வணக்கம். நலம் விழைகிறேன்.
நீலம் வாசிக்கும் பொழுதே ஆண்டாள் பாடல்களைப் போல இசைமை உணர்வை தருவது. அதை நீங்கள் எழுத எழுத அதிகாலையில் வாசித்த பரவசமான நாட்களை நினைத்துக்கொள்கிறேன். வார்த்தைகளுக்கு ஔியும் சிறகும் முளைத்து மின்மினி கூட்டம் போன்று மனமெங்கும் பறந்தநாட்கள். வார்த்தைகளாக நினைவில் நிற்கும் நாவல். மொழியின் பரவசத்தின் உச்சத்தை மீளமீள பக்தி இலக்கியங்களே தொடுகின்றன.
நீலம் பக்திஇலக்கியம் தான். வேண்டுதல் எதுவுமில்லை என்றாலும் கூட தாய்தந்தையை போல நம்மனக்கட்டமைப்பிற்கு தேவைப்படும் ஒன்று. கள்ளமின்றி, தேவைகள் இன்றி,நிர்மலமாக ஒன்றின் மேல் அன்பு செலுத்தினால் மட்டுமே அமைதிகொள்ளக்கூடிய யச்சி மனம். மனிதர்களிடம் பூரணமாக நம்மை வைக்கமுடியாது என்று அந்த இடத்தை வசதியாக நம் முன்னவர்களே காட்டி சென்றுவிட்டார்கள். அங்கு சென்று சிறிதேனும் அமைக என்று.
அவ்வாறான சிறுபொழுதை இந்த பாடல் எனக்கு அதிகாலையில் கொடுத்தது. இது எனக்கு இன்னுமொரு கண்ணன்பாடல். கேட்டுக்கொண்டே இருக்கப்போவது.
சைந்தவிபாடும் போது இதுவரை இல்லாத ஒன்றை புதிதாக உணர்ந்தேன். தங்கைக்கு குழந்தை பிறந்து இன்றுடன் சரியாக முப்பதுநாள். பாப்பாவுடனே இருக்கிறேன்.அதுதான் காரணம். பாப்பா பெயர் கிருஷ்ணவிகா. மருத்துவமனையிலிருந்து வந்ததும் பாப்பா கருப்பா போயிடுச்சே என்று வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது ‘இது கிருஷ்ணை…பேரழகி’ என்று சொன்னேன்.
கமல் குரலில் ,கையாட்டலில்,நெற்றி சுருக்கங்களின் தீவிரத்தில்…
ஞானப்பெருவிசையே
ஞானப்பெருவெளியே
யோகப்பெருநிலையே
இங்கெழுந்தருள்வாயே…
என்று சொல்லும்போது தீயின் முன் அமர்ந்து பிரபஞ்சத்தின் முன் ஆணையிடும் ஒருவராக தெரிந்தார். ஸ்ரீராம் பார்த்தசாரதியின் ‘கண்ணானாய் …’ மனதை ஆட்கொண்டுவிட்டது.
இந்தப்பாடல் ஆலயங்கள் தோறும்…அதாய் இருக்கும் மனங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கப்போகும் மற்றுமொரு கிருஷ்ணமதுரம்.
மனம் நிறையும் ப்ரியங்களுடன் காலை வணக்கம்.
அன்புடன்,
கமலதேவி
இனிய ஜெ..
வலியோடும், பாதி தெளிந்த மயக்கத்தோடும்
வெண்முரசு நீலம் இசை கேட்டேன் . கண்மூடி எங்கோ ஏதோ பெரும் பர வெளியில் உடலற்று வெறும்.. வெறும் இசையோடு மட்டுமே கிடந்தேன். எத்தனையோ முறை நீலத்தை உள்வாங்கியும் இது வேறுவிதமான கொஞ்சலாக, தவிப்பாக, பழத்தின் முதல்கடி இனிப்பென உடலெங்கும் தித்திப்பு. எது அவன்? இதுவா? இதல்ல இதோ வேறு ரூபமாக எங்கே அவன்? அவனா இவன்? இல்லையே! என்னடா கண்ணா? தவிப்பின் மொழி இசையாகுமென முதன்முதல் கண்ணீரோடு கண்டுகொண்டேன். அதனுள் ஆழமாக.. பேராழமாக.. இதுவென்றறியாத ஒன்றோடு இதோ முயங்கியே கிடக்கிறேன். தெளிவே வேண்டேன். இது போதும் நிறைவு.. இது போதும் நிறைவு…
அமைக என் தலைமேல்…
ஜெயந்தி
அன்புள்ள ஜெ
ஓராண்டுக்கு முன் எனக்கு ஓர் அறுவைச் சிகிச்சை. நான் நீலம் நாவலை கையில் கொண்டுபோனேன். வாசிக்கும் மனநிலை இல்லை. நெஞ்சோடு அணைத்து வைத்திருந்தேன். எட்டுநாளும் படுக்கையிலேயே வைத்திருந்தேன். அவ்வப்போது எடுத்து ஒரு வரி படிப்பேன். அதை நெஞ்சில் சுவைத்தபடி படுத்திருப்பேன். நீலம் எனக்கு ஒரு நாவல் அல்ல. ஒரு புத்தகம்கூட அல்ல. அதிலுள்ள எல்லா வரிகளும் எனக்கு மந்திரம். அதை நான் வாசிக்காத நாள் இல்லை. அதன் வரிகள் என் மனதில் இயல்பாக ஓடிக்கொண்டிருக்கும். அதைப்போல Female sensibility வெளிப்பட்ட இன்னொரு நவீனக் கவிதையோ நாவலோ தமிழிலே இல்லை. அது ஒரு பெரிய கொந்தளிப்பும் அமைதியும். ஆனால் வெறும் sensual படைப்பு இல்லை. அது ஒரு பிரபஞ்சதர்சனம்.
அந்த உணர்வை மறுபடியும் அடைந்தது நீலம் இசை கேட்கும்போது. எவ்வளவு உச்சம். அதேசமயம் ஒரு சொல்கூட வீணாகாமல் எவ்வளவு அர்த்தச் செறிவு. மொத்த நீலத்தையுமே இப்படி இசையமைத்துவிடலாம். மொத்த நீலமும் இப்படி கேட்கும் ஒரு காலம் வரும். கமல், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோருன் குரல் அற்புதமாக குழைகிறது. கருநீலத்தழல்மணியே என்று ஏங்கிக் கசியும் ஒரு குயிலோசைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
ராஜி