கண்ணும் காண்பதுமாகி… கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

மீண்டும் ஒரு உணர்வெழுச்சியின் தருணமாக அமைந்தது வெண்முரசு இசைக் கொண்டாட்டம். வெண்முரசிற்கென்று ஒரு இசை என்பது உங்களின் வெண்முரசின் எல்லா வாசகர்களுக்கும் மனதுக்கு மிக நெருக்கமான அனுபவம். நம் எல்லோருடனும் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து பயணிக்கும் பயணிக்கப் போகும் ஒரு பெரும் படைப்பு வெண்முரசு. அந்த காரணத்தால் அதனுடன் மறக்க முடியாத அனுபவங்களை இணைத்துக் கொண்டே இருப்பது படைப்பை இன்னும் நெருக்கமாக்குகிறது.

இந்த இசை அனுபவத்தையும் அதனுடன் இணைத்த நம் விஷ்ணுபுர வாசகர் வட்ட நண்பர்கள்(பெயர்கள் சொல்லப் போனால் யாரையாவது தவற விட்டுவிடுவோமோ என்ற பயம் இருக்கிறது. அதனால் ஆஸ்டின் சௌந்தர் முதல் ராஜகோபாலன் வரை, இசை மற்றும் தொழில்நுட்பத்தில் ராஜன் சோம சுந்தரம் முதல் ஆனந்த குமார் வரை என்று சுருக்கி சொல்கிறேன்) மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த எழுத்து மற்றும் திரைப்பட இயக்கப் பேராளுமைகளுக்கு மனமார்ந்த நன்றி.

இசைத் தொகுப்பில் பாடிய கமல்ஹாசன், ஶ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி, ராஜன் சோமசுந்தரம் போன்றவர்களின் குரல்கள் சரியாகப் பொருந்தி நீலத்தின் வரிகளுடன் அதன் உணர்ச்சிப் பெருக்கையும் அதிகப் படுத்துவது போல இருந்தது. பின்னணி இசையும் அருமையாக இருந்தது. மொத்தமாக காட்சித் தொகுப்பில் நீங்கள் வெறும் இரண்டு இடங்களில் தான் வருவீர்கள். அதுவும் தூரக் காட்சிகளில். முதல் காட்சியில் நீங்கள் கடற்கரையில் நடந்து வரும் போது ஒரு மெய் சிலிர்பு  ஏற்பட்டது.

இரண்டாவது காட்சியில் நீங்கள் மேலும் சிறு துளியாக மாறிக்கொண்டே இருப்பீர்கள். இசை அத்துடன் முடிந்து விடும். அதுவே குறியீட்டுத் தன்மை கொண்டதாக எனக்குத் தோன்றியது. உங்கள் உரையில் இப்பெரும் படைப்பின் படைப்பாளி என்ற உரிமையிலிருந்தும் அதனுடனான உறவிலிருந்தும் வெளி வருவதைப் பற்றி பேசியிருந்நீர்கள். வாழ்நாள் முழுக்க தவம் செய்து படைத்த படைப்பின் படைப்பாளியே இப்பிரபஞ்சத்தின் ஒரு சிறு துளியாக மாற முற்படும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று யோசிக்க வைத்து கொஞ்சம் கூசவும் வைத்தது.

நீங்கள் குறிப்பிட்டது போல் அஜ்மீர் தர்காவில் சென்று தொழுகை முடித்து திரும்பி வரும்போது இந்த படைப்பின் சிறு துளியும் உங்களில் மிச்சமின்றி திரும்பி வரக் கூடும். அது தாய் பறவை பல நாள் காத்திருந்து முட்டையிட்டு அடைகாத்து வளர்த்த குஞ்சுகள் வளர்ந்து பறக்க ஆரம்பித்தவுடன் அதை விட்டு இயல்பாகவும் ஒரேயடியாகவும் விட்டு விலகுவது போல என்று நினைக்கிறேன். அது தான் உங்களுக்கு விடுதலையை அளிக்கும் என்றால் அப்படியே நடக்கப் பிரார்த்தனைகள். ஆனால் வெண்முரசின் வாசகர்களுக்கு அப்படியல்ல. அது அவர்களுடன் நெடுந்தூரம் சென்று கொண்டே இருக்க வல்லது என்பதையும் அது வாசகர்களின் ஆளுமையையும் சிந்தனையையும் ஒவ்வொரு நாளும் மேம்படுத்தி கூர்தீட்டி வாழ்க்கையின் அர்த்தத்தை மேம்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதையும் தினந்தோறும் உணர முடிகிறது. வெண்முரசு அதன் வாசகர்களில் என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

மிக்க அன்புடன்,
ஜெயராம்

அன்பு ஆசானுக்கு

கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன்.வார்த்தைகள் அற்ற தருணம்.இசை கேட்டேன்.கண்ணில் துளிர்த்த துளிகள் உங்கள் காணிக்கை.

என் சமர்ப்பணங்கள்.

உங்கள்

அரவிந்தன்

இராஜை

அன்புள்ள ஜெ

வெண்முரசு இசைக்கொண்டாட்டம் பார்த்தேன். கண்ணானாய் காண்பதுமானாய் என ஆரம்பிக்கும் வரிகள் என் நெஞ்சில் இத்தனை ஆண்டுகளாக எந்த மந்திரத்தையும் விட நிலைபெற்றவை. கண்ணும் கண்ணால் காணப்படுவதுமாக நின்றிருப்பவன். மூலக்கருத்தாகவும், அதன் விரிவான கடுவெளி [ஸ்பேஸ்] ஆகவும் அமைந்த நிலையிலேயே அதைக் கடந்தும் அமைந்தவன். இருந்தாலும் காலம் என ஆகி இங்கே சூழ்ந்தவன். அப்பேற்பட்டவன் சிறுதண்டையிட்ட கால்களுடன் வந்து மடியில் அமரும் அனுபவமும் ஆகிறான். எல்லாம் கடந்த எண்ணற்கரிய விரிவில் இருந்து கைவிரல் முனையில் நின்றிருக்கும் நீலத்துளி போல அகப்படுபவனாக ஆகும் அவன் லீலை.

நவீன காலகட்டத்தில் இப்படி ஒரு பக்திப்பித்து நவீனமொழியில் வெளிப்படமுடியுமென்பதே ஆச்சரியம். அதை மிகமிக அற்புதமாக இசையமைத்திருக்கிறார் ராஜன் சோமசுந்தரம். கமல்ஹாசனின் கம்பீரக்குரல், ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குழையும் குரல், சைந்தவியின் தேன்போன்ற குரல் வயலின் குழல்  சித்தார் எல்லாம் இணைந்து ஒரு பெரிய மயக்கநிலையினை உருவாக்கின. என்ன சொல்ல. வணங்குகிறேன்

சுவாமி

முந்தைய கட்டுரைஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி
அடுத்த கட்டுரைவாசகனின் அலைக்கழிப்புகள்