்வியல் தன்மை மேலோங்கியது..அதுவே அதன் சிறப்பு.

இனி ‘முதற்கனலை’ப் பார்ப்போம்…

வியாச மூலத்தில் ஆதி பர்வத்தில் ‘அம்பை’யின் மறு பிறப்பான சிகண்டியின் கதை வரை இந்த முதல் நாவலில் சொல்லப் படுகிறது.

‘முதற்கனலை’ அறிமுகப் படுத்துவதன் நோக்கம்¸ தெரிந்த கதையை அவர் நாவலாக்கிய புனைவியல் அழகைச் சொல்வதற்கே…

மகாபாரதத்தை வேத தரிசனம் மற்றும் நாக தரிசனமாக வாசிக்கலாம் என்றும் தான் நாக தரிசன வழியைத் தேர்ந்ததாகவும் ஜெயமோகன் கூறியிருக்கிறார்.. ஆம்..பாண்டுவுக்குப் பேரனுக்குப் பேரனான ஜனமேஜயன் நாகங்களை அழிக்க நடத்தும் வேள்வியினைத் தடுக்க நாக புத்திரன் ஆஸ்திகன் கிருஷ்ணா நதி தீரத்தில் வேசர தேசத்தில் இருந்து கிளம்புகிற போது நாக வமிசத்துக் கதையுடன் ‘முதற்கனல்’ தொடங்குகிறது..தொடர்ந்து நாக வாசனை நாவல் தொடர்களில் விடாமல் பின் தொடர்வதைப் பார்க்கலாம்..

வியாச மூலத்தில் ஒரு சொற்றொடரில் கடந்து போகும் பாத்திரங்களை ஜெயமோகன் தனது நாவலில் விரித்துச் சித்தரிக்கும் அழகை படித்தே ரசிக்க வேண்டும். இந்த வியத்தகுச் சித்தரிப்பு இந்த ஆஸ்திகனிலிருந்தே தொடங்கி விடுகிறது.. நாக வமிசத்துப் பெண்ணான மானசா தேவிக்கும் ஜரத்காரு என்ற பிராமண ரிஷிக்கும் பிறந்தவன் இந்த ஆஸ்திகன்..யாகத்தை தடுத்த இவன் செயல் சரியா பிழையா என்ற கேள்வி எழுந்த போது வியாசர் வந்து தீர்க்க வேண்டியிருந்தது.. பின்பு வியாசர் தான் இயற்றிய மகா பாரதக் கதையைக் கூறுமாறு தனது சீடரான வைசாம்பாயனரை வேண்ட அவரால் மகாபாரதம் சொல்லப் படுகிறது..

தொன்மங்களை தன் எழுத்து வலிமை கொண்டு வாசகர்களிடம் கடத்துவதில் ஜெயமோகனைக் கொண்டாடத் தோன்றுகிறது.. சான்றாக ஒன்று பார்க்கலாம்..

பாரதக் கதையை வியாசர் சொல்ல விநாயகர் எழுதினார் என்பது தொன்மம்..

ஜெயமோகனின் விவரணை: ‘வியாச வனத்தில் குடியேறிய அன்று தன்னுள் எழுந்த சொல்லலைகளுடன் அமர்ந்திருக்கையில் புதர்களை விலக்கி வந்த மதகளிறு ஒன்று தலைகுலுக்கி¸ காதுகளை விசிறி துதிக்கை சுழற்றி¸ ஓங்காரமெழுப்பி அது பின்வாங்கியபோது அதன் தந்தங்களில் ஒன்று ஒடிந்து மரத்தில் பதிந்திருப்பதைக் கண்டார் மகாவியாசர். அதை எடுத்து சிவந்த மென்மணல் விரிந்த கதுப்பில் ஓம் என எழுதினார். அதுவே அவருடைய காவியத்தின் முதல் சொல்லாக அமைந்தது.’

பழைய கதைகளைப் பண்டிதர்களை விட பாணர்களே அல்லவா கண் காது மூக்கு வைத்துச் சொல்வார்கள்..? முதற்கனலின் முக்கிய நிகழ்வுகளும் ஆங்காங்கே சூதப் பாடகர்களே சொல்வது போல அமைக்கப் பட்டள்ளது.. ஜெயமோகன் இந்த நாவல் தொடர்களில் சூதர்களும் பாணர்களுமாக தானே அவதாரம் எடுத்துக் கொள்கிறார். ஜெயமோகன், தர்க்கவியலுக்கு ஏற்றாற்போல முதலில் கதை சொல்லிவிட்டு சூதர்களின் வாய்மொழியில் மூலத்தைக் காட்டுவார்..

பீஷ்மர் சந்தனுவுக்கும் கங்கர் குலப் பெண்ணான கங்காவுக்கும் பிறந்தவர் என்று தர்க்க ரீதியாக கதை போகும்.. இன்னொரு இடத்தில் சூதப்பாடகன் ஒருவன் பீஷ்மன் என்று தெரியாமலே பீஷ்மனிடம் அவனை கங்கை நதியின் புதல்வன் என்று கதை கூறி சன்மானம் பெற்றுச் செல்வான்.. இந்தத் தர்க்கவியல் விளையாட்டுகள் நாவலில் தேவையான போதெல்லாம் கையாளப் பட்டுள்ளதை ரசிக்கலாம்.. சூதர்கள் என்போர் நான்காம் வருண சூத்திரர்கள் என்றறிக..

முன்பிறவிக் கதைகளையும் குறியீட்டுக் கதைகளையும் தற்காலத்தில் ரசிக்கும்படிச் சொல்ல முடியுமா..? ஜெயமோகன் இருவிதக் கதைகளையும் இணைத்து புதிய பாணியில் சொல்லுகிற ஒரு கதை..

காசி இளவரசிகளை தம்பி விசித்திர வீரியனுக்காக சிறை எடுக்கப் போகும் பிழையை செய்யுமுன் தனது மனசாட்சிக்கு ஆறுதல் தேடி பீஷ்மர் வேத வனத்தில் இருக்கும் வியாசரை சந்திக்க வருகிறார்..அப்போது…

‘பசித்த சிம்மம் ஒன்று வேத வனத்திற்குள் புகுந்தது’. அதன் பெயர் சித்ரகர்ணி. வேத வனத்தில் பீஷ்மர் நுழைவதைப் பார்க்கிறது.. ‘இவனை நானறிவேன்..’என நினைத்துக் கொண்டது.. வியாசரின் குடில் வாசலில் நுழைந்து கொண்டிருந்த பீஷ்மரை வாசலில் கட்டப் பட்டிருந்த பசுவானது பார்த்தது. ‘ஈரம் மின்னிய பெரிய கண்களால் அந்தப் பசு தன்னிடம் எதையோ சொல்ல முற்படுவது போல பீஷ்மர் உணர்ந்தார்.’ வியாசரும் பீஷ்மரும் உள்ளே உரையாடலானார்கள்.. “நீ என்னைத் தேடிவந்த சிக்கலென்ன”¸வியாசர் கேட்டார் ‘ ‘ஷத்ரிய தர்மப்படி ஒரு ஷத்ரியன் நாட்டு நலனுக்காக ஒரு ஷத்ரிய பெண்ணை சிறையெடுக்கலாம் என்றறிவேன். ஆனால் மனம் சஞசலப் படுகிறது. அந்தப் பெண்களின் கண்ணீர்..’ என்றார் பீஷ்மர். அப்போது பீஷ்மரின் முற்பிறவிக் கதையைக் கூறுகிறார் வியாசர். முற்பிறவி ஒன்றில் பீஷ்மர் ‘சிபி’ யாக இருந்தார் என்று வியாசர் தொடங்கினார். சித்ரகர்ணி என்ற சிம்மத்திற்கு தெரிந்து விட்டது. .. முன் பிறவியில் ‘சித்ரகன்’ என்ற பருந்துவாக அது ‘பிரபை’என்ற புறாவை இரையாகத் துரத்த புறா சிபியிடம் தஞ்சமாயிற்று.

உள்ளே வியாசர் சிபி – சித்ரபரணி உரையாடல்களைச் சொல்லி பீஷ்மர் செய்யப்போகும் பிழைக்கு வரப் போகும் பழியை ‘ஷத்ரிய தியாகத்தின்’ மேல் போட்டார்.

“இளையவனே¸ சிபி அறிந்த உண்மையே ஒவ்வொரு ஷத்ரியனுக்குமுரிய நெறியாகும். அரசன் தன் குருதியால் அனைத்தையும் ஆற்றுவதற்குக் கடமைப்பட்டவன். அந்தக்குருதியால் அவன் அனைத்தையும் ஈடுகட்டிவிடவும் முடியும்” என்றார்.

‘அப்போது வெளியே சித்ரகர்ணி கால்களைப்பரப்பி அடிவயிற்றைத் தாழ்த்தி நாசியை நீட்டி மிக மெதுவாக தவழ்வதுபோல நகர்ந்து வாசலில் நின்ற வெண்பசுவை அணுகியது. கருவுற்றிருந்த நந்தினி என்ற வெண்பசு ‘இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை’ என்று சொல்லிக்கொண்டது.

‘இந்த அறியாச் சுழல்பாதையில் மீண்டும் மீண்டும் நான் உன்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறேன். நம்மை வைத்து ஆடுபவர்களுக்கு சலிக்கும்வரை இதை நாம் ஆடியே ஆகவேண்டும்’ என்றது சித்ரகர்ணி. ‘அழு…ஓலமிடு. நான் கர்ஜிக்கிறேன். ஆடத்தொடங்குவோம்’

புயலில் பெருமரம் சரியும் ஒலியுடன் சிம்மம் பசுவின் மேல் பாய்ந்தது. பசு கதறி ஓலமிட அதன் கழுத்தைக்கவ்வி அள்ளித்தூக்கி தன் தோள்மேல் போட்டுக்கொண்டு பாய்ந்து மரப்பட்டை வேலியைத் தாண்டி புதர்களுக்குள் மறைந்தது”

ஒரு இதிகாசத்தை அதன் முகம் மாற்றாமல் முழுக்கவும் தனது படைப்பாக தனது பாத்திரங்களாக ஆக்கிக் காட்டும் வித்தை நாவல் முழுதும் பிரகாசிக்கிறது..

வியாச மூலம் காட்டும் நேர் கோட்டுப் பாதையை சற்றே விலக்கிக் கொண்டு வியாசர் சொல்லாமல் விட்ட சந்திகளில்¸ மௌனம் சாதிக்கும் கணங்களில் தனது புனைவினால் தர்க்கங்களால் கதையை மெருகு செய்கிறார் ஜெயமோகன்.

காசி மன்னன் புதல்விகள் சிறைப்படும் தருணம் வியாச மூலத்தில் சட்டென்று நகர்ந்து போகும்..இந்நாவலில் அந்நிகழ்வு காவியம் போல் சித்திரிக்கப் பட்டுள்ளதைப் பார்க்கலாம். நாவலில் இருந்து அந்த பகுதி..

” தலைகுனிந்து நடந்த அம்பிகையும் அம்பாலிகையும் நடுங்கும் கரங்களில் மாலையைப் பற்றியிருந்தனர். வேட்டையில் இரையை நெருங்கும் வேங்கையைப் போல மெல்லிய தாழ்நடையுடன் கையில் மாலையுடன் அம்பை சால்வனை மட்டும் நோக்கி அவனைப்பார்த்து சென்றாள். அக்கணமே அங்கிருந்த அனைவருக்கும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது புரிந்தது.

நாணொலி கிளப்பியபடி பீஷ்மர் எழுந்தார். “பீமதேவா, இதோ உன் கன்னியர் மூவரையும் நான் சிறையெடுத்துச் செல்லப்போகிறேன்…” என்று அரங்கெல்லாம் எதிரொலிக்கும் பெருங்குரலில் சொன்னார். “இந்த மூன்று பெண்களையும் அஸ்தினபுரியின் அரசியராக இதோ நான் கவர்ந்துசெல்கிறேன். உன்னுடைய படைகளோ காவல்தெய்வங்களோ என்னைத் தடுக்கமுடியுமென்றால் தடுக்கலாம்” என்றபடி இடக்கையில் தூக்கிய வில்லும் வலக்கையில் எடுத்த அம்புமாக மணமேடைக்கு முன்னால் வந்து நின்றார்.

பீமதேவன் காதுகளில் விழுந்த அக்குரலை உள்ளம் வாங்கிக்கொள்ளாதவர் என அப்படியே சிலகணங்கள் சிலைத்து அமர்ந்திருந்தார். கோசலமன்னன் மகாபலன் எழுந்து சினத்தால் நடுங்கும் கைகளை நீட்டி “என்ன சொல்கிறீர்கள் பிதாமகரே? இது சுயம்வரப்பந்தல். இங்கே இளவரசியரின் விருப்பப்படி மணம் நிறைவுறவேண்டும்” என்றான்.

“அந்த சுயம்வரத்தை நான் இதோ தடை செய்திருக்கிறேன். இங்கே இனி நடைபெறப் போவது எண்வகை வதுவைகளில் ஒன்றான ராட்சசம். இங்கே விதிகளெல்லாம் வலிமையின்படியே தீர்மானிக்கப்படுகின்றன” என்றவாறு ஷத்ரியர்களை நோக்கித் திரும்பி “இங்கே என் விருப்பப்படி அனைத்தும் நிகழவேண்டுமென நான் என் வில்லால் ஆணையிடுகிறேன். வில்லால் அதை எவரும் தடுக்கலாம்” என்றபின் பீஷ்மர் இளவரசியரை நோக்கி நடந்து ஒருகணம் தயங்கி, திரும்பி வாசலைநோக்கி “உள்ளே வாருங்கள்” என உரக்க குரல்கொடுத்தார். அவரது எட்டு மாணவர்கள் கைகளில் அம்புகளும் விற்களுமாக உள்ளே வந்தனர். “இளவரசிகளை நம் ரதங்களில் ஏற்றுங்கள்” என்று பீஷ்மர் ஆணையிட்டார்.

அதன் பின்னர்தான் பீமதேவன் உடல் பதற வேகம் கொண்டு எழுந்தார். சினத்தால் வழிந்த கண்ணீருடன் தன் வில்லை எடுத்துக்கொண்டு முன்னால் பாய்ந்தார். அக்கணமே அவர் கை வில்லை பீஷ்மர் தன் அம்புகளால் உடைத்தார். அவரது மாணவர்கள் அம்பையை அணுகியதும் அவள் மாலையை கீழே போட்டு அருகே இருந்த கங்கநாட்டு மன்னனின் உடைவாளை உருவி முதலில் தன்னைத் தொடவந்தவனை வெட்டி வீழ்த்தினாள். பிறமாணவர்கள் வாளுடன் அவளை எதிர்கொண்டனர். அவள் கையில் வெள்ளிநிற மலர் போலச் சுழன்ற வாளைப்பார்த்து பீஷ்மர் சிலகணங்கள் மெய்மறந்து நின்றார். ‘இவள் குருகுலத்து சக்கரவர்த்தினி’ என்று அவருக்குள் ஓர் எண்ணம் ஓடியது. மேலும் இரு சீடர்கள் வெட்டுண்டு விழுவதைக்கண்டதும் தன் அம்பறாத்தூணியிலிருந்து ஆலஸ்ய அஸ்திரத்தை எடுத்து அம்பை மேல் எய்தார். அம்புபட்டு அவள் மயங்கி விழுந்ததும் மாணவர்கள் அவளை தூக்கிக் கொண்டனர்.”

நகருக்குள் அம்பை தவிர்த்து வரும் மற்ற இரு காசி இளவரசிகள் பற்றிய செய்தியைச் சொல்ல வந்த சேவகனிடம் விசித்திர வீரியன் கேட்கிறான்..

“விப்ரதா சொல்! அம்பை பார்ப்பதற்கு எப்படி இருந்தாள்?”

விப்ரதன் சொல்லின் வேகத்தில் சற்றே முன்னகர்ந்து “வேள்விக்கூடம் மேல் படர்ந்து ஏறும் நெருப்பு போலிருந்தார்” என்றான். “ஏழுமுறை தீட்டப்பட்ட வாள் போல. ஆவணிமாதம் ஆயில்யநட்சத்திரத்தில் அதிகாலையில் படமெடுக்கும் ராஜநாகம்போல…” அதன்பின் அவனே தான் சொன்னதை உணர்ந்து திகைத்து நின்றுவிட்டான். விசித்திரவீரியனின் உடல் அவனறியாமலே சற்று நடுங்கியது. பாலாழி அலைகளில் எழுந்த ஆலகாலம் பற்றிய எண்ணம் ஒன்று அவன் மனதுக்குள் ஓடிச்சென்றது.”

படைப்பிலக்கியத்தில் சொல்லோவியம் தீட்டுவதில் ஜெயமோகனின் உச்சம் இந்த நாவலில் மிளிர்வதை பார்த்துக் கொண்டே போகலாம்..

‘முதற்கனல்’ அம்பை என்ற காசி இளவரசிக்கு நேர்ந்த அவமானங்களை துயரங்களை மிகுந்த அற சீற்றத்துடன் விவரிக்கிறது.. பீஷ்மரால் விடுவிக்கப் பட்ட அம்பை சால்வ மன்னனைத் தேடிக் கங்கையில் காதலுடன் செல்லுகிறாள். அவள் காதல் தீய்ந்து விடுகிறது.. சால்வ சபையில் நடக்கும் நிகழ்வின் கடைசித் தருணம் நாவலிலிருந்து..

“அம்பை, நீ பிரிந்துசெல்வது என் உயிரே விலகுவதுபோல துன்புறுத்துகிறது….என்னுடைய அரசியல் நிலையை நீ புரிந்துகொள்ளவேண்டும்… பீஷ்மரை எதிர்க்கும் ஆற்றல் சௌபநாட்டுக்கு இன்று இல்லை” என்றான். அவள் பின்னால் ஓடிவந்து “அஸ்தினபுரிக்கு அரசியான நீ எனக்கு மனைவியாக முடியாது என்பதே விதி….ஆனால் ஒரு வழி இருக்கிறது” என்றான். அம்பை கண்களில் ஐயத்துடன் திரும்பினாள்.

“நீ விரும்பினால் என் அந்தப்புரத்தில் வாழமுடியும்…உனக்கு மணிமுடியும் செங்கோலும் மட்டும்தான் இருக்காது” என்றான் சால்வன். மிதிபட்ட ராஜநாகம்போல திரும்பி “சீ! கீழ்மகனே, விலகிச்செல். இல்லாவிட்டால் என் கை நகங்களால் உன் குரல்வளையை கிழித்துவிடுவேன்” என்று அம்பை சீறினாள். அவளுடைய மூச்சிரைப்பு நாகத்தின் பத்திவிரியும் அசைவுபோலவே தோன்றியது. நாகம்போல சீறும் மூச்சுடன் “நான் உன்னையா இத்தனைநாள் விரும்பியிருந்தேன்? பல்லக்கில் பிணம் இருப்பது போல என் நெஞ்சில் நீயா இருந்தாய்?” என்றாள்.”

காதலன் கணிகையாக்கப் பார்த்தான்..பெற்ற தந்தையும் கைவிட்டான். பீஷ்மனும் புறக்கணித்தான். ஆறுதலளித்த பரசுராமனாலும் பீஷ்மரை வெல்ல முடியவில்லை. எங்கும் பீஷ்ம பயம்..

அலைக்கழிப்பு, புறக்கணிப்பு, அவமானம், தோல்வி எல்லாம் அவளை வெறியளாக்குகின்றன..

இதற்குப் பிறகு அம்பையின் கதை எந்தவொரு மகாபாரத மீளாக்கத்திலும் சொல்லப் படாத பாவனையில் சொல்லப் படுகிறது..ஆனால் மூலத்தின் முகம் மாறாது தர்க்கரீதியைப் பூர்த்தி செய்யும் கற்பனையுடன்…

வெறியளான அம்பையிடம் பிறவியிலேயே கைவிடப்பட்ட ஒரு பெண்குழந்தை வந்து சேர்கிறது..அவள் சிகண்டினி.. அம்பையை அன்னையாகக் கொண்டு அவளுடனேயே அலைகிறாள்..அம்பை தீப்பாய்ந்ததும் அன்னையின் கனலை ஏற்றுக் கொண்டு ஆண்தன்மை ஏற்று சிகண்டியாகிறான். பாஞ்சாலன் அவனை மகனாக ஏற்கிறான்..பீஷ்மரைக் கொல்லும் பழி சுமந்து அலையும் சிகண்டி பீஷ்மர் என்று அறியாமலேயே அவரிடம் வித்தை கேட்கிறான்..

அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வும் உரையாடல்களும் மகத்தான காவிய உருவமாக அமைகிறது..அந்நிகழ்வில் இந்த நாவல் அழகான படைப்பிலக்கிய வடிவம் பெற்றிருப்பதையும் படிக்கும் வாசகன் உணர்வான்…

ஜெயமோகனுக்கு சொற் பஞசமே இல்லை எனலாம்..எதிர்பார்க்கவே முடியாத சொற்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன.

நற்றிணைப் பதிப்பக வெளியீடான இந்நாவல் வரிசைகள் விலையால் பயமுறுத்துகின்றன. இதுவரை அச்சுப் பதிப்பாக 7 நூல்கள் மட்டுமே வாங்கினேன். ஜெயமோகனோ பதிப்பகங்களோ மலிவுப் பதிப்புகள் வெளியிட முன்வந்தால் தமிழின் காவிய அழகை பலர் ரசிக்க இயலும்..

மிக நீண்ட அறிமுகம் எழுதிய பின்னரும் எழுதி முடித்த உணர்வு வந்து சேரவில்லை.

கோமதிசங்கர்

Gomathisankar Gosar

முந்தைய கட்டுரைபுத்தரின் துறவு
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்